அரசை குத்தகைக்கு எடுத்திருக்கும் அம்பானி பிரதர்ஸ்….


நேற்று படித்தது சின்ன அம்பானிஜி ஜெயில் கதை …
இன்று படிப்பது பெரிய அம்பானிஜியின் ஜியோ புராணம் –

————-
3 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவித்த BSNL ஊழியர்களின் முக்கிய
கோரிக்கை என்ன…? செய்தி என்ன…?

————————————–

கேள்வி – ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக
எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?

அரசாங்கம் தனது சொந்த நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி
அலைக்கற்றையை நாங்கள் மூன்று வருடங்களாகக் கேட்டும்
வழங்கவில்லை. ஆனால் ரிலையன்ஸ் அறிமுகமாகும்போதே 4ஜி
அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்து அறிமுகப்படுத்த 2016 செப்டம்பரிலேயே அனுமதி அளித்தது.

அரசானது எவ்வளவு தூரம் ரிலையன்ஸுக்கு ஆதரவாக இருந்தது என்பதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம். ஜியோ அறிமுகமாகும்போதே பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விளம்பரத்தைப் பயன்படுத்தி தொடங்கினார்கள்.

பிஎஸ்என்எல் அரசாங்கத்துடைய சொந்த நிறுவனம். ஆனால், பாரதப் பிரதமர் எந்த விளம்பரத்தையும் அதற்காகச் செய்ததில்லை. ஜியோ விளம்பரத்துக்கு வந்தார்.

ஜியோ ஆரம்பித்த காலத்தில் இந்தியாவில் ஒரு சட்டம் இருந்தது.

அதாவது தொலைத் தொடர்பைப் பொறுத்தவரை மூன்று மாதங்கள்
இலவசமாகப் பயனாளிகளுக்குக் கொடுக்கலாம் என்பதுதான் அது.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டபோது அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூன்று மாதங்களுக்கு அனைத்தும் இலவசம் என்று அறிவித்தார்கள்.

ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மூலதனம் செய்து இலவசமாக ஜியோவை உருவாக்கி அதன் மூலம் மூன்றே மாதங்களில் சந்தாதாரர்களைத் தங்கள் பக்கம் இழுத்தார்கள். மக்களும் நிறையவே வாங்கினார்கள்.

‘டேட்டா’ 4ஜியாக இருந்ததால் அறிமுகத்திலேயே வேகமாகக் கிடைத்தது. இந்த அறிமுகச் சலுகை முடிந்த பிறகும் ஜனவரி மாதத்தில், ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டுச் சலுகை என்னும் பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவசமாக்கினார்கள். இது இந்தியாவிலிருக்கும் சட்ட விதிகளுக்கு முரணானது. ‘ட்ராய்’ வகுத்த சட்டங்களுக்கும் முரணானது.

கேள்வி – பிஎஸ்என்எல்லுக்கு ஏன் 4ஜி கொடுக்கவில்லை என்று
நினைக்கிறீர்கள்?

பிஎஸ்என்எல்லுக்குக் கொடுத்தால் ரிலையன்ஸ் ஜியோவோடு பிஎஸ்என்எல்லும் போட்டிக்கு வந்துவிடும். போட்டிக்கு வந்தால் ரிலையன்ஸ் ஜியோ விரிவாக்கம் செய்ய கஷ்டப்படும்.

அக்டோபர் 2018இல் ஒரு கோடி இணைப்புகளை ஒரே மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ உயர்த்தியது. அந்த ஒரு கோடி இணைப்புகள் ‘மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி’ அடிப்படையில வோடஃபோன் நிறுவனத்திலிருந்து 76 லட்சம் இணைப்புகள் ஜியோவுக்குப் போனது.

ஏர்டெலிலிருந்து 28 லட்சம் இணைப்புகள். மற்ற நிறுவனங்களிலிருந்து
இன்னும் கொஞ்சம் என்று ஒரு கோடி இணைப்புகள் ஆனது.

அதே அக்டோபர் 2018இல் பிஎஸ்என்எல் ஓர் இணைப்பைக்கூட இழக்கவில்லை. மூன்றரை லட்சம் புதிய இணைப்புகளை பிஎஸ்என்எல் கொடுத்தது. 4ஜி இல்லாத பிஎஸ்என்எல் மற்ற 4ஜி உள்ளவர்களைக் காட்டிலும் அந்த வேளையில் மூன்றரை லட்சம் இணைப்புகளைக் கொடுக்க முடிந்ததனால் எங்களுக்கு 4ஜி வேண்டும் என்று கேட்டோம். அப்போதுதான் நாங்கள் போட்டியில் முன்னேற முடியும் என்றோம்.

ஆனால், அரசாங்கமோ தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடித்த பின்தான் என்று முடிவெடுத்ததால் இன்று வரை 4ஜி கிடைக்கவில்லை.

4ஜி உடனே வேண்டும் என்று இன்றல்ல கடந்த மூன்று வருடங்களாகப்
போராடிவருகிறோம்.

பிப்ரவரி 24, 2018இல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் எங்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தும்போது 4ஜி அலைக்கற்றை உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்.

டிசம்பர் 3ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையிலும் உடனே வழங்கப்படும் என்றார். இன்று வரை அதற்கு எந்த அறிகுறியும் இல்லை. தனியாருக்கு
ஆதரவான அரசின் இந்தப் போக்கை எதிர்த்துத்தான் இந்த வேலைநிறுத்தத்தை நடத்துகிறோம்.

கேள்வி – பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி வாங்குவதற்கான தகுதி இல்லையோ?

4ஜியைப் பொறுத்தவரை உறுதித்தொகை 16,000 கோடி காட்டினால் கொடுத்து விடுகிறார்கள். 3ஜி இருந்தால் அதை வைத்து 4ஜி வழங்கப்படலாம் என்றிருந்தது. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ 16,000 கோடி கட்டி நேரடியாக 4ஜியுடன் சந்தையில் நுழைந்தது.

பிஎஸ்என்எல்லும் கட்டத் தயார் என்றோம். நிறுவனம் நஷ்டத்திலிருந்தது. இது அரசாங்க கம்பெனி என்பதால் 50 சதவிகிதத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் மீதி 8,000 கோடியை 10 தவணைகளில் கட்டுகிறோம் என்றும் பிஎஸ்என்எல் போர்டு தெரிவித்ததற்கு இதுவரை பதிலில்லை.

தனியார் நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்குவது போல பிஎஸ்என்எல் வாங்க முடியாத நிலை உள்ளது.

ரிலையன்ஸ் ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது.

ஏர்டெல் ஒரு லட்சத்து பதிமூன்றாயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது.

வோடாபோன் நிறுவனம் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி வாங்கியுள்ளது.

பிஎஸ்என்எல்லின் கடனோ வெறும் பத்தாயிரம் கோடி ரூபாய். அரசாங்கம்
உத்தரவாதம் அளிக்கும் ‘லெட்டர் ஆஃப் கம்ஃபர்ட்’ கடிதத்தைக்
கொடுக்காததால்தான் கடன் வாங்க முடியவில்லை.

இது ஒருபுறமிருக்க பிஎஸ்என்எல்லுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன.

ஒன்றரை லட்சம் கோடி மதிப்புள்ள இடம் உள்ளது. இந்த இடத்தை ஒரு
வருடத்துக்குப் பத்தாயிரம் கோடி வரை வாடகைக்குக் கொடுத்து அதன் மூலம் பிஎஸ்என்எல் நஷ்டத்திலிருந்து மீளலாம் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அதையும் உரிய முறையில் பயன்படுத்த வழிவகை செய்யாமல் அரசு காலம் தாழ்த்துகிறது.

ஆனால், ஜியோவின் கோரிக்கைகளையெல்லாம் உடனடியாக அரசு
நிறைவேற்றியது. ‘இன்டெர் யூசேஜ் கட்டணம்’ (IUC) என்பது பொதுவான
ஒன்று. இதன்படி ஒரு ஜியோ பயனாளி பிஎஸ்என்எல் பயனாளியைக்
கூப்பிட்டால் அதற்கு ஒரு நிமிடத்துக்கு 14 பைசா கட்ட வேண்டும்

அவர்களோ இலவசமாகப் பயனாளிகளுக்குச் சேவைகளைத்
தந்துகொண்டிருந்ததால் எங்களால் கட்ட முடியாது என்று கோரிக்கை
வைத்தபோது அரசாங்கம் நிமிடத்துக்கு 6 பைசா என்று குறைத்துவிட்டது.

இந்த உத்தரவால் மட்டும் இந்திய அரசுக்கு ஐயாயிரம் கோடி நஷ்டம்
ஏற்பட்டது. அதே வேளையில் ஜியோ நஷ்டத்திலிருந்து லாபத்துக்கு
உயர்ந்துவிட்டது. பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இருக்கிறதென்றால் அதற்கு
அரசாங்கத்தின் கொள்கைகள்தான் காரணம்.

ஆனாலும்கூட 2002இல் மொபைல் சேவையைத் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டபோது இன்கமிங் அழைப்புகள் இலவசம் என்று ஆக்கினோம். ஒரு நிமிடத்துக்கு இன்கமிங் 8 ரூபாய் என்றிருந்ததை பிஎஸ்என்எல்தான் மாற்றியது. இப்போதுகூட தேசிய அளவில் ‘ரோமிங் இலவசம்’ என்று பிஎஸ்என்எல் அறிவித்த பின்தான் மற்றவர்கள் மாறினார்கள்.

நாங்கள் போட்டியில் இருப்பதால்தான் தனியார் நிறுவனங்கள் விலையை ஏற்றாமல் இருக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கு உதவியாகத்தான் இன்றுவரை உள்ளோம்.

கேள்வி – மக்கள் ஏன் பிஎஸ்என்எல் ஊழியர்களின் போராட்டத்தைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்?

பிஎஸ்என்எல் என்பது மக்களின் சொத்து. பிஎஸ்என்எல் போன்ற பொதுத் துறை நிறுவனங்களில் கிடைக்கப்பெறும் வருவாயெல்லாம் இந்திய அரசாங்கத்துக்குப் போகும்.

தனியார் நிறுவனங்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானமோ, லாபமோ தனியார் முதலாளிக்கோ அல்லது கார்ப்பரேட்டுக்கோதான் போகும்.

எல்ஐசி பொதுத் துறை நிறுவனம். அதனுடைய லாபமெல்லாம் அரசாங்கத்துக்குப் போகிறது. பிஎஸ்என்எல்லும் அது போல அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் வருவாய் லாபமாக மாறும்போது இந்திய அரசாங்கத்துக்குப் போகும்.

மக்களிடம் சொல்ல நினைப்பதெல்லாம் ஒன்றுதான் உங்கள் சொத்தைத் தனியாருக்கு விற்கப் பார்க்கிறார்கள். அதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது. பிஎஸ்என்எல் இருந்தால் விலை உயராது. சேவை தொடர்ந்து கிடைக்கும்.

மக்கள் நிச்சயம் யோசிப்பார்கள். யார் அவர்களுக்கு எந்த இடர்பாடுகளுக்கு இடையிலும் சேவை செய்தார்கள்? வெள்ளத்தில், புயலில் ஏன் இன்றைக்கு வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று, ஜம்மு காஷ்மீர் ஊழியர்களை, சமீபத்தில் நடந்த தாக்குதலின் காரணமாக வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்க வேண்டாம் என்று எங்கள் தோழமை ஊழியர்கள் இன்று அங்கே பணியில் இருக்கிறார்கள்.

அது மட்டுமா? மாவோயிஸ்ட் நடமாடும் பகுதி என்றழைக்கப்படும் ‘ரெட் காரிடோர்’ பகுதியில் சேவை அளிக்க அரசாங்கம் இரண்டாயிரம் கோடி ஒதுக்கினார்கள். அப்போது யார் அந்தச் சேவையைத் தருவது என்னும்போது பிஎஸ்என்எல்லிடம்தான் அந்த வேலை ஒப்படைக்கப்பட்டது. தனியாரிடமல்ல!

இன்றைக்கும் கிராமங்கள் முழுக்க தங்கள் சேவைகளை அளித்துவரும் ஒரே நிறுவனம் பிஎஸ்என்எல். அப்படி கிராமத்திலிருந்து நகரம் வரை சேவையளித்து வரும் நிறுவனம் பிஎஸ்என்எல் மட்டும்தான். அதனால் மக்கள் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

( இதைத்தவிர, BSNL ஊழியர்களின் போராட்டத்திற்கு இன்னும் சில
காரணங்களும் இருக்கின்றன… நான் இங்கே பொதுமக்களுக்கு தொடர்பு உள்ள தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்…)

( அடித்தளம் – மின்னம்பலம் செய்திகள் ….)

.
—————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to அரசை குத்தகைக்கு எடுத்திருக்கும் அம்பானி பிரதர்ஸ்….

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! தாங்கள் கூறியுள்ள கிராமத்திலிருந்து நகரம் வரை சேவையளித்து வரும் நிறுவனம் பிஎஸ்என்எல் மட்டும்தான். அதனால் மக்கள் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்… அவ்வாறு கவனத்தில் கொள்ளும் மக்களாக இருந்தால் இலவச இணைப்பு என்றதும் தங்களின் ஆதார் அடையாளத்தையே கொடுக்க அடித்து – பிடித்து ஏறி விழுந்து இருப்பார்களா .. ? என்பதற்கு இன்றுவரை பதில் இல்லை என்பதுதான் நம் மக்களின் நிலை — அவ்வப்போது பொதுத்துறைகளை அரசு தனியார் மயமாக்கும் போது எப்படி இருந்தார்களோ அப்படியே இல்லாமல் இதற்காவது ஏதாவது எதிப்பை காட்டுவார்களா …? ஆனால் ஒரு தனி மனிதனின் ஆசையை கீழே வரும் செய்திகளின் மூலம் அறிய முடிகிறது …: —

    // நான் இந்திய இணைய பிசினஸில் நம்பர் 1 ஆகணும், ஆசைப்படுவது அம்பானி..! //
    Read more at: https://tamil.goodreturns.in/news/2019/01/25/ambani-wants-become-the-biggest-indian-internet-business-man-013266.html

    இந்தசெய்தியில் // இந்தியாவில் போன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 117 கோடி பேராக அதிகரித்திருக்கிறது. ..இந்த எண்ணிக்கைகளில் 28 கோடி பேரை ஜியோ இரண்டே வருடத்தில் வளைத்துப் போட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் இலவச டேட்டா திட்டங்கள் மற்றும் விலை மலிவான டேட்டா திட்டங்கள்….இரண்டே ஆண்டுகளில் 28 கோடி பேரை தன் வசம் இழுக்க முடியுமென்றால் நிச்சயம் அம்பானியால் இந்தியாவின் மொத்த இணைய வெளியையும் ஒரு சர்வாதிகாரி போல ஆள முடியும்” என The Economist பத்திரிகை கணித்திருக்கிறது… // என்பது மட்டுமில்லாது

    அடுத்த களம் ஈ காமெர்ஸ் என்கிற அதாவது இணைய வாயிலாக நாட்டின் ஒவ்வொரு மக்களையும் தனது வாடிக்கையாளராக மாற்றும் மிக முக்கியமான வர்த்தகத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்..

    //முகேஷ் அம்பானி மாஸ்ட் பிளான்.. 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா திட்டம்..! //
    Read more at: https://tamil.goodreturns.in/news/2019/02/09/mukesh-ambanis-master-plan-investing-10000-crore-a-mega-project-013506.html

    மத்திய அரசு இ காமர்ஸ் துறையில் விதித்துள்ள புதிய விதிமுறைகளின் மூலம் அமேசான் மற்றும் வால்மார்ட்-பிளிப்கார்ட் கூட்டணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இவர் புதிய விதிமுறைகளுக்கேற்ப தனது இணையத்தின் மூலம் வியபாரத்தை தொடுங்குவதும் — மக்கள் அனைவருமே இவரது பிடிக்குள் அதாவது பேசுவதிலிருந்து — அன்றாட உபயோகப் பொருட்களை வாங்குவது வரை அடக்கி — The Economist பத்திரிகை கூறியது போல இணைய வெளியையும் — வியாபார சந்தையையும் ஒரு சர்வாதிகாரி போல ஆள முடியும் என்பதுதான் உண்மை … பலே கில்லாடி தான் …. !!!

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அரசாங்க நிறுவனங்கள் அவங்க அவங்க சம்பள உயர்வுக்காக வீதிக்கு வரும்போது எனக்குத் தோன்றும் எண்ணம், முதல்ல தனியார் மாதிரி வேலை பாருங்க என்பதுதான். பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்களை அரசாங்கம் தேவையான முக்கியமான சேவைகளுக்கு மட்டும்தான் உபயோகப்படுத்தவேண்டும். மற்றபடி தனியார் நிறுவனங்களைத்தான் ஊக்கப்படுத்த வேண்டும். அவங்களாலதான் மக்களுக்கு போட்டி போட்டு நன்மை செய்யமுடியும். ஒருத்தன் நல்லா சர்வீஸ் கொடுக்கலைனா இன்னொருவனிடம் மக்கள் செல்வர்.

    நம்மில், ஜியோ சர்வீஸ், ரிலையன்ஸ் மற்ற கம்பெனி ஷேர்ஸ், தனியார் தயாரிக்கும் பொருட்களை உபயோகிக்காதவர்கள்தான் (அதற்கான அரசாங்க அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் சார்பாக சர்வீஸ் இருக்கும்போது) இதனைப் பற்றிக் கவலைப்பட முடியும். அரசாங்க/பொதுத்துறை நிறுவனங்கள் எந்த மாதிரி சர்வீஸ் செய்கின்றன, எவ்வளவு தூரம் நாட்டின் மீது அக்கறை காண்பிக்கின்றன, அவர்களுடைய சம்பளத்துக்குக் காரணமான பொதுமக்கள் மீது எவ்வளவு பணிவாக அவர்கள் செயல்படுகின்றன என்பதையெல்லாம் பொதுமக்கள் அறியமாட்டார்களா? (பிஎஸெனெல் ஜிஎம் மற்றும் தொழிலாளர்கள் தனியார் இடத்துக்கு கேபிள் போட்டது நாட்டிற்கான நன்மையோ? அப்போது இந்தத் தொழிலாளர்கள் எங்கே சென்றிருந்தார்கள்? இப்போது பி.எஸ்.என்.எல் ஐப் பற்றிக் கவலைப்படுவதுபோல் நடிக்கும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள்?

    • Mani's avatar Mani சொல்கிறார்:

      புதியவன்

      மோடிஜி தேர்ந்தெடுக்கப்பட்டது அம்பானி பிரதர்சுக்கும் அடானி சன்ஸுக்கும் பிசினஸ் வளர்த்துக் கொடுக்கத்தான் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் ; உண்மையை நேரடியாகவே ஒத்துக்கொள்கிறீர்களே.
      எப்போதும் மறைமுகமாகத்தானே சொல்வீர்கள் ?

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        மணி-40 ஆண்டு காலமாக அரசியலைக் கவனித்து வருபவன்.

        அம்பானி ரிலையன்ஸ் என்ற கம்பெனி துவக்கியதும், ரிலையன்ஸ் ரீடெயில் என்று சாதாரண மளிகைக்கடைகளுக்கு வேட்டு வைத்ததும் காங்கிரஸ் ஆட்சியில்.

        காங்கிரஸ் எந்த எந்த தொழிலதிபர்களை வளர்த்துவிட்டது, பயன் பெற்றது, அதில் எத்தனை பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். 2ஜியை காங்கிரஸ் எப்படிக் கையாண்டது, யாருக்காக சட்டங்கள் வளைக்கப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியும். ‘நாங்க இருக்கோம் நீங்க கண்ணைக் கெடுத்துக்கிட்டு வாங்க’ என்று சொல்லும் தொழிலதிபர்கள் வளர்ந்தது எந்தக் காலத்தில் என்று உங்களுக்குத் தெரியும். கேபிள் பிஸினெஸில் ஆரம்பித்து பல சேனல்கள், ரேடியோ, விமானம், உணவுத்துறை, அரசு கேபிளை லபக்கியது என்று வளர்ந்த தொழிலதிபர்கள் யார் என்றும் உங்களுக்குத் தெரியும். சாதாரண படகு 2 வைத்திருந்து, கப்பல்கள், மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்கள் என்று வளர்ந்த பாலுக்களை வளர்த்துவிட்டது எந்த அரசாங்கம் என்று உங்களுக்குத் தெரியும். இந்த லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கும்.

        இதையெல்லாம் படிப்பவர்களுக்கு நினைவுபடுத்தவேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்றும் எனக்குப் புரியும்.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          புதியவன்,

          உங்களுக்கு 2 கேள்விகள் –

          1) மோடிஜி ஆட்சியில், அம்பானிகள் அநியாயத்துக்கு சலுகைகள் பெற்றார்கள் என்பதை நீங்கள்
          ஏற்கிறீர்களா – இல்லையா…? ( உடனே காங்கிரஸ் ஆட்சியிலும் பெற்றார்களே என்று வளைக்காதீர்கள்..)
          மோடிஜி ஆட்சியில் நடக்கிறதா – இல்லையா…. Please be Plain.

          2) உங்கள் வீட்டுப்பிள்ளை சரியாக வளரவில்லை என்றால் – எக்கேடும் கெட்டுப்போ என்று அவன் தலையில்
          தண்ணீர் தெளித்து விட்டு, எவன் வீட்டுப்பிள்ளையையாவது தத்தெடுத்து வளர்ப்பீர்களா..?
          பிள்ளையை சரியான வழிக்கு கொண்டு வர வேண்டியது உங்கள் கடமை இல்லையா…?

          3) அரசு ஊழியர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதை சரி செய்ய துப்பில்லாதவர்கள் ஏன்
          நிர்வாகத்திற்கு வர வேண்டும்…? சீர் கெட்டு, பாழடைந்து கிடைக்கும் அரசு இயந்திரத்தை சரிசெய்வதாகச்
          சொல்லித்தானே ஓட்டு கேட்டு பதவிக்கு வந்தார்கள்…?

          ஆடத்தெரியாதவர்கள், மேடை கோணல் என்று சொல்வது போலத்தானே இருக்கும் இதெல்லாம்…

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

          • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

            1. தொழிலதிபர்கள் பாஜக ஆட்சியில் ஏராளமான சலுகைகளைப் பெறுகிறார்கள். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

            2. அரசுத் துறை என் வீட்டுப் பிள்ளை இல்லை. அவர்கள் மக்களுக்காக எங்கு எங்கு சேவை தேவைப்படுகிறதோ அங்கு சேவை செய்வதற்காக வேலைக்கு அரசாங்கம் வேலைக்கு வைத்திருக்கிறது. இவர்கள் பணி நிச்சயம், பென்ஷன் நிச்சயம், இருக்கும் காலத்தில் சேவை செய்யத் தேவையில்லை என்று இருப்பதால்தான் தனியார்கள் வளர்கின்றனர். அவர்கள் குழந்தைகள் அல்லர். குச்சியை வைத்து எப்போப் பார்த்தாலும் மிரட்டிக்கொண்டிருப்பதற்கு. அரசு நடக்கவேண்டும், மக்களுக்குச் சேவை தொடர்ந்து செயல்படணும். இன்றைய இந்த நிலைக்குக் காரணம் அரசு ஊழியர்கள்தான். அரசாங்கத்தைக் குறை சொல்வது அர்த்தமற்றது.

            இன்றைய அரசு ஊழியர்கள் நடத்தைதான், அரசுப் பணிகள் (அரசு வேலை) மிகவும் குறைந்து வருவதற்கும், தனியார் பெருகி வளர்வதற்கும் காரணம். அரசு இயந்திரத்தைச் சீர் செய்ய பலப் பல தலைமுறைகள் ஆகும். கஸ்டமர்களாகிய நம்மிடம் இந்த அரசுப் பணியாளர்கள் எவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார்கள், சாதாரண வேலைக்கு எப்படி அலைக்கழிக்கிறார்கள், பணத்தைப் பிடுங்குகிறார்கள், அரசாங்கத்தையே சங்கம் வைத்து போராட்டம் நடத்தி மிரட்டுகிறார்கள் என்பதை அறிந்த நாம் ஏன் அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும்?

          • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

            புதியவன்,

            கேள்வி 1 – வழக்கம் போல், சுற்றிவளைத்து மழுப்புகிறீர்கள்.
            நேரடியான yes or no பதில் இல்லை.

            நான் கேட்டது –
            -மோடிஜி ஆட்சியில், அம்பானிகள் அநியாயத்துக்கு சலுகைகள் பெற்றார்கள் என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா – இல்லையா…?

            நீங்கள் மழுப்புவது – தொழிலதிபர்கள் பாஜக ஆட்சியில் ஏராளமான சலுகைகளைப் பெறுகிறார்கள். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

            கேள்வி -2 – பிள்ளையை சரியான வழிக்கு கொண்டு வர வேண்டியது உங்கள் கடமை இல்லையா…?

            உங்கள் பதில் – “அரசுத் துறை என் வீட்டுப் பிள்ளை இல்லை.”

            சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இது அரசுத்துறையாகத் தான் செயல்பட்டு வந்திருக்கிறது. தைரியம் இருந்தால் – அரசாங்கத்தின் கொள்கை
            முடிவாக அறிவியுங்கள்… BSNL-ஐ படிப்படியாக மூடிவிட்டு, தனியார்
            தொலைபேசியை ஆதரிப்பது தான் இந்த அரசின் கொள்கை என்று.

            ——————————-

            அரசுத்துறையே சரியில்லை என்கிற உங்கள் வாதத்தை தொடர்ந்து கொண்டு போவதானால் –

            நாளைக்கு LIC-யையும் மூடி விடுவீர்களா…?
            தபால் துறையை…?
            ரெயில்வேயை…?
            ஏன் கொலை கொள்ளை அதிகரித்து விட்டது என்று போலீஸ் துறையையும்…?
            தீவிரவாதிகளை கட்டுப்படுத்த தெரியவில்லை என்று ராணுவத்தையும்..?

            எங்கே போய் நிற்கும் உங்கள் வாதம்…?

            40 ஆண்டுகள் மத்திய அரசின் பல நிர்வாகங்களின் கீழ், பல ஊர்களில்
            வேலை பார்த்த சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்…

            “தலை சரியாக இருந்தால்… எல்லாம் சரியாக இயங்கும்…”

            ——————————-

            முக்கியமாக -இது ஜனநாயக நாடு. இப்படியெல்லாம் அரசுத்துறையை
            மூடிவதாக இருந்தால் – அதை கொள்கை முடிவாக அறிவித்து விட்டு,
            பின் செயல்பட வேண்டும்.

            .

            -வாழ்த்துகளுடன்,
            காவிரிமைந்தன்

  3. Mani's avatar Mani சொல்கிறார்:

    புதியவன்

    ஒழுங்காக வேலை வாங்க வக்கில்லாத நிர்வாகவத்திற்கு, மக்களுக்காக உழைப்போம் என்று சொல்லி பதவிக்கு வந்து விட்டு, தொழிலதிபர்களுக்காக உழைக்கும் நேர்மையற்ற அரசியல்வாதிகளுக்கு நாம் ஏன் ஆதரவாக இருக்க வேண்டும் ?

    • Manivannan's avatar Manivannan சொல்கிறார்:

      திரு. புதியவன் அவர்கள் காவிரி மைந்தன் கேட்ட கேள்விகளுக்கு உறுதியாக பதில்களை கொடுக்க மாட்டார். இது உண்மை. பிஜிபி அரசுக்கு உண்மையில் திறணி இருந்தால் எல்லைகாவல் படை & இராணுவத்தை தனியார் மாயம் ஆக்கும் என்று கொள்கை முடீவு எடுக்க திரு புதியவன் சிபாரிசு செய்யட்டுமே. திரு புதியவன் ஐயா இதை நான் சொன்னதால் , பிஜேபியால் அடியேனுக்கும் அடியேனை சார்ந்தோருக்கும் எந்த உயிர் சேதமும் ஆகாமல் இருக்க எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டி கொள்கிறேன். வணக்கம் .

    • அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

      கே.எம்.சார்,

      அழுத்தந்திருத்தமாக வாதங்களை முன்வைக்கிறீர்கள்;

      //அரசுத்துறையே சரியில்லை என்கிற உங்கள் வாதத்தை தொடர்ந்து கொண்டு போவதானால் –

      நாளைக்கு LIC-யையும் மூடி விடுவீர்களா…?
      தபால் துறையை…?
      ரெயில்வேயை…?
      ஏன் கொலை கொள்ளை அதிகரித்து விட்டது என்று போலீஸ் துறையையும்…?
      தீவிரவாதிகளை கட்டுப்படுத்த தெரியவில்லை என்று ராணுவத்தையும்..?

      எங்கே போய் நிற்கும் உங்கள் வாதம்…?

      40 ஆண்டுகள் மத்திய அரசின் பல நிர்வாகங்களின் கீழ், பல ஊர்களில்
      வேலை பார்த்த சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்…

      “தலை சரியாக இருந்தால்… எல்லாம் சரியாக இயங்கும்…”

      ——————————-

      முக்கியமாக -இது ஜனநாயக நாடு. இப்படியெல்லாம் அரசுத்துறையை
      மூடிவதாக இருந்தால் – அதை கொள்கை முடிவாக அறிவித்து விட்டு,
      பின் செயல்பட வேண்டும். //

      ஒரு வலைத்தளத்தில் இவ்வளவு கருத்தாழமுள்ள, வலுவான, வாத-விவாதங்கள் நடப்பது அபூர்வம். வாழ்த்துகள்.

  4. Mani's avatar Mani சொல்கிறார்:

    //அவர்கள் குழந்தைகள் அல்லர். குச்சியை வைத்து எப்போப் பார்த்தாலும் மிரட்டிக்கொண்டிருப்பதற்கு. //
    உங்களுக்கு மேலேயுள்ள நிர்வாகம் சரியில்லையென்றால் நீங்களும் இது மாதிரி தான் இருப்பீர்கள்.

  5. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    புதியவன்

    முகேஷ் அம்பானியின் ஜியோவுக்கு 4ஜி கொடுத்த அரசு, BSNL -க்கு அவர்கள் இவ்வளவு தூரம் வலியுறுத்திக் கேட்டும் கொடுக்கதது ஏன் ?
    அம்பானியின் ஜியோவுக்கு போட்டி இருக்கக்கூடாது என்று தானே ?
    இதற்கு அரசு என்ன காரணம் சொல்லப்போகிறது ? நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      அரவிந்தன் – This is a valid point. அதானி, அம்பானி இருவரும் (அப்புறம் அனில் அம்பானியும்தான்…. இன்னும் பெயர் தெரியாத தொழிலதிபர்கள்) அநியாயத்துக்கு அரசிடம் சலுகை பெறுகிறார்கள். இது வெறும் தேர்தல் நிதியாக மட்டும் இருக்காது. இன்னொன்று, ரிலையன்ஸ் விளம்பரங்களில் மோடி அவர்களின் படத்தைப் போட்டு விளம்பரம் பண்ணியது சகிக்க முடியாததாக இருந்தது.

      ஆனாலும் அரசு ஊழியர்களைப் பற்றிய என் கண்ணோட்டம் மாறவில்லை. எதை எடுத்தாலும் லஞ்சம், சம்பளம் என்பது அவர்கள் உரிமை என்று அரசு ஊழியர்கள் செயல்படுவது பொதுமக்களைக் கடுமையாகப் பாதிப்பதனால் அவர்கள் போராட்டங்களுக்கு என்றுமே பொதுமக்கள் துணையிருக்க மாட்டார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.