“நீ எனக்காக மாறு” என்பதல்ல காதல். “நீ நீயாகவே இரு… உன்னுடன் நான் இருக்கிறேன்” என்பதே …!!!

……………………………………..

ஒரு சுவாரஸ்யமான, வெற்றிகரமான காதல் … !!!

……………………………………….

2026 ஆகஸ்ட் மாதத்தின் ஒரு மாலைப் பொழுது. சிகாகோவின் நேவி பியர் (Navy Pier) வளாகத்தில் மெல்லிய குளிர் காற்றும், கேமராக்களின் மின்னல் வெளிச்சமும் கலந்திருந்தன.

அங்கே அமெரிக்கத் தொலைக்காட்சியின் பொற்காலத்தைக் கட்டமைத்தவர்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு கூடியிருந்தார்கள். உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சியான ‘தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’ (The Oprah Winfrey Show) குழுவினரின் மீள் சந்திப்பில், பழைய நினைவுகள் அலைமோதின. அனைவரின் கவனமும், அரங்கில் அருகருகே நின்றுகொண்டிருந்த இரண்டு ஆளுமைகள் மீதே இருந்தது.

ஒருவர், தொகுப்பாளினியும் ஊடக ஆளுமையுமான 72 வயது ஓப்ரா வின்ஃப்ரே. மற்றொருவர், ஓப்ராவின் இணையரும் தொழிலதிபருமான 75 வயது ஸ்டெட்மேன் கிரஹாம்.

ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒன்றாகப் பொது நிகழ்வில், கேமராக்களின் முன் தோன்றிய தருணம். கைகளில் திருமண மோதிரங்கள் இல்லை, ஊடகங்களை நோக்கி வீசப்படும் செயற்கையான புன்னகைகளும் இல்லை. ஆனால், அவர்களுக்கிடையே இருந்த அந்த அமைதியான நெருக்கம், அழகான காதல் கதையைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.


அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம், சில மணி நேரத்தில் இணையமெங்கும் பரவியது. அது ஒரு வழக்கமான ஹாலிவுட் நட்சத்திரத் தம்பதியின் புகைப்படம் அல்ல; மனித இனம் தொன்றுதொட்டு எழுதிவைத்திருக்கும் ‘உறவு’ எனும் அமைப்பை உடைத்த காதல் கதையைப் பிரதிபலிக்கும் புகைப்படம்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த உலகமும் ஊடகங்களும் அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்த கேள்வி ஒன்றுதான்… “நீங்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள்?’’

அந்தக் கேள்விக்கு அவர்கள் வார்த்தைகளால் பதில் சொல்லவே இல்லை; மாறாக, தங்கள் வாழ்க்கையையே பதிலாக்கினார்கள்.

1986-ல் தொடங்கிய அவர்களின் நட்பு, 1992-ல் நிச்சயதார்த்தம் வரை சென்றது. அடுத்த ஆண்டே திருமணம் என்று ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்திருந்த வேளையில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், திருமணம் கைவிடப்பட்டதே தவிர, காதல் கைவிடப்படவில்லை.

இன்று, 40 ஆண்டுகளைக் கடந்த பிறகும் அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். இங்குதான் ஓர் ஆழமான கேள்வி எழுகிறது. காதலின் அடுத்தகட்டம் என்பது திருமணம்தானா அல்லது இரு மனங்கள் ஒருவருக்கொருவர் அளித்துக்கொள்ளும் பரஸ்பர நம்பிக்கையா?

1986-ல் ஓப்ராவின் ‘தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’ முதன்முதலில் ஒளிபரப்பானபோது, அது அமெரிக்க ஊடக வரலாற்றின் போக்கையே மாற்றப்போகிறது என்பதை யாரும் ஊகிக்கவில்லை. சாமானிய மனிதர்களின் கதைகள், வாழ்க்கை அனுபவங்கள், உளவியல் சிக்கல்கள், இலக்கியம், ஆரோக்கியம், சமூகப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு நடத்தப்பட்ட இந்த `டாக் ஷோ’, தொலைக்காட்சியை வெறும் பொழுதுபோக்காக மட்டுமன்றி, மனித மனங்களை இணைக்கும் உரையாடலாக மாற்றியது.

வறுமை, சிறுவயது பாலியல் வன்கொடுமைகள், நிறவெறிச் சவால்கள் என அனைத்தையும் கடந்துவந்த ஓப்ரா, தன் குரலால் லட்சக்கணக்கான மனிதர்களின் துயரங்களையும் நம்பிக்கையையும் பேசத் தொடங்கினார். உலக அளவில் ஓப்ராவின் பெயர் பிரபலமானது.


அதே 1986-ல்தான் ஸ்டெட்மேன் கிரஹாமும் ஓப்ராவின் வாழ்க்கைக்குள் நுழைந்தார். ஸ்டெட்மேன், உலகப் புகழ்பெற்ற ஒரு பெண்ணின் நிழலில் இளைப்பாறும் மனிதர் அல்ல. முன்னாள் கூடைப்பந்து ஆட்டக்காரர், தொழிலதிபர், எழுத்தாளர், தலைமைத்துவப் பயிற்சியாளர் எனத் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தைக் கட்டமைத்தவர்.

இருவருக்கும் பொதுவான ஒரு நண்பரின் வீட்டில்தான் முதன்முறையாகச் சந்தித்தனர். முதல் பார்வையிலேயே அங்கே பெரிய மின்னல் எதுவும் வெட்டி விடவில்லை. ஸ்டெட்மேன் அப்போது வேறொரு உறவில் இருந்தார். ஓப்ராவும் தன் ஊடகப் பயணத்தில் மூழ்கியிருந்தார். ஆனால், கால ஓட்டத்தில் நட்பு நிதானமான காதலாக உருமாறியது.

1992-ல் ஸ்டெட்மேன் ஓப்ராவிடம் திருமண விருப்பத்தைத் தெரிவித்தபோது, ஓப்ரா அதற்குச் சம்மதித்தார். நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால், திருமண நாளுக்கான ஆயத்தங்கள் தொடங்கும்போதே, இருவருக்குள்ளும் ஒரு மெல்லிய தயக்கம் உருவெடுத்தது.

“நீ நீயாகவே இரு… உன்னுடன் நான் இருக்கிறேன்”
தினமும் 14 மணி நேர உழைப்பு, உலகளாவிய பயணங்கள், சமூகப் பொறுப்புகள் என ஓப்ரா ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம், ஸ்டெட்மேனுக்கும் தன் தொழில் சார்ந்த கனவுகள் இருந்தன.

ஓப்ரா பின்னாளில் ஒரு பேட்டியில் திருமணத்தை நிறுத்தியது குறித்து வெளிப்படையாகப் பேசினார். “எனக்குத் தேவைப்பட்டது ‘திருமணம்’ என்ற நிகழ்வு அல்ல; நான் நேசிக்கும் மனிதர் என்னைத் தன் மனைவியாக்க விரும்புகிறார் என்ற உணர்வு மட்டும்தான். ஆனால், அதைத் தாண்டி பாரம்பர்யக் கணவராக இருப்பதற்கான எதிர்பார்ப்புகள் அவரிடமும், மனைவியாகச் செயல்படுவதற்கான ஆற்றல் என்னிடமும் அன்றைய சூழலில் இல்லை. நாங்கள் திருமணம் செய்திருந்தால், நிச்சயமாக இந்நேரம் பிரிந்திருப்போம்”என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்டெட்மேனும் பேட்டி ஒன்றில், “நான் உலகப் புகழ்பெற்ற ஒரு பெண்ணுடன் வாழ்கிறேன். ஆனால், என் அடையாளம் அவருடைய புகழால் வரையறுக்க ப்படுவதை நான் விரும்பவில்லை. நாங்கள் இருவரும் தனித்தனியாக வளர்வதற்கும், ஒருவரையொருவர் ஆதரிப்பதற்கும் இடையே ஒரு சரியான சமநிலையைக் கண்டறிந்தி ருக்கிறோம்” என்று கூறியிருந்தார். அதனால், சமூக எல்லைகளைத் தவிர்த்து விட்டு, காதலை மட்டும் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் முடிவெடுத்தார்கள்.

அவர்கள் தங்கள் உறவை ‘ஆன்மத் தோழமை’ (Spiritual Partnership) என்று அழைக்கிறார்கள். அதாவது, ஆதிக்கம் செலுத்துவதோ, ‘நீ எனக்குச் சொந்தம்’ என்ற சுயநலமோ இல்லாத இரு மனிதர்களின் சுதந்திரமான பயணம்.

இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஆனால், ஸ்டெட்மேனின் முதல் திருமணத்தில் பிறந்த மகளையும், மகளின் குழந்தையையும் ஓப்ரா தன் சொந்தக் குடும்பமாகவே ஏற்றுக்கொண்டார். இன்றைக்கும் அந்தப் பேரக் குழந்தைக்கு ஓப்ராதான் செல்லப் பாட்டி. உறவுகளைப் பிணைக்க ரத்த பந்தமோ, சட்டபூர்வச் சான்றிதழ்களோ தேவையில்லை… உண்மையான அன்பும் அக்கறையும் இருந்தால் போதும் என்பதற்கு இவர்களே ஆகச்சிறந்த உதாரணம்.

“நீ நீயாகவே இரு… உன்னுடன் நான் இருக்கிறேன்”


“நீ எனக்காக மாறு” என்பதல்ல காதல். “நீ நீயாகவே இரு… உன்னுடன் நான் இருக்கிறேன்” என்பதே இவர்களின் நாற்பதாண்டுக்காலக் காதல் வாழ்க்கையின் ரகசியம்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது, ‘திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதுதான் சரி’ என்பதோ, ‘திருமண அமைப்பே தவறானது’ என்பதோ அல்ல. இவர்களின் பயணம் உணர்த்தும் பாடம் வேறு…

காதல் என்பது ஒருவரை நம் வாழ்க்கைக்குள் கொண்டுவந்து அவரை நமக்கே சொந்தமாக்குவது அல்ல; அவரை அவராகவே இருக்க இடம் கொடுத்து, அவர் இன்னும் சிறந்த மனிதராக வளரும்போது அருகிலேயே இருப்பதுதான்.

“ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?” என்ற நீண்டகாலக் கேள்விக்கு, ஓப்ராவும் ஸ்டெட்மேனும் வார்த்தைகளால் பதில் சொல்லாமல், தங்களுடைய வாழ்க்கையையே பதிலாக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்! ( நன்றி – விகடன் தளம்….)

…………………….

இவர்களின் இந்தக் காதல் கதை ஒரு விதிவிலக்கு என்று தான் சொல்ல வேண்டும்….

திருமணம் செய்துகொள்ளாமலே 40 ஆண்டுகள் காதலை தொடர முடியும் என்பது மேற்கத்திய நாடுகளிலேயே கூட அபூர்வம் தான்….

நம் நாட்டைப் பொறுத்தவரையில், நம் சமூகங்களை பொருத்த வரை, இத்தகைய வாழ்க்கைக்கு லேசில் அங்கீகாரம் கிடைக்காது…. முக்கியமாக, ஆண்களுக்கு இதில் ஏதும் பெரிய பிரச்சினை இருக்காது…. எப்போது வேண்டுமானாலும், விட்டு விட்டு ஓடிவிடலாம் ( கமலஹாசனைப் போல ) என்பதால்…..

ஆனால், பெண்களுக்கு இது பாதுகாப்பான வாழ்க்கை முறை அல்ல…. முக்கியமாக குழந்தைகளைச் சுமந்து, பெற்றெடுத்து, வளர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதே….. நம் சமூகச் சூழ்நிலையில் அது மிகக்கடுமையான விஷயம்… மேலும், இத்தகைய விஷப்பரீட்சைகளால் பாதிக்கப்படக்கூடியவர்கள் பெண்களே….

………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக