…………………………………

……………………………………..

………………………………….

……………………………………………………………………………………………………………………………….
என் இளம் வயதில், சுமார் 10 ஆண்டுகள், 60-70-களில்
திருச்சியில் பணி புரிந்து வந்தேன்… இளம் ரத்தம்,
சமுகப் பிரக்ஞை கொஞ்சம் கூடுதல். யாருக்கு பிரச்சினை
என்றாலும் முன்னால் வந்து நிற்பேன். அரசுப்பணியில்
இருந்தாலும் கூட கம்யூனிச கொள்கைகளில் பிடிப்பு….
அப்போது என்னை ஈர்த்தவர்களில் முக்கியமானவர்,
கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள்.
இவருடன் எனக்கு பரிச்சயம் கிடையாது. பார்த்திருக்கிறேன்.
வியந்திருக்கிறேன்…!!!
அதன் தொடர்ச்சியாக திருச்சியில் எம்.பி.யாக இருந்த
கே.அனந்தன் நம்பியார், உமாநாத் ஆகியோருடன் இடது கம்யூனிஸ்டிலும், பிற்பட்ட காலத்தில் வலது கம்யூனிஸ்ட் எம்.பி.யாக இருந்த கல்யாண சுந்தரம் ஆகியோருடனும் பரிச்சயம் இருந்தது….
ஓரளவுக்கு அவர்களுக்கும் என்னை தெரியும்.
அற்புதமான தலைவர்கள். கொஞ்சம் கூட சுயநலம் இல்லாதவர்கள். எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் அவர்களை அணுகலாம். தங்கள் பிரச்சினையை கூறலாம். தங்களால் இயன்ற
உதவியை செய்வார்கள்…
என்ன – இந்த கால அரசியல்வாதிகள் போல் அவர்களிடம்
வசதிகள் இல்லை…. சொந்தக் கார் கிடையாது.. யார் கூப்பிடுகிறார்களோ, அவர்கள் வரும் வண்டியிலேயே கிளம்பி விடுவார்கள்….
அவர்களை நினைத்து பலமுறை வியந்திருக்கிறேன்…. பிற்காலத்தில்
நான் கூட அவர்களைப்போல் செயல்பட வேண்டுமென்று விரும்பினேன் – அரசியலில் அல்ல – சமூகத் தொண்டில்….
அதே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இன்றைய தினம் அமைந்துள்ள தலைவர்களைப் பார்க்கிறேன்…..
இவர்களை என்னவென்று அழைப்பது என்றே எனக்கு தெரியவில்லை… ஒரு அரசியல் கட்சி இந்த அளவுக்கு சீரழிய முடியுமா …??? என் கண் முன்னாலேயே நடந்துள்ள இந்த அவலம் என்னை மிகவும் வேதனைப் படுத்துகிறது …..
அண்மையில் ஒரு இடுகை பார்த்தேன்….. நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால் கொஞ்சம் பாரம் குறையும் என்று தோன்றியது …… கீழே ….
…………………………………………………………………………………
தோழர்…
உங்க இரண்டு பேர்களையும் 25 கோடி கட்சி என்று அழைத்தாலும் உங்கள் மேல் இன்னமும் எனக்கு நம்பிக்கையிருக்கிறது தோழர்…!
நம் ஊர் ‘செவ்வகத்து’த் தோழர்களின் செமத்தியான மதில் மேல் பக்திப் பிரயாணத்தைப் பார்த்தால் சிலிர்த்துப் போகிறது…! இரண்டு இடதுசாரி கட்சிகளும் இப்போது எந்தக் கலையில் கில்லாடிகளாகியிருக்கிறார்கள் தெரியுமா?
கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர்களை மிஞ்சிவிட்டு, ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு கிணறுகளில் குடத்தைக் கவிழ்க்கும் வித்தையைக் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.
தவெக அரசு முந்தைய திமுக ஆட்சியின் ஊழல்களை ஒவ்வொன்றாக வெளுத்து வாங்கும்போது, இடதுசாரிகளுக்கு மட்டும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அய்யோ என்று எங்கு போய் ஒட்டிக்கொள்கிறது எனப் புரியவேயில்லை…!!! இப்போதும் அந்த பழைய குடும்ப செண்டிமெண்ட்டும், திமுகவின் மீதான ‘அதிசய விசுவாசமும்’ இவர்களின் சுயத்தை அடகு வைத்துவிட்டு, சொந்தமாக யோசிக்கும் மூளையையும் சேர்த்துப் புதைத்துவிட்டதோ என்னவோ?
விஜய்யின் குறைகளைச் சுட்டிக் காட்டட்டும், அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த விமர்சனங்களைச் சொந்தச் சரக்கில், சுயபுத்தியுடன் செய்ய வேண்டுமே தவிர, அப்படியே அண்ணா அறிவாலயத்தின் சமையலறைக் குறிப்புகளைப் பார்த்துக் கொண்டு பல்லவி பாடினால் எப்படித் தோழர்களே?
உதயநிதி அவர்களின் பேச்சில் வெளிப்படும் அந்த நச்சு மிதமிஞ்சிய வெறுப்புணர்வும், சட்டசபையில் அவர்களின் அணியினர் நடத்தும் ரவுடிசக் கூக்குதல்களும் இவர்களின் கண்களுக்கு மட்டும் ஏன் கண்புரை நோய் வந்த மாதிரி தெரியவே மாட்டேன் என்கிறது?
தவெகவை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா என்று கேட்டால், வாயில் கொழுக்கட்டையை வைத்துக்கொண்டு ஊமையாக நிற்பது போல் இரண்டுங்கெட்டான்களாக அல்லவா தத்தளிக்கிறார்கள்…!
தமிழகத்தில் பல ஆயிரம் தோழர்கள் உயிராக நேசித்த, நெஞ்சில் ஏந்திய அதே செங்கொடி இயக்கங்கள் இன்று நேர்மைத் தராசைத் தொலைத்துவிட்டு, அயோக்கியர்களின் சால்வையைத் தூக்கிப் பிடிக்கும் பல்லக்குத் தூக்கிகளாக மாறிவிட்டார்களே நினைத்தால் தான் நெஞ்சம் பற்றிக்கொண்டு வருகிறது…!
2021-26 திமுக ஆட்சி காலகட்டம் என்பது இதுவரையிலும் சுதந்திர இந்தியாவில் எந்த ஊழல் சாம்ராஜ்யமும் கண்டிராத ‘கொள்ளைக் திருவிழா’ காலம்!
இயற்கை வளங்கள் அத்தனையையும் அடித்துத் துவம்சம் செய்தார்கள், விவசாய நிலங்களை புல்டோசர் வைத்துப் பிடுங்கி எறிந்தார்கள், தொழிற்சாலைகளுக்குக் காசை வாங்கிக் கொண்டு காடுகளைக் காவு கொடுத்தார்கள், நீராதாரங்களைச் சுடுகாடாக்கினார்கள்.
நாளும் பொழுதும் தமிழக வீதிகளில் மக்கள் போராடித் தீய்ந்து போனபோது இந்தத் தோழர்கள் எங்கு போய் பதுங்கிக் கிடந்தார்கள்?
ப.சண்முகம் அவர்கள் மார் தட்டிக் கொண்டு வந்து நிற்கிறார் பாருங்கள்—“எங்களை விட இங்கு ஊழலை எதிர்த்துப் போராடிய வேறு கட்சியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்?” என்று! அடேங்கப்பா! இவர்களின் இந்தச் சாதனையை உலக சாதனைப் புத்தகத்தில்தான் பொன்னெழுத வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகாலம் முழுவதிலும் திமுக அரசு நடத்திய அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் மௌனச் சாமியாராக இருந்து ஜால்ரா அடித்தது யார் என்று ஊருக்கே தெரியும்!
டாஸ்மாக் கடைகளில் அந்தப் புகழ்பெற்ற ‘கரூர் கேங்’ வந்து நின்றுகொண்டு, “பாட்டிலுக்குப் பத்திலிருந்து முப்பது ரூபாய் கூடுதலாகப் பிடுங்குங்கள்டா” என்று கடையடைப்பு செய்து ஊழியர்களை மிரட்டியது. இதற்காவது ஒரு விடிவுகாலம் பிறக்கட்டுமே என்று சி.ஐ.டி.யூ யூனியன் தலைவர்கள் நேராகப் போய் அன்றைய முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துக் காலில் விழாத குறையாக மனு கொடுத்தார்களே, என்ன மிஞ்சியது? ஏமாற்றுத் தாஸ்தான் மிஞ்சியது!
அதே ‘கரூர் கேங்’ செய்த லட்சணத்தைத்தான் இன்றைய முதல்வர் சட்டமன்றத்தில் மேடை போட்டுப் புட்டுப் புட்டு வைக்கிறார். இப்போது முதலமைச்சர் விஜய் அந்த கரூர் கேங்கை சுட்டிக் காட்டிப் பேசினால், உடனே நமது கம்யூனிஸ்ட் தோழர்கள் குறுக்கே பாய்ந்து, “இதெல்லாம் ரொம்ப ஓவர்… சம்பந்தமே இல்லாமப் பேசுறார், இதெல்லாம் எங்க ஊர் பாஷைக்கு ஒத்துவராது” என்று முகம் சுளிக்கிறார்கள் பாருங்கள்…! பாவம், உண்மை சுடும் அல்லவா….?
அமலாக்கத்துறை அதிகாரிகள் நேராக டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்து கோப்புகளைப் புரட்டியபோது, விற்ற மதுபானங்களில் நாற்பது சதவீதம் ஆயத்தீர்வை கூடக் கட்டாமல் கள்ளச்சந்தையில் விற்றுத் தீர்க்கப்பட்டிருக்கிறது (ஆண்டுக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் கொள்ளை!) என்று ஆவணங்களுடன் குண்டைத் தூக்கிப் போட்டார்களே, அப்போதெல்லாம் இந்தச் செங்கொடித் தோழர்களின் நாவுகள் எங்கு போய் ஒட்டிக்கொண்டன?
கள்ள மௌனம் காப்பதில் இவர்களை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது!
இனி நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அடித்த கொள்ளையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்!
ஐந்தே ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு நான்காயிரம் கோடி வீதம் இருபதாயிரம் கோடிகளைப் பிய்த்துத் தள்ளியாரே, அவரைப் பார்த்து எப்போதாவது ஒரு முறையாவது “பதவியை விட்டுத் தொலையுங்கள்” என்று ஒரு துண்டுப் பிரசுரமாவது வெளியிட்டதுண்டா? காசு கொடுத்துவிட்டுப் போகலாம், கரூர் மாவட்டத்தில் ரோடு போடாமலேயே பல கோடிகளை காண்ட்ராக்டர்களுக்கு அள்ளிக் கொடுத்ததை அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் கிழித்துத் தொங்கவிட்டபோது, இவர்களின் குரல்வளை என்ன சளி பிடித்துக் கொண்டா போயிருந்தது….?
உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஊரையே அடித்து உலையில் போட்டுக் கொதித்தபோது இந்தச் செங்கொடி வீரர்கள் எங்கே படுத்துத் தூங்கினார்கள்….? உள்ளாட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் டெண்டர் விட்டதற்கே ஆயிரம் கோடிக்கு மேல் லஞ்ச வசூல், நகரமைப்பு மற்றும் பொறியாளர் பதவிகளுக்குத் தலா முப்பத்தைந்து இலட்சம் வீதம் மொத்தம் எண்ணூற்று எண்பத்து நான்கு கோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறியதை அமலாக்கத்துறை அம்பலப்படுத்திய அந்தப் பொன்னான நேரத்திலாவது இவர்களின் வாய் திறந்ததா…???
பத்திரப்பதிவுத் துறையில் கைவரிசை காட்டிவிட்டு, மதுரை மாவட்டத்தையே ஒரு கை பார்த்த அமைச்சர் மூர்த்தியின் குவாரி கொள்ளைகளைக் கண்டும் காணாமல் இருந்தார்களே… அந்த ரகசியம் என்ன தோழர்களே…? உங்க வெங்கடேசன் காலையில் ஒரு பேச்சு மதியம் ஒரு அறிக்கை மாலையில் ஒரு பேட்டி என்று கலக்கினாலும் ஐந்தாண்டுகள் திமுக குறித்து பேசவில்லையே…???
நீர்வளத்துறை மற்றும் கனிம வளம் கைவசம் வைத்திருந்த துரைமுருகன், அதிமுக காலத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக மணலை அள்ளிக் கொட்டியதே…!!! சட்டவிரோத குவாரிகளால் தமிழகத்தின் நரம்புகளையே அறுத்து எறிந்தார்களே!
• மணல் கடத்தல் மூலம் கைமாறியது நான்காயிரத்து எழுநூறு கோடி ரூபாய்!
• அரசாங்கத்துக்கு ஒரு யூனிட்டுக்கு வருமானம் வெறும் 1900 ரூபாய்தான், ஆனால் தனியாருக்குக் கிடைத்த லாபமோ பத்தாயிரத்தில் இருந்து இருபதாயிரம் ரூபாய்!
• அரசாங்கம் அள்ள அனுமதித்ததோ வெறும் நானூற்று தொண்ணூறு ஏக்கர், ஆனால் வெட்டிச் சூறையாடப்பட்டதோ இரண்டாயிரத்து ஐந்நூறு ஏக்கர்!
இவ்வளவு லீலைகளையும் அமலாக்கத்துறை புட்டுப் புட்டு வைத்த அடுத்த நாளே, நம் துரைமுருகன் விமானம் ஏறி டெல்லிக்குப் போய் பிரதமரைச் சந்தித்துத் தப்பிய வித்தையெல்லாம் ஊரறிந்த ரகசியம்.
இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய இடதுசாரிகள் என்ன செய்தார்கள் ..? ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்…!
போதை கலாச்சாரம் தமிழ்நாட்டின் சந்து பொந்தெல்லாம் பரவி, சட்டம் ஒழுங்கு கெட்டு, கொலைகளும் பாலியல் வன்முறைகளும் காளான் போல முளைத்தபோது வாயைத் திறக்காதவர்கள், இப்போது எதிர்க்கட்சிகள் இதைக் கையில் எடுத்ததும் மட்டும் பொங்கி எழுவது காலத்தின் கோலம்தான்…!! சரி, இப்போதுதான் ஞானம் பிறந்து விமர்சிக்க வருகிறீர்களே, அதுவே ஒரு நல்ல மாற்றம்தான். ஆனால் அப்படி நீங்கள் விமர்சித்துவிட்டுத் தப்பிக்கப் பார்க்கும் அந்த ஊழல் அமைச்சர்கள், டெல்லி எஜமானர்களின் கருணையாலும் கோர்ட் படியை மிதித்தும் எப்படி வழுக்கித் தப்பிச் செல்கிறார்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம்… !!!
இப்போது தவெக அரசு இந்தச் சீரழிவுகளைத் துடைத்தெறிந்துவிட்டு ஒரு நேர்மையான நிர்வாகத்தைக் கொடுக்க முயலும்போது, சமூகத்தில் ஊழல் ஓரளவாவது குறையத் தொடங்கியிருப்பதை மனதார வரவேற்கத் திராணியில்லாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதுதானே இன்றைய கம்யூனிச இலக்கணம்…? கடந்த ஐந்து ஆண்டுகள் ஸ்டாலின் மனம் கோணிவிடக் கூடாது என்பதற்காக சாம்சன் பிரச்சினையிலும், தொழிலாளர்களின் அடிவயிற்றில் அடிபட்டபோதும், விவசாயிகள் வீதியில் நின்றபோதும் செங்கொடியைக் காணவே காணோமே…!!!
விவசாய நிலங்களைப் பறிப்பதில் இந்த அரசு செய்த சாதனைகள் இருக்கிறதே… பரந்தூர் தொடங்கி பழவேற்காடு, கடலூர், கிருஷ்ணகிரி உத்தனப்பள்ளி, நாகமங்களம், அயர்னப்பள்ளி, செய்யாறு மேல்மா, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், கெலமங்களம், ஒட்டன்சத்திரம், மதுரை மேலூர், தஞ்சை உப்பளம்சேரி, சேலம் ஜாகீர் அம்மாபாளையம், நாமக்கல் மோகனூர், கோவை கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், தர்மபுரி, சிவகங்கை திருமாஞ்சோலை வரை ஊருக்கு ஊரு விவசாயிகளை விரட்டிவிட்டு நிலத்தைப் பறித்தபோது, உங்கள் வாயில் என்ன கொழுக்கட்டையா இருந்தது…??? திமுக மீதான விசுவாசத்தைவிடவா உங்களின் பொதுவுடைமைக் கொள்கை போய்விட்டது..???
இதையெல்லாம் தட்டிக் கேட்டால், “திமுகவை எதிர்த்தால் பாஜகவுக்கு அல்லவா லாபம் போய்விடும்” என்ற அரியவகைத் தத்துவத்தைச் சொல்கிறீர்கள். இதே திமுக தான் கொடூரமான தொழிலாளர் விரோத சட்டங்களையும் தமிழ்நாட்டில் அமல்படுத்தியதை நீங்களும் கண்டும் காணாமல் தானே முழி பிதுங்கிக் கிடந்தீர்கள்…???
தேர்தல் வந்தபோது உங்களுக்குக் கொடுக்க வேண்டிய சீட்டுகளைக் குறைத்து, உங்களை ரோட்டில் அலைக்கழித்து, தேமுதிகவுக்கு பத்துக் சீட்டைக் அள்ளி வழங்கி உங்களை ஓரங்கட்டியபோதும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசாமல் பம்மிப் படுத்துக் கிடந்தீர்களே..!!!
தேர்தல் முடிந்த பிறகும் கவர்னரை வைத்துக்கொண்டு ஏதோ பாஜக வந்துவிடும் என்று பயமுறுத்தித் தவெகவை ஆதரிக்கச் சொன்ன நீங்களே, இன்று தவெகவை வசைபாடும் அளவுக்கு எங்கே போய் நின்றுகொண்டிருக்கிறீர்கள் ..???
இத்தனை அவமானங்களையும், எச்சைத் தட்டுகளையும் தாங்கிக்கொண்டு, திமுகவை இன்னமும் முதுகில் தூக்கிச் சுமக்கத் துடிக்கும் இந்தச் செங்கொடித் தோழர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை!
இப்படிக்கு,
உங்களை நினைத்து உருகி வழியும்…
ஒரு செங்கொடித் தோழன். ( நன்றி – ஜோதிஜி … !!! )
…………………………………………………………………………………………………………………………….



ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…