விவேகானந்தருக்குப் பிடித்த நசிகேதன் …(பகுதி-2)

……………………………………

………………………………….

“அப்பா, என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்?” அந்த கேள்வியையே மூன்று முறை கேட்டான் நசிகேதன்.

கோபமுற்ற வாஜசிரவஸ், “உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்” என்றார்.

தந்தை சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு, நசிகேதன் யமலோகம் புறப்படத் தயாரானான் …..

வாஜசிரவஸ் மகனை தடுத்து பார்த்தார்.

“கோபத்தில் சொன்னது, போக வேண்டாம் மகனே” என மன்றாடி பார்த்தார். மகன் கேட்கவில்லை. நசிகேதன் யம லோகம் நோக்கி புறப்பட்டான் .

அவன் யம லோகம் போன வழியெல்லாம் ஒரே இருள். முட்களும், பூச்சிகளும் நிறைந்த வழி அவன் வைதரணி ஆறு அருகில் வரும் போது ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும் இருக்குமொரு நதியில் பாவிகளின் ஆத்மாக்கள் விழுந்து துன்பப்பட்டு கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கே பசுக்கள், அவர்களை ஆற்றிலிருந்து மீட்டு, அந்தக்கரை வரை கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தன.

அவை, அந்த பாவிகள் தானமளித்த பசுக்கள். சில மெலிந்த பசுக்கள், பாவிகளை மீட்க முயற்சித்து, முடியாமல், விட்டு விட்டு சென்றன.

இவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டே , எந்த வித சிரமமும் இல்லாமல், நசிகேதன் யமலோகத்தை வந்தடைந்தான் .

நசிகேதன் எமலோகத்தை அடைந்தபோது, எமன் அங்கு இல்லை. யமன், தனது தந்தை சூரிய தேவனை பார்க்க சென்றிருந்தார்.

சித்ர குப்தன், நசிகேதனை வரவேற்றான் .

“சிறுவனே உனக்கு இப்போது வருவதற்கான காலமில்லியே. அதுவும் பூத உடலிலே வந்திருக்கிறாய்” என்றார்.

நசிகேதாவிடம் “நீ இறக்கவில்லை, உனது தந்தையின் வார்த்தைகளின் வலிமையால் தான் நீ இங்கு வந்தாய்” என்றார்.

மேலும், “உன்னை, எனது விருந்தினராக கருதுகிறேன், உனது தந்தையிடம் திரும்பிச் செல்” என கூறினார்.

நசிகேதனோ, நான் யமதர்மராஜாவை பார்க்க வேண்டும் என்றான்.

சரி காத்திரு என்றவர் நசிகேதனை மறந்தே போனார்.

நசிகேதன் அங்கேயே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டான்.

மூன்று நாட்கள், உண்ண உணவு இல்லாமல் – தண்ணீர் கூட அருந்தாமல் காத்திருந்தான் நசிகேதன்.

மூன்றாம் நாள் – யமன் நசிகேதனை பார்தார்.,

யமன் தன்னை பார்க்க வந்த நசிகேதன் –

மூன்று நாட்கள் உணவு ஏதும் உண்ணாமல், கொடுக்கப்படாமல் இருந்ததற்காக வருத்தப்பட்டார்.

இந்த தவறுக்கு பிராயச்சித்தமாக மூன்று வரங்களை தருவதாக சொன்னார்.

” நசிகேதா முதலாவது வரத்தை கேள்” என்றார்.

“உங்களிடமிருந்து திரும்பிச் செல்கின்ற போது, என்னை

என் தந்தை ஏற்றுக்கொண்டு, மனக்கவலையின்றி, தெளிந்த மனத்துடன் கோபம் இல்லாதவராக என்னிடம் பேச வேண்டும். இதுவே எனது முதல் வரம்” என்றான்.

எமதர்மனும், “என் அருளால் உன் தந்தை உன்னை முன்பு போலவே ஏற்றுக்கொள்வார்” என்றார்.

இரண்டாவது வரமாக –

சொர்க்கத்தில் வாழ்பவர்கள் தேவ தன்மையைப் பெறுகின்றனர்.

அங்கே அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றி எனக்கு சொல்ல வேண்டுகிறேன் என்றான்.

எமதர்மன்,

“நசிகேதா, சொர்க்கத்தைத் தருவதும் பிரபஞ்சத்துக்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது.

அதாவது புறக்கிரியையாகச் செய்யும்போது, சொர்க்கத்தைத் தருகிற அதே யாகம்,

அக அக்கினியாக,

ஆன்ம அக்கினியாகக் கொண்டு வித்யையாகச் செய்யப்படும் போது பிரபஞ்சத்துக்கு ஆதாரமான இறைவனை அடையும் சாதனை ஆகிறது.” என்றான்.

யாகம் செய்யும் வழிமுறைகளை உபதேசித்தார் யதர்மராஜர்.

நசிகேதன் அதனை புரிந்துகொண்டு திருப்பிச் சொன்னவுடன்,

யமதர்மர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

சொர்க்கத்தை தரக்கூடிய அந்த யாகம் இனி ” நசிகேத யாகம் ” என்றே அழைக்கப்படும் என்றார்.

மேலும், பல யாகங்களின் அறிவைக் குறியீடாக உணர்த்தும் பல வண்ண மாலை ஒன்றையும் வழங்கினார்.

இரண்டு வரங்களை யமதர்மரிடம் கேட்டு திருப்தி அடைந்த நசிகேதன்

மூன்றாம் வரமாக,

” மரணத்துக்குப் பின்னும் வாழ்வு உண்டா ? “ எனக் கேட்டான்.

இதனை நசிகேதன் கேட்டவுடனேயே –

எமதர்மராஜன் மனதில் நடுக்கமுற்றார்.

“இது பரமரகசியமான ஒன்று நசிகேதா இதற்கு பதில் அளிக்கக் கூடாது ஆகவே வேறு ஏதாவது கேள்” என்றார்.

“நான் எனது கேள்வியை மாற்ற முடியாது … எந்தக் கேள்விக்கும் பதில் உண்டு.

இந்தக் கேள்விக்கான பதிலை, உங்களைத் தவிர வேறு எவரும் தர இயலாது.

எனக்கு மூன்று வரங்களை தந்துள்ளீர்கள்,

இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளாது நான் இங்கிருந்து செல்லமாட்டேன்” என்றான்.

நசிகேதா,

உன்னை பெரிய ராஜ்யத்துக்கு அதிபதி ஆக்குகிறேன்.

நின் கொற்றம் தொடர்ந்திட மாட்சிமை கேள்,

நூறாண்டு காலம் ஆயுள் தருகிறேன். பொன் பொருள் நவரத்னக் குவியல் தருகிறேன்.

சுகபோக வாழ்வு தருகிறேன். ஆனால், இதை மட்டும் கேட்காதே “ எனக் கெஞ்சினார் எமதர்மராஜர்.

“இவை அனைத்தும் நிலையற்றவைதானே…!!! அனைத்தும் ஒரே நாளில் முடிவுக்கு வருவதுதானே, ஆகையால் இவற்றில் எதை அடையவும் எனக்கு விருப்பமில்லை.

நான் தெரிந்து கொள்ள விரும்புவது பிறப்பின் ரகசியம், இறப்பின் சூட்சுமம்”

வேறு வழியின்றி எமதர்மராஜன்,

“ இப்பூவுலகில் உயிர்கள் வந்து போகும். உதிப்பவை மறைவதும், பிறப்பவை இறப்பதும் வாழ்வின் இயல்பு.

அது காலச் சக்கரத்தின் சுழற்சி.

“மரணத்துக்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர்.

சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர்.

வினைப்பயனும் பெற்ற பிறவியும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்.”

ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது

தாவரங்கள், பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் இது பொருந்தும்.

இது சுய விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டது”

“மனிதப் பிறப்பெடுத்தவர்களுக்கு இரண்டு பாதைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

உன்போன்று ஒருமுகச் சித்தம் கொண்டு நன்னிலை அடைய விரும்புவோர் ஞானப் பாதையில் செல்கின்றனர்.

ஏனையோர் புலனடக்கமின்றிப் பேராசை எனும் சேற்றில் விழுந்து –

பொருளாசை,

மண்ணாசை

கொண்டு இன்பம் துய்ப்பதாய் எண்ணி –

மாயையில் சிக்கி துன்பக்கடலில் வீழ்ந்து இறக்கின்றனர்”

“ஆத்மா அழிவற்றது.

உடல் நிலையற்றது”

செல்வம், பொருள், இன்பம் ஆகியவையும் அவ்வாறே, நிலையற்றவை.

……………….

இறப்பிற்குப் பிறகு நிலைப்பது ஆன்மா மட்டுமே.

அதுவே ஆன்மநிலை.

“வாழும்போது உள்மனது என்று குறிப்பிடப்படுவதுதான் இறந்த பின் ஆன்மாவாக நிலைபெறுகிறது”

………….

“ஞானம், தெளிவு போன்ற உயர்நிலைகளை அடைய வழி என்ன?”

“நம்பிக்கை, நல்லொழுக்கம், நாணயம், நன்மதிப்பு, புனிதமான சிந்தை மற்றும் நற்செயல் ஆகியவையே ஞானம், தெளிவு பெறுவதற்கான வழிகள்”

“மனிதர்கள் ஆசைகளுக்கு உட்படுவதன் காரணமென்ன?”

“ஐம்புலன்களின் தாக்கத்தை அடக்கியாளத் தவறுபவர்களே ஆசையெனும் மேடையில் ஆட்டமாய் ஆடுகின்றனர்.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர ஆராய்ந்து புரிந்துகொள்வதே மெய் என்ற கூற்றை உணர்ந்தோர் வெகு சிலரே.

நிறையபேர் காணக்கூடாததைத் தம் கண்களால் காண்கின்றனர்.

கேட்கக் கூடாதவற்றைக் கேட்கின்றனர்.

முகரக்கூடாததை முகர்கின்றனர்.

உண்ணக்கூடாததை உட்கொள்கின்றனர்.

இதுவே இழிவு நிலை.

இதை அறியாதோர் தம்மை இழந்து துயரத்தில் வீழ்ந்து அழிகின்றனர்”

………….

“மனித வாழ்வில் இன்றியமையாதது புலனடக்கம்.

அதனை பெற்றவர்கள் நற்கதியடையும் வரம் பெற்றவர்களாகிறார்கள்.

ஆன்மா எனும் அகம் அழிவற்றது. ஆசைகளை அடக்கியாள்வோர் பிறவிப் பெருங்கடல் எனும் பிணியிலிருந்து விடுபடும் பேற்றை அடைகிறார்கள்.

ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது.

அதே வேளையில் அந்த வடிவங்களுக்கு வெளியேயும் திகழ்கிறது.

ஆன்ம அனுபூதி,

இறையனுபூதி –

என்பது ஓர் அனுபவம்.

உணர வேண்டியது.

இறைவன் பேராற்றலின் உறைவிடம் என்பதை அறிய வேண்டும்.

அவ்வாறு உணர்பவன் மரணமில்லாப் பெருநிலையை அடைகிறான்…

மனதைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான்.

மனதின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான்”

………………….

தெளிவடைந்தான், நசிகேதன்.

“நீ உன் தந்தையிடம் திரும்பச் செல்வாயாக” என்று கூறி அவனை ஆசீர்வதித்த எமதர்மராஜன் அங்கிருந்து மறைந்தார்.

தன் மகனைக் கண்ட வஜஸ்ரவ முனிவர் அகமகிழ்ந்தார்.

அவனை அரவணைத்துக் கொண்டார்.

நசிகேதன், பிற்காலத்தில் தன்னிகரற்ற முனிவர்களில் ஒருவராய் புகழ்பெற்றுத் திகழ்ந்தார்.

பிரஹ்ம ஞானத்தை அறிந்த நசிகேதன், ஜீவ முக்தனாக வாழ்ந்தார்.

ஞானமார்க்கத்தின் சூட்சுமத்தைப் போதிக்கும் நசிகேத யாகம் எனும் வேள்வி இன்றளவும் போற்றப்படுகிறது.

” எல்லாம் உன்னுள் நசிகேதன்”

இதுதான் ஆரம்பமாக –

முதல் அத்தியாயமாக –

கடோபநிஷதத்தில் இருக்கிறது.

ஆத்மதத்துவம் எனும் பிரஹ்ம தத்வத்தை அறிந்தவர்கள் உயிருடன் இருக்கும் போதே ஜீவ முக்தி (மனநிறைவு) அடைந்து பின்பு மரணத்திற்குப்பின் விதேஹ முக்தி எனும் பிறப்பில்லாத பேரின்பப் பெருவாழ்வு அடைகிறார்கள்….. ( உதவி – விக்கிபீடியா, அருண் சந்திரசேகரன் …)

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக