………………………………………..

…………………………………………..
மறக்க முடியாத கலைஞர் – பாரதிராஜா … !!!
இந்த மறைவு கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்த்தது தான்….எனவே, அதிர்ச்சி என்று சொல்ல மாட்டேன்…. ஆனால், நமக்கு மிகவும் வேண்டிய ஒருவரை, நமக்கு மிகவும் பிடித்த ஒருவரை இழந்தால் ஏற்படக்கூடிய மனவருத்தம் இருக்கத்தானே செய்யும்…..
பாரதிராஜாவின் பல படைப்புகள் எனக்கு பிடிக்கும் என்றாலும், முதல் மரியாதையை என்னால் என்றுமே மறக்க முடியாது…. அந்த அளவுக்கு என்னை, என் மனதை – ஆக்கிரமித்துக் கொண்ட காவியம் அது…..
இந்த சமயத்தில், பாரதிராஜாவுடனான பழைய விகடன் பேட்டி ஒன்றில் அவரது துவக்க கால சினிமா பயணம் பற்றி வெளிவந்த சில தகவல்களை நண்பர்களுடன், இங்கே பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்….
…………………………………………….
சினிமா ஆசை பற்றியும், நடிகர் ஆசை எப்படி டைரக்ஷன் பக்கம் சென்றது என்பது பற்றியும் 2018-ல் விகடன் தடம் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், “சுகாதாரத் துறை வேலையை விட்டுட்டேன். சினிமா கனவு பிடிச்சு ஆட்டுது; உள்ளுணர்வு, ‘இதுதான் உன் நேரம்’னு சொல்லுது. மெட்ராஸ் கிளம்பியே ஆகணும்னு வீட்டுல அடம்பிடிக்கிறேன்.
‘நல்ல வேலையை விட்டுட்டு இப்படி மெட்ராஸ் கெளம்பணும்ங்கிறானே, பொறுப்பில்லாம இருக்கிறானே’னு அப்பாவுக்கு என் மேல கோபம்.
என் நாடகங்களும் என் நடிப்பும் அப்பாவுக்குப் பிடிக்கும். ஆனா, ‘எல்லாத்துக்கும் ஒரு காலநேரம் இருக்கு, இப்பிடி அவசரப்படுறானே’னு கோபமா இருந்தார். அம்மா ரொம்ப நல்ல மனுஷி. என் மேல அவ்வளவு பாசம். என்னை சமாதானப்படுத்திக்கிட்டே இருக்கும்.
இதுக்கு மேல பொறுமையா இருக்கக் கூடாது. ஒரு நாடகத்தப் போட வேண்டியதுதான்னு முடிவு பண்ணேன். கொஞ்சம் கொஞ்சமா – மனநலம் பாதிக்கப்பட்டுக்கிட்டே வர்ற மாதிரி வீட்ல நடிச்சேன்.
வீட்டுக்குள்ளிருந்து பவுடர் டப்பாவை, சீப்பைத் தூக்கித் தெருவுக்கு வீசுவேன். வீட்டுக்குள்ள கதவைப் பூட்டிக்கிட்டு ஏதாவது சினிமா வசனத்தைச் சத்தமாப் பேசுவேன்.
பையன் எங்க புத்திசுவாதீனம் இல்லாமப்போயிருவானோனு அம்மாவுக்கு பயம். ‘என்னய்யா வேணும்’னுச்சு, ‘மெட்ராஸுக்குப் போகணும்’னேன். 300 ரூபா கடன் வாங்கித் தந்துச்சு. ஒரு டிரங்குப் பெட்டி, அதுல நாலு சட்டை, நாலு பேன்ட், நாலு சிஸர் சிகரெட் பாக்கெட்.
ஒரு லாரி புரோக்கர்கிட்ட பேசி, ஏத்திவிட்டாங்க. சினிமா காட்சிகள்ல வர்ற மாதிரி ச்சோனு மழை கொட்டுது; அம்மாவும் சித்தியும் கண்ணீரும் கேவலுமா கை காட்டுறாங்க.
அப்பழுக்கில்லாத ரெண்டு மனுஷிங்க… அவங்க கண்ணீர்தான் என்னை வழிநடத்துச்சு. வலுத்து மழை பெய்யும்போதெல்லாம் அந்த ரெண்டு மனுஷிகளோட நம்பிக்கையும் கையசைப்பும் நினைவில் வந்துபோகும், இப்பவும். தொடக்கத்துல நடிகனாகத்தான் முயற்சி பண்ணேன்.
ஒரு சீனுக்கு ரெண்டு சீனுக்குக் கூப்பிடுவாங்க. ‘டாக்டரா வர்றியா’னு கூப்பிடுவாங்க. ‘என்னடா இது ஹீரோவாகணும்னு வந்தா, சூழல் இந்த மாதிரி இருக்கே’னு ஒரே குழப்பம். ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை செஞ்சுக்கிட்டே வாய்ப்பு தேடிட்டிருந்தேன். அப்போ, பெட்ரோல் போட வரும் காருக்குள்ள ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரினு, ஃபுல் மேக்அப்ல மெழுகு பொம்மையாட்டம் உட்காந்திருப்பாங்க.
ஒரு கட்டத்துக்கு மேல, சினிமா இந்த முகத்தை ஹீரோவா ஒத்துக்கிறது கஷ்டம்னு தெரிஞ்சது. சரி, எப்படியாவது சினிமாவுக்குள்ள போகணும்னு உதவி இயக்குநரா நுழைஞ்சேன். அது ஒருவிதமான நிர்பந்தம். இப்போ நினைச்சுப் பார்க்கும்போது, ஆச்சர்யமா இருக்கு.
Really I am proud to be a director!” எனத் தெரிவித்திருக்கிறார்.
……………………………………..
அந்தப் பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று – “உங்களுடைய கலை ஊடகம் சினிமாதான் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?”
இந்தக் கேள்விக்கு பாரதிராஜாவின் பதில்…
“பெரும்பாலும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழில் வசனங்களும் பாடல்களும் வெளிவந்துகொண்டிருந்த சமயம், ஒரு புயல்போல ‘பராசக்தி’ வெளியானது.
தமிழன் அதுவரை திரையில் கேட்டிராத தமிழ், சிம்மக் குரலோன் சிவாஜியின் கம்பீரக்குரல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்குது. ஒல்லி இளைஞனா, தீர்க்கமான கண்களோட சிவாஜியோட நடிப்பு ஈர்க்குது.
சடங்கு வீடு, கல்யாண வீடுனு மைக்கைக் கெஞ்சிக் கேட்டு வாங்கி, ‘நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது…’னு டயலாக் பேசித் திரிஞ்சோம்.
ஒரு நடிகனாக சிவாஜி என்னை ரொம்பவே பாதிச்சார்.
அப்புறம், சினிமா பார்க்கிறது ஒரு கனவு உலகத்துக்குள்ள போறது மாதிரி இருந்தது.
அரண்மனைகள், சண்டைக் காட்சிகள், மேகங்களில் மிதக்கிற தேவதைப் பெண்கள்னு, சினிமா கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் ஒரு கனவு உலகை உருவாக்குச்சு.
நாடகம் போடும்போதே, சேலைகளை அசைத்து புகைமூட்டம் போட்டு இந்த எஃபெக்ட்ஸையெல்லாம் முயற்சி பண்ணியிருக்கேன்.
ஒருநாள் ஷூட்டிங் பார்க்கணும்னு சொல்லி, எங்க ஊர்க்காரர் விக் மேக்கர் கந்தசாமி மூலமா, ‘விக்ரம் ஸ்டூடியோ’ போனேன். ‘விஜயபுரி வீரன்’ ஷூட்டிங்.
எங்கிருந்தோ சத்தமா குரல், ‘லைட்ஸ்…..!!!’ அவ்வளவுதான், நூறு சூரியன்கள் பிரகாசிக்குது. என்னடா ஒளி இதுனு பிரமிச்சுப்போய் நின்னேன்.
அந்த ஒளி எனக்குள்ள ஓர் இனம்புரியாத சந்தோஷத்தைக் கடத்துச்சு. ‘ஆக்ஷன்’ சொன்னதும் சி.எல்.ஆனந்தன் கத்தியைச் சுழட்டி சுழட்டி சண்டை போடுறார்.
இதுதான்… இதுதான்… நம்மோட இடம்னு மனசு அன்னிக்கே முடிவு பண்ணிடுச்சு”. என்றிருக்கிறார்.
……………………………………………….
மிகச் சரியான அந்த முடிவு தான் பாரதிராஜா என்கிற அற்புதமான ஒரு கலைஞனை நமக்குத் தந்திருக்கிறது….
……………………………………………………………………………………………………………………………………………………



திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…