தமிழ் நாட்டில், பிரமிக்க வைக்கும் இப்படி ஒரு இடம் – இப்படி ஒரு பெண் …..!!!

……………………………..

………………………………..

………………………………………….

அடர்ந்த காட்டுக்கு நடுவில் தன்னந்தனியாக வாழும் 110 வயது வனதேவதை..!

கரடுமுரடான காட்டுப்பாதை. ஒருபக்கம் ராஜநாகம், மறுபக்கம் யானையின் காலடித் தடம், பாதங்களில் அட்டைகள். இவற்றையெல்லாம் கடந்து சென்றால்தான் இஞ்சிக்குழி வனம் வரும். அதன் அடர்த்தி கடந்து சென்று பார்த்தபோது, அங்கு பல தலைமுறைகளாகத் தங்களுக்கென ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கிக்கொண்ட ஒரு சமூகம் வாழ்ந்த சுவடுகள் தெரிகின்றன.

அவர்கள்தான் காணிகள். அந்தக் குழுவின் கடைசி சாட்சியாக, தனியாளாக அங்கு வசிக்கிறார், 110 வயது குட்டியம்மாள்.

19 கி.மீ பயணம்… தாமிரபரணியின் பிறப்பிடம்!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இஞ்சிக்குழிக்கு, வனத்துறை அனுமதியுடன் மட்டுமே செல்வது சாத்தியம். வனத்துறைக் காவலர் அசோக்குமார் தலைமையில், ஐந்து வனத்துறை ஊழியர்களுடன் மொத்தம் எட்டுப் பேர் காட்டுக்குச் சென்றனர். அந்த மூதாயைக் காண அவர்களுடன் நாமும் பயணப் பட்டோம். காரையார் அணைக் கட்டைக் கடந்து வனத்துறையின் வாகனம் காட்டுக்குள் நுழைந்தது. சுற்றிலும் உயர்ந்த, பெருத்த மரங்கள். கரடுமுரடான பாதை. யானை, புலி, சிறுத்தை, கரடி என வனவிலங்குகள் நடமாடும் பகுதி என்பதால் பெரும் கவனத்தோடு பயணிக்க வேண்டியிருந்தது. சுமார் 19 கி.மீ பயணத்தில், 5 கி.மீ கடந்தபோது பாதையில் மரம் விழுந்துகிடக்க, வனத்துறையினர் மின்வாளால் மரத்தை வெட்டி அகற்றிய பிறகே மீண்டும் பயணத்தைத் தொடர முடிந்தது.

மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பிறகு இஞ்சிக்குழி காட்டுப்பாதையை அடைந்துவிட்டாலும், இன்னும் 3 கி.மீ யானைகள் செல்லும் பாதையில் நடந்து செல்ல வேண்டும். அந்தப் பேருயிரின் கால் தடங்கள் கண்ணில்பட்டன. அதுவே அச்சத்தில் உறையவைக்கிறது. தொடர்ந்து நடந்தபோது செந்நாய்க் கூட்டம் ஒன்று மான்களை வேட்டையாடத் துரத்திச் சென்றது.

தாமிரபரணி ஆற்றின் பிறப்பிடத்துக்கு அருகே சென்றபோது, தெளிந்த நீரோடை ஓய்வைத் தந்தது. ஆனால், ஆற்றங்கரையில் கால்களில் அட்டைகள் ஒட்டிக்கொண்டன. அதையும் பொருட்படுத்தாமல் பயணம் தொடர்ந்தது. இஞ்சிக்குழிக்கு இன்னும் 200 மீட்டர் மட்டுமே இருந்தபோது, புதர்களுக்குள் ராஜநாகம் ஒன்று வேகமாகக் கடந்து சென்றது.

அந்த ஒரு நிமிட அதிர்ச்சியையும் கடந்து, இறுதியில் குட்டியம்மாள் பாட்டியின் வீட்டை அடைந்தோம். அங்குதான், இந்தப் பயணத்தின் நோக்கமான காணி மக்களின் உலகம் நமக்குத் திறந்தது.

பொதிகை மலையிலிருந்து இஞ்சிக்குழி வரை…!!!

காணி மக்கள், கேரளாவைப் பாரம்பர்யமாகக்கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. 1915-க்கு முன்பு பொதிகை மலை அடிவாரத்திலுள்ள பொதியடி மலைக்கிராமத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.

பின்னர் 1917-ல் ஆங்கிலேயர்கள், அடர்ந்த இஞ்சிக்குழி வனப்பகுதியில் செங்குறிஞ்சி மரங்களை நடுவதற்காக 70 காணிக் குடும்பங்களை அழைத்து வந்தனர். அவர்களின் குழந்தைகள் கல்வி கற்க, பள்ளிகளும் அங்கு அமைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வனவிலங்குகளின் தாக்குதல், அச்சம் காரணமாக 1963-க்குப் பிறகு படிப்படியாக காரையார் மலையடிவாரத்தில் குடியேறத் தொடங்கியிருக்கின்றனர்.

குட்டியம்மாள் குடும்பம் மட்டும் இஞ்சிக்குழியை விட்டு வரவில்லை. குட்டியம்மாளின் கணவர் சின்னப்பன் காணி இறந்துவிட்டார். இரு மகன்கள், ஒரு மகள். எல்லோருமே அகத்தியர் மலை அடிவாரத்துக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள். குட்டியம்மாளுக்கு இன்று வரையிலும் இஞ்சிக்குழிதான் உலகம்.

பழங்குடித்தன்மை மாறாமல் வாழும் பழங்குடிகளில் காணி சமூகமும் ஒன்று. உணவு முதல் வழிபாடு வரை முற்றிலும் இயற்கை வழியானதாகவே இருக்கிறது, இவர்கள் வாழ்க்கை. குட்டியம்மாள் ஒரு வனதேவதையைப்போல இந்தக் காட்டில் உழன்றுகொண்டிருக்கிறார். செடி, கொடிகள், புழு, பூச்சிகள், விலங்குகளோடு மற்றுமோர் உயிராக வாழ்கிறார்.

திருமணம், மரபு வழிபாடுகள் போன்ற நிகழ்வுகளுக்காக அடிவாரத்துக்கு வந்தாலும், இரவு உறக்கம்கொள்ள குட்டியம்மாளுக்கு இஞ்சிக்குழிக் காட்டுக்குள் வந்தாக வேண்டும். அப்படியொரு பிணைப்பு வனத்தோடு.

குட்டியம்மாளைத் தேடிச் செல்லும் அஞ்சல் அலுவலர் …!!!

2021-ம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குட்டியம்மாளுக்கு ரூ.1,000 முதியோர் உதவித்தொகையாக வழங்கப்பட்டு, தற்போது அது ரூ.1,200-ஆக வழங்கப்படுகிறது. பாவனாசத்துப்பட்டு கிளை அஞ்சலகத்தில், கிளை அஞ்சல் அதிகாரியாகப் பணியாற்றி வரும் கிறிஸ்துராஜா, இந்த ஒற்றை மனுஷிக்காக இஞ்சிக்குழி காணிக் குடியிருப்புக்குச் சென்று ஒவ்வொரு மாதமும் முதியோர் உதவித்தொகையை வழங்கிவருகிறார்.

“காலை 8 மணிக்குக் கிளம்பினா வீட்டுக்குத் திரும்ப மாலை 5 மணி ஆகிடும். காலை உணவு, மதிய உணவுன்னு பாத்திரத்துல சாப்பாட்டைக் கட்டிக்கிட்டுத்தான் கிளம்புவேன். பாட்டிக்கு ரொட்டிக்கட்டு மாதிரி தின்பண்டங்கள் வாங்கிக்குவேன். வீட்டுக்குப் போனதும் பாட்டி நீச்சத்தண்ணி தருவாங்க. உதவித்தொகையைக் குடுத்துட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு கீழே இறங்கிடுவேன். ஒவ்வொரு மாசமும் பாட்டியைப் பார்க்குறது மனசுக்கு நிறைவா இருக்கும்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

இந்த ஒரு பணிக்காகவே கிறிஸ்துராஜாவுக்கு அஞ்சல்துறை விருதளித்துப் பாராட்டியிருக்கிறது.

தானே சமைக்கும் குட்டியம்மாள்…..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் காணி பழங்குடியின மக்கள் வசிக்கும் ஐந்து குடியிருப்புகளில், அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்திருப்பது இஞ்சிக்குழி. பெரிய மைலாறு, சின்ன மைலாறு, அகஸ்தியர் நகர் காணிக் குடியிருப்பு, சேர்வலாறு தருவட்டாம்பாறை ஆகிய பகுதிகளுடன் சேர்த்து, சுமார் 500 முதல் 600 பேர், 150 குடும்பங்களாக வசித்துவருவதாக வனத்துறைக் காவலர் அசோக்குமார் தெரிவித்தார்.

குட்டியம்மாளின் மகள், மகன்கள் அவ்வப்போது வந்து தாயைப் பார்த்துச் செல்கிறார்கள். பிற சமயங்களில் குட்டியம்மாள், தானே சமையல் செய்து கொள்கிறார். அரிசி சாதம் வைத்து, தண்ணீர் ஊற்றிக் கஞ்சியாக்கி சாப்பிடுகிறார். வீட்டுக்கு அருகிலிருக்கும் மூலிகைகளைச் சேகரித்து ரசம் வைத்து அருந்துவதும் உண்டாம். பிள்ளைகளோ அல்லது அஞ்சல் அலுவலர் கிறிஸ்துராஜா போன்றோரோ வரும்ேபாது கொண்டு வருகிற தின்பண்டங்களைக் கொண்டே பல நாள்களில் பசியாற்றிக் கொள்கிறார்.


“மிருகங்க வரும், சத்தம் போட்டா ஓடிடும் … !!!”

குட்டியம்மாள் பாட்டியுடன் பேசுவதே அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது. பொக்கை வாயில் தமிழும் மலையாளமும் கலந்த மொழியில் பேசுகிறார். “நான் பொறந்து வளர்ந்தது, எனக்குக் கல்யாணம் ஆனது எல்லாம் இந்தக் காட்டுலதான். இந்த மொத்தக் காடும் எனக்கு அத்துப்படி.

என் பையன்களுக்கும் பொண்ணுகளுக்கும் நான் அடிவாரத்துக்கு வரலேன்னு வருத்தம். அவங்க எனக்காகவே ரொம்ப நாள் இங்கதான் இருந்தாங்க. இப்ப இல்லை. வெளியேறி மலையடிவாரத்துக்குப் போயிட்டாங்க. பேரப் புள்ளைங்களுக்குக் கல்யாணம் காட்சின்னா நானும் அங்க போயிட்டு வருவேன். இப்போ எங்கயும் போக முடியுறதில்லை. எனக்கு இங்கதான் நிம்மதியா இருக்கு. ஒத்தையிலதான் இருக்கேன்.

மிருகத்துக்கெல்லாம் பயமில்லை. அது நம்மளை என்ன பண்ணப்போகுது… சத்தம் போட்டா ஓடிடும். ஆனை வரும் அப்பப்போ. அதுபாட்டுக்கு என்னைப் பாத்துட்டுப் போயிரும். ஒருமுறை ஒரு கலெக்டரு இங்க வந்து என்னைப் பார்த்தாரு. முதியோர் உதவித்தொகைக்கு ஏற்பாடு செஞ்சாரு. நான் கடைசியா இந்திரா காந்திக்கு ஓட்டுப் போட்டேன்…’’ என்று சிரிக்கிறார்.

“நீங்களும் அடிவாரத்துக்குப் போய் வாழலாமே…” என்று கேட்டோம். குட்டியம்மாளின் முகம் மாறிவிட்டது. “இதோ இந்த காட்டுக்குள்ளதான் எங்க தெய்வங்கள் இருக்கு. என் கணவர், உறவுக்காரங்கள்லாம் இதோ இந்த கல்லுலயும் மரத்துலயும்தான் உறைஞ்சுபோய் இருக்காங்க. இவங்களை விட்டுட்டு நான் எங்கே போய் தங்குறது… ஒரு நாள் தூக்கம் வராது. ஒரு வாய் களி இறங்காது… இதோ இந்தத் தரையில சேலை முந்தானையை விரிச்சுக்கிட்டு படுத்தா, நிம்மதியா உறக்கம் வந்துடும். பசிச்சா எடுத்துச் சாப்பிட காட்டுக்குள்ள நிறைய இருக்கு. இதோ இதெல்லாம் மரம், செடி, கொடின்னா நினைச்சே… எல்லாம் எங்க மூத்தாளுகப்பு…” – குட்டியம்மாளின் கண்கள் கலங்குகின்றன.

ஒரு சமூகத்தின் மூத்த சாட்சி …!!!

இன்று தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழ்ந்துவரும் காணி பழங்குடியினத்தில், பல தலைமுறைகளைக் கடந்து வாழும் மூதாய் இஞ்சிக்குழியில் வாழும் குட்டியம்மாள்தான்.

ஒரு காலத்தில் பல குடும்பங்களின் வாழ்விடமாக இருந்த இஞ்சிக்குழி, இன்று ஒரே ஒரு மூத்த உயிரின் இருப்பிடமாக மாறியுள்ளது. நூற்றாண்டைக் கடந்த காலத்தின் மாற்றங்களைத் தன் உடல் சுருக்கத்தில் முடிந்துவைத்திருக்கும் குட்டியம்மாள், `உயிரோடு உலவும் வனதேவதை’ என்றால் மிகையில்லை ….!!! (நன்றி – விகடன் …!!!)

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்