வகை வகையான நரகங்கள் …!!! இதில் எந்த இடத்துக்கு அனுப்பலாம் … ??? ( நீங்கள் வெறுக்கும் அந்த அரசியல்வாதியை …..!!! )

……………………………………………..

……………………………………………….

28 நரகங்களில் உங்களுக்கு எந்த நரகம் ரொம்ப பிடிக்கிறது …??

உங்களுக்கு பிடிக்காத – அசிங்கம் பிடித்த, கொள்ளையடிக்கும், மோசடி அரசியல்வாதியை அனுப்பி வைக்க –

உங்களை ஒரு இடம் தேடச்சொன்னால், கீழ்க்கண்டவற்றில், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் ….???

புராணங்களிலேயே, மிகவும், யோசித்து யோசித்து புதிது புதிதாக தண்டனை வகைகளை உருவாக்கி எழுதப்பட்டதாக கருட புராணத்தைச் சொல்லலாம்…. படித்துப் பாருங்களேன்…. தமாஷாக இருக்கும் ….நீங்களும் இதைத்தான் சொல்வீர்கள்…..!!!

…………………………………………………

​மரணத்திற்குப் பிறகு ஆன்மா அடையும் நிலையைப் பற்றி கருட புராணம் ஒரு திகைக்க வைக்கும் கருத்தை கூறுகிறது.

​மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் பாவங்களின் தன்மைக்கேற்பச் சென்றடைய 28 நரகங்கள் உண்டு.

திருடினால் ஓராண்டு, கொலை செய்தால் பத்தாண்டுகள் என உலக நீதிமன்றங்கள் சிறைத்தண்டனை விதிப்பது போல, நாம் செய்த பாவங்களுக்குரிய தண்டனையை முதலில் அந்தந்த நரகங்களில் அனுபவித்தே தீர வேண்டும்.

அங்கு ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனியாகத் தண்டனைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.​

கருட புராணம் விவரிக்கும் அந்த 28 நரகங்களின் பட்டியலை ஒருமுறை பார்க்கலாமா..??

1. ​தாமிஸ்ரம்: பிறன்மனை நோக்குபவர்களுக்கும், அடுத்தவரின் வாழ்க்கைத் துணையை அடைய நினைப்பவர்களுக்கும் உரிய நரகம்.

தண்டனை: கட்டிவைத்து உணவின்றிப் பட்டினி போடுவதுடன், கடுமையாக வதைப்பது.

2. ​அந்ததாமிஸ்ரம்: அடுத்தவரை ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்கும், பிறர் உழைப்பைத் தன் பெயரில் மாற்றிக் கொள்பவர்களுக்கும் இதுதான் இடம். வெளிச்சமே இல்லாத பாதாள இருட்டுக் கிணற்றில் தள்ளி மூர்ச்சையடைய வைப்பார்கள்.

3. ​ரௌரவம்: குடும்பத்தைக் கவனிக்காமல், அடுத்தவர் சொத்தைக் கவர்ந்து தனக்கு மட்டுமே சேர்க்க நினைப்பவனுக்கு இந்த இடம். இங்கு ‘ருரு’ என்ற கொடிய விஷ ஜந்துகள் விடாமல் கடித்துக் குதறும்.

4. ​மகா ரௌரவம்: சொத்துக்காகக் குடும்பத்தையே அழித்து, உறவுகளைச் சீரழிப்பவர்களுக்குரிய நரகம்.

‘கிரவ்யாதர்கள்’ எனப்படும் கொடிய விலங்குகள் உடலைக் குதறித் தின்னும். ஆனால் உயிர் போகாது. அந்த வேதனையை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.

5. ​கும்பீபாகம்: வாயில்லாப் பிராணிகளை வதைத்துக் கொல்பவர்களுக்கும், ஆசைக்காக உயிர்களைத் துடிக்கத் துடிக்க வதைப்பவர்களுக்கும் இதுவே முடிவு. கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுப்பார்கள். (அந்நியன் பட சொக்கன் 65 நியாபகம் வருகிறதா? அதே தான்)

6. ​காலசூத்திரம்: பெற்றோரையும், பெரியவர்களையும், ஆசானையும் மதிக்காமல் ஏசி அடிப்பவர்களுக்கு இந்த நரகம் காத்திருக்கிறது. கொதிக்கும் செம்புத் தரையிலும், முட்கள் நிறைந்த பாதையிலும் வெறுங்காலுடன் ஓட வைப்பார்கள்.

7. ​அசிபத்திரவனம்: தர்ம நெறிகளை மதிக்காமல், அறவழியை விட்டு விலகி வாழ்வோருக்குரிய நரகம். கத்தி போன்ற கூர்மையான இலைகள் கொண்ட காட்டில் ஓட விடுவார்கள்; கால்களும் உடலும் கிழிந்து ரத்தம் சொட்டும்.

8. ​சூகரமுகம்: அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அப்பாவி மக்களுக்கு அநியாயமாகத் தண்டனை வழங்கும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்குரிய இடம்.

கரும்பைப் பிழிவது போல உடலைப் பிழிந்து வதைப்பார்கள்.

9. ​அந்தகூபம்: சிறு உயிர்களைக் கூட காரணமின்றித் துன்புறுத்திக் கொல்பவர்கள் தள்ளப்படும் இடம். விஷப் பூச்சிகளும் பாம்புகளும் நெளியும் ஆழமான பாழுங்கிணற்றில் வீசப்படுவார்கள்.

10. ​கிருமிபோஜனம்: வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்காமல், பசியோடு இருப்பவருக்குப் பகிர்ந்தளிக்காமல் தான் மட்டுமே உண்ணும் சுயநலவாதிகளுக்குரிய நரகம். இங்கு உடலைப் புழுக்கள் தின்னும். புழுக்களையே உணவாக உண்ணவும் நேரிடும்.

11. ​சந்தம்சம்: வஞ்சகமாகப் பொய் சொல்லி அடுத்தவர் உழைப்பையும் பணத்தையும் பறிப்பவர்களுக்குரிய இடம். உடலின் தோலைக் கூரிய இரும்புக் கிடுக்கிகளால் பிய்த்து எடுப்பார்கள்.

12. ​தப்தசூர்மி: பெண்களை இழிவான கண்ணோட்டத்துடன் அணுகி வன்கொடுமை செய்பவர்களுக்குரிய நரகம். செஞ்சூடாகத் தகிக்கும் இரும்புப் பதுமையைக் கட்டித் தழுவ வைப்பார்கள்.

13. ​வஜ்ரகண்டக சால்மலி: தகாத உறவில் திளைத்து அறம் தவறியவர்களுக்குரிய தண்டனை. கூரிய இரும்பு முட்கள் நிறைந்த இலவ மரத்தில் ஏறி இறங்க வைப்பார்கள்.

14. ​வைதரணி: லஞ்சம் வாங்கி, அதிகாரத் திமிரில் நீதியை வளைப்பவர்கள் செல்லும் நரகம். சீழும் ரத்தமும் கொதிக்கும் 800 மைல் நீளமுள்ள வைதரணி ஆற்றில் மூழ்கித் தத்தளிக்க வேண்டும்.

15. ​பூயோதம்: வெட்கமே இல்லாமல் இழிவான செயல்களைச் செய்து, பிறரை ஏய்த்துப் பிழைப்பவர்களுக்கான இடம். மலம், சிறுநீர், சீழ் நிறைந்த படுகுழியில் வீசப்படுவார்கள்.

16. ​பிராணரோதம்: விலங்குகளைத் தன் பொழுதுபோக்குக்காகவும் வேட்டைக்காகவும் இரக்கமின்றித் துன்புறுத்துபவர்களுக்குரிய இடம். அங்கு கொடிய வேட்டை மிருகங்களே அவர்களை வேட்டையாடும்.

17 ​விசசனம்: செல்வச் செருக்கால் அப்பாவிகளை அழிப்பவர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் உரிய நரகம். யமதூதர்கள் உடலைத் துண்டு துண்டாக வெட்டிப் போடுவார்கள். ஆனால் உயிர் போகாமல் அந்த வழியை நீங்கள் அனுபவிப்பீர்கள். அவ்வளவு கொடுமை.

18. ​லாலாபக்ஷம்: மனசாட்சியின்றி மனைவியைக் கைவிட்டு, தவறான காம இச்சையோடு அலைபவர்களுக்குரிய இடம். அசுத்தங்கள் நிறைந்த கழிவு ஆற்றில் தள்ளி மூழ்கடிப்பார்கள்.

19. ​சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.

20. ​அவீசி: பொய் சாட்சி சொல்பவர்களுக்கும், வியாபாரத்தில் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்கும் உரிய நரகம். பெரும் மலை உச்சியிலிருந்து தலைகீழாகக் கீழே தள்ளி, உருள உருள அடிப்பார்கள்.

21. ​அயஹ்பானம்: மதுவுக்கு அடிமையாகி புத்தியை இழந்து, வரம்பு மீறி நடப்பவர்களுக்கான நரகம். கொதிக்கும் திரவ இரும்பை வாயில் ஊற்றுவார்கள்.

22. ​ரக்ஷோகண போஜனம்: பேராசைக்காகவும் சுயநலத்துக்காகவும் பலியிடும் பாவிகளுக்குரிய இடம். அவர்கள் துன்புறுத்திய உயிர்களே அரக்க உருவெடுத்து அவர்களை வேட்டையாடும்.

23. ​சூலப்ரோதம்: நம்பியவருக்குத் துரோகம் இழைப்பவர்களுக்கும், முதுகில் குத்துபவர்களுக்கும் உரிய தண்டனை. கூர்மையான சூலாயுதத்தில் உடலைச் செருகி அந்தரத்தில் தொங்கவிடுவார்கள்.

24. ​சந்தேசம்: குற்றமற்ற அப்பாவிகள் என்று தெரிந்தே அதிகாரத்தால் அவர்களைத் தண்டிப்பவர்களுக்குரிய இடம். தோலை உரித்து உப்பிட்டு வதைப்பார்கள்.

25. ​அவடநிரோதனம்: பிறரை அச்சுறுத்த சட்டவிரோதமாக ஆயுதங்களைப் பதுக்குபவர்கள் தள்ளப்படும் நரகம். வெளிச்சமே இல்லாத குகைக்குள் அடைத்து விஷப்புகையைச் செலுத்துவார்கள்.

26. ​பர்யாவர்த்தனம்: பசியோடு வாசலுக்கு வந்த விருந்தினரைக் கடுகடுத்து அவமானப்படுத்தி விரட்டுபவர்களுக்குரிய தண்டனை. கண்களைக் காகங்களும் கழுகுகளும் கொத்திக் குதறும்.

27. ​சூசிமுகம்: பதுக்கல் காரர்களுக்கும், தேவைக்கு மீறிச் செல்வத்தைச் சேர்த்து வைத்து ஒரு பைசா கூட தர்மம் செய்யாத பேராசைக்காரர்களுக்கும் உரிய நரகம். உடல் முழுவதும் கூரிய ஊசிகளால் தைத்து வதைப்பார்கள்.

28. ​நிகிருந்தனம் (கடைசி எச்சரிக்கை): இழைத்த பாவத்தின் தன்மைக்கேற்ப, துயரங்கள் தீராத தொடர் வதைகளை அனுபவிக்கும் இறுதி நிலை….

………………………

அநேகமாக, மேலே உள்ள அனைத்து பாவங்களையும் உங்கள் ஃபேவரைட்டான அந்த அரசியல்வாதி செய்திருப்பார்….. எனவே, வரிசையாக ஒவ்வொரு நரகத்திற்கும் அவரை ” விசிட் “செய்ய வைப்பதே பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறீர்களோ … !!!! ( கருட புராண உதவி — தயாநிதி வீரராகவன்.. )

……………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக