சாரு நிவேதிதா – ஒரு சுவாரஸ்யமான பேட்டி …

………………………….

…………………………….

சாருவின் சமீபத்திய நாவலான ‘நான்தான் ஔரங்கசீப்’ பெரும்
கவனத்தை ஈர்த்திருக்கிறது; அவருடைய போட்டியாளராகக் கருதப்படும் ஜெயமோகனுடைய வாசகர்களால் வழங்கப்படும் ‘விஷ்ணுபுரம்’
விருது இந்த ஆண்டு சாருவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சாருவின்
வாசகர்கள் இந்த இரு சந்தோஷங்களையும் தங்கள் சந்தோஷமாக்கிக்கொண்டனர்.

அரை நூற்றாண்டு காலமாக எழுதிக்கொண்டிருக்கும் சாருவின் எழுத்துகளையும் அவருடைய வாழ்வையும் பேச இது ஒரு நல்ல சந்தர்ப்பம்தானே ….?

சாரு நிவேதிதா – ஆசிரியர் சமஸ் உரையாடல் –

…………

நாகூரிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம். நாகூர் என்றவுடன் இன்றைக்குச்
சட்டென நினைவுக்கு வரும் ஐந்து விஷயங்கள் என்னென்ன?

நாகூர் ஹனீஃபா.
அவரைப் போன்ற குரல் படைத்தவர் அவருக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை. அதேபோல், அவருடைய பாடல்களில் ஒன்றுகூட சோடை போனது இல்லை. எல்லாமே ரசிக்கத் தகுந்தவை. அது, ‘கல்லக்குடி கொண்ட
கருணாநிதி வாழ்கவே…’ பாடலாக இருந்தாலும் சரி, ‘ஃபாத்திமா
வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?’ பாடலாக இருந்தாலும் சரி; ஹனிஃபாவின் பல பாடல்கள் கண்களில் கண்ணீரை வரவழைப்பவை.

சில்லடி.
எங்கள் ஊர் கடற்கரை. என் காலத்தில் அங்கே பாலைவனத்தில்
உள்ளதுபோல் பெரும் மணல் மேடுகள் இருந்தன. அந்த மணல்
மேடுகளின் உச்சியில் ஏறி அங்கிருந்து சறுக்கிக் கீழே இறங்குவது
எங்கள் அப்போதைய விளையாட்டு. இப்போது அந்த மணல் மேடுகளின்
தடயம் எதுவும் இல்லை. அந்த இடங்களில் பெருமளவு பிளாஸ்டிக்
கழிவுகளே நிரம்பியுள்ளன. சில்லடியில் உள்ள ஈச்சந்தோப்புகள்
மட்டும் இன்னமும் அப்படியே இருக்கின்றன. அந்த ஈச்சந்தோப்பில்
தான் தனியாக அமர்ந்து படிப்பேன். சமயங்களில் சுயமைதுனம்
செய்ததும் உண்டு.

தர்ஹா.
இதைத்தான் முதலில் சொல்லியிருக்க வேண்டும். எஜமான் அடங்கின
இடம். ஆயிரக்கணக்கான புறாக்கள் வசிக்கும் இடம். மனித மனதின் நோய்மைகளைப் போக்கும் இடம். எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை, ஹரிக்கேன் விளக்கில் படிப்பதற்கு மண்ணெண்ணெய் வாங்கவும்
காசு இருக்காது என்பதால், இரவில் தர்ஹாவில்தான் படிப்பேன்.
தர்ஹா என் தாய் வீடு.

நஹரா…


எனக்கு இலக்கியம் எப்படியோ, பயணம் எப்படியோ, அதே அளவுக்குத் தீவிரமான உந்துவிசையாய் இருப்பது இசை. அதற்கு ஆதாரமாக இருந்தது காலை ஆறு மணிக்கு தர்ஹாவின் அலங்கார வாசலுக்கு எதிரே இருக்கும் மனாராவிலிருந்து கேட்கும் நஹரா இசை. இந்த நஹரா இசையை நீங்கள் இந்தியாவில் வேறு எங்குமே கேட்க முடியாது என்று நினைக்கிறேன். நான் கேட்டதில்லை. நஹரா இசையே முதல் முதலாக இசை உலகில் என்னை அழைத்துச் சென்ற இசைக் கருவி. நஹரா ஒரு தோல் கருவி. மத்திய கிழக்கு நாடுகளிலிலிருந்து நாகூருக்கு வந்தது. அந்த நாடுகளில் அவர்கள் நகரா என்கிறார்கள். நாகூரில் நாங்கள் எல்லாவற்றுக்கும் ‘ஹ’ போடுவோம். ‘என்ன, வாப்பா சப்ர்லேந்து வந்துட்டாஹாளா?’

பன்மைத்துவம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது கிட்டத்தட்ட இன்று தேய்வழக்காகிவிட்ட ஒரு வாக்கியம் என்றாலும், என் வாழ்வில் நான் அப்படித்தான் இருக்கிறேன். இந்த மனோபாவத்தை எனக்குக் கொடுத்தது நாகூரின் நிலம். ஊரின் கிழக்குப் பகுதி இஸ்லாமிய கலாச்சாரம். மேற்கில் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலுமான ஹிந்து கலாச்சாரம். தெற்கே வெட்டாற்றைத் தாண்டினால் வாஞ்சூர். வெட்டாறு என்ன, ஒரு ஃபர்லாங்
அகலம். வாஞ்சூரில் கால் வைத்ததும் பத்துப் பதினைந்து
வைன் ஷாப்புகளும் கள்ளுக்கடைகளும் சாராயக் கடை ஒன்றும் கண்கொள்ளாக் காட்சியாய் மிளிரும்.
என்னவென்று புரிந்துகொள்வான் ஒரு பதின்பருவத்து இளைஞன்?
ஒரு பாலத்தைத் தாண்டினால் ஐரோப்பா! வாஞ்சூரைத் தாண்டினால் காரைக்கால். குட்டி பாரிஸ். மேற்கத்திய சங்கீதமும் கிறித்தவக்
கலாச்சாரமும் காரைக்காலில் கொடி கட்டிப் பறக்கும். ஆக, இந்த
மூன்று கலாச்சாரங்களும் என்னுள் ஒன்றேபோல் இறங்கியதற்குக்
காரணம், நாகூரின் நிலவியல் அமைப்பு.

நாகூர் இவ்வளவு உங்களுக்குள் ஆழ இறங்கியிருக்கிறது. ஆனால்,
சொந்த ஊராக அதை உணர்வதான வெளிப்பாட்டை உங்களுடைய எழுத்துகளோ, பேச்சோ அளிப்பது இல்லை. சொல்லப்போனால் சொந்த ஊரிலிருந்து உங்களைத் துண்டித்துக்கொண்டவராகவே பல ச
மயங்களிலும் நீங்கள் பேசுகிறீர்கள். என்ன காரணம்?

என்னிடம் நீங்கள் உலகிலேயே சிறந்த மொழி எது என்று கேட்டால்,
தமிழ் என்று நான் பாரதி சொன்னதுபோல் சொல்ல மாட்டேன். எல்லா மொழிகளுக்குமே அவ்வவற்றுக்கான சிறப்புத் தன்மைகள் உண்டு
என்பேன். இனிமையான மொழி என்றால் அரபி. ஆழமான மொழி
என்றால் சம்ஸ்கிருதம். இசைக்கு ஸ்பானிஷும் தெலுங்கும்.
மென்மைக்கு ஃப்ரெஞ்ச். பழமைக்குத் தமிழ். அது போலவேதான்
இனம், தேசம் எல்லாமே. எனக்கென்று தாய் நாடோ, சொந்த இனமோ கிடையாது. பெரியார் மூன்று கூடாதுகளைச் சொன்னார். குலாபிமானம், பாஷாபிமானம், தேசாபிமானம். இந்த மூன்றுமே இல்லாதவனாகத்தான்
நான் இருக்கிறேன். ஆனால், இப்படிப்பட்ட உணர்வுக்கான அடித்தளம் நாகூரிலிருந்தே உருவானது.

நான் நாகூரில் இருந்துகொண்டு ஃப்ரெஞ்ச் இலக்கியத்தைப்
படிக்கிறேன்; மாலி, பாலச்சந்தர், பிஸ்மில்லா கான், அல்லா ரக்கா
என்று கேட்கிறேன். அதேசமயம், நான் வசித்த சேரியில் என்னைக்
கல்லால் அடிக்கிறார்கள். சும்மாவேனும் இந்த நேர்காணலுக்காக
இதைச் சொல்லவில்லை. கித்தாரைத் தூக்கிக்கொண்டு நான் என்
தெருவில் நடக்கும்போது சிறு கற்களால் அடித்திருக்கிறார்கள்
(ஹனீஃபாவின் மகன் நௌஷாதின் கித்தார் அது).

நான் பேசும் மொழியைத்தான் பேசுகிறார்கள். நான் வாழும் நிலத்தில்
தான் வாழ்கிறார்கள். எனக்குள்ளும் அதெல்லாம் இருக்கிறது. ஆனால்,
என்னால் அவர்களோடு ஆறு வயதிலிருந்தே ஒட்டி வாழ முடியவில்லை.
ஊரும் அப்படித்தான்.

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா? எனக்கு சைக்கிள் ஓட்டத்
தெரியாது. ஒரு சிறுவன் எப்படி சைக்கிள் விடுவதற்குக் கற்றுக்
கொள்கிறான்? அவனுடைய நண்பர்கள் அவனுக்குக் கற்றுக்
கொடுப்பார்கள். நானோ எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே
என் வயதை ஒத்த சிறுவர்களோடு இணைய முடியாத சூழலில்
இருந்தேன். பெண்களை ஒத்த நளினமான என்னுடைய உடல்வாகு
இதற்கு ஒரு காரணம்.

கொஞ்சம் வளர்ந்தபோது கிடைத்த நண்பர்களை சராசரிகள் என்று
நினைக்க ஆரம்பித்துவிட்டேன். பெரும்பாலும் புத்தகங்களும்
முன்னிரவில் பெண்களும்தான். பகலில் பெண்கள் வீட்டு வேலைகளில் மூழ்கியிருப்பார்கள். முன்னிரவில்தான் அவர்களோடு பல்லாங்குழி,
தாயம் என்று ஆடுவது; கதை பேசுவது. சமயங்களில் அந்த ஆட்டம்
நள்ளிரவு வரைகூடப் போகும். பெண்களின் உலகம் எனக்கு
சுவாரஸ்யமானதாக இருந்தது. பதின்பருவத்தில்தான் ஓரளவுக்கு
ஆண் நண்பர்களோடும் கலந்தேன். அதற்கு இசை ஒரு பாலமாக இருந்தது.

வினோதமான கலவை நான். அதனால்தான் ஒன்ற முடியவில்லை என்று நினைக்கிறேன். என்னுடைய ரசனையிலும் உள்ள இந்தக் கலவையை
நாகூர் சூழலே உருவாக்கியது என்று எண்ணுகிறேன். சிறுவயதிலேயே
எனக்கு சாஸ்தீரிய இசை அறிமுகமாகிவிட்டது. என் ரசனை உலகில்
சாஸ்த்ரீய சங்கீதத்துக்கே முதலிடம் கொடுப்பவன் என்றாலும்,
ஜனரஞ்சக இசையையும் தீவிரமாக ரசிப்பேன். நாகூர் ஹனிஃபாவை அப்படித்தான் நேசித்தேன். இன்று ஹனிஃபாவை நாட்டுப்புற இசையின்
ஒரு பகுதியாகப் பார்க்கும் பார்வையை நாகூரிலிருந்தே பெற்றேன்.

உங்களுடைய எந்தப் பருவத்தில் சாஸ்தீரிய இசை உங்களுக்குப்
பரிச்சயம் ஆனது? நாகூரில் இதற்கான பின்னணி எப்படி அமைந்தது?

நாகூர் ஒரு சிற்றூர் என்றாலும், கவ்வாலி, டப்பா போன்ற செமி-க்ளாஸிகல்
ரக இசைக்குப் பழகியிருந்த ஊர் அது. என்னுடைய பதின்பருவத்தில்
சாஸ்த்ரீய சங்கீதத்தை ரசித்து அதுபற்றி விவாதிக்கும் கல்லூரி
மாணவர்கள் பட்டாளமே அங்கு இருந்தது. சாஸ்த்ரீய சங்கீதம் என் பதின்பருவத்தில் ஆழ இறங்கியது. பிஸ்மில்லா கான், அல்லா ரக்கா,
நஸீர் அமீனுத்தீன் (டாகர் மற்றும் பல டாகர் சகோதரர்கள்), ரவி ஷங்கர்,
ஷிவ் ஷங்கர் ஷர்மா, அம்ஜத் அலி கான், மாலி, லால்குடி ஜெயராமன், எஸ்.பாலசந்தர், எஸ்.ராமநாதன்… இப்படி இந்தப் பட்டியல் மிக
நீளமானது. இவர்களையெல்லாம் ரசிக்கும் அதே தீவிரத்துடன்தான் ஹனீஃபாவையும் ரசிப்பேன்.

இது காலம் பூராவும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இப்போதுகூட, ‘ரஞ்சிதமே…’ பாடலைக் கேட்டு ரசித்து நான் எழுதியதும் கிண்டல்
எழுந்ததை நீங்கள் சமூகவலைதளங்களில் பார்த்திருக்கலாம். என்னைப் பொருத்த அளவில் ஹனீஃபாவை நாட்டுப்புற இசையில் நான் சேர்ப்பேன். என்னுடைய வீடும் நான் வாழ்ந்த பகுதியும் மிக மோசமான சூழலில் இருந்தாலும், இப்படி ஒரு பகுதியும் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாக
இருந்தது. எனக்குள் இருந்த கலைஞனை அதுதான் போஷித்தது என்றும் சொல்லலாம்.
( நன்றி – ஆசிரியர் சமஸ்…)

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to சாரு நிவேதிதா – ஒரு சுவாரஸ்யமான பேட்டி …

  1. புதியவன் சொல்கிறார்:

    சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் அனுபவங்களை, அவரின் ரசனைகளை மிகவும் ஆர்வத்துடன் படிப்பேன். (அவர் கதைகள்/நாவல்களை நான் படித்ததில்லை… அவற்றின் basic theme அவர் எழுதுவதால் அவற்றைப் படிக்கும் ஆர்வம் எனக்குள் எழவில்லை). ‘நான் ஔரங்கசீப்’ நன்றாக எழுதியிருந்தார் (நாவல் 1000+ ரூபாய் என்பதால் இன்னும் வாங்கவில்லை)

    மொழியைப் பற்றிய அவரின் எண்ணம் அவருடைய தனிப்பட்ட எண்ணம். ஆனால் இருவர் சந்திக்கும்போது நல் வார்த்தைகளை நிறைய பறிமாறிக்கொள்வது அரபு கலாச்சாரம்.

    அவர் எதிர்பார்ப்பதுபோல், தமிழ்சமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடி, பெரும் பணக்காரர்களாக ஆக்கவேண்டும் என்றால் அது நடக்கவே நடக்காது. இங்கு எழுத்து பொழுதுபோக்கு, சினிமா மதம். எந்த தமிழ் எழுத்தாளரும், திரைப்படத்திற்கு எழுதாமல் காசு பார்த்ததில்லை. வாழ்க்கையைக் கொண்டாடி அனுபவிக்கும் அளவிற்கு தமிழ் சமூகம் அவருக்கு அள்ளிக் கொடுக்காது.

    நல்ல எழுத்து வன்மை உள்ளவர் என்பது என் எண்ணம் (நாவல் தீம் தவிர்த்து)

  2. புதியவன் சொல்கிறார்:

    உங்களிடம் கேள்விலாம் கேட்டா பதிலே வருவதில்லையே..

    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதிக்கு திட்டப் பணிகள் செய்ய வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் கொடுக்கிறதே… இதுவே ஊழலுக்குக் காரணமாகிறதே… ஐயாயிரம் கூட பெறாத பஸ் ஸ்டாண்ட் ஸ்ட்ரக்சருக்கு ஐந்து லட்சம், ஏழு லட்சம் என்று பில் போட்டு அதில் எம்பிக்கள் பணம் அடிக்கிறார்களே. இதை யார் கேள்வி கேட்பார்கள்? (சமீபத்தில் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன், தன் கட்சியின் வழியில், இப்படிச் செய்து, அதில் தன் பெயரைப் போட்டு, சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்பட்டதால் தன் பெயர் வைத்த போர்டை மாத்திரம் அகற்றினார். அதனால் இந்தக் கேள்வி எனக்கு எழுந்தது)

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    ..
    1) // உங்களிடம் கேள்விலாம் கேட்டா
    பதிலே வருவதில்லையே..//

    பொதுவாக, நீங்கள் பின்னூட்டம் போடும்போது
    உங்கள் இஷ்டத்திற்கு எதையாவது எழுதி
    விடுகிறீர்கள்…
    அதற்கு நான் விளக்கம் கேட்டால்,
    உங்களுக்கு பதில் சொல்ல சங்கடமான
    விஷயமாக இருந்தால், நீங்கள் பதிலே
    சொல்லாமல் எஸ்கேப் ஆகி விடுவதை
    வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள்…
    ஒன்று சொன்னது தவறு என்று ஒப்புக் கொள்ள
    வேண்டும்… அல்லது உங்கள் தரப்பு
    நியாயத்தை விளக்க வேண்டும்…
    இரண்டும் செய்ய முடியாத நிலையில்,
    எஸ்கேப் ஆவதையே நீங்கள் பல சமயங்களில்
    தீர்வாக கொண்டிருக்கிறீர்கள்.
    நீங்கள் எப்போது பின்னூட்டங்களில் நான்
    கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் தருகிறீர்களோ –
    அப்போது தான் இந்த கேள்வியை கேட்கும் தகுதி
    உங்களுக்கு ஏற்படும்.

    2) //பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதிக்கு
    திட்டப் பணிகள் செய்ய வருடத்திற்கு ஐந்து கோடி
    ரூபாய் கொடுக்கிறதே… இதுவே ஊழலுக்குக்
    காரணமாகிறதே… //

    பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு 300-க்கும் மேற்பட்ட
    எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து போய்
    நீங்கள் கேட்ட இந்த கேள்வியை, உங்களுக்கு
    சங்கடம் ஏற்படுத்தாமல் இருக்க, நானும் மறந்து விடுகிறேன்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      யாராக இருந்தால் என்ன? பஸ் ஸ்டாண்ட் போன்றவை அமைப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றால் கேள்வி கேட்கவேண்டியதுதானே. அரசு தரும் வீட்டில் உள் வாடகைக்கு விடுவது போன்றவற்றையும் மத்திய அரசு கிரிமினல் குற்றமாகக் கருதவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பாதிப்பதற்காக இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? அதிலும் மூச்சுக்கு முன்னூறு தடவை கம்யூனிஸ்ட் கட்சிகள் பாட்டாளி வர்கத்திற்கானது என்று சொல்லிக்கொண்டே சுருட்டுவதை ஏற்கமுடியுமா? சமூக ஊடகங்களில் இந்தப் படங்கள் வந்தவுடன் அவசர அவசரமாக தன் பெயர் போட்ட பலகையை மாத்திரம் அகற்றினால் போதுமா?

      பயணங்களினால் நான் கவனிக்க மறந்திருக்கலாம். ஏதேனும் நான் பதில் சொல்லாதவற்றை இங்கு தெரிவியுங்கள். உடனே பதிலளிக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.