
……………………………………………………………..
இந்த விமரிசனம் வலைத்தளத்துக்கு 17 முடிந்து
18-வது வயது துவங்கி விட்டது…கிட்டத்தட்ட 7800 இடுகைகள்
எழுதி இருக்கிறேன் என்பதை நினைத்தாலே மலைப்பாக
இருக்கிறது…நிறைய புதிய வாசக நண்பர்கள் வந்து கொண்டிருப்பதை உணர்கிறேன்..
அதே சமயத்தில்,
அந்த காலத்திய வாசக நண்பர்கள் சிலர் கண்களில்
படுவதில்லை என்பதையும், பின்னூட்டங்களிலிருந்து அறிய முடிகிறது….பின்னூட்டங்களில் வரவில்லை என்பதால்
அவர்கள் தளத்திற்கு வருவதில்லை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது… அவர்கள் யாராவது மீண்டும் என்னுடன்
மின்னஞ்சலிலாவது தொடர்பு கொண்டால் மகிழ்வேன்…
நான் கவனித்த இன்னுமொரு முக்கிய விஷயம் –
இந்தியாவுக்கு வெளியே பல நாடுகளிலிருந்து நிறைய நண்பர்கள் இந்த தளத்திற்கு வருகை தருகிறார்கள்.
முன்பெல்லாம் அமெரிக்கா இந்த வரிசையில் முதலிடத்தில்
இருந்தது…பிறகு சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா,
வளைகுடா என்று இருந்த இந்த வரிசை,கடந்த 2 மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி – இப்போது
புதிதாக வந்த சீனா முதல் இடத்துக்கு வந்து விட்டது…
தினமும் 55-60 சீன நண்பர்கள் இங்கு வருவதைக்காண
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது…எப்படி இந்த அளவில், சீனாவில் – தமிழன்பர்கள் …???
சீனாவிலிருந்து இந்த
தளத்துக்கு வரும் நண்பர்கள் யாராவது என்ன ஈமெயிலில் ( kavirimainthan@gmail.com ) தொடர்பு கொண்டால் மகிழ்வேன் … அவர்களிடமிருந்து கேட்டு தெரிந்துகொள்ள எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன..
புதிதாக நிறைய பேர் வருவதாலும், அவர்கள் சில பழைய இடுகைகளை தேடித்துருவி பார்ப்பதாலும்,
இந்த தளத்தில் தலைப்பை மட்டும் வைத்து இடுகைகளை தேடுவதுசிரமம் என்பதாலும் -சுவாரஸ்யமான சில பழைய இடுகைத் தொடர்களை மீண்டும் இங்கே சில மாற்றங்களுடன் புதுப்பித்து வெளியிடலாமா என்று தோன்றுகிறது..பார்ப்போம்… !!!
…………
“நினைப்பதெல்லாம் – நடந்து விட்டால் ”
என்று நினைத்தவுடனேயே
– “தெய்வம் ஏதுமில்லை ” …..
என்கிற கவிஞர் கண்ணதாசனின் அடுத்த வரி
தன்னாலேயே நினைவிற்கு வந்து விடுகிறது….
சில அந்த காலத்திய பாடல்கள் அப்படித்தான் –
எந்தவித முயற்சியும் இல்லாமலே அடுத்தடுத்த வரிகள்
நினைவிலிருந்து தன்னாலேயே வந்து விழுகின்றன.
இப்படி ஒன்றா, இரண்டா …?
எத்தனையோ பாடல்கள், எத்தனையோ படங்கள்,
அவற்றுடன் பின்னிப்பிணைந்த அந்தந்த சமயத்து
வாழ்க்கை நினைவுகள், அனுபவங்கள்…!!!
சில, பழைய திரைப்பட பாடல்களையோ, படங்களையோ –
நினைக்கையில், அந்த சமயத்தில் நம் வாழ்க்கையில்
நடந்த சில சம்பவங்களும் அத்துடனேயே ஒட்டி வந்து
விழுகின்றன. இது எனக்கு மட்டும் தானா அல்லது
மற்றவர்களுக்கும் உண்டா என்று தெரியவில்லை.
என் வயதையொத்தவர்கள் பலருக்கு இருக்கலாமென்று
தோன்றுகிறது.
நேற்று மதியம் என்ன சாப்பிட்டோம், போன வாரம்
என்ன படித்தோம் என்பதை சட்டென்று நினைவிற்கு
கொண்டு வர முடியவில்லை. ஆனால் 50 வருடங்களுக்கு
முன்னர் நடந்த சில நிகழ்ச்சிகள், அப்படியே திரைப்படம்
போல் கண்கள் முன் ஓடுகின்றன.
இதற்கு, என் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் சில கொடுத்து வைத்தவர்கள் 90 வயதில் கூட
நல்ல ஞாபகசக்தியுடன் இருக்கின்றனர் …
( புண்ணியாத்மாக்கள் ….??? ).
அவர்களுக்கு அந்த பாக்கியம் தொடர வாழ்த்துகிறேன்..!!!
என் ஞாபக சக்தி இன்னும் குறையும் முன்னர்,
தலை சுத்தமாக blank ஆவதற்கு முன்னால் –
சிறுவயதிலிருந்து தொடங்கி – என் பல அனுபவங்களை
என் ரசனைகளுடன் சேர்த்து எழுதி இங்கே பதிவு
செய்துவிட விரும்புகிறேன்.
விமரிசனம் வலைத்தளத்தில், நான் பழைய படங்கள்,
பாடல்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை
எழுதும்போது, நடுத்தர வயதைத்தாண்டிய நண்பர்கள்
பலர் அதை உற்சாகத்துடன் வரவேற்று எழுதுகிறார்கள்
என்பதைப் பார்க்கிறேன். அவர்களுக்கு இந்த
இடுகைத்தொடர் பிடிக்குமென்று நிச்சயம் நம்பலாம்.
இந்த தலைமுறை இளைஞர்களுக்கு –
அவர்கள் அறியாத, அனுபவித்திருக்க வாய்ப்பில்லாத
பல விஷயங்கள் இங்கே பகிரப்படும்போது,
அவர்கள் அதை வித்தியாசமாக உணரலாம்.
அவர்களுக்கு முந்தைய தலைமுறை வாழ்ந்த விதம்,
சூழ்நிலை, ரசனைகள், வசதிகள் பற்றி அவர்கள்
தெரிந்துகொள்ள இந்த இடுகைத்தொடர் ஒரு வாய்ப்பாக
இருக்கலாம்.
என் ரசனைகள் என்று பார்த்தால், சிறு வயதிலேயே
என்னுடன் ஒட்டிக்கொண்டது – சினிமா, சினிமா பாடல்கள்….!
இது 6 வயதிலேயே துவங்கி விட்டது.
பின்னர், 10 வயது அளவில் சேர்ந்து கொண்டது வாசிப்பு…
அப்போதே நிறைய பத்திரிகைகள், வார/மாத இதழ்கள்
படிக்கத் துவங்கி விட்டேன். அப்போதே, ஆங்கில நாளிழில்
தலைப்புச் செய்திகளை மட்டும் படிப்பேன்… புரிந்து கொள்ள
முயற்சிப்பேன்…!!!
பின்னர் 18-20 வயதில் சேர்ந்து கொண்டது –
அரசியல், சமூக அக்கறை/பொது நலம், நிறைய பயணங்கள்…
உலக இயல்பு பற்றிய பொது அறிவு, தேடல்கள்…
எனவே, நான் எழுதும் இந்தத் தொடரில், இவை எல்லாமே
கலந்து வரும்… ஒவ்வொரு சமயத்தில், ஒவ்வொன்று
தூக்கலாக இருக்கும். ஆனால், இவை அனைத்துமே
என்னோடு, என் ரசனைகளோடு/விருப்பங்களோடு ஊறியவை.
உங்களில் பெரும்பாலானவர்களுக்கு நிச்சயம்
பிடிக்கும்படியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இன்றைய துவக்கமாக – என் வாழ்வில்,
எனக்கு நினைவு தெரிந்து,
நான் முதன் முதலாகப் பார்த்த ஒரு திரைப்படம் பற்றி
கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்.
….
அந்த வயதில் என் மனதில் ஆழப்பதிந்த –
குழலூதும் இரட்டையர்கள் –
…………….
பகுதி-2 ல் தொடரும் …
…………………………………………………………………………………………………………………………………………………..



18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள்.
வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச் சொல்பவர்கள் எல்லோரும், சிறிய வயது நினைவுகளையே சரியாக நினைவில் வைத்திருப்பார்கள். நேற்று மதியம் என்ன சாப்பிட்டீங்கன்னு கேட்டால் சட்னு நினைவுக்கு வராது. ஆனால் நீ, இத்தனாம் வருஷம் இந்த மாசம் இந்தத் தேதில இங்க பிறந்த, அப்போ நான் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தேன்னு சரியாச் சொல்லுவாங்க. இதுதான் என் அனுபவம்.
முதன் முதலா ஹிந்தித் திரைப்படமா (ஹாஹா). என் நினைவில் இருப்பது ராஜராஜ சோழன் திரைப்படம்.