…………………………………………..

………………………………………………
புருஷோத்தமனுடன் போரிட்ட பிறகு அலெக்சாந்தர் சிந்து நதிக்கரை வழியே பாரசிகத்திற்கு திரும்ப திட்டமிட்டான்.
ஆனால் வழியில் மாளவ நாடு இருந்தது. இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் உள்ள முல்தான் நகரை மாளவர்கள் ஆண்டு வந்தனர். இந்த மாளவநாட்டின் வளமைக்கு முக்கிய காரணம் இங்கிருந்த சூரியனார் கோயிலாகும்.
மகாபாரதக் கதைகளின்படி, கிருஷ்ணரின் மகனான சாம்பன் சூரிய பகவானை நோக்கித் தவமிருந்து இந்தக் கோயிலைக் கட்டியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
இந்தக் கோயிலின் சூரிய பகவான் சிலை (ஆதித்யா) தூய சொக்கத் தங்கத்தால் செய்யப்பட்டு, விலைமதிப்பற்ற ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட கண்களைக் கொண்டிருந்தது. சில வரலாற்று மற்றும் பயணக் குறிப்புகளின்படி, இந்தச் சிலை காந்த விசை (தொழில்நுட்பம்) மூலம் காற்றில் மிதக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த கோவிலின் மூலஸ்தானத்தின் பெயராலேயே அந்த நகருக்கு முல்தான் என பெயர் வந்தது
ஆசியா முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்தத் தலத்திற்கு வந்து மிக அதிக அளவில் காணிக்கைகளைச் செலுத்தினர்.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீனப் பயணி யுவான் சுவாங் மற்றும் 10-ஆம் நூற்றாண்டில் வந்த பாரசீக அறிஞர் அல்-பிருனி ஆகியோர் இக்கோயிலின் பிரம்மாண்டத்தைப் பற்றி வியந்து எழுதியுள்ளனர். இதனால் மிகுந்த வளம் கொழிக்கும் நாடாக மாளவ நாடு இருந்தது.
பாரசீகப் பேரரசர் முதலாம் டேரியஸ் காலத்தில் கிரேக்க மாலுமியான ஸ்கைலாக்ஸ் இந்தக் கோயிலைச் சுற்றிப்பார்த்து அதைத் தன் நூலில் குறிப்பிட்டிருந்ததால்,
அலெக்சாண்டரும், பிற கிரேக்க தளபதிகளும், வீரர்களும் அதைப் பார்க்க ஆசைப்பட்டார்கள்.
தவிர தான் செல்லும் வழியில் மாளவம் இருந்ததால் சரணடையச் சொல்லி அலெக்சாந்தர் செய்தியனுப்பினார்.
“சரணடைந்துவிடுங்கள். எதுவும் செய்ய மாட்டோம். கோயிலைச் சுற்றிப்பார்த்துவிட்டு, ஒரு கிரேக்க சத்ரப்பை உங்களுக்கு தலைவராக நியமித்துவிட்டு போய்விடுவோம்” எனச் சொல்ல மாளவம் ஒப்புக்கொள்ளவில்லை.
அலெக்சாண்டர் சிந்து நதி வழியாகத்தான் (படகுகள் மூலம்) வருவார் என்று எதிர்பார்த்து நதிக்கரைகளில் தங்களின் படைகளை நிறுத்திவிட்டு மாளவ மக்கள் பாதுகாப்பாக இருந்தனர்.
ஆனால் அலெக்சாந்தர் செனாப் மற்றும் ரவி நதிகளுக்கு இடையே இருந்த, எவராலும் கடக்க முடியாது எனக் கருதப்பட்ட ஒரு வறண்ட, கடுமையான பாலைவனப் பகுதியைத் தேர்ந்தெடுத்தார். அவரது வீரர்கள் மிகக் குறைந்த ஓய்வுடன், வெறும் 24 மணி நேரத்தில் சுமார் 72 கி.மீ அந்தப் பாலைவனத்தைக் கடந்து மால்லியர்களின் எல்லைக்குள் நுழைந்தனர்.
அன்று அலெக்சாந்தர் கடந்த அந்த வறண்ட பாலைவனமாக இருந்த பூமி பிரிட்டிஷார் ஆட்சியில் கால்வாய்கள் வெட்டப்பட்டு, இன்று பாகிஸ்தானின் மிக வளமான, பசுமையான கோதுமை மற்றும் பருத்தி விவசாய பூமியாக மாறியுள்ளது. பைசலாபாத் நகரமும் அங்கே அமைந்துள்ளது.
பைசலாபாத் மற்றும் ஜாங் மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக அலெக்சாண்டர் தெற்கு நோக்கிப் பாய்ந்து வந்து, ரவி நதிக்கரையில் இருந்த முல்தான் நகரை அடைந்தார். அப்போது வயல்வெளிகளில் விவசாயிகள் வேலை செய்துகொண்டிருந்தனர். கோட்டைக் கதவு திறந்திருந்தது. காவலுக்கு யாருமே இல்லை.
தாகம், பசி, உறக்கமின்மையால் தவித்த மாசிடோனிய வீரர்கள் “கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு தாக்கலாம்” எனச் சொல்ல, “அதற்குள் கோட்டைக் கதவைச் சாத்திவிடுவார்கள். சிந்து நதிக்கரையோரம் நிற்கும் மாளவ படைகளும் வந்துவிடும்” என்ற அலெக்சாந்தர் உடனடியாகத் தாக்க உத்தரவிட்டான்.
அதற்குள் விவசாயிகள் ஓடிப்போய் சொல்ல, கோட்டைக் கதவு மூடப்பட்டது.
மாளவ வில்லாளிகள் கோட்டை மதிலில் அணிவகுக்கத் தொடங்க, “முழுமையாக மாளவநாட்டு வில்லாளிகள் கோட்டை மதிலில் ஏறுவதற்குள் டக் என ஏணியைப் போட்டு ஏறி கோட்டை மதிலைப் பிடியுங்கள்” எனச் சத்தமிட்ட அலெக்சாந்தர் ஏணியைக் கொண்டுவரச் சொல்லித் தானே ஏணியின் மேல் ஏறி கோட்டை மதிலை அடைந்தார்.
அவருடன் வெறும் மூன்று பாதுகாவலர்கள்தான் இருந்தார்கள்.
அங்கே கடும்போர் நடந்தது. மன்னன் தனியே கோட்டை மதில் மேல் மாட்டிக்கொண்டதைக் கண்ட மாசிடோனியர் பதறியடித்துக்கொண்டு, மேலும் ஏணிகளைச் சாத்தி மேலே ஏற முயன்றனர். ஆனால் அதற்குள் சுதாரித்த மாளவ வீரர்கள் அந்த ஏணிகளைத் தள்ளிவிட, அலெக்சாந்தர் மேலே தனியாக மாட்டிக்கொண்டான்.
அதன்பின் கோட்டைக்குள்ளேயே குதித்து கடுமையான வாட்போர் செய்தான். அப்போது மாளவ வில்லாளி எய்த அம்பு ஒன்று அவனது நுரையீரலைத் துளைத்து உள்ளே நுழைந்தது. அலெக்சாந்தர் இறந்துவிட்டான் என மாளவ வீரர்கள் வெற்றிமுழக்கம் எழுப்பினார்கள்.
அலெக்சாந்தருடன் வந்த மூன்று மெய்க்காப்பாளர்கள் அவன் மேல் தங்கள் உடலில் இருந்த கவசங்களைப் போர்த்திச் சுற்றி நின்று கொள்ள, அங்கே கடும்போர் நடந்தது.
அதற்குள் கோட்டை மதிலை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த மாசிடோனிய படை தன் மன்னரை மீட்டு வெளியே கொண்டு சென்றது. மன்னரின் மேல் அம்பு பாய்ந்து உயிருக்கு போராடியதால் கோபமடைந்த அவர்கள் கோட்டையில் இருந்த அனைத்து மக்களையும் வெட்டிக்கொன்றார்கள். சுமார் 50,000 மக்கள் அன்று கோட்டைக்குள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
அதன்பின் மீதமிருந்த சில தலைவர்கள் மட்டும் அலெக்சாந்தரின் முன் கொண்டுவரப்பட்டனர். படுகொலைகளை நிறுத்தச் சொன்ன அலெக்சாந்தர் சில நாட்கள் ஓய்வெடுத்து உடல்நலம் தேறியபின்னர் சூரியனார் கோயிலுக்குச் சென்றான்.
கோயிலில் இருந்த சூரிய பகவானின் விசித்திரமான சிலையானது எந்தவொரு தூணோ அல்லது பிடிப்போ இன்றி, காற்றில் மிதந்து கொண்டிருந்தது.
காந்த விசையின் துல்லியமான பயன்பாட்டைக் கொண்டு அந்தச் சிலை காற்றில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அந்தச் சிலை தூய தங்கத்தாலும், அதன் கண்கள் பெரிய சிவப்பு மாணிக்கக் கற்களாலும் செய்யப்பட்டிருந்தன.இதைப் பார்த்த அலெக்சாண்டர்,
“இது மனித அறிவியலின் மற்றும் கலையின் உன்னதமான உச்சக்கட்டம்!” என்று வியந்து பாராட்டினார்.
பொதுவாக கிரேக்கர்கள் தாங்கள் வென்ற நாடுகளின் மத வழிபாட்டுத் தலங்களைச் சிதைக்க மாட்டார்கள். அதேபோல், அலெக்சாண்டர் இக்கோயிலின் பிரம்மாண்டத்தைக் கண்டு அதைச் சேதப்படுத்தாமல் பாதுகாக்குமாறு தன் வீரர்களுக்கு உத்தரவிட்டார்.
சொன்னதுபோல் ஒரு கிரேக்க சத்ரப்பை நியமித்து, கிரேக்க படை ஒன்றையும் நிறுத்திவிட்டு அலெக்சாந்தர் பாரசிகம் நோக்கிச் செல்ல,
கிரேக்கர் ஆதிக்கத்தில் வாழ விரும்பாத மாளவநாட்டு மக்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து, கிரேக்கர்கள் வரவே முடியாத இந்தியாவின் உட்பகுதிக்குச் செல்ல முடிவெடுத்தார்கள்.
அவர்கள் அதற்குத் தேர்ந்தெடுத்த இடம் இன்றைய மத்தியப்பிரதேசம். மாளவர்கள் குடியேறியதால் அது ‘மாள்வா’ என இன்றும் அழைக்கப்படுகிறது.
ஆனால் அவர்களின் முக்கிய அடையாளமான சூரியனார் சிலையை அவர்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை. கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்த சூரியச் சிலை, சுவர்களில் இருந்த காந்தக் கற்களின் துல்லியமான ஈர்ப்பு விசை மூலம் காற்றில் மிதக்கும்படி அதிநவீன அறிவியல் தொழில்நுட்பத்துடன் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.
அந்தச் சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டுமெனில், சுவர்களில் இருக்கும் காந்த அமைப்புகளைத் தகர்த்து, மிக நிதானமாகச் செய்ய வேண்டும்.
தவறான முறையில் சிலையைத் தொட்டால், அது கீழே விழுந்து சேதமடையும் அபாயம் இருந்தது. அகதிகளாகக் குடியேறும் நாட்டில் மீண்டும் இப்படி ஒரு தொழில்நுட்பத்தில் ஒரு கோயிலைக் கட்டி, சூரியனாரை நிறுவ முடியுமா என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை.
அதனால் சூரியனார் சிலையையும், கோயிலையும் அப்படியே விட்டுவிட்டு மாளவநாட்டுக்குக் குடியேறினார்கள்.
அந்த நுரையீரல் காயம் அலெக்சாந்தருக்குள் நிரந்தரமான சுவாசப் பலவீனத்தை ஏற்படுத்தியிருந்தது. பிற்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட கடுமையான காய்ச்சல் (மலேரியா அல்லது டைபாய்டு), மற்றும் அவரது அதிகப்படியான மதுப்பழக்கம் ஆகியவற்றுடன் இந்த உடற்பலவீனமும் சேர்ந்து அவரது மரணத்தை விரைவுபடுத்தியது என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
மத்தியப்பிரதேசம் சென்ற மாளவர்கள் அலெக்சாந்தரைக் காயப்படுத்தி வீழ்த்தியதை குறிக்கும் விதத்தில் “மாளவானாம் ஜெயஹே” (மாளவத்துக்கே வெற்றி) எனும் பெயரில் தங்க நாணயங்களை அச்சடித்து வெளியிட்டார்கள்.
பின்னாளில் இந்த மாளவ வம்சத்தில் வந்த மன்னன்தான் வரலாற்றுப் புகழ்பெற்ற விக்ரமாதித்த மன்னன்.
சகர் (saka) எனும் மத்திய ஆசிய குடியினரை இந்தியாவில் இருந்து விரட்டி மிகப்பெரும் மாளவப் பேரரசை உருவாக்கினான். அதை ஒரு புதிய சகாப்தம் பிறந்ததாகக் கருதி புதிய காலண்டர் ஒன்றை உருவாக்கி, அது ‘மாளவ சகாப்தம்’ (Malava Samvat) அல்லது ‘கிருத சகாப்தம்’ (Krita Samvat) என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த நாட்காட்டி அதன் நாயகனான விக்ரமாதித்தனின் பெயரால் ‘விக்ரம சகாப்தம்’ (Vikrama Samvat) அல்லது விக்ரம ஆண்டு என்று உலகப் புகழ்பெற்றது.
இன்றும் வட இந்தியா மற்றும் நேபாளத்தில் இந்த விக்ரம நாட்காட்டியே இந்து சமய வழிபாடுகள், பண்டிகைகள் மற்றும் ஜோதிடக் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நாட்காட்டி உருவாவதற்குக் காரணமான மன்னன் விக்ரமாதித்தனின் வீரத்தையும் நீதியையும் போற்றும் வகையில் உருவானவைதான் புகழ்பெற்ற “விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்” ஆகும். ( உதவிக்கு நன்றி – நியாண்டர் செல்வன் ……..)
………………………………………………………………………………………………………………………………………………..



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…