– 73 வயதில், பாரிசில் -கேளிக்கை விடுதியில் விலைமாதருடன் கொண்டாட்டம் ….!!!

………………………………

………………………………….

வாழ்க்கை என்னைப் பொறுத்தவரை கொண்டாட்டம். அதற்கு வயது தடையல்ல. இந்தச் சமூகத்தில் 40 வயதைக் கடந்தாலே முதுமையை நோக்கி மனதளவில் புறப்பட்டுப் போய்விடுகிறார்கள்.

ஜென் Z இளைஞர்களைப்போல படு டிரெண்டியாக இருக்கிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா. லேட்டஸ்ட் ரகளையாக ஆபரணங்களிலிருந்து ஆடைகள் வரைக்கும் அவரிடமிருந்தே இப்போதெல்லாம் ஸ்டைல் ஆரம்பிக்கிறது. ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்பார்கள். இந்த ‘ஜித்தன்’ போக்கை யாராலும் கணிக்க முடியாதுபோல. தயங்காமல் கருத்து வைக்கும் கலகப் போராளியிடம் இலக்கியம் தவிர்த்து, எல்லாம் பேசினோம்.

“ஜென் Z இளைஞர்களைப்போல இவ்வளவு டிரெண்டியாக இருப்பதன் ரகசியம் என்ன?”

“எனக்கு இப்போது வயது 73.

16 வயது இருக்கும்போதே பாப் மார்லி மாதிரி முடி வைத்துக்கொண்டேன். ஆனால் பாப் மார்லி பெயர் அப்போது தெரியாது. எல்லோரும் தினமும் யூனிஃபார்மில் இருக்கிற மாதிரி உலவுகிறார்கள். யாரும் தங்களை அலங்கரித்துக் கொள்வதே இல்லை. யாரிடமும் இங்கே செல்ஃப் லவ் இல்லை. யாரும் ஹெல்த் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

எல்லோரின் கவலையும் குடும்பத்தின் மேலேயே இருக்கிறது. நாம் 100 வருடம் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என யாரும் நினைப்பதே இல்லை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாக நினைத்தால் இது எல்லாம் ஒரு பகுதி.

25 வருடங்களுக்கு முன்பே லினன் சட்டை, பேன்ட் அணிந்தேன். அமெரிக்காவில் Tracy McGrady என்ற புகழ்பெற்ற பேஸ்கட் பால் பிளேயர் இரண்டு கலரில் ஷூ போட்டார். நான் உடனே வாங்கிப் போட்டுவிட்டேன்.உடம்பையும் வாழ்க்கையையும் அருமையாக நேசிப்பதன் அடையாளம்தான் இது.”

சாரு நிவேதிதா

“உங்களை மாடர்னா வெச்சுக்க என்னவெல்லாம் செய்றீங்க?”

“சருமத்தில் டெட் செல்கள் இருக்கும். முதுமை அடைவதற்கும், தோல் சுருங்குவதற்கும் அவை உள்ளேயே தங்கிவிடுவதுதான் காரணம். அதையெல்லாம் நீக்க வேண்டும். இப்படி 100 விஷயம் இருக்கிறது. 15 நாள்கள் தேனில் ஊறவைத்த நான்கு மிளகுகளைக் காலையில் எழுந்து சாப்பிடுவேன். நல்ல உருண்டையாக மஞ்சள்தூளை கோலிக்குண்டு மாதிரி உருட்டி விழுங்குவேன். ஒரு வாரம் மிளகு, மறுவாரம் மஞ்சள்.

ஒரு அழகிப் போட்டிக்கு நடுவராகக் கூப்பிட்டார்கள். நான் அவர்களுடைய பாதத்தைத்தான் பார்த்தேன். வெடிப்பு இருந்தால் மார்க் கிடையாது. குழந்தையின் கன்னம் மாதிரி முகத்தையும் குதிகாலையும் வைத்துக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் லைஃப்ஸ்டைல் போலத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு நாள் மட்டும் போய் பார்லரில் உட்கார்ந்தால் இதெல்லாம் கைகூடாது.’’

“உங்களுக்குப் பிடித்த Comfort Food எது?”

“நான் உணவுகளின் காதலன். நான் பொலிவியா, பிரேசில் நாடுகளுக்குப் போயிருந்தபோது ‘பெரு’ நாட்டுக்கும் விரும்பி போய் வந்தேன். அதற்கு ஒரே ஒரு காரணம்தான். அதன் தலைநகரத்தின் உணவகத்தில் `செவிச்சே’ என்ற உணவு இருக்கிறது. அது `பெரு’வின் தேசிய உணவு. அப்படியொரு ருசி. சமைக்காத உணவுதான் அது.

15 பொருட்களை அதில் சேர்த்திருப்பார்கள். கூடவே `பிஸ்கோ’ என்ற ஒரு மது. அதைக் குடித்துக்கொண்டே `செவிச்சே’ சாப்பிடுவார்கள். அங்கே அதைச் சாப்பிட்டேன். அதன் ருசியை நான் சொல்லிக் காட்டவும் முடியாது. நீங்கள் எழுதிக் காட்டவும் முடியாது.

நான் பல நாடுகளுக்குப் போகும்போது உணவுகளை தேடித் தேடிச் சாப்பிடுவேன். அதே மாதிரி செட்டிநாட்டின் சில வகை உணவுகள், நாஞ்சில் நாட்டு உணவுகளெல்லாம் எனக்குப் பிடிக்கும். உணவுகளை ரசித்து உண்பது ஒரு கலை. அதைத் தேடிப்போவது ஒரு அனுபவம்.”

“ஜென் Z-களிடம் நீங்கள் விரும்பும் குணம் என்ன… எரிச்சலூட்டும் குணம் என்ன?”

“நான் அவர்களை வருத்தத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறேன். எதிலும் ஆழமாக இறங்காமல் மேம்போக்காக இருக்கிறார்கள். அவர்களால் தொடர்ந்து ஆறு மணி நேரம் படிக்க, எழுத முடியும் என்று தோன்றவில்லை. கமிட்மென்ட், கடின உழைப்பு இல்லை.

70 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ‘இந்தக் காலமே கெட்டுப்போச்சு’ என்பார்களே, அந்த பக்கெட்டில் நான் சொல்வதைப் போடாதீர்கள்.

சீரியஸாக, விஞ்ஞானபூர்வமாக, லாஜிக்காகப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். எரிச்சலூட்டுவது அடக்கமும் பணிவும் இல்லை. பணம் சம்பாதிப்பதைத் தவிர அவர்கள் எதையும் சாதிக்கவில்லை. நம்மிடம் இல்லாது, அவர்களிடம் இருப்பது புத்தி, இன்டலிஜென்ஸ். கிட்டத்தட்ட ஒவ்வொருத்தரும் ஏஐ மாதிரியே உலவுகிறார்கள். அவ்வளவு அறிவு இருக்கிறது.

ஆனால், நிகழ்காலத்தில் வாழாமல், எதிர்காலத்தில் வாழ்கிறார்கள். 40 வயதுக்குள்ளேயே எல்லா வசதிகளும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து நிறைய பேர் சுகர் மாத்திரைகளோடு வாழ்கிறார்கள். நமக்குத் தெரியாததெல்லாம் தெரிகிறது. பயங்கர புத்திசாலித்தனம் இருக்கிறது. அறிவும் இருக்கிறது. ஆனால் ஞானம் இல்லை. அவர்கள் நிகழ்காலத்திலும் கவனம் வைத்தால் அவர்களை மிஞ்ச முடியாது.’’

“உங்கள் முழு சுயசரிதை எப்போது வரும்… அதனால் என்னென்ன கலாட்டாவெல்லாம் நடக்கும்?”

“My life, my text என்று கனடாவிலிருந்து வரும் பத்திரிகையில் 20 அத்தியாயங்கள் எழுதினேன். நம் ஆட்கள் ஆங்கிலம் படிக்க மாட்டார்கள். பிரச்னை இல்லை.

ஒரு விஷயத்தை பெருமாள் முருகன்போல எழுதி மாட்டிக்கொள்ளவும் கூடாது. பொறுப்பாக எழுத வேண்டும். தமிழில் எழுதினால் கண்டிப்பாகப் பிரச்னை வரும்.

இந்திரா பார்த்தசாரதியிடம் ‘உங்க சுயசரிதையை எழுதலையா?’ என்றேன். ‘எழுதுகிற கதையெல்லாம் சுயசரிதைதானே’ என்றார். இன்னும் கொஞ்ச காலம் கழித்து சுயசரிதை எழுதுவேன். அதில் அசோகமித்திரன், ஆதவன், வெங்கட் சாமிநாதன், தி.ஜா., நகுலன் எல்லாம் இடம்பெறுவார்கள்.

எனக்கு இப்போது உள்ள எழுத்தாளர்களில் பெரிய ஆத்மார்த்தமான தோழமையாக யாருமே இங்கே இல்லை.’’

“உங்கள் பயோகிராபியில் யார் நடிக்கலாம்?”

“குரு சோமசுந்தரம் நடிக்கலாம். பிரமாதமாகப் பண்ணுவார். இன்னும் கலர்ஃபுல்லாக பிரகாஷ்ராஜ் செய்ய முடியும். ஆனால் அவருக்கு வேறு மாதிரி உடம்பு. அடுத்து கமல்தான். அவரால்தான் உடம்பை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியுமே! ‘உத்தம வில்லன்’கூட என்னுடைய கதை மாதிரிதான் இருக்கும். அவருடைய வாழ்க்கைக்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.”

“உங்களைப் பற்றி ஒரு வதந்தி நாளை வைரலாக வேண்டுமென்றால் அது என்னவாக இருக்கும்?”

“வாழ்க்கை என்னைப் பொறுத்தவரை கொண்டாட்டம்.

அதற்கு வயது தடையல்ல. இந்தச் சமூகத்தில் 40 வயதைக் கடந்தாலே முதுமையை நோக்கி மனதளவில் புறப்பட்டுப் போய்விடுகிறார்கள்.

ஒரு ‘பப்’பில் ஐந்து வருடங்களுக்கு முன்பு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 68 வயது. என் சிநேகிதிக்கு 26 வயது. நான் ‘கோக்’தான் குடித்திருந்தேன். அங்கே ஒரு பெரிய பத்திரிகையின் போட்டோகிராபர் இருந்தார். ‘உங்களை இப்போது படம் எடுத்தால் அது வைரல்’ என்றார். ‘ஆளை விடுங்கள் சாமி’ என்று வந்துவிட்டேன். அதே மாதிரி –

இப்போது பிரான்ஸுக்குப் போனபோது பாரிஸில் வைத்து பப்பில் ஒரு பெண்ணோடு டான்ஸ் ஆடினேன்.

அதைப் படம் எடுத்து ‘சாரு பாரிஸ் வந்தாச்சு. இனி இந்தியா திரும்ப மாட்டார். இங்கே ஆட்டம், பாட்டம்தான்’ என்று எழுதிவிட்டார்கள்.

‘உடனே வருகிறாயா இல்லையா?’ என்று மனைவி மிரட்டியதில் அடுத்த ஃபிளைட் பிடித்து இந்தியாவுக்கு வரவேண்டியதாகிவிட்டது.

ஒரு தமிழ் வாரப் பத்திரிகையில் இது மாதிரி டான்ஸ் ஆடிய படத்தைப் போட்டுவிட்டார்கள். ஆசிரியரிடம் கேட்டால் ‘ஜாலி சாரு. ரிலாக்ஸ்’ என்றார். என்ன செய்ய…!”

(விகடனில் வெளிவந்துள்ள ஒரு பேட்டி … !!!)

……………………………..

( பணம் அனுப்புங்கள் -பணம் அனுப்புங்கள் என்று கூசாமல் மற்றவர்களிடம் நச்சரித்து வங்கிக்கணக்கு எண்ணையும் அறிவித்து – கிடைக்கும் பணத்தில், 73 வயதில் வெளிநாடுகள் சென்று கேளிக்கை விடுதிகளில், இளம் பெண்களுடன் குடித்து விட்டு கூத்தடிப்பதை – பெருமையாக பீற்றிக்கொள்ளும் செயல் – சமுதாய உணர்வுள்ளவர்கள் செய்யும் செயலா …? கொஞ்சம் கூட மனசாட்சியோ, குற்ற உண்ர்வோ இருக்காதோ இந்த மனிதருக்கு ….???

மனதில் இரக்கம், மனிதாபிமானம்,
சக மனிதர்கள் பற்றிய சிந்தனை, அக்கரை எதுவுமே

கொஞ்சம் கூட இருக்காதோ –
ஒரு மனிதருக்கு…??? அதுவும் ஒரு எழுத்தாளருக்கு … ???

இந்த லட்சணத்தில், இந்த நாட்டில், மக்களுக்கு வாழ்க்கையை கொண்டாடவே தெரியவில்லை என்று ஏளனம் வேறு….!!! மகா கேவலம்….

இந்த நாட்டில், 3 வேளை சோற்றுக்கு வழியின்றி அல்லல்படுவோர் எத்தனை பேர்…..கொடிய நோயை அனுபவித்துக் கொண்டே, கடுமையான உடலுழைப்பில் ஈடுபட்டு, குடும்பத்தை காப்பாற்ற தவிப்பவர்கள் எத்தனை பேர்…? பள்ளிக்குச் செல்லும் வயதில் பாரம் தூக்கும் குழந்தைத் தொழிலாளிகள் எத்தனைபேர்…??? கணவரை இழந்து தன்னந்தனியே குடும்ப பாரத்தை, குழந்தைகளை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஏழை அபலைகள் எத்தனை பேர்…? சரியான மருத்துவம் செய்துகொள்ளக்கூட் பணமில்லாமல் தவிக்கும் முதியோர் எத்தனை பேர்…??முறையான கல்வியோ, பயிற்சியோ இல்லாமல், உடலுழைப்பு வேலை வாய்ப்பு கூட இன்றி வாழ்க்கையை பயத்துடன் எதிர்நோக்கும் இளைஞர்கள் எத்தனை பேர் …???

நலிவுற்று தவிக்கும் இவர்களில் யாருக்கேனும், எந்த வகையிலேனும் நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாமே என்று இந்த மனிதருக்கு கொஞ்சம் கூட தோன்றவில்லையே….

முடியவில்லை … இவர்களைப் போன்ற மனிதர்களை கொண்டாட – என்னால் – முடியவில்லை …..

இந்த மாதிரி மனிதர்களால், இந்த சமுதாயத்திற்கு என்ன பயன் ….??? )

……………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to – 73 வயதில், பாரிசில் -கேளிக்கை விடுதியில் விலைமாதருடன் கொண்டாட்டம் ….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சார்… உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்.

    அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது.

    அதனால் சாரு நிவேதிதா, பிறரிடம் பணம் அனுப்புமாறு வேண்டுகிறார். அதனைக் கொண்டு தன் படைப்புகளை மொழி பெயர்க்கவோ இல்லை எழுதுவதற்கான பயணங்களுக்கோ உபயோகப்படுத்திக்கொள்கிறார். அவர், தாம் வளர்க்கும் ‘கைவிடப்பட்ட’ பூனைகளுக்காக நிறைய செலவழிப்பதாகவும் சொல்கிறார். இது அவர் மேற்கொண்ட வாழ்க்கை.

    அவருக்குத் தெரிந்ததெல்லாம் இந்த வகையில் வாழ்க்கையைக் கொண்டாடுவதுதான். ஆனால் அதற்காக, அவர், பல இடங்களில், ‘நான் ஞானத்தை உங்களுக்குத் தருகிறேன்’ என்று தற்பெருமை அடித்துக்கொள்வதுதான் கடுப்பாக இருக்கும். எந்த வகை ஞானம் இது என்று எனக்குப் புரிவதில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்