……………………………………

………………………………….
இந்த சம்பவம் தொடங்கியது – 1955-ஆம் வருடம்….!!!
……………………………………..
சிட்டிபேங்கின் நிர்வாகக் குழு (Board) அந்த கடன் விண்ணப்பத்தைப் படித்துவிட்டு ஸ்தம்பித்து நின்றது.
அன்றைய சிட்டி பேங்க் இன்று நாம் அறியும் பெரிய வங்கியாக இல்லை. ஒரு சிறிய வங்கியாக இருந்தது
அப்போது சிட்டி வங்கியால் கொடுக்க முடிந்த உச்சபட்ச கடன் தொகையே 4.2 கோடி டாலர்தான்.
1954-55-ஆம் ஆண்டில் அந்த 4.2 கோடி டாலரை கடனாகக் கேட்டு ஒரு விண்ணப்பம்.
விண்ணப்பித்த மால்கம் மெக்லீன் (Malcom McLean) என்பவரிடம் கப்பல் வணிக அனுபவமோ, போதிய சொத்துக்களோ இல்லை. அவரிடம் ஆரம்ப காலத்தில் ஒரே ஒரு லாரி மட்டுமே இருந்தது.
“ஒரு லாரி டிரைவர் 4.2 கோடி டாலர் கடன் கொடுங்கள் என ஒரு விண்ணப்பம் போட்டிருக்கிறார். ஜாமீனாக கொடுக்க போதிய சொத்து இல்லை. இது ஒரு ஜூனியர் அதிகாரி / டிரெய்னி (Trainee) அளவில் ஐந்தே நிமிடங்களில் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டிய விண்ணப்பம். இது எப்படி நிராகரிக்கப்படாமல், போர்டு கூடி முடிவெடுக்கும் அளவுக்கு வந்தது…??? “
வங்கி அதிகாரிகள் அந்த இளம் வங்கியாளரான வால்டர் ரிஸ்டன் (Walter Wriston) என்பவரைக் கை காட்டினார்கள்.
“இவர் தான் அந்த விண்ணப்பத்தை முதலில் பரிசீலித்தவர். அவர் தான் ஒவ்வொரு மட்டமாக அனைவரையும் சம்மதிக்க வைத்து போர்டைக் கூட்டும் அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார். அவரது கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். இந்த முன்மொழிவை கேட்டுவிட்டு பிறகு நிராகரியுங்கள் என்பதே”.
“சரி, மீட்டிங் என வந்தாச்சு. அதையும் தான் சொல்லுங்கள். கேட்டுவிட்டு நிராகரிப்போம்.”
லாரி டிரைவரான மால்கம் மெக்லீன் (Malcom McLean) – பேச ஆரம்பித்தார்:
“நான் ஒரு துறைமுகத்தில் லாரி ஓட்டும் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு கப்பல் வந்தால் வரிசையாக நூற்றுக்கணக்கான ஆட்கள் நின்று கொள்கிறார்கள். பெட்டி பெட்டியாக ஒவ்வொரு பொருளாக இறக்கி வரிசையாக ஆள் மாற்றி ஆள் லாரிக்கு பொருள் வந்து சேர்கிறது.
இப்படி கப்பலில் இருந்து பொருட்களை இறக்க வாரக்கணக்கில் ஆகிறது. கப்பல்கள் வீணாக வாரக்கணக்கில் துறைமுகத்தில் நிற்கின்றன. இப்படி பல நூறு கப்பல்கள், அவற்றில் ஆயிரக்கணக்கான மாலுமிகள். அனைவரின் சம்பளம், உணவு எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பாருங்கள்.
அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு பெரிய ரயில் பெட்டி மாதிரி கொள்கலன் (Container) ஒன்றை தயார் செய்வோம். அதனுள் எல்லா பொருட்களையும் அடுக்குவோம். கிரேனில் அந்த பெட்டியைத் தூக்கி கப்பலில் வைப்போம். கிரேனிலேயே இறக்குவோம்.
கிரேனில் இறக்குவதால் கப்பலை லோடு செய்ய, இறக்க ஒரு நாள் போதும். கப்பல் நிறுவனங்களுக்கு பல கோடிகள் மிச்சமாகும்…”
“ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஏதாவது கப்பல் நிறுவனத்திடம் சொல்லிப் பார்க்கலாமே…??? “
“நான் வேலை செய்யும் நிறுவனத்திலேயே சொன்னேன். அவர்கள் ‘கன்டெய்னராவது, பெட்டியாவது…? இதெல்லாம் வேலைக்கு ஆகாது’ எனச் சொல்லிவிட்டார்கள். அப்போதுதான் நாமே ஒரு கப்பல் நிறுவனத்தை விலைக்கு வாங்கி இதைச் செயல்படுத்தலாம் என முடிவு செய்தேன்.
வாட்டர்மேன் ஸ்டீம்ஷிப் கம்பெனி (Waterman Steamship Corporation) என்னும் கப்பல் நிறுவனம் விற்பனைக்கு இருக்கிறது. நீங்கள் கடன் கொடுத்தால் நிறுவனத்தை வாங்கி லாபம் சம்பாதித்து கடனைக் கட்டிவிடுவேன்”.
போர்டு வாயைப் பிளந்தது…. !!!
“ஏம்பா, வெறும் கையில் முழம் போடுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், நீ கிலோமீட்டரே போடுகிறாயேப்பா…!!! உனக்கு கப்பல் தொழிலில் போதிய அனுபவம் இல்லை. ஜாமீனாக கொடுக்க சொத்துக்களும் இல்லை. உன்னை நம்பி இத்தனை பெரிய தொகையைக் கடனாக எப்படி கொடுப்பது …??? யாரப்பா அந்த டிரெய்னி…? வா இங்கே…”
இளம் அதிகாரியான வால்டர் ரிஸ்டன் (Walter Wriston) வந்தார்….
“இவரை நம்பி 4.2 கோடி கடனாக கொடுக்கலாம் என்கிறாய். கடனை வாங்கிவிட்டு திருப்பி கட்டாமல் போய்விட்டால் என்ன செய்வது…? வங்கியாளர் என்றால் இதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும்…”
“பணம் 100% போகாது. ஏனென்றால் இவர் வாங்கும் கம்பெனியே நமக்கு ஜாமீனாக இருக்கும். அந்த கம்பெனி விவரங்கள் இங்கே உள்ளன. அவர்களிடம் கோடிக்கணக்கில் ரொக்கப் பணம் உள்ளது. கப்பல்கள் மற்றும் பிற சொத்துக்கள் உள்ளன.
4.2 கோடி டாலர் கடனாக கேட்கிறார். அந்த கம்பனியின் மொத்த சொத்துக்களின் மதிப்பும் 4.2 கோடி டாலர்கள் தான். இவர் ஒரு தவணையை சரியாக கட்டவில்லை என்றாலும் நிறுவனத்தைக் கைப்பற்றிக்கொள்ளலாம்…”
வங்கியின் உயர் அதிகாரிகள் அவரை நிமிர்ந்து பார்த்தார்கள். அந்த வங்கியாளரின் கண்ணில் அப்படி ஒரு நம்பிக்கை… !!!
அவரை அறியாமல் வங்கியின் உயர் அதிகாரி வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்து விழுந்தன:
“ஆனால் நீ ஒரு சாதாரண ஜூனியர் டிரெய்னி . உன் பேச்சை நம்பி கடன் கொடுக்க முடியுமா?”
அந்த டிரெய்னி பேசவில்லை. அறையே அமைதியானது.
வங்கி தலைவர்கள் சில நிமிடங்கள் யோசித்தார்கள். திட்டம் காகிதத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. நமக்கு அபாயம் நாம் நினைப்பது போல இல்லை. கடன் கொடுத்து தோற்றாலும் அசல் வந்துவிடும். ஜெயித்தால் ஒரு பெரிய கப்பல் நிறுவனம் நம் வாடிக்கையாளராகும்…
” கடன் கொடுக்கிறோம் “.
அந்த முடிவு சிட்டி வங்கியின் வரலாற்றை மட்டுமல்ல, உலக போக்குவரத்தின் வரலாற்றையே மாற்றியமைத்த முடிவு … !!!
அதன்பின் அந்த கப்பல் நிறுவனம் சீலேண்ட் (Sea-Land) என்ற பெயரில் கன்டெய்னர் புரட்சியைச் செய்து உலக கப்பல் போக்குவரத்தே தலைகீழானது.
கன்டெய்னர்கள் கப்பல் உலகில், ஏன் உலக விநியோகச் சங்கிலி (Supply Chain) வரலாற்றிலேயே நிகழ்ந்த மிகப்பெரிய பாய்ச்சல் எனும் அளவுக்கு கப்பல் துறையிலும், உலக பொருளாதாரத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.
இந்த கன்டெய்னர் கம்பனியை வாங்கிய பிசினஸ் மாடல் 100% leveraged buyouts என அழைக்கப்பட்டு, அதை மேலும் பரவலாக்கி சிட்டி வங்கியை உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக்கிய முடிவும் இதுதான்.
ஆனால் இது எதுவும் அன்று அந்த அறையில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை. உலக போக்குவரத்து மற்றும் நிதித்துறை வரலாற்றை மாற்றி எழுதுகிறோம் என அவர்களுக்கு தெரியவில்லை…
“கடன் கொடுக்கிறோம்” எனும் வார்த்தைகளை கேட்டதும் லாரி டிரைவர் மால்கம் மெக்லீன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. ஒப்பந்தம் கையெழுத்தானது.
வெளியேறுகையில் லாரி டிரைவர் மால்கம் மெக்லீன் சொன்னார்:
“இதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நீங்கள் எல்லாரும் சொத்து, ஜாமீன் என பார்க்கையில் இந்த டிரெய்னி வால்டர் ரிஸ்டன் மட்டும் வாய்ப்புகளைப் பார்க்கிறார்.
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்… வங்கித்துறையில் இதுநாள் வரை நீங்கள் யாருமே போக முடியாத உயரங்களை இவர் எட்டுவார்…”
லாரி டிரைவர் மால்கம் மெக்லீன் – மிகப்பெரிய பில்லியனர் ஆனார்.
அந்த ஜூனியர் வங்கியாளரான வால்டர் ரிஸ்டன் பின்னாளில் சிட்டி வங்கியின் தலைவராக உயர்ந்து அதன் உலகளாவிய வளர்ச்சியில் மிகப்பெரும் பங்கை வகித்தார் … !!!
ஒரு லாரி டிரைவரின் கனவை நம்பி, ஒரு ஜூனியர் டிரெய்னியின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து, ஒரு வங்கி 4.2 கோடி டாலரை கடன் கொடுக்குமா… ???
துணிந்து எடுத்த ரிஸ்க்கால் தான் அந்த அறையில் இருந்த அனைவரும் பிசினஸ் பிஸ்தாக்கள் ஆனார்கள் … !!! ( நன்றி – நியாண்டர் செல்வன் …!!! )
……………………………………………………………………………………………………………………………………………………



ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…