ஆன்மிகச் சிறுகதைகள் – சின்னதாக சில …!!!

……………………………………………………………………………………………………………

…………………………………………………………………………………………………………..

1. நான் போனால் போவேன்: 

தமிழ் கதை | The Guru and the Disciples

குருகுலம் ஒன்றில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் குரு. “உங்களில் யாரெல்லாம் மோட்சத்துக்கு போவீர்கள்..?” என்று கேட்டார்.

மாணவர்களில் சிலர், “நாங்கள் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்றும், சிலர் “ஐம்பது வயதுக்கு மேல்தான் இதைப் பற்றி கருத்து கூற முடியும்..” என்றும் பலவாறாக அபிப்ராயம் தெரிவித்தனர்.

ஒரே ஒரு மாணவன் மட்டும், “குருவே.. மோட்சத்துக்கு நான் போனால் போகலாம்..” என்றான்.

மாணவர்கள் அனைவரும் திகைத்தனர்.‌ குருவும் ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு அந்த மாணவனே அதை விளக்கினான்.

” சுவாமி..! வெறும் படிப்பு மட்டுமே மோட்சத்தைத் தராது. ‘நான்’ போனால், அதாவது நான் எனும் அகந்தை போனால், யார் வேண்டுமானாலும் மோட்சத்திற்குப் போகலாம் என்பதைத்தான் அப்படி சொன்னேன்..” என்றாான்.   

குரு நெகிழ்ந்து போனார்.               

2. சீடனின் செருக்கு:

தமிழ் கதை | The Guru and the Disciples

ஒரு துறவிக்கு நான்கு சீடர்கள் இருந்தனர். அதில் மூவர் தங்களால் முடிந்த அளவுக்கு தர்ம நெறிகளைக் கடைபிடித்து வாழ்ந்து வந்தனர். ஒரு சீடன் மட்டும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு பூஜை வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவான்.  நாளடைவில் அந்தச் சீடனுக்கு கர்வம் தலைக்கு ஏறியது.

குருவிடம் சென்று, “சுவாமி இவர்களெல்லாம் தூங்கும்போது நான் மட்டும் பூஜை வேலைகளைச் செய்கிறேன். இவர்களெல்லாம் என்றுதான் திருந்துவார்களோ..!” என்று செருக்குடன் கூறினான்.

குரு புன்சிரிப்புடன், “தம்பி.. ஆக, நீ ஆசிரமத்தைச் சேர்ந்த மற்ற சகோதரர்களை நிந்திப்பதற்காகத்தான் சீக்கிரம் கண் விழிக்கிறாய் என்பது தெளிவாகிறது.‌ அப்படிப்பட்ட இறை பணி செய்வதை விட, ஆறு மணிக்கு கண்விழித்து, அந்த மூவரும் செய்யும் பிரார்த்தனை பல மடங்கு உயர்ந்தது..!” என்றார்.

சீடனின் ஆணவம் அன்றோடு அகன்றது.

3. பண்பு அறிதல்

தமிழ் கதை | The Guru, the Disciple, and the Warrior

மகாவீரன் ஒருவன் சீடனாகச் சேர விரும்பிய தன் விருப்பத்தை மகானிடம் தெரிவித்தான். 

உடனே அவர், “சரி. அந்த சமையல் அறையில் இருந்து ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் கொடு..” என்று கட்டளையிட்டார். 

அவனும் மகான் சொன்னவரே செய்தான். 

மகான் கூறினார்: “உன் பண்பை அறியவே இந்த சோதனையை வைத்தேன். அதில் நீ வென்று விட்டாய்.. என்னுடைய சீடனாக சேருவதற்கு உனக்கு முழு தகுதி உள்ளது” என்றார்.

மகானுடைய உதவியாளர் மகானிடம், “எதை வைத்து அவனுடைய பண்பைக் கண்டுபிடித்தீர்கள் குருவே..?” என்று கேட்டான்.

அதற்கு மகான், கத்தியை அவன் கொண்டு வந்த போது, கத்தியின் நுனியை அவன் பிடித்துக் கொண்டு, அடிப்பாகத்தை என்னிடம் நீட்டிய போதே நான் அவனுடைய பண்பை அறிந்து கொண்டேன்.‌ அவனால் பிறருக்குத் துன்பம் நேராது. இத்தகைய சீடனே எனக்குத் தேவை..” என்றார்.

4. கடவுளுக்கு உருவம் உண்டா

ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், “கடவுளுக்கு உருவம் உண்டா. ?” என்று கேட்டார். 

அதற்கு ராமகிருஷ்ணர், “இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர் – இந்த இரண்டும் அவரே! அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல..” என்று பதில் கூறினார். 

பக்தர் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் விளக்கினார்:

“இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன். சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும். 

அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும். ஆனால், சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும். 

பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான்.

இறைவனும் அப்படித்தான். 

பக்தியின் குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான். 

ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான். 

இவ்வாறாக, சாதாரண பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது.

ஆனால் அனைத்தும் அறிந்த ஞானிக்கு வடிவம் தேவைப்படுவதில்லை…”

பக்தன் மனம் தெளிந்தான்.

………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக