…………………………………..

……………………………………
சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு வீடியோக்களை
தடுக்கும் விதமாக தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர்
நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில் சமூக வலைதளங்களில் தமிழக ஆளுநர், முதல்வர்,
அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்த அவதூறு பரப்பும்
விதமான போலி வீடியோக்கள் மற்றும் போலி கணக்குகள்
கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த வருடம் மட்டும் இதுவரை 40 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது.
அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட
386 வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என youtube
நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது –
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
………………………………………………………………………………………….
மேலே கூறப்பட்டுள்ள செய்திக்கும், நமது விமரிசனம் தளத்திற்கும்
எந்தவித சம்பந்தமும் இல்லை என்றாலும் கூட –
இந்த சந்தர்ப்பத்தில், நமது வலைத்தளத்தைப்பற்றிய சில
விஷயங்களை இங்கு தெளிவாக நினைவுபடுத்தி விட விரும்புகிறேன்.
………
விமரிசனம் தளம் என்றுமே தரக்குறைவாகவாகவோ,
உரிய ஆதாரம் இல்லாமலோ எதையும் எழுதியதில்லை…
இனியும் எழுதாது….
நமது இடுகைகள் வெளிப்படையாகவும்,
நேர்மையான முறையிலும்,
பொதுநலனை கருத்தில்கொண்டு
ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிற வகையில்
வெளியிடப்படுகின்றன என்பதை வாசக நண்பர்கள்
நன்கு அறிவர்…. இது ஒரு கௌரவமான விவாத மேடை மட்டுமே.
ஜூலை, 2009-ல் இந்த விமரிசனம் வலைத்தளத்தை நாம்
துவங்கியபோது, நமது லட்சியங்களாக சிலவற்றை அறிவித்தோம்…
(இப்போதும், அவற்றை About தலைப்பின் கீழ் காணலாம்…..)
……………
About –
இந்த வலைத்தளத்தில் எழுதுவதன் நோக்கம் –
நல்லதைப் பாராட்ட வேண்டும்.
கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
(இன்றில்லா விட்டாலும் நாளையாவது
மாறுமல்லவா ? )
அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
ஆபாசமின்றி எழுத வேண்டும்.
……………
என்னைப்பொருத்தவரை, மற்றவர்களின் கண்ணியம்
குறையாத வகையில், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு,
உள்நோக்கம் இன்றி,
பொது வாழ்வில் இருப்பவர்களை
விமரிசனம் செய்வது தவறில்லை – என்று நினைக்கிறேன்.
அரசியல் பதிவுகளில் வரக்கூடிய கிண்டல்கள்,
Political Satire என்றே கருதப்பட வேண்டும்…
( துக்ளக்’கில் வருவது போல – அவை அவதூறு ஆகாது…)
அவதூறுகளுக்கு நிச்சயமாக இங்கே இடம் கிடையாது….
நம் நாட்டில், ஜனநாயகம் உரியமுறையில்
போற்றி பாதுகாக்கப்பட, ஆரோக்கியமான விமரிசனங்கள்
அவசியம் என்பதை அனைவருமே ஏற்பர்.
உரிய முறையில் விமரிசனங்கள் செய்வதை மேற்படி செய்தி
அறிக்கை தடை செய்யவுமில்லை.
நாம் இங்கே லிங்க் தரும் மற்ற வீடியோக்கள் கூட
ஏற்கெனவே செய்தி தளங்களிலும், யூ-ட்யூபிலும் வெளியாகி
ஆயிரக்கணக்கானவர் பார்த்தவையே…
நாமாக எத்தகைய வீடியோக்களையும் உருவாக்குவதில்லை;
தடை செய்யப்பட்ட மற்றவர்களின் வீடியோக்களை
வெளியிடுவதும் இல்லை.
இந்த இடுகையின் வாயிலாக –
நமது வாசக நண்பர்களுக்கு நான் வைக்கும் ஒரு வேண்டுகோள் –
மறுமொழி, பின்னூட்டம் எழுதும் வாசக நண்பர்கள்,
மேற்கண்ட செய்தியையும், கருத்துகளையும் ஏற்று,
எந்தவிதத்திலும் தரம் குறையாத வண்ணம்,
கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி,
தங்கள் கருத்துகளை வெளியிட்டு, இந்த தளத்திற்கு மேலும் மெருகூட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்…
………………………………………………………………………………………………………………..