ஒரு வினோத வழக்கு – கடவுளை நம்பும் “‘ப்ராதெல்’ முதலாளி “யும், நம்பாத ‘சர்ச்’ மக்களும் …!!!

……………………………………

………………………………………..

கவலை வேண்டாம் – இதில் மத விரோதமாக ஏதுமில்லை. நான் எந்த மதத்திற்கும் எதிராக எழுத மாட்டேன்.
இது எல்லா மதங்களுக்கும் பொருந்தக்கூடிய
ஒரு அடிப்படையான விஷயம் தான்…..
படித்தால் உங்களுக்கே புரியப்போகிறது …..

———

அமெரிக்காவில் மிகச்சிறிய ஊர் ஒன்று.
அங்கு வாழும் மக்களுக்கென்றே ஒரு சர்ச்.

அந்த ஊரில் ஏற்கெனவே சிறிய, சாதாரணமான
( bar attached brothel )
‘பாருடன் இணைந்த ப்ராதெல்’ ஒன்று இருக்கிறது.
(அந்த மாகாணத்தில் இது சட்டபூர்வமாக
அனுமதிக்கப்பட்டிருக்கிறது …! )


அந்த ‘ப்ராதெல்’லை சகல சவுகரியங்களும் உள்ளதாகவும், இன்னும் கவர்ச்சிகரமாகவும்
பெரிய அளவில் விரிவாக்கம் செய்து நடத்த
விரும்புகிறார் அதன் முதலாளி.
வியாபாரத்தைப் பெருக்க, கட்டிடத்தை இன்னும்
சிறப்பாக விரிவுபடுத்தும் வேலைகளைச் செய்து
கொண்டிருக்கிறார்….

உள்ளூரில் உள்ள சர்ச்சில் வழக்கமாக பிரார்த்தனைகள்
நடைபெறுவது வழக்கம். இந்த பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளும் மக்களுக்கும், நடத்தி வைக்கும் பாதிரியாருக்கும் ஏற்கெனவே இந்த ‘பார்-ப்ராதெல்’ குறித்து மிகவும் வருத்தம்.

இந்த நிலையில் அதனை இன்னும் பெரிதாக, பளபளப்பாக விரிவுபடுத்தும் வேலைகள் அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுக்கிறது.

எனவே சர்ச்சில் தினமும் நிகழும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கடவுளிடம் கூடுதலாக ஒரு வேண்டுகோள் சேர்க்கப்படுகிறது…
“அந்த ப்ராதெல் திறக்கப்படக்கூடாது – அதை நடத்துபவரின் திட்டம் நாசமாகப் போக வேண்டும் “- என்றெல்லாம். ஒவ்வொரு நாளும் நிகழும் பிரார்த்தனை கூட்டத்தில்
இதற்காக விசேஷமாக ‘ஜெபம்’ செய்யப்படுகிறது…..

‘ப்ராதெல்’ பிரமாதமாக கட்டி முடிக்கப்பட்டு,
திறப்பு விழாவிற்கான நாளும் குறிக்கப்படுகிறது.
உற்சாகமாக அதற்கான வேலைகளைப் பார்த்துக்
கொண்டிருக்கிறார் அதன் முதலாளி…

திறப்பு விழாவிற்கு முதல் நாளிரவு திடீரென்று
இடி மின்னலுடன் கூடிய பேய் மழை…


புதிய ப்ராதெல் கட்டிடத்தின் மீது இடியும் மின்னலும்
தாக்கி அதை தீப்பற்றி எரியச்செய்கின்றன……
கட்டிடம் தீப்பிடித்து எரிகிறது – இடிந்து சரிந்து விழுகிறது.
‘ப்ராதெல் ப்ளான்’ பணால்….

சர்ச் மக்களுக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி.
சர்ச்சில் கூடியவர்கள் எல்லாரும் அந்த நிகழ்வை
கொண்டாடுகிறார்கள். அன்றைய பிரார்த்தனையில்,
தங்கள் பிரார்த்தனையை ஏற்று கோரிக்கையை நிறைவேற்றிய கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள்……

…………………

கடுப்பான ப்ராதெல் முதலாளி சர்ச் மீதும், அதன் மக்கள் மீதும் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கிறார்….

அந்த சர்ச்சின் பாதிரியார் மற்றும் மக்கள் – கடவுளிடம் விடுத்த வேண்டுகோளினால் தான் இடியும், மழையும் வந்து தன் கட்டிடங்கள் சேதமடைந்து போயின.
எனவே தன் நஷ்டத்திற்கு காரணமான அந்த சர்ச் மக்கள் அதற்கான தகுந்த நஷ்டஈடைத் தர வேண்டுமென்று….

வழக்கு நீதிபதி முன் விசாரணக்கு வருகிறது…

………………..

‘ப்ராதெல்’ முதலாளியின் குற்றச்சாட்டை மறுத்த சர்ச் மக்கள் – இடியும் மழையும் வந்து, கட்டிடம் இடிந்தது இயற்கையான ஒரு தற்செயல் என்றும்,

தாங்கள் பிரார்த்தனை செய்தது உண்மைதான் என்றாலும் – தங்கள் பிரார்த்தனையை ஏற்று கடவுள் இதைச்செய்தார் என்பது நம்ப முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்
என்றும் எனவே தங்களுக்கும் ப்ராதல் முதலாளிக்கு
ஏற்பட்ட நஷ்டத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
என்றும் வாதாடினார்கள்….

பரிதாபமான நிலையில் ஜட்ஜ்…!

…………..

கடவுளையும், பிரார்த்தனையும் பலமாக நம்பும்
“ப்ராதெல்” முதலாளி ஒரு பக்கம் –

” எங்கள் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக்கொண்டார்
என்றும் அதனாலேயே இடி, மின்னல் தாக்கி
அந்த கட்டிடம் நாசமானது என்பதும்
சற்றும் நம்ப முடியாத வாதம்” –

என்று தங்கள் பிரார்த்தனையின் மீதே நம்பிக்கை
இல்லாமல் வாதிடும் சர்ச் பாதிரியாரும், மக்களும்
இன்னொரு பக்கம் –

…………………..

“நான் இந்த வழக்கில் எப்படித் தீர்ப்பு அளிப்பேன் ….?
என்று புலம்புகிறார் ஜட்ஜ்.

ஜட்ஜுக்கு உதவியாக உங்களை இந்த வழக்கில்
ஒரு ஜூரியாக சேர்க்கிறார்கள்
என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது உங்கள் கருத்து
என்னவாக இருக்கும்….?
யார் பக்கம் இருக்கும்…? ஏன் ….?

………………………………………………………………………………………………………………………………..

நான் ஜூரிகளில் ஒருவனாக இருந்தால், எனது கருத்து – இப்படித்தான் இருக்கும் ….

“சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால், சட்டம் என்பது மனித எல்லைக்குட்பட்ட அமைப்புகளுக்கானது. பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘கடவுள்’ என்ற கருத்தியலுக்கு நிலையான முகவரியோ, சட்டப்பூர்வமான ஆளுமையோ (Legal Personhood) கிடையாது.

மேலும், இயற்கை சீற்றங்கள் என்பது புவியியல் நிகழ்வுகளே தவிர, தனிநபர் அச்சுறுத்தல் அல்ல.

முறையான சம்மன் அனுப்ப இயலாததாலும்,

நீதிமன்றத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயத்தைக் கோருவதாலும்,

இந்த வழக்கு முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் …..”

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்