”சாமி பாக்க வர்றவங்களைத் தூக்கிட்டுப் போவோம்; சாமிகிட்ட போனவங்களைத் தூக்கிட்டும் வருவோம்…!!! “

………………………………………….

………………………………………..

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு. பௌர்ணமி இரவென்பதால் நிலவொளியில் தகதகக்கிறது, சதுரகிரி மலை. வழக்கத்தைவிட அதிகமாக பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருக்கிறது. அடிவாரத்தின் ஒரு பகுதியில் மூங்கில்கழியில் கனமான போர்வையை இறுக்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் ஆலடியான்.

அவரை நோக்கி வருகிற ஒருவர், “அண்ணே… டோலிக்கு எம்புட்டு… எங்க அம்மையைத் தூக்கிட்டு போணும்”என்கிறார். கட்டுவதிலேயே கவனத்தை வைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்க்கும் ஆலடியான், “எடைக்குத் தகுந்துதானே காசு…” என்கிறார். இருவரும் ஆளுக்கொரு தொகையைச் சொல்ல, கூலி இறுதியானதும், அந்த வயதான அம்மையைப் போர்வையில் படுக்கவைத்து, மூங்கில் கம்பில் கவனமாகவும் பக்குவமாகவும் கட்டுகிறார்.

“வெயிலுக்கு முன்னக்கூட்டியே மலைக்குப் போயிரணும். அதுக்கு சுந்தர மகாலிங்கம் துணை நிப்பான்…” என்றபடியே அண்ணாந்து பார்த்துக் கைகூப்பியவர், மூச்சை இழுத்தபடி டோலியைத் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு, மலையேற்றப் பாதையில் நடக்கத் தொடங்குகிறார்.

“என்கிட்ட என்னத்த பேசப்போறிய… மேல போனா, சாயங்காலம் ஆகிரும். உங்களால மலையேற முடியுமா… இங்கன இருந்து வழுக்குப்பாறை ஒன்றரை மைலுதேன். அப்படியே பேசிக்கிட்டே வாங்க…” என்று நம்மிடம் பேசிக்கொண்டே முன்னால் நடந்தார்.

சதுரகிரி யாத்திரை வருபவர்களில் மலையேற முடியாமல் தவிப்பவர்களை டோலியில் படுக்க வைத்து, தோளில் சுமந்து செல்வதுதான் ஆலடியானின் தொழில். 13 வயதில் அப்பா, அம்மாவுடன் தொடங்கிய இந்தப் பயணம், இப்போது அவருடைய வாழ்க்கையாகவே மாறிவிட்டது.

டோலி தூக்குவது மட்டுமல்ல… மலையில் அன்னதானத்துக்குத் தேவையான காஸ் சிலிண்டர்கள், சமையல் பொருள்களைச் சுமந்து செல்வது, மலையில் உயிரிழப்பவர்களின் உடல்களைக் கீழே கொண்டுவருவது, திடீரென வரும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது என்று சகல வேலைகளுக்கும் ஆலடியானைத் தேடுகிறார்கள்.

“ஏழு வயசுல எங்க அம்மா, என்னை இந்தப் பாறையில உட்காரவெச்சுட்டு, அன்னதானத்துக்காக மலைக்குக் காய்கறி தூக்கிட்டுப் போகும். அப்போ இந்த மலையைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. மலையில இருந்து கீழ வர்றவங்கிட்ட, ‘எங்க அம்மாவைப் பார்த்தீங்களா?’ன்னு கேட்டுக்கிட்டே இருப்பேன். 13 வயசுல நானும் மேல வர்றேன்னு சொல்லி அடம்பிடிச்சேன். மொதவாட்டி போனப்போ சுத்தமா முடியலை. எங்க அம்மா இடுப்புலயும் முதுகுலயுமா சுமந்துக்கிட்டு வந்துச்சு. அதுக்கப்புறம் மலைக்கே போகக் கூடாதுன்னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன்.

எங்கூடப் படிச்ச பயலுவ, ‘மலையில அது இருக்கு… இது இருக்கு’ன்னு பொறளியைக் கிளப்பிவிட்டாய்ங்க. போய் அதையெல்லாம் பார்த்துடணும்னு 14 வயசுல திரும்பவும் மலைக்குப் போனேன். ஆனா, அவிங்க சொன்ன எதுவும் மலையில இல்லை. ஆனா எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அதனால தொடர்ந்து அம்மாகூட மலைக்குப் போக ஆரம்பிச்சேன்.

கொஞ்சம் கொஞ்சமா இந்த மலை பழகிப்போச்சு. இப்போ கண்ணைக் கட்டிவிட்டாக்கூட தடம் மாறாம ஏறி, இறங்கிருவேன். மொதல்ல மாசத்துக்கு ரெண்டு வாட்டி பூஜைப் பொருள்கள், காய்கறின்னு சின்னச் சின்னச் சுமைகளை சுமந்துக்கிட்டுப் போவேன். அப்புறம் டோலி தூக்க ஆரம்பிச்சேன். இது ரொம்பக் கஷ்டம்…’’ டோலியைத் தோள் மாற்றி வைத்துக்கொண்டு காய்த்துப்போன கைகளைக் காண்பிக்கிறார் ஆலடியான்.

“மாசத்துல 28 நாள் டோலியைத் தூக்கிட்டு மலை ஏறுவோம். எங்க வீடு வத்திராயிருப்பு. காலையில அஞ்சு மணிக்கெல்லாம் இங்க வந்துருவேன். மத்தவங்கள்லாம் புண்ணியம் தேடி மலையேறுவாங்க. நாங்க சோத்தைத் தேடி ஏறுறோம்…” என்றவரிடம், “இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தத் தொழிலை ஏன் செய்யணும்?” என்றோம்.

“படிச்சது, பத்தாப்புதான். அதுக்குமேல படிப்பு ஏறலை. ஊர்ல சும்மா சுத்திக்கிட்டிருந்தா சேர்க்கை சரியில்லாமப்போயிரும்னு எங்க அம்மா மலைக்குக் கூட்டியாந்துச்சு. அப்புறம் அதுவே தொழிலாகிப்போச்சு. ரொம்ப சிரமமான வேலை… இந்த வேலையே வேணாம், வேற ஏதாவது செஞ்சு பிழைச்சுக்கலாம்னு யோசிச்சப்பதான் அந்த சம்பவம் நடந்துச்சு…” – பூடகமாகச் சொல்லி இடைநிறுத்திவிட்டு மூங்கில் கழியில் தொங்கும் பாட்டிலைத் திறந்து தண்ணீர் அருந்துகிற ஆலடியான், சிறிய ஆசுவாசத்துக்குப் பிறகு பேசுகிறார்.

“இந்த மலையில டவர் கிடைக்காது. மலை உச்சிக்குப் போனாதான் போன் பேச முடியும். நடுவுல ஏதாவது பிரச்னைன்னா, மலையில இருந்து இறங்குறவங்களைப் பார்த்துத்தான் உதவி கேக்கணும். அப்போ நாங்க மலை உச்சியில நின்னோம். அடிவாரத்துல இருந்து ஒரு போன் வந்துச்சு. மலையேறி வந்த ஒருத்தருக்கு உடம்பு முடியலைன்னு சொன்னாங்க. ஓடிப்போய் பார்த்தோம்.

ஒரு பொண்ணு அழுதுக்கிட்டு இருந்துச்சு. அவங்க அப்பா உடம்பு முடியாம படுத்திருந்தாரு. வேற மொழி பேசுறவங்க. எங்களைப் பாத்ததும் கையெடுத்துக் கும்பிட்டு உதவி கேட்டாங்க. அவங்ககிட்ட காசு இருந்த மாதிரியும் தெரியலை. எதைப் பத்தியும் யோசிக்காம, அவரைத் தூக்கிட்டு அடிவாரத்துக்கு வந்து கார்ல ஏத்திவிட்டோம். வருமானம் போச்சேன்னு கஷ்டமாத்தான் இருந்துச்சு.

ஒரு மாசம் கழிச்சு அவங்க திரும்பவும் வந்தாங்க. ‘சாமி மாதிரி வந்து எங்க அப்பா உசுரைக் காப்பாத்தினீங்க’ன்னு கையெடுத்து கும்பிட்டு, நிறைய பணம் குடுத்துட்டுப் போனாங்க. அதுக்கு அப்புறம்தான் புரிஞ்சுச்சு, இந்த வேலை நமக்குக் கடவுள் குடுத்த வாய்ப்புன்னு…” பேசிக்கொண்டே பாறைகளுக்கு நடுவே ஓடும் குதிரை ஊற்றில் கயிற்றைப் பிடித்தபடி இறங்கி, வழுக்குப்பாறைக்கு வந்தடைந்தோம். டோலியை இறக்கி வைத்துவிட்டு, சற்று ஓய்வெடுக்கிறார் ஆலடியான்.

“இந்த மலையில சில இடங்கள் சமதளமா இருக்கும். சில இடங்கள் செங்குத்தா இருக்கும். சில இடத்துல பாதையே இருக்காது. பாதை மாறிப்போனா மீண்டு வர்றது ரொம்பச் சிரமம். சாதாரணமா நடக்குறதே கஷ்டம். இதுல 50 கிலோ, 100 கிலோ தூக்கிட்டு ஏறணும். சம தளத்துல நடக்கும்போது சுமையை தோள்ல வெச்சுப்போம். பாறை மேல ஏறும்போது தலையில வெச்சுப்போம். அப்போதான் பேலன்ஸ் கிடைக்கும்.

பொருளைத் தூக்கிட்டுப்போனா 1,300 ரூபா, மனுசங்களைத் தூக்கிட்டுப்போனா 2,000 ரூபா. மழைக்காலத்துல மலை ஏறுறது ரொம்பக் கஷ்டம். வழுக்கும். சில இடங்கள்ல கால் சேத்துல சிக்கிக்கும். திடீர்னு வெள்ளம் வந்துடும். தண்ணிக்குள்ள இறங்கி, இது வரைக்கும் நூற்றுக்கணக்கான மக்களோட உசுரைக் காப்பாத்தியிருக்கோம்.


சில நேரம் உயிரில்லாதவங்களையும் கீழே சுமந்துட்டு வரவேண்டியிருக்கும்.

சாமியைப் பாக்க வர்றவங்களைத் தூக்கிட்டு மேலே போறதும் நாங்கதான்; சாமிகிட்ட போனவங்களைத் தூக்கிட்டு கீழே வர்றதும் நாங்கதான்’’

என்றபடியே எழுந்தவர், மூச்சைப் பிடித்துக்கொண்டே மீண்டும் டோலியைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார். சுள்ளென்று அடித்த வெயில் மெல்லத் தணிந்து இதமாக மாறுகிறது, சூழல்…!!! ( நன்றி- விகடன் )

…………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்