Sachet Alcohol ( சாஷே மதுபானம் … ) – பெருமை தமிழருக்கே … !!!

……………………………………

………………………………………………..

சென்னையில் ‘வெல்வெட் கெமிக்கல்ஸ்’ எனும் நிறுவனம் சார்பில் சி.கே. ரங்கநாதன் என்பவர் 1983 -ல் – ஷாம்பூவைச் சாஷே பாக்கெட்டுகளில் அறிமுகப்படுத்தினார். அப்போது அது பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலைநாடுகளில் பிசினஸ் பள்ளிகள் சிலவற்றில் இது பாடமாக (‘கேஸ் ஸ்டடி’) வைக்கப்பட்டது.

விரைவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், பிராக்டர் அண்ட் கேம்பிள் உள்ளிட்ட பல கம்பெனிகள் இந்தச் சாஷே மாடலைப் பின்பற்றின. இன்று சாஷேவில் பல பொருட்கள் விற்கப்படுகின்றன.

இந்தச் சாஷே மாடல் உலகெங்கும் பரவியது. ஏழை நாடுகள் பலவற்றில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அத்தகைய நாடுகளில் ஒன்று நைஜீரியா.

1990 வரை நைஜீரியாவில் பால் தட்டுப்பாடு நிலவியது. காரணம், பால் என்பது விரைவில் கெட்டுப்போகக்கூடிய ஒரு பொருள்.

நைஜீரியாவில் கிராமப்புறங்களில் பால் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதை நகரங்களுக்குக் கொண்டு செல்லக் குளிர்சாதன வாகனங்கள், தடையில்லா மின்சாரம் மற்றும் நல்ல சாலை வசதிகள் இல்லை.

இதனால் கால்நடை வளர்ப்பவர்களால் பாலை விரைவாகச் சந்தைக்குக் கொண்டுவந்து விற்க முடியாமல், பால் வீணானது. தவிர, நைஜீரியாவில் உள்ள ‘ஸெபு’ (Zebu) போன்ற உள்ளூர் பசு ரகங்கள் வெப்பமான காலநிலையைத் தாங்கும் திறன் கொண்டவை. ஆனால் அவை ஒரு நாளைக்கு 1 முதல் 2 லிட்டர் பால் மட்டுமே கொடுக்கும்.

ஐரோப்பாவில் வளர்க்கப்படும் ‘ஹோல்ஸ்டைன்’ போன்ற பசுக்கள் ஒரு நாளைக்கு 30 லிட்டர் வரை பால் கொடுக்கும். நைஜீரியாவின் அதிக வெப்பம் மற்றும் பூச்சிகள் காரணமாக ஐரோப்பிய பசுக்களால் அங்கு உயிர்வாழ்வது கடினமாக இருந்தது.

இதனால் நைஜீரியா முழுக்க பால் பவுடரை நம்பி இருக்கும் நிலைதான் இருந்தது.

ஆனால், பெரிய டின்களில் அடைக்கப்பட்டு வந்த மேலைநாட்டு பால் பவுடரை வாங்கும் அளவுக்கு மக்களிடம் வசதி இல்லை.

பொருளாதார நிபுணர்களும், கம்பெனிகளும் புரிந்துகொள்ளத் தவறிய விஷயம்—பெரிய டின்கள், பெரிய பாட்டில்களில் வரும் பொருட்கள் எல்லாமே மாதச் சம்பளக்காரர்கள் நிரம்பிய நாடுகளைக் குறிவைத்துத் தயாரிக்கப்படுபவை என்பதே!

மாதச் சம்பளக்காரர்கள் ஒன்றாம் தேதி டின்களையும், பாட்டில்களையும் வாங்கிச் சென்று மாதம் முழுக்க வைத்துக்கொள்வார்கள்.

ஆனால், நாள்கூலி வாங்கும் விவசாயத் தொழிலாளர்கள், அன்றாட லாபத்தில் பிழைப்பு நடத்தும் சிறு வணிகர்கள் நிரம்பிய நைஜீரியாவில் மாதச் சம்பளக்காரர்கள் மிகக் குறைவு.

மக்கள் அன்று வரும் காசில் அரிசி, மீன், காய்கறி என கிடைப்பதை வாங்கி உண்டு காலம் தள்ளுபவர்கள். காச்சைச் சேமித்து வைத்துப் பால் பவுடர் டின் வாங்குவது எல்லாம் அவர்களின் பொருளாதார மாடலுக்குச் சரிவராது.

இந்தச் சிக்கலைச் சாஷேக்கள்தான் தீர்த்து வைத்தன.

சாஷேக்கள் வந்த பின்னர் நைஜீரியாவின் சிறுகடைகள் எங்கும் பால் பவுடர் சாஷேக்கள் விற்பனையாகின.

அதன் அதிரடி வெற்றியைக் பார்த்து விரைவில் சமையல் எண்ணெய், போர்ன்விடா, தக்காளி பேஸ்ட், மாவு, சோப்புத்தூள், மது, ஏன் குடிநீர் எல்லாமே கூட சாஷேவில் விற்பனையாகத் தொடங்கியது.

இத்தனை நாள் இந்தப் பொருட்களை எல்லாம் வாங்க முடியாத நைஜீரியர்கள், திடீரென இவற்றை வாங்கத் தொடங்கினார்கள்.

நம் ஊர் ஏர்டெல் நிறுவனமும் ஆப்பிரிக்காவில் இந்தச் சாஷே மாடலையே (Micro Recharges) பின்பற்றியது.

அங்குள்ள மக்களால் மாதாந்திரக் கட்டணம் எல்லாம் செலுத்திச் செல்போன் சேவையை பெற முடியாது. அதனால் நாள்கணக்கில் அல்லது குறைந்த தொகையிலான செல்போன் திட்டங்கள் விற்கப்பட்டன.

சம்பாதித்துக் காசு வந்தவுடன் செல்போனில் பணம் கட்டுவார்கள். இணையம் திறக்கப்பட்டு 24 மணி நேரம் செயலில் இருக்கும்.

நைஜீரியாவில் சாஷே வணிகம் “Sachet Economy” என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று அது இரண்டு முக்கியச் சவால்களை எதிர்கொள்கிறது

பல கோடி பிளாஸ்டிக் சாஷே பைகள் மறுசுழற்சி செய்யப்படாமல் தூக்கி எறியப்படுவதால் சாக்கடைகள் அடைபட்டுச் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாஷே வடிவில் விற்கப்படும் அதிக வீரியமுள்ள மதுபானங்கள் (Sachet Alcohol) இளைஞர்களிடையே தவறான பழக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, நைஜீரிய அரசு (NAFDAC) சாஷே மதுபானங்களுக்குத் தடை விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையிலான பாக்கட்டுகளில் இந்த வணிகம் தொடரட்டும் ……. ( நன்றி – நியாண்டர் செல்வன்… )

……………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக