பாலியல் புகார் குறித்த வழக்கும், அதன் பின்னணியும்….!!!


ஒரு விஷயத்தை முதலிலேயே தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.

இந்த செய்தி வெளியானவுடனேயே, நமது வாசகர்களிடம்,
முழு விவரங்களும் வெளிவரும் முன்னர், அவசரப்பட்டு கமெண்ட்ஸ்
எதையும் எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

-நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக எந்தவித விமரிசனமும்
இந்த தளத்தில்/இடுகையில் வராது…

நீதிமன்றங்களின் மாண்பை பாதுகாக்கும் பொறுப்பு, இந்த வழக்கில்
சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ
இந்த நாட்டின் சாதாரண குடிமக்களாகிய
நமக்கு நிச்சயம் இருக்கிறது என்பதை
இந்த இடுகை உறுதிப்படுத்தும்.

இந்த வழக்கில் கூறப்பட்ட பாலியல் முறைகேடுகள் குறித்து
நாம் எதையும் கூறப்போவதில்லை.
உரிய அமைப்புகள் விசாரணை நடத்தும்போது உண்மை
வெளிவரும். நாமும் அதுவரை காத்திருப்போம்.

ஆனால், இந்த வழக்கின் பின்னணியை
தெரிந்துகொள்ளும் உரிமை இந்த நாட்டின் குடிமக்கள்
அனைவருக்கும் உண்டு… அதை
தெரிந்து கொள்ளத்தான் இங்கே முயற்சி நடக்கிறது.

நண்பர்கள் அனைவருக்கும் –
முதலில் வெளிவந்த செய்தி – தெரியவேண்டும்…
துவக்கத்தில், ஊடகங்களில் இந்த செய்திகள்
வெளியிடப்படுவதற்கும், விவாதிப்பதற்கும்
தடை விதிக்கப்படுமோ என்கிற ஐயம் இருந்தது….

ஆனால், சனிக்கிழமை நீதிமன்றத்தில் –

// இந்த விஷயத்தில் ஊடகங்கள் கட்டுப்பாட்டு உணர்வுடனும்,
பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்வது குறித்து அவர்களின்
முடிவுகளுக்கே விட்டு விடுகிறோம்.

மிகக் கடுமையான, இழிவான குற்றச்சாட்டுகள் காரணமாக
நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுவதுடன்,
சீரமைக்க இயலாத அளவுக்கு நீதித்துறையின் மாண்பு
சிதைக்கப்படும் என்ற நிலையில், எதைப் பிரசுரிக்க வேண்டும்,
எதைப் பிரசுரிக்க வேண்டாம் என்பதை அவர்களே
தீர்மானிக்கட்டும் //

என்று அறிவிக்கப்பட்ட பிறகு, ஊடகங்கள் அனைத்தும்
செய்தியை வெளியிட்டு விட்டன…

எனவே வெளிவந்திருக்கும் செய்திகளை வைத்துக்கொண்டு
நாம் பேசுவோம்….

இதுவரை, செய்தியை விவரமாக தெரிந்து கொள்ளாதவர்கள் –
முதலில் தினமணி செய்தி தளத்தில் வெளிவந்த செய்தியை
இங்கே பார்க்கலாம்….

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்

————————-

செய்தி ஊடகங்களைத் தவிர, சமூகப்பொறுப்புடன்
சில ஊடகங்கள் அதிகப்படியான தகவல்களையும் சேகரித்து
தந்திருக்கின்றன.

அந்த பெண்மணி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளிடம் சமர்ப்பித்த
பிரமாண பத்திரத்தையும் (affidavit) – நான் முழுவதுமாக
படித்துப் பார்த்தேன்.

அந்த பிரமாண பத்திரத்தையும், வலைத்தளங்களில் வெவ்வேறு
இடங்களில் வெளிவந்த பல செய்திகளையும் பார்க்கும்போது,
அடிப்படையாக சில கேள்விகள் எழுகின்றன.

அவற்றிற்கான விடைகளை தேடுவது, இந்த வழக்கின்
பின்னணியை புரிந்துகொள்வதற்கு அவசியமானதொன்று.

எத்தகைய கேள்விகள் அவை….?

பகுதி பகுதியாக,
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம்….

முதலில் – வெளிவந்துள்ள செய்தி – சொல்கிறது –

————
// தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் தெரிவித்து,
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அவர் பிரமாண பத்திரங்களை
அனுப்பியுள்ளார்.

இத்தகவலை உச்சநீதிமன்ற தலைமைச் செயலாளர்
சஞ்சீவ் சுதாகர் கல்கோன்கர் சனிக்கிழமை உறுதி செய்தார்.
எனினும், பெண் ஊழியரின் புகார்கள்
அடிப்படை ஆதாரமற்றவை என்றும்,
தவறான நோக்கம் கொண்டவை என்றும் அவர் கூறினார். //

————

புகாரை அந்த பெண்மணி அனுப்பியவுடனேயே –
உ.நீ.ம.தலைமைச் செயலாளர்
” பெண் ஊழியரின் புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும்,
தவறான நோக்கம் கொண்டவை என்றும்” – அறிவிக்கிறார்….

இது எப்படி முடியும் என்பது புரியவில்லை.

தனக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கும் இடையில்,
தாங்கள் இருவர் மட்டும் தனியே இருக்கும்போது நடந்த
விஷயங்களைப்பற்றி அந்தப்பெண் அந்த புகாரில் கூறி இருக்கிறார்.
அந்த சம்பவங்கள் நடந்ததை சம்பந்தப்பட்ட அந்த இரண்டு பேர்
மட்டுமே உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ முடியும்…

அந்த இடத்தில் இல்லாத, மூன்றாவது நபர் ஒருவர்,
அதிலும் முக்கிய அதிகாரத்தில் இருப்பவர் –
எந்தவித அடிப்படையும் இல்லாமல்,
எந்தவித விசாரணையும் நடைபெறாத நிலையிலேயே,
எடுத்த எடுப்பிலேயே –

” பெண் ஊழியரின் புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும்,
தவறான நோக்கம் கொண்டவை என்றும்” அறிவிக்க முடியும்….?

அப்படி அறிவிப்பது அவரது கடமை/பொறுப்புகளில் ஒன்றா…? இல்லையே…?

அடுத்து –

ஏப்ரல் 17 முதல் 21-ந்தேதி வரையில் உ.நீ.மன்றத்திற்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென்று ஏப்ரல் 20-ந்தேதி(சனிக்கிழமை)
நீதிமன்றம் கூடுவதாக, அன்று காலையில் அவசரமாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விடுமுறைக் காலத்தில், அவசரமாக கூட்டப்படும் அளவிற்கு
இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் உண்டா…? உண்டு என்றால்,
அதில் அப்படி எதாவது முடிவுகள் எடுக்கப்பட்டு,
அறிவிக்கப்பட்டனவா…?

கூட்டத்தின் இறுதியில் அறிவிக்கப்பட்டது இது தான் –

—–

// இந்த விஷயத்தில் ஊடகங்கள் கட்டுப்பாட்டு உணர்வுடனும்,
பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்வது குறித்து அவர்களின்
முடிவுகளுக்கே விட்டு விடுகிறோம்.

மிகக் கடுமையான, இழிவான குற்றச்சாட்டுகள் காரணமாக
நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுவதுடன், சீரமைக்க இயலாத
அளவுக்கு நீதித்துறையின் மாண்பு சிதைக்கப்படும்
என்ற நிலையில், எதைப் பிரசுரிக்க வேண்டும்,
எதைப் பிரசுரிக்க வேண்டாம்
என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்…//

—-

இதைத்தவிர, அந்த சந்தர்ப்பம், புகார் கொடுத்த
பெண்ணின் மீது அவதூறு கூறவும்
த.நீ. தன்நிலை விளக்கம் (அல்லது சுயவிளம்பரம்…) அளிக்கவும்
பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது….

இது எந்த அளவிற்கு சரி… ?

நடைமுறை விதிகளின்படி உச்ச நீதிமன்ற,
உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீதான
பாலியல் துன்புறுத்தல் புகார்கள்,
தவறான குற்றச்சாட்டுகளை
In-House Procedure (1999) விதியின் கீழ் விசாரிப்பது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல பணியிடங்களில்
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு
மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் (POSH Act) கீழும்
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மீதான இந்தப்
புகார்களை விசாரிக்க 2013-ஆம் ஆண்டில்
இந்திய உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் மீதான
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விதிகள்
உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவை எதன்படியும் நடக்காமல் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது சரியா ..?

இந்த அமர்வைப் பற்றியும் சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன ….

——————-

குற்றம் சாட்டப்பட்டவரே தனது சொந்த வழக்கில்
தானே தீர்ப்பு சொல்ல அமர்வது சரியா…?

தன்னுடைய சொந்த வழக்கில் எந்தவொரு நீதிபதியும்
இயற்கை நியதியின் கோட்பாடுகளை மதித்துத் தீர்ப்பு
சொல்ல இயலாது. விசாரணை அமர்வில் தனி அதிகாரம்
கொண்ட நபராகத் தலைமை நீதிபதி இருப்பார்.
இந்த அமர்விலிருந்து ஏன் அவர் தன்னை விடுவித்துக்கொள்ள
எண்ணவில்லை?

சிறப்பு அமர்வில் ஏன் பெண் நீதிபதிகள் இல்லை?

உச்ச நீதிமன்றத்தின் உட்புகார்கள் குழுவின் தலைவராக இருப்பவர்
நீதிபதி இந்து மல்ஹோத்ரா.

ஆனால், அவர் இந்தச் சிறப்பு விசாரணை அமர்வில்
இணைக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் மற்ற
பெண் நீதிபதிகளிலும் ஒருவர்கூட இணைக்கப்படவில்லை.
POSH சட்டத்தின்படி பெண்கள் மீதான
பாலியல் துன்புறுத்தல் புகார்களைப் பெண்கள்
தலைமையிலான விசாரணை ஆணையம் கொண்டு
விசாரிக்க வேண்டும் என்று விதிகள்
தெள்ளத்தெளிவாகக் கூறுகிறது.

மேலும் விசாரணைக் குழுவில் பெரும்பான்மையாகப் பெண்கள்
இடம்பெற வேண்டும் என்றும் விதிகள் கூறுகிறது. ஆனால்,
உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணை அமர்வில்
ஏன் இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை.

இந்த விசாரணையின் நோக்கம் என்ன?

சிறப்பு அமர்வு இந்தப் பாலியல் புகார் குறித்து விசாரிப்பதற்காக
சனிக்கிழமை கூடவில்லை என்றால், வேறு
என்ன நோக்கத்துக்காக கூட்டப்பட்டது…?

நீதித் துறையின் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட
தாக்குதல் சதி இது என்று இந்த அமர்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் கூறப்பட்டுள்ள கருத்துகள் தொடர்பாக பல்வேறு
முக்கிய கேள்விகள் எழுகின்றன.

குற்றம்சாட்டப்பட்டுள்ள தலைமை நீதிபதி விசாரணையில்
பேசும்போது அவருடைய தனிப்பட்ட வங்கி இருப்பு விவரங்கள்,
அவருடைய சுய புகழ் குறித்துக் கூறுகிறார்.
இவற்றை ஒரு தனிப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பிலோ,
ஒரு அறிக்கையாகவோ இவர் வெளியிட்டிருக்கலாமே…
இவற்றுக்கும் இவர் மீதான புகாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது…?
இந்தப் புகாருக்கு பொருத்தமற்ற உண்மைகளைக் கூறி
ஆதாயம் தேடும் முயற்சி என்று இது கருதப்படாதா…?

தனிப்பட்ட ஒரு நீதிபதியின் மீதான தவறான நடத்தைகள்
தொடர்பான குற்றச்சாட்டுகள் எதுவும் கூறக்கூடாது
என்பது தான் நீதித்துறை சுதந்திரமா…?

உச்ச நீதிமன்றத்தின் கடந்த கால அனுபவங்களிலும்
பதவியிலிருந்த நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீது
பாலியல் துன்புறுத்தல் புகார்கள் எழுந்துள்ளன. அப்போதெல்லாம்
இந்தப் புகார்கள் நீதித் துறை சுதந்திரம் மீதான தாக்குதலாக
அப்போது முத்திரை குத்தப்படவில்லை.
குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் மீது இத்தகைய புகார்
எழுந்தபோது உச்ச நீதிமன்றத்தின் சார்பில்
உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு,
அவர் மீதான பாலியல் புகார் குறித்து
விசாரிக்கப்பட்டது.

நீதிபதிகள் மீதான பாலியல் புகார்களால்,
நீதித் துறையின் சுதந்திரத்திற்கு
கேடு வந்து விட்டதாக எப்படி கூற முடியும்…..?

தவறான நடத்தைகளால் எழும் புகார் குறித்து
குறிப்பிட்ட நீதித் துறை அதிகாரியை விசாரிப்பதை
நீதித் துறையின் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தலாக
எப்படி எடுத்துக்கொள்ள முடியும்..?

இது நீதித்துறையின் மீதான புகார் அல்லவே…
தனிப்பட்ட ஒரு நபரின் நடத்தை குறித்ததான புகார் என்று தானே
எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்…?

(அடுத்த பகுதியில் தொடரும்….)
—————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to பாலியல் புகார் குறித்த வழக்கும், அதன் பின்னணியும்….!!!

  1. Ramnath's avatar Ramnath சொல்கிறார்:

    இதை ஒரு தனிப்பட்ட பெரிய மனிதரின் மீதான புகாராகத் தான் பார்க்க வேண்டும்.
    இதை எப்படி நீதித்துறையை அவமதிக்கும் செயல் அல்லது நீதித்துறையின்
    சுதந்திரத்தை பாதிக்கும் செயலாக எடுத்துக்கொள்ள முடியும் ?

    நீதிமன்ற செயல்பாடுகளைப்பற்றி அந்த பெண் எதுவும் புகார் அளிக்கவில்லையே ?
    தனிப்பட்ட நபரின் முறைதவறிய பாலியல் வலியுறுத்தல் முயற்சி என்று தானே
    சொல்கிறார் ?

    எல்லா புகார்களையும் கையாள்வதைப் போலவே, இதையும் பாலியல் முறைகேடு
    பற்றிய விசாரணையை உரிய பெண் அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக்குழுவால்
    in camera procedure – படி விசாரிக்க வேண்டும். சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து படைத்தவருக்கு எதிராக புகார் அளித்திருப்பதால், எந்தவித அச்சுறுத்தல்களினாலும் பாதிக்கப்படாமலிருக்க அந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
    தேசிய மகளிர் ஆணையம் இதில் முன் வந்து வெளிப்படையாக செயல்பட வேண்டும்.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்த நிகழ்வை இரு வேறு விதமாகத்தான் அணுகவேண்டும். தலைமை நீதிபதி என்ற பதவி, பொறுப்பு வேறு… ‘பாலியல் புகார்’ என்பது வேறு. (மெச்சூர்ட் நாடாகிய அமெரிக்கா, பில் கிளிண்டன் விஷயத்தில் அணுகியதைப் போல).

    ‘பாலியல் புகார்’ (என்னைப் பொறுத்தவரையில் சாதாரண புகார்….. அதற்குக் காரணம் இருக்கு இந்த கேசில்) தனிப்பட்ட முறையில் விசாரிக்கப்பட வேண்டும், தலைமை நீதிபதி இதற்குப் பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் தற்போது ஹேண்டில் செய்த விதம் சரியல்ல. இது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்.

  3. Gowri Gowrishankar's avatar Gowri Gowrishankar சொல்கிறார்:

    “அந்த இடத்தில் இல்லாத, மூன்றாவது நபர் ஒருவர்,
    அதிலும் முக்கிய அதிகாரத்தில் இருப்பவர் –
    எந்தவித அடிப்படையும் இல்லாமல்,
    எந்தவித விசாரணையும் நடைபெறாத நிலையிலேயே,
    எடுத்த எடுப்பிலேயே –
    ” பெண் ஊழியரின் புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும்,
    தவறான நோக்கம் கொண்டவை என்றும்” அறிவிக்க முடியும்….?
    அப்படி அறிவிப்பது அவரது கடமை/பொறுப்புகளில் ஒன்றா…? இல்லையே…?”

    இது நிச்சயம் நீதித்துறையை அவமதிக்கும், நீதித்துறையின்
    சுதந்திரத்தை பாதிக்கும் செயல்தான்!!

  4. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    KM sir,
    Somehow my mind does not agree with you. Also my instinct says it is a larger part of a very
    cheap conspiracy. I thought you would argue otherwise.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      கோபாலகிருஷ்ணன்,

      நீங்கள் எந்த முடிவுக்கும் வருவதற்கு முன், இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த விஷயத்தில்
      நிறைய தகவல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அவை வெளியே வரும்போது
      முழு உண்மையும் புரியும்.

      எனது இன்றைய இடுகையையும் (பகுதி-2) பார்க்கவும்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.