தீபா அவர்கள் சொல்வது – ரொம்ப சரி …!!! இங்கேயும் அதே கதை தான் …!!!

…………………………………

…………………………………

நெருங்கிய உறவினருக்குத் திருமணம்.

இதற்காக எனது அம்மாவின் தம்பியும், அக்காவும் ஊரில் இருந்து வந்திருக்கிறார்கள். மூவருக்குமே வயது 75 ஐக் கடந்து விட்டது.

நானும் அந்தத் திருமணத்திற்காக அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறேன்.

இரண்டு நாட்களாக மூவரும் பத்து நிமிடங்கள் கூட சும்மா இல்லை. சளவென்று ஏதேதோ பேச்சு..அதிகமும் சிறு சிறு குற்றச்சாட்டுகள். ‘இவன் சொன்னா கேக்க மாட்டான்..போனை எடுத்துட்டு போன்னு சொன்னா போனை வச்சிட்டு போயிருக்கான் விறுவிறுன்னு..” என்று என் அம்மா தன்னுடைய பேரன் பேத்தியை எடுத்த தம்பியைச் சொல்ல,

என் பெரியம்மா “அவன் அவனியாபுரத்துல இருந்து சிம்மக்கல்லுக்கு சொல்லாம கொள்ளாம நடந்தே போனவன்..இன்னும் அப்படியே இருந்தா எப்படிடா” என்று என்னுடைய மாமா பத்து வயதில் நடத்திக்காட்டியத்தை புத்தம்புதிதாகச் சொல்ல, என் மாமா இருவருக்கு முன்பும் தலை குனிந்து நின்று கொண்டிருந்தார்.


சிறிது நேரங்கழித்து என் மாமா தன் சகோதரிகளை அவர்கள் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதாகக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தார். மறக்காமல் அவர்களுடைய பதிமூன்று வயதில் நடந்த ஒரு சம்பவத்தையும் சுட்டிக் காட்டினார்.


குரலுயர்த்துதல்களும், சிடுசிடுப்பும், உரிமைக் கோரல்களுமாக சென்று கொண்டிருக்கிறது.

தொடக்கத்தில் நான் இவர்களுக்கு நடுவில் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தேன். சட்டென்று பிடிபட்டது. இதில் நான் தலையிடவே கூடாது.

அவர்கள் மூவரும் இப்போது பால்யத்தினை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரை அவனியாபுரத்தின் தெருவில் நீளமான ஒரு வீட்டுக்குள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மாங்காய்கள் கிடந்த ஊறுகாய் சாடியைக் கவிழ்த்தது யார் என்கிற கேள்விக்கு அறுபது வருடங்களுக்குப் பிறகும் விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


இத்தனை வருடங்களில் மற்றவர்களின் நல்லது கெட்டதுகளில் துணை நின்று அவரவர் கடமைகளை முடித்த பின்னர் மீண்டும் தொடக்கத்தில் சென்று நின்று கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சண்டைகளும், சமாதானங்களும், சிரிப்புமாக இருக்கட்டும். வேடிக்கை மட்டும் பார்ப்போம். ( நன்றி – எழுத்தாளர் தீபா ஜானகிராமன் அவர்களுக்கு ….!!!)

……………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்