திமுக சொல்வது போல் – விஜய் ஆட்சியில் கோடிக்கணக்கில் முதலீடுகள் இழப்பா….??? நிஜ நிலவரம் என்ன….???

………………………………………

……………………………………….

தவெக ஆட்சிக்கு வந்தவுடன் பல ஆயிரம் கோடி முதலீடுகளை தமிழகம் இழந்து விட்டது எனும் குற்றச்சாட்டை தொடர்ச்சியாக முன்வைக்கிறது திமுக. விஜய் ஆட்சிக்கு எதிராக ஒரு நேரெட்டிவை செட் செய்ய முதல் நாளில் இருந்தே உழைக்க தொடங்கி விட்டனர்.

திமுகவின் எதிரிகளின் மீது எப்படி நேரேட்டிவ் செட் செய்யப்படுகிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு உதாரணம்…. பாஜகவுக்கு எதிராகவும் இப்படி தான் ஒவ்வொரு குற்றச்சாட்டாக செட் செய்யப்பட்டது. இன்று அதே ஆயுதத்தை விஜய்க்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். அனைத்துமே பொய்கள் மட்டும் தான்.

விஜய் ஆட்சியில் பல ஆயிரம் கோடி முதலீடுகளை தமிழகம் இழந்து விட்டது என்பதை இனி திமுக மேடைகளில் பேசி பேசி அதனை உண்மையாக்குவார்கள்.

உண்மை ஆடி அசைந்து வருவதற்குள் பொய் ஊரை சுற்றி வந்துவிடும் என்பது எவ்வளவு உண்மை. ஒரு பொய்யை எளிதாக கொண்டு சேர்த்து விடுகிறார்கள். ஆனால் அது பொய் என்பதையும் உண்மை என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ளவும், மக்களிடம் சேர்க்கவும் உழைக்க வேண்டியிருக்கிறது.

இந்த உண்மையை சொல்வதால் நான் விஜய் கட்சிக்கு ஆதரவு என்று கருத வேண்டிய அவசியமில்லை.

விஜய் ஆட்சிக்கு எதிராக உண்மையான குற்றச்சாட்டுகளை வைத்து அரசியல் செய்யலாம்.

ஆனால் பொய்யான, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை வைப்பது நியாயமில்லை. அது ஒருவகையில் விஜய்க்கு தான் வலு சேர்க்கும் என்பது என்னுடைய கருத்து.

அதுவும் திமுகவின் பொய்களை தோலுரிக்காமல் அவர்களுக்கு துணை போவதை விடவும் அவமானம் வேறெதுவும் இல்லை என்பதால் தான் இந்த உண்மைகளை தேடி கண்டறிந்து ஆதாரங்களுடன் வெளியிடுகிறேன்.

முதலில் ஹிந்து வெளியிட்ட செய்தி. “தமிழகத்தில் இருந்தே வெளியேற்றப்பட்ட” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது.

மாஸேகான் கப்பல் கட்டும் நிறுவனம் சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் தமிழகத்தில் 30 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் அந்த முதலீடு தற்போது ஆந்திராவுக்கு சென்று விட்டது தான் ஹிந்து பத்திரிகை கட்டுரையின் சாராம்சம். ஆனா அந்த முதலீடு ஏன் ஆந்திராவிற்கு சென்றது என்ற விபரமும் அந்த கட்டுரையிலேயே இருக்கிறது. ஆனால் தலைப்பு வழக்கம் போல் திமுக விசுவாசத்திற்காக வைத்திருக்கிறார்கள்.

உண்மை என்ன …???

மாஸேகான் நிறுவனத்துடன் MOU கையெழுத்தானதற்கு பிறகு, சர்வேதச நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்துடன் MOU கையெழுத்திடுகிறது தமிழக அரசு. (திமுக அரசு தான்….!!!)

மாஸேகான் நிறுவனத்தை விடவும் அதிக முதலீடு என்பதால் ஹூண்டாய் நிறுவனத்துடன் EBCA எனும் முறையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

EBCA என்றால் என்ன? Exclusive Business Cooperation Agreement (EBCA), குறிப்பிட்ட நிறுவனத்திற்கு என்று கூடுதல் சலுகைகளை தருவது தான் இந்த ஒப்பந்தத்தின் வழிமுறை.

MDL நிறுவனத்தை தாண்டி ஹூண்டாய் நிறுவனத்திற்கு முன்னுரிமை கொடுத்தது தமிழக அரசு. இதனையடுத்து தான் MDL நிறுவனம் ஆந்திராவிற்கு சென்றது.ஆந்திராவுடன் EBCA ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

இவையனைத்தும் நடந்தது திமுக ஆட்சியில் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் நிறுவனமான MDL ஐ விடவும் சர்வதேச நிறுவனம் மற்றும் அதிக முதலீட்டுக்காக ஹூண்டாய் நிறுவனத்திற்கு முன்னுரிமை அளித்ததால் MDL நிறுவனம் ஆந்திராவை தேர்ந்தெடுத்துக்கொண்டது.

ஆனால் இந்த உண்மைகளை மறைத்து விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு 30,000 கோடி முதலீடு ஆந்திராவிற்கு சென்று விட்டது என வதந்திகளை பரப்புகிறது திமுக.

இரண்டாவது ஹூசெங் எனப்படும் கொரியன் நிறுவனமும் ஆந்திராவிற்கு சென்று விட்டது. இதன் மூலம் 1,700 கோடியை தமிழகம் இழந்து விட்டது என குற்றம் சாட்டுகிறது.

ஆமாம். ஹூசெங் எனும் காலனி உற்பத்தி தொழிற்சாலை ஆந்திராவிற்கு போனது உண்மை தான். ஆனால் இது நடந்தது சென்ற திமுக ஆட்சியில். …அதுவும் – நவம்பர் 2025-ம் ஆண்டே நடந்த ஒரு நிகழ்வை த.வெ.க ஆட்சியில் நடந்ததை போல பொய் சொல்கிறார்கள்.

ஹூசெங் நிறுவனம் தமிழக அரசுடன் MOU சைன் செய்தது. அதன் பிறகு ஆந்திர அரசு அந்த நிறுவனத்திற்கு நிலம் உள்ளிட்ட சலுகைகளை கொடுத்தது. இதனால் ஆந்திர அரசு கொடுத்த அதே சலுகைகளை தமிழக அரசிடம் கேட்டது ஹூசெங் நிறுவனம்.

ஆனால் தமிழக அரசு மறுத்துவிட்டது. எனவே தனது முதலீட்டை ஆந்திராவிற்கு மாற்றி கொண்டது ஹூசெங் நிறுவனம்.

இந்த முதலீடு கைவிட்டு போனதை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, அண்ணாமலை போன்றவர்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

“இவ்வளவு சலுகைகளை வழங்கி முதலீடு பிடிக்க வேண்டும் என்ற தேவை தமிழகத்திற்கு இல்லை” என்று வழக்கம் போல திமிர்த்தனமாக பேசினார் அப்போதைய தொழிற்துறை அமைச்சர் ராஜா. அனைத்திற்கும் ஆதாரம் இருக்கிறது.

மூன்றாவதாக ராயல் என்பீல்டு நிறுவனம்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் இருக்கிறது. தற்போது தமிழகத்தை தாண்டி விரிவாக்கம் செய்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம். ஆந்திராவை தேர்ந்தெடுத்திருக்கிறது. இதை எப்படி தமிழகத்துக்கான இழப்பு என்று சொல்ல முடியும்.

எனவே இந்த குற்றச்சாட்டும் தவறானவை. மேலும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஆந்திராவில் 2200 கோடி முதலீடு செய்யப்போவதாக எடுத்த முடிவு செய்தி வெளியானது மே மாதம் 7ம் தேதி.

அப்போது தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைக்கவே இல்லை. அப்படி இருக்கும் போது பழியை தூக்கி விஜய் மீது போடுவது திமுகவின் சில்ரத்தனம் இல்லாமல் வேறு இல்லை.

பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தது. அவர்கள் ஆந்திராவில் தங்கள் முதலீட்டை விரிவுபடுத்துகிறார்கள்.

தமிழக அரசுடன் MOU கையெழுத்திட்டதாகவோ, தமிழகத்திற்கு வருவதாகாவோ entha ஒரு ஆதாரபூர்வ செய்தியும் இல்லை என்பதால் – இதுவும் பொய்யான குற்றச்சாட்டு.

ஹிண்டால்கோ நிறுவனமும் தமிழகத்தில் முதலீடு செய்கிறது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

இந்த ஆட்சி அமைந்த ஒரு வாரத்தில் 15,000 கோடி மதிப்பிலான AMCA ப்ராஜக்ட் தமிழகத்தை விட்டு சென்றதாக டிஆர்பி ராஜா குற்றம் சாட்டியிருந்தார். அப்போதே அதன் உண்மைத்தன்மை பற்றி ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக த வெ க ஆட்சி மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை கட்டி எழுப்பி வருகிறது திமுக. பாஜகவுக்கு எதிராக திமுக என்ன செய்ததோ அதையே இன்று விஜய்க்கு எதிராக செய்கிறது.

அன்று பாஜகவை பிடிக்காதவர்கள் திமுகவின் பொய்யான குற்றச்சாட்டை உண்மை என்று நம்பினார்கள். இன்று விஜயை பிடிக்காதவர்கள் தான் திமுகவின் டார்கெட்.

விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இந்த அரசியல் புரியுமா…??? இதற்கு அவர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை.

விஜயை விமர்சிப்பதற்கு இந்த ஆட்சியை விமர்சிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கிறது. இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

விஜய் மீதான வெறுப்பால் இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட வேண்டும் என வலிந்து திணிக்கப்படும் திமுகவின் பொய் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். பரப்பாதீர்கள்.

அது திமுகவுக்கு தான் வலிமை சேர்க்கும்.

இதற்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ளுங்கள்.

உண்மையை உண்மை என்று சொல்வதற்கு பயப்பட வேண்டாம். தயங்க வேண்டாம். ( திரு.மஹாதேவன் சந்திரசேகரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதைத்தான் நான் இங்கே நன்றியுடன் பகிர்ந்திருக்கிறேன் ….)

……………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக