……………………………………..

………………………………………

…………………………………………

…………………………………………………………………
1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இந்திய தூதரகத்தை மாஸ்கோவில் திறக்க இரு அரசுகளும் முடிவெடுத்தன. ரஷ்யாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த நேரு முதல் இந்திய தூதராக தன் சகோதரி விஜயலக்ஷ்மி பண்டிட்டை நியமித்தார்.
அதன்பின் ஆகஸ்ட் 3 அன்று விஜயலட்சுமி பண்டிட், அவர் மகள் சந்திரலேகா பண்டிட், ரஷ்ய மொழியில் புலமை பெற்ற வங்காள எழுத்தாளர் ஹிரண்மய் கோஷல், சில உதவியாளர்கள் மற்றும் ஒரு சமையல்காரர் ஆகியோர் மாஸ்கோ கிளம்பினார்கள்.
ஆனால் இதற்குள் ஸ்டாலினுக்கு இந்தியா மேல் பெருத்த சந்தேகம் எழுந்திருந்தது. 1947-ல் இந்தியா பெற்ற சுதந்திரம் ஒரு முழுமையான சுதந்திரம் அல்ல என்றும், இந்தியா இன்னும் பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைப்பில் இருப்பதால் அது மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாகவே செயல்படும் என்றும் ஸ்டாலின் சந்தேகித்தார்.
ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. மாஸ்கோவின் அந்த ஹோட்டல் லாபியில் பண்டிட்டுடன் சென்றிருந்த இந்திய அதிகாரிகள் மட்டுமே இருந்தார்கள். ரஷ்ய வெளியுறவுத்துறையின் மிக ஜூனியர் அதிகாரிகள், மாஸ்கோவில் தங்கியிருந்த சில இந்திய வணிகர்கள், பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் என மிகக் குறைவான கூட்டமே அங்கே கூடியிருந்தது.
அப்போதெல்லாம் ஸ்டாலினை சந்திக்க வளர்ந்த மேலை நாடுகளின் கூட தூதர்கள் ஆண்டுக்கணக்கில் அபாயின்ட்மெண்டுக்கு காத்திருப்பார்கள். இந்தியா எனும் புதிய நாட்டை, அதுவும் ப்ரிட்டிஷ் அரசின் கைப்பாவை என அவர் நினைத்த அரசை அவர் பொருட்படுத்த கூட இல்லை. விஜயலட்சுமி பண்டிட் தூதரக அதிகாரியாக இருந்த இரு வருடங்களும் ஸ்டாலின் அவரைச் சந்திக்கவே மறுத்துவிட்டார்.
தன் பதவிக்காலம் முடிந்தபின் விஜயலட்சுமி பண்டிட் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பதவியேற்றுப் போய்விட்டார். ஸ்டாலினின் மனதை மாற்றி, இந்தியாவுக்கு சாதகமாக அவரை மாற்ற நேரு நியமித்த இந்திய தூதர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தான் இந்திய தூதர் என்றதும் பலரும் “சுத்தமாக சோலி முடிந்தது” என்றார்கள். காரணம் ராதாகிருஷ்ணன் தீவிர சைவ உணவு உண்பவர் மற்றும் மது அருந்தாதவர். இந்தியத் தூதரகத்தில் முழுக்க சைவ உணவுகளே பரிமாறப்பட வேண்டும் என உத்தரவிட்டார். தூதரகத்தில் தினமும் சாதம், சாம்பார், ரசம், காய்கறிப் பொரியல், சப்பாத்தி, பருப்பு (தால்) மற்றும் தயிர் ஆகியவை சமைக்கப்பட்டன.இந்திய தூதரக விருந்து என்றாலே அப்போது ரஷ்யாவில் அது ஒரு ஜோக் மற்றும் தண்டனையாக பார்க்கப்பட்டது
ஆனால் டிப்ளமசி என்பது உணவால் நிர்ணயிக்கபடுவதில்லையே? தான் யார் என்பதை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் விரைவில் காட்டினார்.
ராதாகிருஷ்ணன் வெறும் அரசியல் தூதர் அல்ல; உலகப் புகழ்பெற்ற தத்துவப் பேராசிரியர். இந்திய தத்துவங்களை மேற்கத்திய உலகிற்குப் புரியவைத்தவர். அவர் 16 முறை நோபல் இலக்கியப் பரிசுக்கும், 11 முறை நோபல் அமைதிப் பரிசுக்கும் (மொத்தம் 27 முறை) பரிந்துரைக்கப்பட்டவர்
இந்திய தத்துவங்களுக்கும், ரஷ்ய இலக்கியங்களுக்கும் (குறிப்பாக டால்ஸ்டாய் போன்றோரின் சிந்தனைகளுக்கும்) உள்ள தொடர்புகளை அவர் பேசியபோது ரஷ்ய அறிஞர்கள் அதை மிகுந்த மரியாதையுடன் கவனித்தார்கள். மாஸ்கோ இலக்கிய வட்டங்களில் இந்திய தூதரக நிகழ்வுகளுக்கு என ஒரு பெரிய மரியாதை உருவானது. வழக்கமான ராஜதந்திர விதிமுறைகளைத் தாண்டி, ஒரு தத்துவ ஞானியாகவே அவர் ரஷ்யாவில் மதிக்கப்பட்டார்.
இவர் ஒரு மாபெரும் தத்துவஞானி என ஸ்டாலினுக்கு சொல்லபட, இந்தியாவின் ஆன்மீக மற்றும் தத்துவப் பின்னணியிலிருந்து வந்த ஒரு அறிஞர் கம்யூனிசத் தத்துவங்களைத் எப்படிப் பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஸ்டாலினுக்கு ஆர்வம் இருந்தது.
அப்போது மாஸ்கோவில் உள்ள மற்ற நாடுகளின் தூதர்கள் (அமெரிக்கா, பிரிட்டன் உட்பட) ஸ்டாலினை நேரில் சந்திக்கப் பல மாதங்கள், ஏன் பல வருடங்கள் கூடக் காத்திருக்க வேண்டியிருந்தது. பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
ஆனால் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை ஸ்டாலின் கிரெம்ளின் மாளிகைக்கு அழைத்துப் பேசினார். ஒரு ஏழை நாட்டின் வெளிநாட்டுத் தூதருக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்டாலின் தனிப்பட்ட சந்திப்பு வழங்கியது அக்காலத்தில் மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.
ஸ்டாலின் வழக்கமாக நள்ளிரவுக்குப் பிறகே (அதிகாலை 1 அல்லது 2 மணிக்கு) வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பார். ஆனால், “பேராசிரியர் சீக்கிரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்” என்பதற்காக, ராதாகிருஷ்ணனுக்காக மட்டும் இரவு 9 மணிக்குச் சந்திப்பை மாற்றினார். இது மாஸ்கோ அதிகார வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது
ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், வெளிநாட்டுத் தூதர்களை அவர் பெயர் சொல்லியோ அல்லது “திரு. தூதர்” (Mr. Ambassador) என்றோ மட்டுமே மிகவும் இறுக்கமான இராஜதந்திர விதிமுறைகளுடன் அழைப்பார்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை புரபசர் என மரியாதையாக அழைத்து பேசினார்
ஒரே சந்திப்பில் ஸ்டாலினின் அனைத்து சந்தேகங்களும் பறந்தன. இருவரும் மிக ஆழமாக உரையாடினார்கள். ராதாகிருஷ்ணன், இந்தியாவின் மாமன்னர் அசோகரின் கதையைக் கூறினார். கலிங்கப் போரில் ரத்த ஆறு ஓடியதைப் பார்த்து மனம் திருந்திய அசோகர், வன்முறையைக் கைவிட்டு அன்பின் வழியில் ஆட்சி செய்ததை விளக்கினார். “அதிகாரமும் பலமும் கொண்டவர்கள், அதை அன்பாகவும் கருணையாகவும் மாற்றும்போதுதான் வரலாற்றில் நிலைத்து நிற்பார்கள்” என்ற ராதாகிருஷ்ணனின் வார்த்தைகளை ஸ்டாலின் அமைதியாகக் கேட்டுக்கொண்டார்.
அந்தச் சந்திப்பு சுமுகமாக முடிந்த பிறகு, சோவியத் வெளியுறவுத் துறை அதிகாரிகளின் அணுகுமுறையே முற்றிலுமாக மாறிவிட்டது. ஸ்டாலின் ஒருவரை எப்படி நடத்துகிறாரோ, அதையே ரஷ்ய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பின்பற்றுவார்கள். ஸ்டாலின் அவரை “பேராசிரியர்” என அன்புடன் அழைத்த பிறகு, ரஷ்ய அமைச்சர்களும் அதிகாரிகளும் ராதாகிருஷ்ணனிடம் காட்டிய இறுக்கத்தைத் தளர்த்தி, மிகுந்த மரியாதையுடன் நடத்தத் தொடங்கினர்.
அதுவரை ராதாகிருஷ்ணனை ஒரு சாதாரணத் தூதராக மட்டுமே பார்த்த சோவியத் அதிகாரிகள், அதன் பிறகு அவரை மிகுந்த மரியாதையுடனும், ஒரு மாபெரும் ஞானியைப் போலவும் நடத்தத் தொடங்கினர்.
“ஸ்டாலின் முன்பு இவ்வளவு தைரியமாகவும் நேர்மையாகவும் பேசக்கூடிய ஒரே மனிதர் இந்தியத் தூதர் மட்டும்தான்” என்ற பேச்சு மாஸ்கோவின் அதிகார வர்க்கத்தினரிடையே பரவியது.
1952-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்க ராதாகிருஷ்ணன் தாயகம் திரும்ப முடிவெடுத்தார். விடைபெறுவதற்காக ஏப்ரல் 5, 1952 அன்று இரவு ஸ்டாலினைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு உலக வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றது:
அப்போது ஸ்டாலின் மிகவும் சோர்வாகவும், வயதான தோற்றத்துடனும் காணப்பட்டார். அவருடைய முகத்தில் வீக்கம் இருந்தது.
…………..
பேசி முடித்து விடைபெறும்போது, ராதாகிருஷ்ணன் ஸ்டாலினின் அருகே சென்று, தன் கையால் ஸ்டாலினின் கன்னத்தையும், தலையையும், முதுகையும் அன்புடன் தட்டிக்கொடுத்து வாழ்த்தினார்.
உலகையே நடுங்க வைத்த ஸ்டாலினை, வாழ்நாளில் எந்த ஒரு நபரும்—அவரது நெருங்கிய சகாக்கள் கூட—அப்படித் தொட்டதில்லை. அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்த ஸ்டாலினின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
ராதாகிருஷ்ணனின் கைகளைப் பற்றிக்கொண்ட ஸ்டாலின், மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு இப்படிக் கூறினார்:
“என்னை ஒரு அரக்கனாகப் பார்க்காமல், ஒரு சக மனிதனாக நடத்திய முதல் நபர் நீங்கள்தான். நீங்கள் மாஸ்கோவை விட்டுச் செல்வது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நீண்ட காலம் வாழ உங்களை வாழ்த்துகிறேன்; ஆனால் நானும் நீண்ட நாள் உயிர்வாழப் போவதில்லை.”
………………
ஸ்டாலின் என்றால் இரும்பு என பொருள். அந்த இரும்புகோட்டை உடைந்து சிதறி அவருக்குள்ளிருந்த உணர்ச்சிகள் அனைத்தும் வெளிவந்த தருணம் அது. அறையில் இருந்த ரஷ்ய அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியில் சிலையானார்கள்.
இந்தச் செய்தி மாஸ்கோவின் ராஜதந்திர வட்டாரங்களில் கசிந்தபோது, மற்ற நாடுகளின் தூதர்களால் இதை நம்பவே முடியவில்லை. பல வருடங்களாக ஸ்டாலினை ஒருமுறை கூட நேரில் சந்திக்க முடியாமல் காத்திருந்த மேற்கத்திய தூதர்களுக்கு, ஒரு இந்தியத் தத்துவவாதி ஸ்டாலினைச் சந்தித்தது மட்டுமல்லாமல், அவரைத் தொட்டு ஆசீர்வதித்துவிட்டு வந்திருக்கிறார் என்பது பெரும் ஆச்சரியமாக இருந்தது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு (மார்ச் 1953-இல்) ஸ்டாலின் காலமானார். ராதாகிருஷ்ணன் உருவாக்கிய இந்த மனிதநேயப் பிணைப்பு, ஸ்டாலினுக்குப் பிறகு வந்த நிகிதா குருஷேவ் (காலத்திலும் தொடர்ந்தது.)
இந்தியாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான அசைக்க முடியாத நட்புறவுக்கு அடித்தளமிட்டது ஒரு தூதரக ஒப்பந்தம் அல்ல; ஒரு இந்தியத் தத்துவஞானியின் அன்பும் நேர்மையுமே ஆகும்.
……………………………………………………………………………………………………………………………………………………



மிக அருமையான பகிர்வு. //அத்தனை செல்களையும் உடல், மூளை, நினைவு என வெவ்வேறு வகையில் ஒருங்கிணைத்து, அவளை நடத்திக்கொண்டிருந்த ஒரு நோக்கம்’ மட்டும்தான் அந்த உடலிலிருந்து விலகிச்…