வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்கம் விருதைப் பெற்ற ரஷ்யப்படம் – ‘The Return’.

………………………………

……………………………………………………………………………………………………………….

மிகக் குறைந்த முதலீட்டில் எடுத்து உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம் ‘The Return…’

படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் ஐந்து.படம் நெடுக வருவது மூன்றே கதாபாத்திரங்கள்தான்.ஆனாலும்,படத்தின் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமேயில்லை.

இவானும்,ஆண்ட்ரேயும் உடன் பிறந்த சகோதரர்கள்.இவானுக்கு வயது 12.ஆண்ட்ரேவிற்கு வயது 16.

இவானுக்கு ஒரு வயது இருக்கும் பொழுது பிரிந்து சென்ற தந்தை இப்பொழுதுதான் வீட்டிற்கு திரும்பி வந்து இருக்கிறார்.

அப்பா,ராணுவத்தில் பைலாட்டாக வேலை பார்க்கிறார்.அவர் வந்த பின் மகன்கள் இருவருக்கும் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி.

12 வருடங்கள் கழித்து கணவன் வந்திருந்தாலும் மனைவிக்கு அவன் மேல் ஒட்டுதல் இல்லையென்பதை படுக்கைறையில் காண்கிறோம்.இருவருக்கும் எவ்வித உரையாடலும் இல்லை.பிள்ளைகளின் பாட்டி கூட அவன் வந்த பிறகு ஒரு வித இறுக்கத்துடனேயே இருக்கிறார்.

முதன்முறையாக அப்பாவுடன் பிள்ளைகள் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள், உடன் அம்மாவும் பாட்டியும்.

பிள்ளைகள் இருவரும் அப்பாவை மிரட்சியுடன் பார்க்கிறார்கள்.அப்பா கலகலப்பான மனிதராகயில்லை என்பதையும் புரிந்து கொள்கிறார்கள்.

வீட்டின் வெளியே கார் நிற்கிறது.சிறியவன் இவான்”வெளியே நிற்கும் கார் உங்களுடையதா?”

அப்பா”ஆமாம்”

இவான்”வெளியே எங்கெயாவது போகலாமா?”

அப்பா”போகலாம்”.

மறுநாள்,அப்பாவும் பிள்ளைகளும் காரில் டிரிப் அடிக்கிறார்கள்.மகிழ்ச்சியோடு சென்ற பிள்ளைகளுக்கு, ஒரே நாளில் அப்பாவின் மீது வெறுப்பு ஏற்படுகிறது.மூத்தவன் தந்தையின் குணத்திற்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கிறான்.அதனால்,மூத்தவனுக்கும் அப்பாவிற்கும் ஒத்துப் போகிறது.

இவானுக்கு அப்பாவை சுத்தமா பிடிக்கலே.அவருடைய கண்டிப்பும்,சிடு சிடு மூஞ்சியும், அன்பு இல்லாமல் இருப்பதும் அவர் மீது இவனுக்கு வெறுப்பு உண்டாகிறது.

ஆற்றின் கரையோரம் இவான் சுவாரஸ்யமாக மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான்.”வா…நேரமாயிருச்சு…வேற இடத்துக்குப் போகலாம்..”என்று சொல்லி அவனை வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார்.

காரில் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு ‘இன்னும் சிறிது நேரம் மீன் பிடித்து இருக்கலாம்’என்கிறான்.

அப்பா எதுவும் பேசாமல் காரை நிறுத்தி அவனை மட்டும் இறக்கி மீன் பிடிக்கும் கருவியைக் கொடுத்து,” பாலத்துக்கு கீழே நிறைய மீன் இருக்கும்…இங்கேயிருந்து மீன் பிடிச்சுக்கிட்டு இரு…”,என்று சொல்லி அவனை மட்டும் இறக்கி விட்டு காரை கிளப்பிச் செல்கிறார்.

இவான் அதிர்ச்சியோடு நிற்கிறான்.பாலத்தில் சாய்ந்து உட்காருகிறான்.பெருமழை பெய்கிறது.வைராக்கியத்தோடு அப்படியே உட்கார்ந்து இருக்கிறான்.

சிறிது நேரத்தில் அப்பாவின் கார் வருகிறது.’காரில் ஏறச் சொல்கிறார்.’

வேறுவழியில்லாமல் காரில் ஏறுகிறான்.வெறுப்போடு உட்கார்ந்து வருகிறான்.டவலைக் கொடுத்து துடைக்கச் சொல்கிறார் அப்பா.அவன் எதுவும் பேசாமல் கோபத்தோடு நனைந்த துணிகளோடு அப்படியே வருகிறான்.

“நீ எதுக்கு திரும்பி வந்தே ….நீ இல்லாம நான், ஆண்ட்ரே, (அண்ணன்)அம்மா,பாட்டி …எல்லாருமே சந்தோஷமாத்தானே இருந்தோம்.” என்று அப்பாவிடம் கோபத்தோடு கேட்கிறான்.

அப்பாவிடம் பதிலேதுமில்லை.

ஒரு இடத்தில் காரை நிறுத்தி ‘இங்கு ஏதாவது ஓட்டல் இருக்கிறதா என்று பார்த்து வா’என்று மூத்த மகனை அனுப்புகிறார்.’இந்த நேரத்துக்குள்ளே நீ திரும்பி வரணும் ‘என்று கண்டிப்புடன் கூறுகிறார்.அவன்,காலதாமதமாக வந்ததால் அவனை திட்டுகிறார்.

இப்படி,தந்தையின் செயல்களைப் பார்த்து இவானுக்கு அவர் மீது கோபம் கூடிக்கொண்டே போகிறது.

இரவில் டென்ட்டில் தூங்கும் பொழுது ‘இனிமேல் அவர் என்னையை அடிச்சார்னா அவரை நான் கொன்னுடுவேன்”என்று அண்ணனிடம் சொல்கிறான்.அண்ணன் தம்பியை சமாதானப்படுத்துகிறான்.

படகில் செல்லும் பொழுது பிள்ளைகளை துடுப்பு போடவிட்டு,அப்பா உட்கார்ந்து வருவதைப் பார்த்து’சின்னப் பசங்க நம்மள துடுப்பு போட விட்டு இவன் பேசாம கையை கட்டிக்கிட்டு வரான் பாரு’என்கிற நினைப்பில் இவானுக்கு அப்பா மீது அடங்காத கோபம் வரும்.

தந்தையின் பார்வையில் பிள்ளைகளுக்கு மனவுறுதி வேண்டும் என்பதற்காக கூட இப்படி செய்யலாம் என காட்சியின் வழியே புரிந்து கொள்கிறோம்.ஆனால்,இவானுக்கு தந்தையின் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ளும் வயதுமில்லை..

தந்தையின் மீது இவானுக்கு ஆரம்பித்திலேயே நன்மதிப்பு கிடையாது.

காரில் உட்கார்ந்து இருக்கும் பொழுது, ஒரு அழகானப் பெண் கடந்து செல்லும் பொழுது கார் கண்ணாடி வழியே அவள் மறையும் வரையும் பார்ப்பதிலிருந்தே அவர் மீது இவனுக்கு எரிச்சல்தான்.அவனுடைய வயதில் தந்தையின் பார்வை தவறாகப்பட்டிருக்கு.

கடந்து செல்லும் அழகான பெண்ணை பார்ப்பது ஒன்றும் தவறில்லையே.அந்தப் பெண்ணும் இவனை திரும்பிப் பார்த்து சிரிப்பதும் சிறப்புதான்.

இவானைப் பொறுத்த வரையில் இந்த 5 நாள் டிரிப்பில் அவருடைய நடவடிக்கைகள் அனைத்துமே அவனுக்கு அவர் மீது எரிச்சலைத்தான் கொடுத்தது.

பெரியவன் தந்தையை ‘அப்பா’என்று கூப்பிடுகிறான்.இவன் அப்படி கூப்பிட மறுக்கிறான்.அவர் வற்புறுத்தினால் மட்டுமே ‘அப்பா’என்கிறான்.

அழகான கடலின் நடுவே சென்று மீன் பிடிக்க ஆசைப்பட்டு தந்தையிடம் அனுமதி கேட்கிறார்கள்.

தந்தை தனது வாட்ச்சை பெரியவனிடம் கொடுத்து ‘ஒரு மணி நேரத்தில் வந்து விட வேண்டும்’என்று சொல்லி அனுப்புகிறார்.அவர்கள் மீன்பிடிக்கும் குஷியில் நேரத்தை மறந்து மூன்று மணி நேரம் கழித்து வருகிறார்கள்.

‘நம் பேச்சை மதிக்க மாட்டேன்கிறார்களே ‘ என்கிற நினைப்பில் பெரியவனை போட்டு அடிக்கிறார் தந்தை.

‘அவனை நீ அடிச்சேன்னா,ஒன்னையை நா கத்தியாலேயே குத்திருவேன்”னு மீன் வெட்டும் கத்தியை காட்டுகிறான்,இவான்.

அப்பா கோபத்தோடு தன்னருகில் வருவதைப் பார்த்து கத்தியை தூக்கிப் போட்டு காட்டிற்குள் ஓடுகிறான்.அப்பா விரட்டுகிறார்…..அங்கே விபரீத சம்பவம் ஒன்று நிகழ்கிறது….

அதன் பிறகு…படத்தைப்பாருங்கள்.

இத்திரைப்படம் 60-வது வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்கம் விருதைப் பெற்றுள்ளது.

21-ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இத்திரைப்படமும் கருதப்படுகிறது. (வெளிவந்த ஆண்டு – 2003 )

இந்த ரஷ்யப்படம் யூ-ட்யூபில் கிடைக்கிறது….. இரண்டுங்கெட்டான் வயதில் இருக்கும் பிள்ளைகள் குறித்த உளவியல் ரீதியான திரைப்படம்…..ரஷ்யப்படங்கள் அபூர்வமாகவே யூ-ட்யூபில் காணக்கிடைக்கின்றன என்பதால், ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம்….!!!

லிங்க் – https://youtu.be/3WD_Q7d45VU?si=CAtci-mdzIjed8HH

…………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்