விவேகானந்தருக்கு மிகவும் பிடித்த கடோபநிஷத் நாயகன் – “நசிகேதன் ” …..

…………………………………………

……………………………………………………..

புராணங்களில் சொல்லப்படும் கதைகளைக் கேட்டு, இதெல்லாம் நிஜமா …??? நம்புகிற மாதிரி இல்லையே என்று சொல்வது சரியான சிந்தனை ஆகாது….. இவையெல்லாம், அந்தந்த கதைகளில் சொல்லப்படும் தத்துவங்களைப் பொறுத்து, முக்கியத்துவம் பெறுகின்றன….

இந்த எண்ணத்தோடு, இடுகையைத் தொடருங்கள் ….

………………………………………………………………………………………………………………………………

தர்மரின் அவையில் இருந்த முனிவர்களில்

நசிகேத முனிவரும் ஒருவர்.

தைத்ரிய பிராஹ்மணத்திலும்,

மகாபாரதத்திலும்

நசிகேதனை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

கடோபநிஷதத்தில் நசிகேதன் வரலாறு சொல்லப்பட்டுள்ளது.

வாழ்க்கையின் முடிவு மரணம் அல்ல அதற்குப் பின்பும் வாழ்க்கையின் தனிப்பட்ட தொடர்ச்சி ஒன்றும் இருக்கிறது என்கிறது இந்த கடோபநிஷத்.

கடோபநிஷத் கிருஷ்ண யசூர் வேதத்தில் அமைந்துள்ளது.

கடோபநிஷத்திற்கு –

ஆதிசங்கரர், மத்வர் ஆகியவர்கள் உரை எழுதி உள்ளனர்.

119 மந்திரங்களைக் கொண்ட இந்த உபநிடதம் இரண்டு அத்தியாயங்களாகவும் ஒவ்வொரு அத்தியாயமும் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த உபநிடதம் கதை வடிவில் அமைந்துள்ளதால் இது கடோபநிடதம் ஆனது.

சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிரியமான உபநிடதம் கடோபநிடதம் ஆகும்.

தமது சீடர்களிடம்,

’உபநிடதங்களில் அதைப்போல அவ்வளவு அழகியது வேறு எதுவும் இல்லை. நீங்கள் எல்லோரும் அதை மனப்பாடம் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வெறுமனே படிப்பதால் என்ன பயன்? அதில் வரும் நசிகேதனின் நம்பிக்கை, தைரியம், விவேகம், துறவு முதலியவற்றை வாழ்வில் கடைபிடிக்க முயற்சி செய்’ என்று கூறியுள்ளார்.

நசிகேதனை போல ஆழ்ந்த நம்பிக்கை உள்ள பத்து பேர்

என்னோடு இருந்தால் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுவேன் எனவும் கூறி இருக்கிறார்.

வேதகாலத்தில்

வாஜசிரவஸ் என்னும்

வாசஸ்ரவஸ் முனிவர் வாழ்ந்தார்.

இவரது மகன் நசிகேதன்.

வாஜசிரவஸ் கடம் என அழைக்கப்பட்ட யஜூர்வேத மரபின் முதன்மை ஆசிரியர்.

கடமென அழைக்கப்பட்ட நிலப்பகுதியின் அரசருமாக இருந்தார்.

இவர் நூறு பெருவேள்விகளை இயற்றியவர் என்கின்றன நூல்கள். நூறாவது வேள்வியில் ஆயிரம் பசுக்களை அவர் அந்தணர்களுக்கு அளித்தார்.

யஜுர் வேதம்…

யஜூர் வேதம் இரண்டு வகைப்படும். க்ருஷ்ண யஜுர் வேதம், சுக்ல யஜுர் வேதம்.

சுக்ல யஜுர்வேதமானது 48 அத்தியாயங்களும்,303 அனுவாகங்களும்,1675 மந்திரங்களும் கொண்டது.

க்ருஷ்ண யஜுர்வேதம் 7 காண்டமாகவும், 651 அனுவாகமாகவும் பிரிந்துள்ளது.

வேதத்தின் முதல் பாகம் கர்ம காண்டம் என்றும்,

உபநிஷத்துக்களை ஞான காண்டம் என்று அழைக்கிறோம்.

ஈஸம், கேனம், கடம், ப்ரச்னம், முண்டகம், மாண்டூக்யம், ஐதரேயம், தைத்ரீயம், சாந்தோக்யம்,ப்ரஹதாரண்யகம் என்று 10 உபநிடதங்கள் முதன்மை பெற்றவை இவை அனைத்துக்குமே உரை செய்தவர் ஸ்ரீ ஆதி சங்கரராவார்.

நசிகேதனின் தந்தை வாஜசிரவஸ் ” விசுவஜித் ” என்ற யாகத்தைச் செய்தார்.

இந்த யாகத்தை நடத்திக்கொடுக்க பல முனிவர்களும் அந்தணர்களும் வந்திருந்தனர்.

விசுவஜித் யாகம் – இவ்வுலகையே ஆளும் பேரரசன் ஆக விருப்பம் கொண்டவர்கள்

மேலும்

சொர்க்கத்திற்கு சென்று அங்குள்ள சக்திகளை பெற ஆசைப்படுபவர்கள் செய்யும் யாகம் ஆகும்.

இந்த யாகத்தினை செய்பவர் தன்னிடம் உள்ள தனக்கு சொந்தமான பொருட்களை யாகத்தில் அக்னியில் இட்டும், தானமாக கொடுத்தும் –

இறுதியில், தனக்கென்று எதுவுமே இல்லை எனும் பட்சத்தில் அவரது தேவை பூர்த்தியாக்கப்படும்.

உலகை ஆளும் பேரரசனுக்கு யாரும் எதுவும் இல்லை என்ற சூழலில் அவன் நல்ல ஆட்சியையும்,

மக்களுக்காக உழைக்கும் எண்ணமும் இருக்கும் அல்லவா ஆதலால் தான் இந்த யாகத்தை நிகழ்த்தி இருப்பார்கள் போல…

மேலும் சொர்க்கம் வேண்டும் என எண்ணுபவன் – தனக்கென எதுவும் இல்லை.

உன் பாதங்களில் சரணடைகிறேன் என்ற மனநிலையை ஏற்படுத்த இந்த விசுவஜித் யாகம் மேற்கொண்டனர் போலும்.

அனைத்தையும் துறப்பவனுக்கே அனைத்தும் உரிமையாகிறது – கடவுள் உட்பட,

விசுவஜித் யாகம் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் போதே,

தனது தந்தையிடம் தானத்தின் மகிமை என்ன என கேட்டார் பத்து வயது பாலகன் நசிகேதன்.

தானம் கொடுப்பதன் மூலம் பசியை போக்க முடியும் என்றார். அப்படியானால் பசியென அமைந்த நெறியோடு போராடுகிறோமா!

படைப்பு தொழிலை செய்யும் பிரம்மாவின் செயலுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பது போல ஆகாதா?

என கேட்டான் நசிகேதன்.

அப்படி அர்த்தம் ஆகாது மகனே…. தானம் கொடுப்பதால் நாம் விடுதலையடைகிறோம் அவ்வளவே …

இங்கு நாம் அடைந்த ஒவ்வொரு பொருளும் நம்முள் ஓர் இடத்தை எடுத்துக்கொள்கின்றன.

அப்பொருளை அளிக்கையில் அவ்விடத்தில் அதுவாக ஆன பிரக்ஞை மட்டுமே எஞ்சுகிறது.

கொடுத்து ஒழிந்தவன் பிரக்ஞையால் நிறைகிறான்” என்று நசிகேதனின் தந்தை சொன்னார்.

இன்று நான் செய்யும் வேள்வி மகாபூதம் எனப்படுகிறது.

என் பொருட்கள் அனைத்தையும் இல்லாதவர்களுக்கு அளிப்பேன். என் எண்ணங்கள் அனைத்தையும் இந்த யாகத்தில் எரியும் அக்னியில் இடுவேன்.

எனக்குரிய அனைத்தையும் அளித்தபின் எஞ்சுவதிலிருந்து என்னை அறிவேன் என்றார்.

தந்தையே, உங்களின் மகன் என இருக்கும் என்னை தானம் அளிக்காமல் எப்படி விடுதலை பெறுவீர்கள்?” என்றான் நசிகேதன்.

உன்னை தானமாக அளிக்க முடியாது மகனே – நீ எங்கிருந்தாலும் எனது. மகனாகத்தானே இருப்பாய் அப்படி இருக்கையில் எப்படி சாத்தியம் ஆகும் என்றார் வாஜசிரவஸ்.

இல்லை இறந்த பின் ஆன்மாவுக்கு தாய் தந்தை மகன் மகள் என எந்த உறவும் இல்லை,

உருவமும் இல்லை,

ஆகவே இங்கே பிறந்த அனைவரும் அனைத்தும் இறக்கும்.

இறப்பவர்கள் மறுபடி பிறப்பார்கள்…. ???

ஆகவே நீங்கள் என்னை பற்றி கவலைபடவேண்டாம் ….என்னை யமனுக்கு தானமாக அளியுங்கள்…

இப்படியாக தொடர்ந்து தந்தையை வேண்டினான்.,

தொந்தரவை பொறுக்காது கோபம் கொண்ட வாஜசிரவஸ்.

“சரி உன்னை எமனுக்கு தானமாக தந்தேன் என்று சொல்லி, தனது கமண்டல நீரால் தானமாக கொடுத்தார்”

தன்னிடம் இருந்த வயதான பசுக்கள் உட்பட அனைத்தையும் தானம் செய்து யாகம் இனிதே முடிந்து.

இருந்தும் கோபம் கொண்டு தனது மகனை தானமாக யமனுக்கு தந்ததை ௭ண்ணி வருத்தம் கொண்டார் .. (உதவிக்கு நன்றி – விக்கிபீடியா, அருண் சந்திரசேகரன் … )

( தொடர்கிறது – அடுத்த பகுதியில்….. )

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக