குழந்தைகள் -குதிரைகளா … ???

…………………………………………

……………………………………………..

…………………………………………….

பொருளாதாரப் பேராசிரியர் ( Catherine Ruth Pakaluk ) கேதரின் ரூத் பஹாலுக் “குதிரைகள் தியரி” என்பதை முன்வைக்கிறார்.

இதன்படி இவர் சொல்வது, “குழந்தைகளைப் பெற்று வளர்க்கச் செலவு ஆகிறது என்பதால் குழந்தை பெறும் விகிதம் குறையவில்லை. குழந்தைகளால் வரும் லாபம் நின்றுவிட்டதால் தான் பிள்ளை பெறும் விகிதம் குறைந்துவிட்டது” என்கிறார்.

இதற்கு இவர் குதிரைகளை உதாரணம் காட்டுகிறார்.

போக்குவரத்துக்குத் தேவை என்பதால் முன்பு வீட்டுக்கு வீடு குதிரைகள் இருந்தன. குதிரைகளால் செலவு ஆகத்தான் செய்தது. ஆனால் அவற்றால் வரும் லாபம் செலவை விடக் கூடுதலாக இருந்தது.

இப்போதும் குதிரைகளை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் லாபத்துக்காக வளர்ப்பதில்லை. அவர்களுக்குக் குதிரைகளைப் பிடிக்கும் என்பதற்காக வளர்க்கிறார்கள்.

அதுமாதிரி தான் குழந்தைகளும்.

குழந்தைகளை முன்பு “வயதான காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்பதற்காகப் பெற்றார்கள். பிள்ளைகள் கல்யாணம் ஆகும்வரை வேலைக்குப் போய்ச் சம்பாதித்துக் கொண்டுவந்து கொடுத்தார்கள். ஒரு பிரச்சனை என்றால் முன்வந்து தீர்ப்பார்கள்.

இன்று பெற்றோர்-பிள்ளைகளுக்கு மத்தியிலேயே இது எல்லாம் சுரண்டல் என்ற எண்ணம் வந்துவிட்டது. “நான் ஏன் உன்னை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டும்?” எனப் பிள்ளைகளும், “அப்படி எதிர்பார்ப்பதே சுரண்டல்” என்ற மனநிலைக்குப் பெற்றோர்களும் வந்துவிட்டார்கள்.

பொருளாதார ரீதியில் யாரும், யாரையும் சார்ந்திருக்கும் அவசியம் இல்லாமல் போனபின் குழந்தைகள் எதற்கு என்ற எண்ணம் பலருக்கும் வந்துவிட்டது.

இதுதான் குதிரைகள் தியரி.

இதைப் பல உறவுகளுக்கும் நீட்டிக்கலாம்.

முன்பு உறவுகள் நீடிக்கக் காரணம் குடும்பத்தில் ஒரு பிரச்சனைன்னா உறவினர்கள் வந்து பஞ்சாயத்து பண்ணுவார்கள். ஒரு அவசரம்னா கடன் கொடுப்பார்கள், பெரியப்பா-பெரியம்மா இல்லாம கிருகப்பிரவேசம் பண்ண முடியாது, சித்தப்பா-சித்தி இல்லாம காதுகுத்து நடத்த முடியாது என்பது மாதிரி இன்றைய காலகட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத, ஏற்றுக்கொள்ளாத விஷயங்கள் தான்.

இது எல்லாம் அவசியமில்லை என ஆனபின் உறவுகளும் அவசியமில்லை என ஆகிவிட்டது.

உறவினர்கள் பிரெண்ட்ஸ் மாதிரி ஆகிவிட்டார்கள். சும்மா பிடிக்கும்வரை பழகுவோம், இல்லன்னா போய்கிட்டே இருப்போம் என ஆகிவிட்டார்கள்.

கணவன், மனைவிக்கும் குதிரைகள் தியரி பொருந்துகிறது. “சம்பளம் வருது, வீட்டில் பிரச்சனைன்னா வந்து சரிபார்த்துக் கொடுக்க பிளம்பர், எலெக்ட்ரிசியன் இருக்கார். பிரச்சனைன்னா போலீஸ் இருக்கு. சோற்றுக்கு உணவகம் இருக்கு. எமோஷனல் சப்போர்ட்டுக்கு நாய் இருக்கு. புருஷன் பொண்டாட்டி எதுக்கு? அவசியமே இல்லை, தனியாவே இருந்துக்கலாம்..”

பிறரை சார்ந்திருப்பது ஏதோ பலவீனம் போலவும், யாரும் எனக்கு வேண்டாம் என வாழமுடிவதும் தான் பொருளாதார சுதந்திரம் எனவும் மக்கள் மனநிலையில் மாற்றம் வந்துவிட்டது…

சுருக்கமாக –

ஒரு பொருள் அல்லது உறவு பொருளாதார தேவையாகவும், லாபம் தருவதாகவும் இருக்கும் வரை அது பரவலாகப் பேணப்படுகிறது;

அந்தத் தேவை மாறி, விருப்பம் அல்லது உணர்வு சார்ந்த தேர்வாக மட்டுமே மாறும்போது –

அதன் எண்ணிக்கையிலும் –

அணுகுமுறையிலும் –

பெரிய மாற்றம் ஏற்படுகிறது …

……………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்