“இன்ஜினீயரிங் படிச்சிட்டு ரோட்டுல நின்னு பிசினஸ் பண்றியா…???”

………………………………….

…………………………………

கொரோனா காலம் பல தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது. ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரான சொன்வதியையும் அந்த பிசினஸ் அலை விட்டு வைக்கவில்லை.

விரைவிலேயே, இரண்டாவது கிளையைத் தொடங்குமளவு வெற்றிகரமாகவும் அவரது டெசர்ட் பிசினஸ் வளர்ந்துள்ளது.

எப்படி ஜெயித்தீர்கள் என்று ‘தொழில் ரகசியம்’ கேட்டோம்…. !!!

‘‘நான் டெல்லியில ஃப்ளைட் டிஸ்பாட்ச்சரா வேலை பார்த்திட்டிருந்தேன். நல்ல சம்பளம்தான். அந்த நேரத்துல கொரோனா பரவி பெரிய குழப்பத்தை உருவாக்கிருச்சு. அப்பதான் ஏதாவது பிசினஸ் பண்ற ஐடியா வந்தது” என்கிறார்.

‘‘வித்தியாசமானதா இருக்கணும், குழந்தைகள், இளைஞர்கள்னு எல்லாருக்கும் பிடிச்சதாவும் இருக்கணும்னு நினைச்சப்பதான் டெசர்ட் ஐடியா வந்துச்சு. லாக்டௌன் டைம்ல நிறைய நேரம் வீட்டுல சும்மா இருந்ததால டெசர்ட் செய்யவும் நல்லா கத்துக்கிட்டிருந்தேன். அதுதான் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்துச்சு. அந்த அனுபவத்துலதான் இந்த ‘SOSI – GELATO & CREAMERY’ங்கற டெசர்ட்ஸ், கேக் பேக்கிங் பிசினஸ் ஆரம்பிச்சேன். முதல்ல சும்மா டிரையல் பார்ப்போம்னு எங்க வீட்டு கார் பார்க்கிங்ல சிம்பிளா ஆரம்பிச்சேன். அங்கேயே நல்ல சப்போர்ட் கிடைச்சுது.

லாக்டௌன் தளர்வு வந்து சூழ்நிலை நார்மலான பிறகுதான் அதை ஷாப்பா அடுத்த ஸ்டேஜுக்குக் கொண்டு போனேன்.

புழுதி வாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்கற இந்தக் கடை அப்படி உருவானதுதான்” என்கிறார்.

லாக்டௌன் நேர சமாளிப்பு ஓகேதான். ஆனால், முழு நேரத் தொழிலாக மாற்றும்போது விமர்சனங்கள் வந்திருக்குமே?

‘‘உண்மைதான். ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு ரோட்ல நின்னு டெசர்ட் வித்தா திட்டுவாங்கதான்.

அந்த விமர்சனங்களை நான் பாசிட்டிவ்வா எடுத்துக் கிட்டேன். அதேநேரம் நான் எடுத்த முடிவு தப்பு இல்லன்னு அவங்ககிட்ட வாதாடவும் விரும்பல.

சக்சஸ் பண்ணிட்டா அதுவே அதுக்கான பதில்ங்கறதுல தெளிவா இருந்தேன். கடைசியா, நான் நினைச்சதுதான் நடந்திருக்கு. அப்போ என்னைத் திட்டுனவங்க எல்லாம் இப்போ என்னோட சக்சஸ் பார்த்துப் பாராட்டுறாங்க” என்று சொல்பவரின் பதிலில் கொஞ்சம் பெருமிதமும் கலந்திருக்கிறது.

தன்னுடைய வெற்றிக்குப் பின்னால் அம்மா சாந்தியின் ஆதரவு இருப்பதை மறக்காமல் குறிப்பிடுகிறார்.

‘‘எங்கக் கடையை குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வந்துட்டுப் போற இடமா மாத்துனது அம்மாவோட உழைப்புதான்.

பழங்களை அடிப்படையா வெச்சு வீட்டுலயே தயாரிச்ச சர்பத், ஐஸ்க்ரீம், கேக், டெசர்ட் வகைகள் விற்பனை செய்யுறோம். ஒரு டெச்ர்ட்ல பழங்களை எப்படிக் கொண்டு வரலாம்னு தொடர்ந்து முயற்சி செய்து, தயாரிக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஒரு புது டெசர்ட் அல்லது புதிய ஃபிளேவரை அறிமுகப்படுத்துறோம்.

டெசர்ட் பிசினஸ் இன்னிக்கு டிரெண்டுக்கு ஏத்த மாதிரி இருக்கணும்னு சொல்லி, பேக்கிங்ல எதைப் பண்ணணும், என்ன பண்ணக்கூடாதுனு அம்மாதான் சொல்லிக் கொடுத்தாங்க.

டெசர்ட்ஸ் வெரைட்டியைத் தேர்ந்தெடுத்ததுல இருந்து, விலையை முடிவு பண்ண வரைக்கும் அம்மாதான் பண்ணாங்க. இத்தனை பிசினஸ் திறமையைத் தனக்குள்ள வச்சிருந்தாங்களான்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கும்.

வீட்டுல இருக்கற அம்மாக்களை எல்லாம் ஈஸியா எடை போடக் கூடாது” என்று சிரிக்கிறார்…. !!!


‘புதிய தொழில்முனைவோர்கள் உங்களைப் போல வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்’ என்ற கேள்விக்கு வருகிறது பக்குவமான பதில்….

‘‘நான் எடுத்த முடிவுக்கு எங்க குடும்பம் சப்போர்ட் பண்ணாங்க. முதல்ல இந்த ஆதரவு முக்கியம்.

நாளைக்கு நான் வேற வேலைக்குப் போனாலும் இந்த பிசினஸை அம்மாவோ, அப்பாவோ, தம்பியோ பார்த்துக்குவாங்க. அந்த அளவுக்கு ஆதரவு கொடுக்குறாங்க.

இன்னும் சொல்லப் போனா நான் மடிப்பாக்கத்துல ரெண்டாவது ஷாப் திறக்கறதுக்கு எங்க பெரியப்பா நிறைய உதவி பண்ணாரு. அந்தக் கடையை அவர்தான் திறந்து வச்சாரு. ‘இன்னும் நிறைய பிராஞ்ச் ஓப்பன் பண்ணு, என்னையே கெஸ்ட்டா கூப்பிடு’ன்னும் ஜாலியா சொல்லியிருக்காரு.

பிசினஸ் பண்றவங்களுக்கு இப்படிப்பட்ட ஃபேமிலி சப்போர்ட் முக்கியம்.

அதைவிட இந்த பிசினஸ் கத்துக்கொடுத்த முக்கியமான விஷயம் – நம்பிக்கை.

எதுவும் இல்லாமதான் முதல் கடை ஆரம்பிச்சோம். அந்த லாபத்துல இருந்துதான் ரெண்டாவது கடை வளர்ந்தது. ஒருவேளை எதுவும் இல்லாமப் போனாலும் மறுபடியும் பூஜ்யத்துல இருந்தும் மேல வந்துர முடியும்னு நம்பிக்கை அதிகமாகி இருக்கு” என்கிறார். (நன்றி- அவள் விகடன்…)

……………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்