…………………………………….

……………………………………………………
மகாராஷ்டிராவின் புனே நகரத்திற்கு அருகே தேகு எனும் ஊரில் 1598ல் பிறந்தவர் சாது துக்காராம்….. நாமதேவரின் மறு அவதாரமாக கருதப்படுபவர், பாண்டுரங்க விட்டலரின் தீவிரபக்தர்.
துக்காராம் மராத்தியைத் தவிர வேறு மொழி தெரியாதவர், படிக்காதவர். பரிபூர்ண பக்தியோடு உள்ள பாண்டுரங்கனின் விட்டல ஸ்மரணம் செய்பவர், பாடல்கள் இயற்றி பாடுவார்.
மராட்டிய மாமன்னர் சிவாஜி காலத்தில் வாழ்ந்தவர். பேரரசர் சிவாஜி இவர் சீடர்களில் ஒருவர். கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர், வரம்பில்லா ஆற்றல் உடையவர் என்பதை போதித்தார்.
தந்தை செய்த தானிய வியாபாரம் செய்தார். இசை ஞானமும் பக்தி ஞானமும் அவரின் இரு கண்களாக இருந்தது. அவரது பெற்றோர்கள் இறந்தவுடன் துக்காராம் தானிய வியாபாரம் செய்தார். செல்வம் நிறைய சேர்ந்தது..
எதிர்பாராமல் இவரது ஊரில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பஞ்சத்தில் இருந்ததால் தனது செல்வத்தையும் தானியங்களையும் தானமாக கொடுக்க ஆரம்பித்தார்.
துக்காராமின் குடும்பத்தில் வறுமை தலை தூக்க ஆரம்பித்தது. இந்த நிலையிலும் பாண்டுரங்கனின் மீது பக்தி செய்வது மட்டும் குறையவே இல்லை.
அவர் மனைவி கமலாபாய் தனவந்தர் ஒருவரிடம் கொஞ்சம் பணத்தைக் கடனுக்கு வாங்கி, அந்தப் பணத்தில் தானியங்களை வாங்கி, லாபத்துக்கு விற்றுவரும்படி கணவரிடம் சொன்னார். மறுக்காமல் புறப்பட்டார் துக்காராம் மகராஜ்.
அடர்ந்த காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கவே, தானிய மூட்டைகளுடன் குதிரைகளை ஓர் அடர்ந்த மரத்தின் கீழ் நிறுத்திவிட்டு, மரத்தின் மீது ஏறி அமர்ந்து பாண்டுரங்கனை எண்ணி தியானம் புரியத் தொடங்கினார்.
தியானம் கலைந்து விழித்தபோது, மழைவிட்டுப் போயிருந்தது. குதிரைகள் எங்கோ ஓடிப்போய்விட்டிருக்க, தானிய மூட்டைகள் மண்ணில் சிதறி, மழைநீரில் ஊறி பாழாய்ப் போயிருந்தன சிதறிக் கிடந்தவற்றைப் பார்த்து, பதறிப் போனார் துக்காராம் மகராஜ்.
வீடு திரும்ப மனம் இல்லாதவராக மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்தார்,
பக்தன் துக்காராமின் நிலை உணர்ந்த பண்டரிநாதன், தானே அவராக மாறினான்.
பெரும் செல்வத்தோடு துக்காராமின் வீடு சென்றான். பொருள் அனைத்தையும் துக்காராமின் மனைவியிடம் தந்துவிட்டு, ‘‘நீராடி வருகிறேன்’’ என்று புறப்பட்டான் புருஷோத்தமன்… அப்படியே மறைந்தான்.
திரும்ப தியானம் கலைந்த துக்காராம் வீட்டிற்கு வந்து தானியங்கள் வீணானதை சொன்னவுடன் அவரின் மனைவி விஷயத்தைக் கூறி ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள் என கேட்க நடந்த முழு உண்மையும் கூறினார்….
பண்டரிநாதனே வந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
வீடு தேடி வந்திருப்பது, பொருள் மட்டுமல்ல, புருஷோத்தமனின் அருளும் என்பது புரிந்தது.
தாமோதரன் தந்த செல்வத்தையும் தானமாகவே தந்து தீர்த்தார் துக்காராம் மகராஜ்.
பொருள் தேடவேண்டிய அவசியம் விரைவிலேயே வந்ததால், புன்செய் நிலம் ஒன்றினை காவல் காத்திடப் போனார் துக்காராம்.
பயிர் முற்றி காத்திட வேண்டியிருந்த நிலையில், பக்தி முற்றிப் போயிருந்த துக்காராம், பண்டரிநாதன் நினைவில் மூழ்கிப் போனார். பறவைக் கூட்டம் வந்து பயிரைக் கொத்தித் தின்றன. விரட்டாமல் இருந்த துக்காராமை வியப்போடு பார்த்தபடி அவர் அருகே வந்து அமர்ந்தன.
நிலத்தின் சொந்தக்காரர் பயிரின் நிலை கண்டு பதறிப்போனார். அறுவடையில் தானியம் குறையும் அளவுக்கு, உமக்கு ஊதியம் குறையும் என்று துக்காராமிடம் கூறிப் போனார்.
‘எல்லாம் பாண்டுரங்கன் செயல்’ என்று மீண்டும் அவன் மீது பாடி அவன் அருள் நாடினார் துக்காராம்.
அறுவடை செய்யப்பட்டபோது, தானியம் குறைவதற்குப் பதிலாக, கூடியிருந்தது. மகிழ்ந்த நிலச் சொந்தக்காரர், துக்காராமிடம் மன்னிப்புக் கேட்டார். சொன்னதைவிட அதிகமாகவே கூலியினைக் கொடுத்தார்.
கூலியாகப் பெற்ற தானியத்தில் பாதியை மற்றவர்க்குத் தந்துவிட்டு, மீதியோடு வீடு திரும்பினார் துக்காராம் மகராஜ்.
பாண்டுரங்கனின் மேல் துக்காராம் பாடிய பாடல்கள் அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
துக்காராம் மகராஜ், பாண்டுரங்கன் கோயிலில் பாடல்கள் பாடுவதை தன் முழுநேரப் பணியாகக் கொண்டார்.
கோயிலில் பக்தர் கூட்டம் பெருகியது. பலரும் இவருடைய சீடர்களாக மாறினர்.
சிலர் அவர் மீது பொறாமையும் கொண்டனர். அதில் ராமேஸ்வரபட் என்பவர், துக்காராம்…. நீ பிறப்பால் தாழ்ந்தவன்…! அதனால், நீ பாடும் பாடல்களை பாண்டுரங்கன் ஏற்றுக் கொள்ளமாட்டான். நீ எழுதிய பாடல்களை இந்திராயணி ஆற்றில் நானே எறிந்து விடுகிறேன் என்று சொல்லி ஆற்றில் தூக்கி எறிந்தார்.
துக்காராம் மகராஜ் பாண்டுரங்கனை எண்ணி தியானத்தில் மூழ்கினார். நதிதேவதை மூலம் மீண்டும் பாடல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன.
இந்நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு துன்பம் செய்த ராமேஸ்வரபட்டும் கூட துக்காராமின் சீடராக மாறினார்.
மராட்டிய மாமன்னர் சிவாஜி துக்காராமின் பாடல்களை கேட்க ஆசைகொண்டு மக்களோடு மக்களாக இருந்து பாடல்களை கேட்க மாறுவேடத்தில் வந்தார்.
சிவாஜி மாறுவேடத்தில் பாடல்களை கேட்க வருவதை அறிந்த முகலாய வீரர்கள், அங்கேயே அவரை கொலை செய்ய முடிவு செய்தனர்.
பகைவரின் சூழ்ச்சி அறியாதவனாக துக்காராமின் பாடல்களைக் கேட்டு பரவசத்தில் ஆழ்ந்திருந்தார் சிவாஜி. ஆனால் எதிரிகள் சத்ரபதி சிவாஜியை நெருங்குவது, பாண்டுரங்கன் மகிமையால், துக்காராம் மகராஜ்க்குத் தெரியவந்தது.
பாடல்களைப் பாடியபடியே, மன்னனைக் காக்கும்படி மனதுக்குள் பாண்டுரெங்கனிடம் வேண்டினார்.
அரசன் உருவில் தோன்றிய அரங்கன் குதிரை மீதேறிச் செல்ல, அவனே உண்மையான அரசன் என நினைத்து, அவனைத் துரத்திக்கொண்டு போனார்கள் விரோதிகள்.
அது பாடல்கள் கேட்க கூடியிருந்த மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் பேசுவதை கவனித்த மாமன்னர் சத்திரபதி சிவாஜி அங்கே நடந்ததை யூகித்தார்.
கணவர் துக்காரம், கடவுள் மீதுள்ள பக்தியால் பொறுப்பற்று இருப்பது கண்டு கலங்கினாள் கமலாபாய். தனது கணவர் இப்படி ஆக்கிவிட்டாரே என்று, பாண்டுரங்கனை திட்டினாள்.
பாண்டுரங்கன் திருமகளின் வடிவான ருக்மிணியை, துக்காராமின் வீட்டுக்கு ஏழைப் பெண்ணாக அனுப்பினார்.
அவள்மீது இரக்கப்பட்ட துக்காராம் மகராஜ், தன் மனைவியின் புடைவையை அவளுக்குத் தந்தார். கணவரின் செயலால் கோபம் கொண்ட கமலாபாய், அந்த ஏழைப் பெண்ணைத் துரத்திப் போனாள்.
கமலாபாயின் பிடியில் சிக்காது ஓடிய அவள், பாண்டுரங்கன் கோயிலுக்குள் ஓடி மறைந்தாள். கோவிலின் உள்ளே புன்னகையுடன் ருக்மணியே கமலாபாயின் புடவையைக் கட்டிக் கொண்டு காட்சி அளித்தாள்.
ஓடிவந்து துக்காராமின் பாதங்களில் விழுந்து கதறி அழுதாள் கமலா.
திருமகளே தன்னைத் திருத்த வந்ததை உணர்ந்தாள்
திருமகள் பலவிதமான ஆடை, ஆபரணங்களை கமலாபாய்க்கு கொடுத்து அருள்புரிந்தாள்.
கமலாபாய், தன் கணவர் செய்து வந்த பாண்டுரங்கன் சேவையில் தானும் பாதி பங்கெடுத்துக்கொண்டாள்.
தம்பதியர் இருவரும் தன்மீது பக்தி செலுத்தத் தொடங்கியதும் அவர்கள் வீட்டுப் பொறுப்பை, தானே எடுத்துக்கொள்ள முடிவு செய்தான் பாண்டுரங்கன்.
தினம் ஓர் உருவில் வந்து உணவளித்து, தானும் அவர்களோடு உண்டான்.
பின்னர் பாண்டுரங்கன் உருவமே இல்லாமல் வந்து உணவருந்த ஆரம்பித்தான். பாண்டுரங்கனே வந்து பந்தியில் அமர்கிறான் என்பது பக்த துக்காராமுக்குப் புரிந்தது. அது மெல்ல மெல்ல பிற பக்தர்களுக்கும் தெரியவந்தது.
எங்கு சென்றாலும் யார் என்ன உணவளித்தாலும் துக்காராம் தனக்கு அருகே ஒரு மற்றொரு இலை போடுங்கள் என்பார்
“யாருக்கு?” “என கேட்பவர்களுக்கு பாண்டுரங்கனுக்குத்தான்” என்பார் .
எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன் அந்த ஆளில்லாத இலையும் காலியாகத்தான் இருக்கும் …..விட்டலன் அரூபமாக (மற்றவர் கண்ணுக்கு) அமர்ந்து சாப்பிடுவான்.
விட்டலன் அவரிடம் அலாதி அன்பு கொண்டவன். அவரோடு பேசுவான் சாப்பிடுவான். உற்ற நண்பர்கள் இவ்வாறு தானே இருப்பார்கள்…. !!!
தேஹு என்ற அந்த கிராமத்து பிராமணர்கள் துக்காராமை எதிரியாகவே பார்த்தனர்.
சின்ச்வாட் என்ற ஊரில் சிந்தாமணி தேவ் எனும் விநாயக உபாசகர் இருந்தார். மற்ற பிராமணர்களும், சிந்தாமணி தேவ்வும் சேர்ந்து துக்காராமை அழைத்து அவமானப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் செய்து விநாயகரின் கோவிலுக்கு துக்காராமை சாப்பிட அழைத்தனர்.
வரிசையாக எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தபோது துக்காராம் அருகே ஒரு காலி இலை போட்டார்கள். துக்காராமோ “எனக்கு இந்தப்பக்கமும் ஒரு இலை போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
“ஏன் விட்டலன் ரெண்டு பக்கமும் உட்கார்ந்து உங்களோடு சாப்பிடப்போகிராரோ?” பிராமணர்கள் அவரைக் கேலியாக கேட்டார்கள்
“இல்லை” எப்போதும் போல் விட்டலன் இடப்பக்கம் அமர்வார். உங்கள் ஊர் வினாயகர் வந்து வலப்பக்கம் அமர்வார்” என்றார்
உடனே அனைவரும்சிரித்தார்கள்.
அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே இரண்டு இலையில் உள்ள அன்னமும் குறைய ஆரம்பித்தது விநாயகனும், விட்டலனுடன் சேர்ந்து துக்காராமுடன் சமாராதனையில் சாப்பிட்டனர்.
துக்காராம் மகராஜ் சாப்பிட்டு முடித்தபோது அவருக்கு இரண்டு பக்க இலைகளும் சாப்பிடப்பட்டு காலியாக இருந்ததைப் பார்த்த பிராமணர்களும், சிந்தாமணி தேவும் வெட்கிப்போய் துக்காராம் மகராஜ் காலில் விழுந்தனர்.
அன்றிலிருந்து சிந்தாமணி தேவ் தீவிர துக்காராம் மகராஜ் சிஷ்யர்களில் ஒருவரானர்.
துக்காராம் எப்பொழுதும்போல் தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் வந்து அவரை நமஸ்கரித்தார். கீர்த்தனம் முடிந்தபிறகு துக்காராமை தனிமையில் தரிசனம் செய்தார். எனக்கும் தங்களைப் போல ஞான வைராக்கியத்துடன் கூடிய பக்தி வேண்டும், தாங்கள் அருள் செய்ய வேண்டும் என்று மன்றாடினார். .
துக்காரமும் புன்முறுவலுடன் அவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தனுப்பினார். பழத்தைப் பெற்றவருக்கு ஏமாற்றம். நாம் ஞானபக்தியை வைராக்கியத்தைக் கேட்டால், இவர் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாரே என்று வருந்தினார்.
அந்த ஏமாற்றமும் வருத்தமும் எல்லாம் சேர்ந்து வெறுப்பாக மாறியது. வீதியில் அப்பொழுது, ஓர் ஏழை தெருவிலிருக்கும் குப்பைகளைக் கூட்டிக்கொண்டிருந்தார். அதுதான் அவருடைய வேலை. வெறுப்பில் அந்த வாழைப் பழத்தை அவரிடம் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் அவர் மகா பக்தராகிவிட்டார். சாங்கேவர்மன் என்பது அவருடைய பெயர். குருவின் பெருமைகளைப் பாடிய அவருடைய குருத்யாயி என்ற பாடலை பக்தர்கள் இன்றும் பாடிக்கொண்டிருப்பதே இதற்கு சாட்சி.
துக்காராம் மகராஜ் தன்னுள் ஐக்கியமாக்கி கொள்ள விரும்பிய அந்த “பரந்தாமன்’ ஒரு இரவு துக்காராம் உறங்கும் போது அவரின் கனவில் தோன்றி, துக்காராமின் பக்திக்கு தாம் தரும் வரமாக வருகிற “ஏகாதசி” தினத்தன்று “தேஹு” எனும் இடத்தில் துக்காராம் தனது “மனித சரீரத்தோடு” வைகுண்டம் வர தன்னுடைய “கருட வாகனத்தை” தாம் அனுப்புவதாகவும், அதில் ஏறி துக்காராம் தன் வைகுண்டலோகத்தை அடையுமாறு கூறி மறைந்தார்.
இக்கனவைக் கண்டு மிகவும் மகிழ்ந்து தூக்கத்திலிருந்து எழுந்த துக்காராம் மகராஜ் தன் மனைவி ஜிஜியாவிடம் இக்கனவைப் பற்றி கூறினார்.
அதற்கு ஜிஜியா துக்காராம் மகராஜ் தன்னை சிரிக்க வைக்க இவ்வாறெல்லாம் அவர் கூறுவதாக கூறி மீண்டும் உறங்கினார்.
சில நாட்களில் அந்த ஏகாதசி நாளும் வந்தது பெருமாள் தன்னிடம் கூறியது போலவே அந்த தேஹு எனும் இடத்திற்கு வந்தார். ஊர்மக்கள் எல்லோரும் அங்கு கூடியிருந்தனர் அப்போது வானிலிருந்து மஹாவிஷ்ணுவின் கருட வாகனம் கீழே வந்து இறங்கியது.
அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரையும் வணங்கி, விஷ்ணுவை புகழ்ந்து கீர்த்தனைகளை பாடியவாறே அந்த கருட வாகனத்தில் ஏறி அமர்ந்தார் துக்காராம் மகராஜ்.
அப்போது வெளியே எங்கோ சென்றிருந்த அவரின் மனைவியான ஜிஜியாவிடம் யாரோ ஒருவர் இவ்விஷயத்தைப்பற்றி கூற, அன்று இரவு தன் கணவர் கூறியது உண்மைதான் என உணர்ந்து, அவரை வைகுண்டம் செல்ல விடாமல் தடுக்க வேகமாக ஓடோடி வந்தார். ஆனால் அவர் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் பார்த்திருக்க – அந்த கருட வாகனத்தில் விண்ணுலகம் சென்று மறைந்தார் துக்காராம் மகராஜ்.
இன்றும் துக்காராம் பாடல்கள் மக்கள் மனதில் பக்தியை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.
………………………………………………………………………………………………………………………………………………..



ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த பக்தர்கள் அனைவரும் பல்வேறு குலத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால் பக்தி என்ற ஒரு குலத்தில் இருந்தவர்கள். இவர்கள் எல்லோரும் வாழ்ந்து மறைந்தது 300-400 ஆண்டுகளுக்கு முன்புதான்.
தற்போதும் பல்வேறு அதிசயங்கள் நடக்கின்றன.
ஆனால் என்ன…. பெரும்பாலானவர்கள் அதிலிருந்து பாடம் கற்க மறந்துவிடுகிறார்கள்….