………………………….

………………………..
சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு ஹோட்டலுக்குள் நுழைவார். ஒரு பிடி பூந்தி எடுத்து நாலாபக்கமும் இறைப்பார். கல்லாவில் கைவிட்டு கைக்கு வந்த சில்லறையை எடுத்து வாசலில் வீசுவார். மடமடவென்று வெளியே போய் விடுவார்.
ஹோட்டல்காரர் சிறிதுகூட முகம் சுளிக்க மாட்டார்.
சேஷாத்திரி ஸ்வாமிகள் அப்படி செய்த அரை மணி நேரத்தில் பூந்தி விற்பனை கொடி கட்டிப் பறக்கும்.
ஹோட்டலில் போதும் போதும் என்கிற அளவுக்கு வியாபாரம் நடக்கும்.
ஏன் இப்படி வாரி இறைக்க வேண்டும்…??? எதற்கு இப்படி காசை வெளியில் வீச வேண்டும் …. ???
இது சித்த புருஷர்கள் மட்டுமே அறிந்த சூட்சும வித்தை …. !!!
மனிதர்களின் கொடுமையான பேச்சு, கோபமான பார்வை, திருட்டுத்தனமான செய்கை, தேவையில்லாத ஆத்திரம் அவர்களின் சூழ்நிலையைக் கெடுத்திருக்கும். சுற்றியுள்ள சூட்சும உருவங்களை, அதிநுட்ப சக்திகளைக் கலவரப்படுத்தியிருக்கும்.
இதனால் அவர்களுக்கு வர வேண்டிய நல்லவை தடைப்பட்டுப் போயிருக்கும்.
சேஷாத்திரி ஸ்வாமிகள் அவன் சுற்றுச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு இப்படி வாரியிறைத்ததனால் அந்த சூட்சும சக்திகளைச் சமாதானப்படுத்தி விடுவார்.
அன்று வியாபாரம் நல்லபடி நடக்கும். நல்லது கொடி கட்டிப் பறக்கும்.
எனவே, அவர் கடைத்தெருவுக்குப் போனால் வியாபாரிகள் கைகூப்பி அழைப்பார்கள்.
“என்னடா என்னைப் பார்த்து நமஸ்காரம் பண்ணிட்டா எல்லாம் கிடைச்சுருமோ. கார்த்தால ரெண்டு இட்லி கேட்டானே. அவனைக் கைய உடைச்சுருவேன்னு சொன்னியே. எங்கே என் கையை உடை பார்ப்போம்.”
“சாமி. தப்பு… ரொம்ப தப்பு…” கடைக்காரன் கன்னத்தில் போட்டுக் கொள்வான்.
“போ… ரெண்டுக்கு நாலு இட்லியா எடுத்துண்டு கிழவனைத் தேடிப் பிடிச்சு கால்ல விழுந்து மன்னிப்புக் கேளு. இட்லி கொடுத்துட்டு கைகட்டி நில்லு. போடா போய் தேடு.”
அந்தக் கடைக்காரர் மறுபேச்சில்லாமல் ஓடுவார். “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.”
மறைமுகமாய் அங்கு தர்மம் வலியுறுத்தப்படும்.
“கேட்டவனுக்கெல்லாம் இட்லி கொடுன்னா சொல்றேன். நூறு இட்லிக்கு ரெண்டு இட்லி தானம் கொடு.
அந்த இரண்டையும் மிச்சம் புடிச்சு காசாக் காணும்னா எல்லாம் பிச்சுக்கும். ஞாபகம் வச்சுக்கோ.”
அந்த ஹோட்டல்காரர் இதைத் தெளிவாய் புரிந்து கொண்டு தானம் செய்வதை இயல்பாய் மாற்ற, அதில் தெளிவு பிறக்க, அவர் கடைக்குள் சுவாதீனமாய் நுழைவார்.
“பசிக்கிறது. ரெண்டு இட்லி கொடுடா.”
ஹோட்டல்காரர் பரவசமாகிப் போவார். விழுந்து நமஸ்கரித்து தானே இட்லி கொண்டு வந்து வைப்பார். சட்னியும் சாம்பாரும் கொண்டு வந்து நிரப்புவார்.
ஆனால், அதற்குள் ஸ்வாமியின் எண்ணம் திசை மாறிப் போயிருக்கும். பசிமறந்து போய் வேறு சந்தோஷத்தில் திளைத்திருக்கும்.
“எனக்கெதுக்குடா இட்லி” என்று வியப்பார். ரெண்டு விள்ளல் சாப்பிடுவார். சாம்பாரை உறிஞ்சிக் குடிப்பார். மிச்சத்தை இலையோடு எடுத்து கொண்டு போய் வாசலில் எறிவார்.
தன் கையை மேல்துண்டால் துடைத்தபடி வெளியேறுவார்.
ஹோட்டல்காரருக்கு அன்று முழுவதும் நன்கு வியாபாரமாகும்.
அவர் வராவிட்டாலும் அவர் படத்துக்கு முதல் ஏடு இட்லி நிவேதனம் செய்யப்படும்.
நிவேதனம் செய்த முதல் ஏடு இட்லியை அந்த ஹோட்டல்காரர் சாதுக்களுக்கு தானமாக தருவார். தானம் தருவது அந்த வியாபாரிக்கு தினசரி வேலையாகப் போகும். ஒரு கடைக்காரரைப் பார்த்து இன்னொரு கடைக்காரர் இந்த செய்கையைப் பின்பற்றுவார்கள். சாதுக்களிடையே தன்மையாகப் பேசுவார்கள்.
சேஷாத்திரி ஸ்வாமியால் திருவண்ணாமலை முழுக்க சாதுக்களுக்கு அன்னமிடுதல் பிரபலமான விஷயமாயிற்று.
“எதற்காகப் பிச்சை போட வேண்டும். சாது என்று சொல்லி வெறும் சோம்பேறி தடியர்கள் காசு கேட்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் உதவ வேண்டுமா… தானா… அவர்கள் போடும் சண்டையும், கூச்சலும் எவ்வளவு ஆபாசமாக இருக்கிறது தெரியுமா. உண்மையான சாது யார் என்று தெரிந்தால் அவருக்கு சோறிடலாம்.”
யாரோ முணுமுணுக்க, சேஷாத்திரி ஸ்வாமிகள் அவரை அருகே அழைத்தார்.
“நீ கேட்ட கேள்வி சரி. திருவண்ணாமலையில் எத்தனை போலீஸ்காரர்கள் இருப்பார்கள்.”
“ஒரு நூறு போலீஸ்காரர்கள் இருப்பார்கள்.”
“நூறு போலீஸ்காரர்களில் லஞ்சம் வாங்காத நேர்மையான போலீஸ்காரர் எத்தனை பேர்.”
“ஒரு பத்து பேர் இருப்பார்கள்.”
“பத்து நேர்மையான போலீஸ்காரர்களுக்காக தொண்ணூறு லஞ்சம் வாங்குகிற போலீஸ்காரர்களைப் பொறுத்துக் கொள்கிற நீ, இரண்டு நல்ல ஞானிகளுக்காக பத்து பிச்சைக்காரர்களைப் பொறுத்துக் கொள்ள முடியாதா. அது பெரிய தவறாகி விடுமா?
ஒரு ஞானி தன்னை ஞானி என்று சொல்லிக் கொள்ள மாட்டான். நீதான் சலித்து சலித்துக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆயிரம் பிச்சைக்காரர்களை சலித்து ஒரு ஞானியைக் கண்டுபிடித்துவிட்டால் பிறகு நீ கடவுளைத் தேட வேண்டிய அவசியமில்லை.
கடவுள் உனக்கு அருகே வந்துவிட்டார் என்று கொள்ளலாம். கடவுளோடு உனக்குச் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்று முடிவு செய்து கொள்ளலாம்.
உன் வாழ்க்கையின் எல்லா விஷயத்தையும் அந்த ஞானி கருணையினால் நிரப்புவார்.
உன்னை வைத்து உன் குடும்பத்தையும் வளைப்பார். ஒரு குடும்பத்தை வைத்து ஒரு தெருவை வளைப்பார். ஒரு தெருவை வைத்து ஒரு ஊரை வளைப்பார். ஞானிக்கு தர்மம்தான் முக்கியம். மனிதர்கள் முக்கியமல்ல.
தர்மத்தின் பொருட்டு அவர் மனிதர்களை வேட்டையாடுவார்.
………………………………………………………………………………………………………………………………………………..



கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…