— யூதர்கள் பணம் கடத்தும் வித்தியாசமான வழி ….!!!

……………………………………

……………………………………..

உலகில் அதிகமுறை நாடு கடத்தப்பட்ட இனம் என்றால் யூதர்கள் தான்.

ஆனால் எத்தனை முறை நாட்டைவிட்டு விரட்டப்பட்டாலும், அவர்களின் பணத்தை மட்டும் எந்த அரசாலும் பறிமுதல் செய்யவே முடியவில்லை. நாடுகடத்தப்படும் உத்தரவு வரும்; வழியெங்கும் நிறுத்தி கடுமையான சோதனை செய்வார்கள். தங்கம், வெள்ளி, ரொக்கம் என எது இருந்தாலும் பறிமுதல் செய்யப்படும்; வீடு நிலங்களும் பறிக்கப்படும்.

ஆனால் இவர்களைத் தடுத்து நிறுத்தும் காவலர்கள், இவர்கள் கையில் பத்து பைசா இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைவார்கள். பெரிய வங்கிகளின் உரிமையாளர்களாகவும் தொழிலதிபர்களாகவும் இருக்கும் யூதர்கள் கூட, எதுவுமே இல்லாமல் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் செல்வார்கள்.

அங்கே போனதும் திடீரென மீண்டும் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். இது எப்படி நடந்தது எனத் தெரியாமல் 2000 ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் பலவும் குழம்பின.

இதற்கு காரணம் யூதர்களின் பொருளாதார விதிகள் தான். கி.பி. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் பாபிலோனியாவில், இன்றைய ஈராக் பகுதியில் தொகுக்கப்பட்ட முக்கியமான யூத மதநூல் பாபிலோனிய டால்மூட் ஆகும்.

இது பொருளாதார விதிகளை மட்டும் கொண்ட நூல் அல்ல; மதம், சட்டம், திருமணம், குடும்பம், சொத்துரிமை, வணிகம், கடன் எனப் பல்வேறு விஷயங்களை விவாதிக்கும் மிகப்பெரிய தொகுப்பாகும்.

இதில் பாவா மெட்சியா என்ற பகுதியில் ரபி யிட்ஸ்ஹாக் ஒரு சுவாரசியமான பொருளாதார அறிவுரையை வழங்குகிறார்: ஒருவர் தனது செல்வத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.

மூன்றில் ஒரு பகுதியை நிலத்தில் வைத்திருக்க வேண்டும்;

மூன்றில் ஒரு பகுதியை வணிகத்தில் முதலீடு செய்ய வேண்டும்;

மூன்றில் ஒரு பகுதியை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்.

ஆக முதல் விதியைப் படித்தால் ஏதோ நிலத்தை வாங்கச் சொன்னதுபோல் தெரியும். ஆனால் இதன் உட்பொருள் என்னவெனில், நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கும் வண்ணம் இருக்கக்கூடிய தங்கம் மற்றும் ரத்தினம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதுதான். டால்மூடின் அதே பகுதியில் நாணயங்களை எவ்வளவு ஆழத்தில் புதைக்க வேண்டும், திருடர்களிடமிருந்து எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற விவாதங்களும் இடம்பெறுகின்றன.

அதனால் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தங்க நாணயம், விலைஉயர்ந்த கற்களாக மாற்றி ஜாடியில் போட்டு வீட்டுக்கு அடியில் அல்லது தோட்டத்தில் புதைத்துவிடுவார்கள். வீட்டுக்குப் படைகள் ரெய்டு வந்தாலும் எதுவும் சிக்காது.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பிற்கால தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில்,

பழைய யூத குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் மண்பானைகளில் தங்க நாணயங்கள் மற்றும் புதையல்கள் புதைக்கப்பட்டிருந்தது பல முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தவிர, யூதர்கள் கடைபிடித்த இன்னொரு விதி ஆடம்பரம் கூடவே கூடாது என்பதே. எத்தனை பணம் இருந்தாலும் வீடுகள் சிறியதாக இருக்கும், வீண் செலவுகள் இருக்காது. எந்த நேரமும் கண்காணிக்கப்படுகிறோம், கொஞ்சம் அதிகமாக கூட பணம் இருப்பது தெரிந்தால் பணம் பறிக்கப்படும் என்பதால் சிக்கனமாக வாழவேண்டும் என்பது அவர்களுக்கு டால்மூட் இட்ட கட்டளையாக இருந்தது.

மார்க் ஜுக்கர்பர்க், ப்ளூம்பெர்க், கூகிள் நிறுவனர்கள் என அனைவருமே இன்றும் எந்த ஆடம்பரமும் இன்றி சிக்கனமாக வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென நாட்டை விட்டு விரட்டப்படலாம் எனும் சூழலில், “இன்னும் நாலு மாதத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என உத்தரவு வருகிறது என வைத்துக்கொள்வோம். ஸ்பெயினில் 1492-ம் ஆண்டு அப்படித்தான் நடந்தது.

ஸ்பானிய யூதர்கள் நிலத்தடியில் இருந்த தம் தங்க நாணயங்களை எடுத்தார்கள்; தன் உடைகளில் பொத்தான்களாக வைத்துத் தைத்துக்கொண்டார்கள். தங்கம் மெல்லிய தகடுகளாக மாற்றப்பட்டு உடைகளுக்குள் தைக்கப்பட்டது. காலணிகளுக்குள்ளும், பெல்டுகளுக்கும் இடையே தங்கம் வைக்கப்பட்டது. இவர்களை வழியெங்கும் நிறுத்திச் சோதனை செய்த ஸ்பானிய வீரர்களுக்கு எதுவும் சிக்கவில்லை.

டால்மூடின் இரண்டாவது விதி, “சொத்தின் இரண்டாவது பங்கை வணிகத்தில் போடவும்” என்பது. வணிகத்தில் முதலீடு செய்த பணத்தை எப்படி வேறொரு நாட்டிற்கு எடுத்துச் செல்வது? இதற்கு அவர்கள் பயன்படுத்திய முக்கியமான வழிகளில் ஒன்றுதான் பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச் (Bill of Exchange) எனப்படும் பணமாற்றுப் பத்திரம்.

இது எப்படி வேலை செய்தது?

ஸ்பெயினில் ஒரு யூத வணிகருக்கு ஒரு கடையும், வங்கியில் பணமும், வணிகத்தில் முதலீடுகளும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். திடீரென நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவு வருகிறது. அவர் தனது கடையையும் மற்ற சொத்துகளையும் உள்ளூர் வணிகர் ஒருவருக்கு விற்கிறார். ஆனால் அதற்கான பணத்தைத் தங்க நாணயங்களாக வாங்கிக்கொண்டு பயணம் செய்யாமல், அதற்குப் பதிலாக அந்த வணிகரிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டு, இத்தாலியில் இருக்கும் அவரது வணிகக் கூட்டாளியிடமிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பணமாற்றுப் பத்திரம் ஒன்றைப் பெறுகிறார்.

இப்போது அவர் ஸ்பெயினிலிருந்து இத்தாலிக்குச் செல்கிறார். அங்கே அந்தப் பத்திரத்தை வணிகக் கூட்டாளியிடம் கொடுத்து, ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையைப் பெற்றுக்கொள்கிறார். ஸ்பெயின் வணிகர், அதன்பின் இத்தாலி வணிகருக்குப் பணத்தை அனுப்பிவிடுவார்; இருவருக்கும் பில் ஆஃப் எக்ஸ்சேஞ்சில் கமிஷன் கிடைக்கும்.

அதாவது இன்றைய டிமாண்ட் டிராப்ட், செக் போன்ற முறையே இதுவாகும்.

அந்த ஒரே ஒரு துண்டுப் பேப்பரைக் கொண்டு எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் கடத்தலாம். இந்த விவரமே தெரியாமல் ஸ்பானிய வீரர்கள் தங்கக் கட்டிகளையும் வைரக்கற்களையும் தேடி ஏமாந்தனர்.

இப்படி ஸ்பெயினிலிருந்து யூதர்கள் விரட்டப்பட்டதும் அவர்கள் பெருமளவில் புகுந்தது துருக்கியில்தான். அவர்கள் தம்முடன் ஸ்பெயினின் பெரும்பகுதிச் சொத்துகளைக் கொண்டுவந்துவிட்டனர். அதன்பின் சுல்தான் இரண்டாம் பயாசித் தனது நெருங்கிய வட்டாரத்தில் ஸ்பெயின் மன்னரைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகப் பதிவாகியுள்ளது: “நீங்கள் பெர்டினண்டை ஒரு புத்திசாலி மன்னர் என்று அழைக்கிறீர்கள்; ஆனால் அவரோ தன் நாட்டை வறுமைப்படுத்திக்கொண்டு, என் நாட்டைச் செழிப்பாக்கியுள்ளார்!”

இந்த மூன்று விதிகள் தவிர, யூதர்கள் தமக்குள் வட்டி வாங்கிக்கொள்வதில்லை.

ஒவ்வொரு யூத திருமணத்தின் போதும், திருமணத்தன்று கணவன் மனைவிக்கு ஒரு பத்திரத்தை வழங்குவார். கணவர் இறந்துவிட்டால் மனைவிக்கு எத்தனை பணம் கொடுக்கப்பட வேண்டும் என அதில் தெளிவாக எழுதியிருக்கும்.

திருமண மோதிரத்தில் வைரம், ரத்தினம் மாதிரி எந்தக் கற்களும் இருக்காது; மிக எளிமையான ஒரே ஒரு உலோகம் (தங்கம் அல்லது வெள்ளி) மட்டுமே பயன்படுத்தப்படும்.

இன்றும் உலகின் 400 பெரிய கோடிசுவரர்கள் பட்டியலை எடுத்தால் அதில் 45% யூதர்கள் தான் இருப்பார்கள்.

மக்கள் தொகையில் 0.5% கூட இருக்கமாட்டார்கள்.

எந்தவொரு சமூகமும் பாதுகாப்பற்ற சூழலில் எப்படித் தற்காத்துக்கொள்ள வேண்டும், தங்களது மூலதனத்தைப் பல தலைமுறைகளுக்கு எப்படிப் கடத்த வேண்டும் என்பதற்கு யூதர்களின் வரலாறு ஒரு நடைமுறைப் பாடமாகும். ( உதவிக்கு நன்றி – நியாண்டர்செல்வன் … )

…………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்