அண்ணாமலையார் குறித்த அபூர்வ தகவல்கள் ….!!!

நினைத்தாலே முக்தி தரும் தலம்.
இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்.
ஈசன் நெருப்பாக நின்ற தலம்; மலையாகக் குளிர்ந்த தலம்.
லிங்கோத்பவர் எழுந்த தலம்; மால், அயனுக்கு அருளிய தலம்.
மன்மதனை உயிர்ப்பித்த தலம்;
அட்ட லிங்கங்கள் ஆட்சி செய்யும் தலம்…
திருவண்ணாமலை குறித்து நாமறிந்த தகவல்கள் இவை.
நாம் அறியாத இன்னும்பல அற்புதங்களும் உண்டு
அண்ணாமலையில்.

மகா தீபத் திருநாளில் நம் சிந்தையில் நிறுத்தி போற்றிட ஏதுவாக அண்ணாமலை குறித்த அபூர்வத் தகவல்கள்…!

ஆதிகாஞ்சி அண்ணாமலை…!

உலகிலேயே மிகப்பழைமையான மலைகளில் திருவண்ணா
மலையும் ஒன்று. இதன் வயது 260 கோடி ஆண்டுகள் என்பர்.
கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், இந்தக் கலி யுகத்தில் மருந்து மலையாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை என்கின்றன புராணங்கள். இது `ஆர்க்கேயன்’ காலத்து மலை என்றும்,
இது முன்னர் எரிமலையாக இருந்து பின்னர் குளிர்ந்தது என்றும்
சொல்வர்.

அண்ணுதல்- நெருங்குதல்; அண்ணா- நெருங்க முடியாதது
என்று பொருள். திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும்
நெருங்க முடியாத மலை என்பதால் அண்ணா மலை. ‘திரு’
எனும் மரியாதை சேர்த்து திருஅண்ணாமலை என்பதே சரி.

அருணாசலபுரக் கதையை குத்சர், உரோமசர், குமுதர், குமுதாட்சர், சகடாயர், அகத்தியர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக் ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தி தேவரும், மார்க்கண்டேய ரும் கூறியுள்ளனர்.

உலகஅளவில் உள்ள எல்லா சிவன் கோயில்களிலும்,கருவறையின் பின்புறம் ‘லிங்கோத்பவர்’ இடம் பெற்றிருப்பார். அவர் தோன்றிய இடம்-திருவண்ணாமலை.

பிருங்கி முனிவர் இழந்த சக்தியை பெற்றது திருவண்ணாமலையில். காஞ்சியில் பல்வேறு அறங்கள் செய்து தவமிருந்த அன்னை காமாட்சி, திருவண்ணாமலையில்தான் ஈசனை தரிசித்து மீண்டும் அவரை அடைந்தாளாம். அதனால் இது `ஆதி காஞ்சி’ எனவும்
போற்றப்படுகிறது.

அண்ணாமலையின் உயரம் சுமார் 2,665 அடிகள். மலையே லிங்கமாக வணங்கப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள 5 பிராகாரங்களுடன், மாட வீதி 6-வது பிராகாரமாகவும், கிரிவலப்
பாதை 7-வது பிராகார மாகவும் கொள்ளப்படுகிறது. இந்தத்
திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஒன்பது கோபுரங்களுடன் அமைந்துள்ளது.

கருவறை தொடங்கி கோபுரம்-மதில்கள் வரையிலுமான இந்தப்
பிரமாண்ட ஆலயம் இப்போதுள்ள நிலையை அடைய, ஆயிரம்
ஆண்டுகள் ஆயினவாம். காலக் கணக்குகளை விவரிக்கும்
ஏராளமான கல்வெட்டுக்கள் கோயிலில் உள்ளன.

ஆலயங்களில் கும்பாபிஷேகத்தின்போது, சுவாமி சிலைக்கும்
பீடத்திற்கும் நடுவில் ‘அஷ்டபந்தன மருந்து’ சாற்றுவார்கள்.திருவண்ணாமலை மட்டும், லிங்கத்தைச் சுற்றிலும் தங்கத்தை உருக்கி ஊற்றி, ‘சொர்ண பந்தனம்’ செய்வார்கள்.

அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத்தில் அண்ணாமலையாரின்
பாதம் அமைந்துள்ளது. இதற்குத் தினமும் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன

அண்ணாமலையாருக்கு வேறுபல சிறப்பு பெயர்களும் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில: லிங்கோத்பவ மூர்த்தி,
இமய லிங்கம், பிரம்ம லிங்கம், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர்,
அர்த்த நாரீஸ்வரர், கல்யாணசுந்தரர், அருணா சலேஸ்வரர்,
ஈசான லிங்கம், சிதம்பரேஸ்வரர், அக்னி லிங்கம், சம்புகேஸ்வரர், நாரதேஸ்வரர், வால்மீகிஸ்வரர், வியாச லிங்கம், வசிஷ்ட லிங்கம், கௌசிகேஸ்வரர், வைசம்பாத னேஸ்வரர், தும்புரேஸ்வரர், காசி லிங்கம்.
திருவண்ணாமலை ஊட்டியார், திருவண் நாட்டு மாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், திருவண்ணாமலை ஆண்டவர் – இந்தத் திருநாமங்கள் எல்லாம் இங்கே கோயில் கல் வெட்டுக்களில் காணப்படுகின்றன.

இங்கே சிவபெருமானுக்கு தினந்தோறும் ஆறு கால பூஜைகள்
நடைபெறும். ஆனால் அம்பாளுக்கு ஐந்து கால பூஜைகள்தான்.
காரணம்…? ஆறாம் காலம் அபிஷேகம் செய்தால், அம்பிகையின் கூந்தல் காயாது என்பதால், கூந்தலில் மலர் மட்டும் மாறும்…!

இறைவிக்கு இடப்பாகம் கொடுத்த தலம் திருவண்ணாமலை.
மலையைச் சுற்றி வந்தே இடப்பாகம் பெற்ற அம்பிகை, நிருதி
திசையில் ஓர் இடத்திலும்; ஈசான்ய திசையில் ஓர் இடத்திலுமாக
இரண்டு இடங்களில் ரிஷபாரூடராக சிவபெருமானை தரிசித்தார்.

இங்கு நடத்தப்படும் திருக்கல்யாணங்கள், உண்ணாமுலையம்மன் சந்நிதியில்தான் நடத்தப்படும்; அண்ணாமலையார் சந்நிதியில்
எந்தத் திருமணமும் நடைபெறாது.

கார்த்திகை தீபத்திருநாள் அன்று, ஆலயத்தில் சுவாமிக்குத் தேனும் தினைமாவும் மட்டும்தான் படைக்கப்படும். கணவனும், மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி
சிவபெருமான், பார்வதிதேவிக்கு தன் உடலில் பாதி பாகத்தை வழங்க உருவாக்கிய புனித நாள்தான் திருக்கார்த்திகை தினம். அன்றுதான் அர்த்தநாரீஸ்வரர் உருவம் திருவண்ணா மலையில் உதயமானது.
முதன் முதலில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றி வழிபட்ட பெருமை பார்வதியைச் சாரும் என்கிறது புராணம்.

கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படும் கொப்பறையில் இருந்து எடுக்கப்படும் மை மிகவும் புனிதத் தன்மை வாய்ந்தது. இதை முதலில், மார்கழி ஆருத்ரா திருவிழாவில் எழுந்தருளும் நட ராஜப் பெருமானுக்கு அணிவித்துவிட்டு, அதன்பிறகே அடியார் களுக்கு வழங்குவார்கள்.

குழந்தைச் செல்வத்துக்காக அண்ணாமலையாரை வேண்டியவர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் கரும்புக் கட்டுகள் மற்றும்
புடவையால் தொட்டில் கட்டி, குழந்தையைப் படுக்க வைத்து,
மாட வீதியை வலம் வந்து பிரார்த்திப்பது இங்கு சிறப்பு.

தற்போது விஜயதசமி அன்று, குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் வைபவம் நடைபெறுகிறது. ஆனால் முன்னோர்கள் காலத்தில் திருவண்ணாமலையில், ‘தைப்பூச’ திருநாளன்றுதான் பள்ளியில் சேர்ப்பார்கள். அதற்கு ‘சுவடித் தூக்கல்’ எனும் அழகான தமிழ்ப்பெயரும் உண்டு.

தைப்பூசத் திருநாள் அன்று ஈசான்ய தீர்த்தவாரி முடித்து அண்ணாமலையார் திரும்புவார். அப்போது கறுப்புக் கம்பளி
போர்த்தி முக்காடு போட்டபடி ஒருவர் அண்ணாமலையாரை
நெருங்கி, வல்லாள மன்னர் இறந்த செய்தியைச் சொல்லுவார்.

தைப்பூசத்தன்று இறந்த வல்லாள மன்னருக்கு, மாசி மகத்தன்று அண்ணாமலையார் திதி கொடுப்பார்; மாசி பூரத்தன்று மகுடம் சூட்டிக்கொள்வார். வருடம்தோறும் நடக்கும் திருவிழாக்களில்
இதுவும் ஒன்று.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியான அண்ணாமலையாருக்கு, தை மாதம் முதல் நாளன்று இரவு
ஒருமணிக்கு மிகப்பெரும் அளவில் அபிஷேகம் நடக்கும்.
மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த அபிஷேகம்
‘மகா அபிஷேகம்’ எனப்படும்.

இங்கே ஆலயத்தின் முதன்மையான நுழைவு வாசல்-கிழக்குப்
பக்கம் அமைந்திருக்கும் ராஜகோபுரம். ஆனால் இந்த
ராஜ கோபுரத்தின் வழியாக எந்த உற்சவ மூர்த்தியும் வெளியே
வருவதும் இல்லை; உள்ளே செல்வதும் இல்லை. அருகில் இருக்கும்
திட்டி வாசல் வழியாக மட்டுமே, சுவாமி புறப்பாடும்-திரும்புவதும் நடைபெறும். பிட்சாடனருக்கு மட்டும் விதிவிலக்கு; அவர் வாகனம்
அங்கு இருப்பதால்.

முதலாம் ராஜேந்திர சோழ மன்னரிடம் உதவியாளராக இருந்த
‘பாண்டி உதய திவாகரன்’ என்பவர், இத்திருக்கோயிலுக்குப்
பிட்சாடனர் திருவுருவம் செய்துவைத்தார்; கூடவே அந்த
பிட்சாடனருக்கு மூன்று கால நைவேத்தியத்தின் பொருட்டு,
ஆண்டுக்கு நூறு கலம் நெல் அளிக்கும்படி ஏற்பாடும் செய்தார்.
இந்த நெல் அளக்கும் மரக்காலின் பெயர் `திருவண்ணாமலை
மரக்கால்’.

இங்குள்ள கிளிக்கோபுரம் 1061-ல் கட்டப்பட்டது. இதில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் மிகவும் பழமையான கல்வெட்டு
1063-ம் ஆண்டைச் சேர்ந்தது. கிளிக் கோபுரத்தின் அடித் தளத்தில்
அமைந்துள்ள உள் மாடத்தில், ‘மோகினி’ சிலை ஒன்று உள்ளது.
இந்தச் சிலையைக் கோயிலுக் குப் போய்விட்டுத் திரும்பும் யாரும்
பார்க்கக் கூடாது; பார்த்தால், சுவாமியிடம் நாம் பெற்ற வரங்களை
இந்த மோகினி கவர்ந்து கொள்வாள் என்பது நம்பிக்கை!

ஆலயத்தில் உள்ள ‘பிரம்ம தீர்த்தம்’ எனும் திருக்குளத்தில்,
கிரகணக் காலங்களில் மட்டும் நீராடலாம் எனும் வழக்கம் உண்டு.

கோபுரத்து இளையனார் சந்நிதியின் குறுக்கே சுவர் போட்டு,
வௌவால்கள் நிறைந்து – நீண்டகாலம் வழிபாடு இல்லாமல்
இருந்தது. இந்த நிலையை மாற்றி தூய்மை செய்து, வழிபாடுகளைத் தொடங்கியவர் – வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்.

அருணகிரிநாதருக்கு உற்சவத் திருமேனி உருவாக்க ஏற்பாடுகள்
நடந்தன. பலமுறை முயன்றும் விக்கிரகம் வார்க்க முடியவில்லை. அப்போது துறவி ஒருவர் வந்து, மலையில் இருந்து ஒரு சிட்டிகை
மண் எடுத்து உலோகக் குழம்பில் போட்டார். அதன்பின்னரே,
விக்கிரம் வார்க்க முடிந்ததாம்.

சர்வஸித்தி விநாயகர் சந்நிதியின் வடக்குப் பக்கம் உள்ள
ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்குப் பகுதியில் பாதாள
லிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு ரமண மகரிஷி பல காலம்
தங்கி, தவம் இருந்தார் என்று வரலாறு சொல்லும்.

திருவண்ணாமலை என்றாலே நினைவிற்கு வரும் மகான்களான
பகவான் ரமணரும் விசிறி சாமியார் என அழைக்கப்பட்ட யோகி
ராம் சுரத்குமாரும் இருமுறை சந்தித்தார்கள். ஆனால் ஒருமுறை
கூடப் பேசியது இல்லை.

கிரிவலம் வரும்போது ரமண மகரிஷி, ஈசானிய ஞான தேசிகர்
மடத்தில், கீதை ஆராய்ச்சி வகுப்பில் பாடம் நடத்தி இருக்கிறார்.

அண்ணாமலை மீது தண்டாயுதபாணி சுவாமி ஆசிரமம் என்று
உள்ளது. இங்கே ஒன்றரை அடி உயரத்தில் நவ பாஷாணத்தால்
ஆன ஜோதி லிங்கத்தை தரிசிக்கலாம்.

திருவண்ணாமலையில் இருந்த மகான்களில் ஒருவரான
‘ஈசானிய ஞான தேசிகர்’ ஜீவசமாதி உள்ள மடத்தில், ஒரு பெரும் மரப்பேழை நிறைய ஓலைச்சுவடிகள் உள்ளன.

திருவண்ணாமலையில் 1976-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அதை வண்ணப் படமாக எடுத்து, நல்லமுறையில் மூலப் பிரதியாக
மாற்ற (ப்ராசசிங்), அமெரிக்காவுக்கு அனுப்பினார்களாம்!

கிரிவலம் வரும் வழியில் ‘தலை திருக தனம் கொடுத்த விநாயகர்
சந்நிதி’ ஒன்று உள்ளது. இந்த விநாயகரின் தலை மீதுள்ள
கிரீடத் தைக் கழற்றினால், அது தனியாக வந்துவிடும்; உள்ளே
கை விட்டால், முழங்கை வரை உள்ளே போகும் என்பார்கள்.

மலையில் ‘புகுந்து குடித்தான் சுனை’ எனும் சுனை உள்ளது.
அந்த இடத்திலிருந்து ‘அண்ணாமலைக்கு அரோகரா!’ என்று
குரல் கொடுத்தால், அதன் எதிரொலி முதலில் ஒரு முறை கேட்கும்;
சற்று நேரம் கழித்து இரண்டாவது எதிரொலி கேட்கும்.

இந்த மலையில் அபூர்வமான வகையைச் சேர்ந்த குரங்கு இனம்
உள்ளது. இந்தக் குரங்குகளை ‘கருங்குரங்கு’ என்றும் ‘மந்தி முயல்’ என்றும் அழைக்கிறார்கள். இவை எப்போதும் மலையை விட்டுக்
கீழே இறங்கி வருவது இல்லையாம்.

கை-கால்களில் முறிவு ஏற்பட்டுக் கட்டு போடும்போது,
அந்த இடத்தில் ரத்த ஓட்டம் பாதிகப்பட்டு, அந்த இடம் முறடு
கட்டிவிடும். அதைச் சரிசெய்ய, கல்லரசன் மரத்துப் பாலை
அடிப்பார்கள். மருத்துவக் குணம் மிக்க அந்தக் கல்லரசன் மரம்,
இங்கே மலையில் இருக்கிறது.

சித்தர்கள் வழிகாட்டிய கிரிவலம்!

கிரிவலம் வருவதில் லட்சத்து எட்டு முறைகள் உள்ளனவாம்.
ஒவ்வொரு முறைக்கும், ஒவ்வொரு பலன் கிட்டும். அதில் சித்தர்கள் சொல்லியுள்ள கிரிவல முறையானது இது:

தெற்குக் கோபுர வாயில் அருகிலுள்ள பிரம்ம லிங்கத்தில்
தெற்கு வாயில் வழியாக வெளி வந்து, கிரிவலத்தைத் தொடங்கி,
இரட்டைப் பிள்ளையார் ஆலயம் அருகில் உள்ள பூத நாராயணர் ஆலயத்தில் முடிக்கவேண்டும். நமக்கு ஈசன் லிங்க வடிவில்
காட்சி தர முக்கியக் காரணம், பிரம்மாவும் மகா விஷ்ணுவும்.

எனவே, ‘பிரம்மலிங்கத்தில்’ தொடங்கி, ‘பூத நாராயணர்’
ஆலயத்தில் முடிக்க வேண் டும். முதலில் குலதெய்வத்தையும்
பிறகு பித்ருக் களையும் வேண்டி, கிரிவலத்தைத் தொடங்க
வேண்டும். தெய்வத்தின் நாமாக்களைக் கூறிக் கொண்டே
வலம் வரவேண்டும். மௌனமாக கிரிவலம் வருவது அளவில்லா
நன்மை தரும்.

இங்கு தேவர்களும், முனிவர்களும், ஞானி களும், சித்தர்களும், பித்ருக்களும் கிரிவலம் வருகிறார்களாம். அவர்களுக்கு இடையூறு இல்லாமல் நாம் கிரிவலம் வருதல் வேண்டும். இங்கு மலையே
இறைவன் ஆனதால், திருவிழா அன்று வேண்டுதல் இருப்பவர்கள்
மட்டுமே மலை மீது ஏறிச் செல்ல வேண்டும்.

இந்த வருடம் மகா தீபம்…

மொத்தம் 14 நாள்கள் கொண்டாடப்படும் தீபத்திருவிழா,
கிராமதேவதை வழிபாட்டுடன், அதாவது துர்கை அம்மனின்
புறப்பாடுடன் தொடங்கும். திருவிழாவின் 7-ம் நாள் திருத்தேர்
பவனியும் (3.12.22), 10-ம் நாள் தீபத்திருவிழாவும் (6.12.22)
இங்கு விசேஷம்.

டிசம்பர்- 6 செவ்வாய்க் கிழமை அன்று அதிகாலை 4 மணிக்குப்
பரணி தீபம் ஏற்றப்படும். இதையடுத்து, மாலை 6 மணிக்கு அண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும். முன்னதாக
பஞ்ச மூர்த்திகளும் காட்சி மண்டபத்தின் அருகில் கொடி மரத்தடியில் எழுந்தருள்வர். தீபம் ஏற்றப்படுவதற்கு ஏறத்தாழ இரண்டு மூன்று நிமிடங்களுக்கு முன்னர் (மாலை 5:50 – 6:00 மணி வேளையில்) வேணுகோபாலன் சந்நிதிக்கு அருகில் இருந்து புறப்பட்டு
ஆடிக்கொண்டே வருவார் அர்த்தநாரீஸ்வரர்.

ஸ்வாமி பஞ்சமூர்த்திகளை நெருங்கியதும், வந்த வேகத்திலேயே
உள்ளே செல்ல… அவரது தரிசனம் கிட்டிய தருணம், மலை மீதிருக்கும் பர்வத ராஜகுலப் பெருமக்கள், கார்த்திகை பெருந் தீபத்தை
ஏற்றுவார்கள். மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்!
(நன்றி – சக்தி விகடன்)

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அண்ணாமலையார் குறித்த அபூர்வ தகவல்கள் ….!!!

  1. DeathBirthRaceR சொல்கிறார்:

    திருவண்ணாமலை சென்று 26-11-2022_8-12-2022 மும்முறை வீல்சேரிலேயே கிரிவலம் சென்று சக்தி விகடன் புத்தகம் கேட்டு ஓம்சரவண புத்தகமே உள்ளதென்பதறிந்து அதைவாங்கி அண்ணாமலை உண்ணாமுலையம்மை அருளும் கோடி முறை பெற்று காரைக்கால் ரயிலேறி அங்கிருந்தே புயல் வர மழைவர அங்கும் வீல்சேரிலேயே சென்று(3கி.மீட்டர்) பின் பல ரயில் பல நிலையங்கள் வலியுடன் காய்ச்சலுடன் திருப்பதி வந்திறங்கி மஹாகாலேஸ்வர் ஆலயம் போகும் வழியிலேயே ஒரு பூங்காவும் இளைப்பார பின் அருவியில் ஆயிரம் நாமம் பாகுபலி பாடலில் உள்ளது போல் இறைவன் அபிசேகப்ரியராக காட்சிதந்தது கோடி புண்யமே பின் அங்கிருந்து காளஹஸ்தி ரயில் நிலையத்திலிருந்தே ஒரு நலம் விரும்பி(முஸ்லீம் நண்பர் “i love your passion visu” ) மலைமுகட்டின் வாசல் வரை தள்ளி கொண்டுவிட்டார்கள் இரவிலும் பல அதிசயம் பலரது உதவியால் அற்புத தரிசனம் எத்தனை தங்க வாகனங்கள் சொல்லிலோ வர்ணிக்கயிலாத கோயில் நடையிலேயே கண்ணயர்ந்து காலைவேளையில் கோயிலையும் நீண்ட தொலைவினில் திருநீலகண்டராக ஓரிடத்திலும் தரிசித்து இன்று பின்னூட்டம் இடும் போது ராமேஸ்வர தரிசனம் பெற்று எங்கே பாதை எங்கோ பயணம் தெரில சிவா என்கிற எண்ணத்துள் மகள்-மகன் ஈசனருள் பெற எங்கள் உறவினர் பிள்ளைகள் யாவரும் நலமும் வளமும் பெற எழுத்தும் கண்ணீருமாக சிவம் அதிசயமே….அண்ணாமலை விளக்க முடிந்திடாத விளக்கங்களின் மொத்த தெவிட்டாத குவியலே திருஅண்ணாமலையார் ஓம் நமசிவாய….. நன்றி தங்கள் இப்பதிவை யான் படிக்க எத்தனை பிறப்பெடுத்தேனோ ஓம் நமசிவாய…

  2. பிங்குபாக்: அண்ணாமலையார் குறித்த அபூர்வ தகவல்கள் ….!!! | Visujjm's Blog

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.