…
…
ஒரு நூறு வருடங்களுக்கு முன்னதாக தொலைக்காட்சி என்று
ஒன்று வருமென்று கனவிலும் நினைத்திருப்போமா…?
ஒளி, ஒலி இரண்டையும் அலைக்கற்றையாக்கி, அதை விண்ணில்
உலவும் செயற்கை கோளுக்கு அனுப்பி,
பின்னர் நாம் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில், விரும்பும்
வடிவத்தில் மீண்டும் ஒளி, ஒலி -யாக மாற்றி பார்க்க/கேட்க முடியும் என்கிற சாத்தியக்கூறை நம் தாத்தாக்கள் காலத்தில் கனவிலும் நினைத்திருப்போமா…?
சூரியனிலிருந்து மின்சக்தி உற்பத்தி செய்ய முடியுமென்று யாராவது
சொல்லி இருந்தால் நம்பி இருப்போமா…?
கொஞ்சம் யோசித்தால், ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளலாம்.
இவை அனைத்தும் அன்றும் இருந்தன… ஆனால், இந்த ஒளி, ஒலி-யை
அலைக்கற்றையாக மாற்றுவது, சூரிய ஒளியிலிருந்து மின்சக்தி
பெறுவது –
ஆகிய வழிமுறைகளை நாம் அறிந்திருக்கவில்லை… அவ்வளவு தான்.
இந்த சக்திகள் ஏற்கெனவே இருந்தவை தான்… இப்படி ஒரு
வழிமுறையில் அவற்றை பயன்படுத்த முடியும் என்பதை மட்டும் தான்
நாம் பிற்பாடு கண்டுபிடித்தோம்.
இதே போல், நாம் அறியாத, நம் கண்ணுக்கு புலப்படாத – இன்னும்
எத்தனையோ சக்திகள் இருக்க வாய்ப்பு உண்டு அல்லவா…?
நமக்கு தெரியவில்லை, உணர முடியவில்லை, பார்க்க இயலவில்லை
என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர –
இல்லை… இல்லவே இல்லை – இருக்கும் என்று நம்புபவன் முட்டாள் –
என்றெல்லாம் சொல்லுவது சரியாகுமா…?
இந்த கட்டுரையை எழுத முற்பட்டபோது, முன்பொரு தடவை
துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்கள் எழுதியிருந்தது நினைவிற்கு வந்தது..
அவற்றையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்….
ஆசிரியர் சோ சொன்னது – ( என் நினைவிலிருந்து, என்வார்த்தையில்
சொல்கிறேன்…)
…

…
நமக்கு எல்லாம் தெரிவது கிடையாது; நம்மையும் மீறி நிறைய
விஷயங்கள் நடக்கின்றன…அவை ஏன் இப்படி நடந்தன என்று
யோசித்துப் பார்த்தால் வியப்பு தான் மிஞ்சும்…..
பல வருடங்களுக்கு முன்னர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நரசிம்மராவ் – இனி அரசியல் போதும் ஓய்வில் போகலாம் என்று எண்ணினார்…. ஆனால் –
ஒன்றுக்கொன்று சற்றும் சம்பந்தம் இல்லாத சில விஷயங்கள் நிகழ்ந்து,
அவரை பிரதமர் பதவியில் கொண்டு சென்று உட்கார வைத்தது.
இது எப்படி நிகழ்ந்தது…?
அப்போது மைனாரிடி ஆட்சியில் பிரதமராக இருந்தவர் ஜனதா கட்சியை சேர்ந்த சந்திரசேகர்… ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அவருக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்தது.
ஒரு நாள் ஹரியானா போலீசார் 2 பேர் ராஜீவ் காந்தி வீட்டை வேவு
பார்த்தனர் என்று தெரிய வந்தது. ராஜீவ், அதை சந்திரசேகர் தான் ஏற்பாடு செய்திருக்கிறார் என்று நினைத்து கோபம் கொண்டார்.
ஆனால், உண்மையில், சந்திரசேகருக்கும் இதற்கும் எந்தவித
சம்பந்தமும் இல்லை. இது ஏதோ லோக்கல் போலீஸ் செய்த வேலை…!
ராஜீவுக்கு கோபம் வந்தது; சந்திரசேகருடன் மனஸ்தாபம், சண்டை வந்தது… விளைவு – ராஜீவ் காங்கிரசின் ஆதரவை விலக்கிக் கொண்டார். சந்திரசேகரின் ஆட்சி கவிழ்ந்தது….
மத்தியில் பாராளுமன்றத்திற்கு – மீண்டும் பொதுத் தேர்தல் வருகிறது…
சூழ்நிலை ராஜீவ் காந்திக்கு சாதகமாக இருக்கிறது. ராஜீவ் தேர்தல்
பிரச்சாரங்களில் தீவிரமாக கலந்து கொள்கிறார். மீண்டும் காங்கிரஸ் கட்சி ஜெயித்து, ராஜீவ் காந்தி பிரதமர் ஆகக்கூடிய வாய்ப்பு உருவாகிறது. நியாயமாகப் பார்த்தால், ராஜீவ் காந்தி தான் அடுத்த பிரதமர் ஆகி இருக்க வேண்டும்…… ஆனால் –
துரதிருஷ்டவசமாக ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி
உயிர் இழக்கிறார்…. அந்த அனுதாப அலையில், காங்கிரசுக்கு
தேர்தலி வெற்றி கிடைக்கிறது… ஆனால், தலைமை ஏற்க தகுதியான
மூத்தவர்கள் யாருமில்லை….( திருமதி சோனியா காந்தி அப்போது
அரசியலுக்கு வரக்கூடிய மனநிலையிலேயே இல்லை….!)
யாரும் எதிர்பாராத வண்ணம் அதிர்ஷ்டம், கிரீடத்தை நரசிம்மராவ்
தலையில் சூட்டியது… ஓய்வு பெற்று வீட்டுக்கு போக முடிவு
செய்திருந்த நரசிம்மராவ் அவர்கள் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆகிறார்….!!!
இது எப்படி, ஏன் நடந்தது…? அதற்கு 4 மாதங்களுக்கு முன்னதாக யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் நரசிம்மராவ் இந்நாட்டின் பிரதமர் ஆவாரென்று…!!!
சம்பந்தமே இல்லாமல், ஹரியானா போலீஸ் யாரையோ வேவு
பார்க்கப்போய், அது நரசிம்மராவ் பிரதமர் ஆனதில் சென்று முடிந்தது….!!!
“சோ” அவர்கள் சொன்ன இன்னொரு சம்பவம் கூட நினைவிற்கு
வருகிறது… காஞ்சி பெரியவர் சம்பந்தப்பட்டது.
சோவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கா, மற்றும் அவரது நண்பர்கள்
சிலருமாக சேர்ந்து, சென்னையிலிருந்து காஞ்சிக்கு காரில் பயணம்
சென்று கொண்டிருக்கிறார்கள் – காஞ்சி பெரியவரை தரிசனம் காண…
…

…
பயணத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, சோ ஏதோ ஒரு விஷயத்தை
குறிப்பிட்டு, “காஞ்சி பெரியவர் ஏன் அப்படிச் செய்தார்..?” என்று
கேட்டிருக்கிறார்….மற்றவர்கள் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல்
“ஏதோ காரணம் இருக்கும்… செய்திருக்கிறார்.. விடு” என்று சொல்லி
விட்டு, வேறு விஷயத்திற்கு சென்று விட்டார்கள். ஆனால், இந்த
விஷயம் சோவின் மண்டையை குடைந்துகொண்டே இருந்தது…!!!
காஞ்சிக்கு சென்றவர்கள், பெரியவர் ஒரு மண்டபத்தில் அமர்ந்து
200-250 பேர் கொண்ட ஒரு கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டு
இருப்பதை பார்த்து, இவர்களும் கூட்டத்தோடு உட்கார்ந்து விட்டார்கள்.
பல விஷயங்களைப்பற்றியும் பேசிக்கொண்டு வந்த பெரியவர்,
“சோ”வை பார்த்து, “அதை நான் ஏன் அப்படி செய்தேன் என்று உனக்கு
தெரிந்தே ஆக வேண்டும் இல்லையா – அதுவரை உன் மூளை சும்மா
இருக்காது.. அப்படித்தானே…?” என்று கேட்டிருக்கிறார்…
சோவுக்கு என்னவோ போல் ஆகி விட்டதாம். அங்கிருந்து அப்போதே எழுந்து ஓடிவிடலாமா என்று கூட நினைத்தேன் என்றார்.
பின்னர் சோவுக்கும், மற்ற எல்லாருக்கும் சேர்த்தே அந்த விஷயத்தை
பற்றியும், தான் அதை எதனால் செய்ய நேர்ந்தது என்பதையும் விளக்கி
இருக்கிறார் பெரியவர்…
சோ இதைப்பற்றி பின்னர், ஒரு கூட்டத்தில் கூட பேசினார்.. நான் அதை
நேரிலேயே கேட்டேன்…
அவர் சொன்னார் – மஹாஸ்வாமி எல்லார் எதிரிலும் என்னிடம் அப்படி கேட்டவுடன் நான் திகைத்துப் போய் விட்டேன். இங்கே தாம்பரம் அருகே காரில் பயணம் செய்யும்போது பேசிக்கொண்டிருக்கிறோம். அங்கே போய்ச்சேர்ந்தவுடன், நேராக கூட்டத்தில் போய் உட்கார்ந்து விட்டோம். நாங்கள் பயணம் செய்யும்போது பேசியது, பெரியவருக்கு எப்படி தெரிந்தது….? யோசித்து யோசித்து மண்டை குழம்பியது தான் மிச்சம்…
இந்த மாதிரியெல்லாம் சில சக்திகள் இருக்கின்றன….
பெரிய பெரிய மகான்கள் எல்லாம் அதைப்பற்றி எல்லாம் வெளியில்
சொல்லிக் கொள்வதே இல்லை….
இந்த மாதிரி நம்மை மீறிய, நமக்கு தெரியாத சக்திகள் நிறைய
இருக்கின்றன…. இந்த மாதிரி எல்லாம் நிறைய சம்பவங்கள் எல்லார்
வாழ்விலும் நடக்கின்றன… நாம் தான் அவற்றை உணர்வதில்லை….!!!



நரசிம்மராவ் பிரதமர் ஆனதில் இன்னொரு தற்செயல் நிகழ்வு.. அந்த எலெக்ஷனில் ராஜீவுக்கு இல்லாததால் அப்பொழுது சீனியராக இருந்த என் டி திவாரி பிரதமராக எல்லா சந்தர்ப்பமும் இருந்தது. ஆனால் , அந்த தேர்தலில் அவர் தன் தொகுதியில் தோல்வி அடைந்ததால் அடுத்த சீனியர் ஆன நரசிம்மராவை தேடி பதவி வந்தது. இதில் இன்னொரு ஆச்சர்யம், நரசிம்மராவ் அந்த தேர்தலில் போட்டியிடவே இல்லை!
bandhu,
பரவாயில்லையே… நிறைய விஷயங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களே…!
எனக்கும் இதிலெல்லாம் ஆர்வம் உண்டு.. ஆனால் இப்போதெல்லாம்
பல சம்பவங்கள் சட்டென்று நினைவிற்கு வருவதில்லை. யாராவது எடுத்துக்காட்டினால், தான் நினைவிற்கு வருகிறது….! நன்றி நண்பரே.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
K.M.sir,
I remember, you also once wrote about how
Allahabad judgement, Mrs.Gandhi’s disqualification,
and imposition of emergency lead to the
impossible possibility of Morarji Desai becoming
the next Prime Minister. Many things happen like this.
Certain things lead to certain unexpected happenings.
What CHO Sir said is absolutely true.
Many times we are unable to understand what happens,
why happens and how happens.
BVS,
ஆமாம். எனக்கும் லேசாக நினைவிற்கு வருகிறது. மொரார்ஜி தேசாய் அவர்களைப்பற்றி
எழுதும்போது அந்த மாதிரி சொன்ன ஞாபகம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
‘பதவி பூர்வ புண்யானாம்’ – பில் கிளின்டன், அவருடைய தனிப்பட்ட கெட்ட பழக்கங்களை மீறி 8 வருடம் புகழ்வாய்ந்தவராக இருந்தார். சர்வ சாதாரணமாக ஹிலாரி அடுத்த பிரசிடென்டாக ஆகியிருப்பார். ஆனால் கடைசி நிமிடத்தில் ஒபாமா கேன்டிடேட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒபாமாவின் 8 வருடத்துக்குப் பின்பு, சர்வ சாதாரணமாக ஹில்லரி வந்திருக்கவேண்டும். யாருமே எதிர்பாராவண்ணம், வெறும் பேச்சைக் கொண்டு டிரம்ப் பிரசிடென்டாக ஆனார் (ஹிலாரி பாப்புலர் வாக்குகள் அதிகம் பெற்றும்). ‘விதி’ அல்லது ஒருவர் ஒரு பதவிக்கு வருவதற்கும் கொடுப்பினை வேண்டும்.
கா.மை சார்… I am taking liberty to write few things.
1. எனக்கு ஒரு சமயம் சத்ய சாயி பாபா கனவில் வந்து, ஒரு விஷயம் ஒரு தேதியில் நடக்கும் என்று சொன்னார் (இதைப் பற்றி இங்கு விவரிக்கவில்லை). நான் அப்போது அவருடைய பக்தனல்லன். ஆனால் அவர் சொன்னது, சொன்ன தேதியில் நடந்தது (நடந்த விஷயம் என்னுடைய controlலிலோ அல்லது யாருடைய controlலிலும் இல்லை).
2. ஒரு முக்கியமான தருணத்தில் பூட்டிய பெட்டியின் சாவியை ஊரிலேயே விட்டுவிட்டுவந்தது எனக்கு ஞாபகம் வந்தது. என் பாக்கெட்டிலும் இல்லை (நான் சென்னையில் ஹோட்டலில் check in செய்தேன். என் ஊர் தாம்பரம் தாண்டி). கடவுளிடம் முறையிட்டு ரொம்ப tensionல் இருந்தேன். சிறிது நேரத்தில் என் பாக்கெட்டைத் துழாவியபோது அந்தச் சாவி இருந்தது.
3. புத்தகத்தில், பூட்டிய கதவைத் தாண்டிச்சென்றவர்களையும் (தாண்டும்போது அழுத்தமான ஒரு திரையைக் கடந்து செல்லும் உணர்வு, ஆனால் சென்ற சீடனின் குரு, சீடனைக் கண்ணை மூடிக்கச் சொன்னாராம்), இன்னும் பலப் பல விஷயங்களையும் எழுதியிருப்பதைப் படித்தேன். இதுபோன்ற, தன்னனுபவப் புத்தகங்களை (துறவிகள் எழுதியது) படித்திருக்கிறேன்.
4. காஞ்சி முனிவரைப் பற்றியும் சாய்பாபாவைப் பற்றியும் பலப் பல நிகழ்வுகளைப் படித்திருப்பீர்கள். உதாரணமா, திருவண்ணாமலை சாமியார் பெரியவரைப் பார்க்கவருகிறார். (பரமாச்சாரியார் கூப்பிட்டு அனுப்பியிருந்தார்). எல்லோரும் பரமாச்சாரியாரைச் சூழ்ந்து இருக்கும்போது, விசிறி சாமியார் அவர் முன்புஉட்கார்ந்திருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். கொஞ்ச நேரம் கழித்து விசிறி சாமியார் கிளம்பிவிட்டார் (வாயைத் திறக்காமல் இருவரும் எண்ணங்களைக் கடத்தி பதில் வாங்கிக்கொண்டுள்ளனர். பரமாச்சாரியார் ஓரிக்கைக்கே விசிறி சாமியாரை அந்தக் கோவிலோடு இருக்கும்படி அழைத்ததாகவும், அதற்கு விசிறி சாமியார், தான் திருவண்ணாமலையிலேயே இருந்துகொள்கிறேன் என்றும் சொன்னார் என்று பின்னர் விளக்கினர். ஆனால் அதுதான் பேசிக்கொண்டார்களா என்பதை யாரும் அறியார்). இதுபோன்று, ஒருவரைப் பார்க்கும்போது, அப்போது அவருடைய மொழியில் temporaryயாகப் பேசக்கூடிய திறமையும் தியானத்தில் கரைகண்டவர்களுக்கு (அல்லது துறவறத்தில் சிறந்தவர்களுக்கு) கிடைக்கும் அறிவாகும்.
எதையும், தன் அனுபவம் இல்லாமல், ‘சும்மா கதை விடறாங்க’ என்று சொல்லிவிட்டுச் செல்வது எல்லோரும் செய்வதுதான். உதாரணமாக என்னுடைய சில அனுபவங்களையே, என் குழந்தைகள், ‘ஹா ஹா ஹா’ என்று சிரித்து கடந்து விட்டனர். ஆனால் எனக்குத் தெரியும் நடந்தது முற்றிலும் உண்மை என்று.
நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அதனை ‘இறையருள்’ அல்லது நமக்கும் மீறிய சக்தி என்றுதான் கொள்ளவேண்டும்.
புதியவன்,
நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன். எனக்கும் கூட சில அனுபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எனக்கு எந்த விசேஷ சக்தியும் இருக்கிறது என்கிற அர்த்தத்தில் இதைச் சொல்லவில்லை. பிரார்த்தனை ஏற்கப்பட்டு, சில விஷயங்கள் நடந்திருக்கின்றன என்று சொல்கிறேன்.
முக்கியமாக, மற்றவர்களுக்காக வேண்டினால், அதற்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கிறது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
// திருவண்ணாமலை சாமியார் பெரியவரைப் பார்க்கவருகிறார். (பரமாச்சாரியார் கூப்பிட்டு அனுப்பியிருந்தார்). எல்லோரும் பரமாச்சாரியாரைச் சூழ்ந்து இருக்கும்போது, விசிறி சாமியார் அவர் முன்புஉட்கார்ந்திருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். கொஞ்ச நேரம் கழித்து விசிறி சாமியார் கிளம்பிவிட்டார் (வாயைத் திறக்காமல் இருவரும் எண்ணங்களைக் கடத்தி பதில் வாங்கிக்கொண்டுள்ளனர். பரமாச்சாரியார் ஓரிக்கைக்கே விசிறி சாமியாரை அந்தக் கோவிலோடு இருக்கும்படி அழைத்ததாகவும், அதற்கு விசிறி சாமியார், தான் திருவண்ணாமலையிலேயே இருந்துகொள்கிறேன் என்றும் சொன்னார் என்று பின்னர் விளக்கினர். ஆனால் அதுதான் பேசிக்கொண்டார்களா என்பதை யாரும் அறியார்). //
ஐயா..
இந்தச் சம்பவம் ஒரு கற்பனை. இப்படி ஒன்று நடக்கவே இல்லை. இது ஓர் எழுத்தாளர் கற்பனையாக எழுதிய விஷயம். யோகியின் பக்தர்கள் இதனை ஏற்பதில்லை.
மற்றபடி மகாப்பெரியவரும் யோகியும் மானசீகமாக உரையாடினர் எங்கிருந்தபோதிலும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், யோகியாரை காஞ்சிப் பெரியவர் கூப்பிட்டனுப்பவும் இல்லை. அவர் உடனே புறப்பட்டு காஞ்சி செல்லவும் இல்லை. இதெல்லாம் அந்த “எழுத்தாளரின்” கற்பனை. இப்படி நிறைய கற்பனையாக எழுதுவது அவர் வழக்கம். (எழுத்தாளர் ஆயிற்றே!) இப்போடு டி.வி.புகழ் பேச்சாளராகவும் மாறி விட்டார். இனி என்ன இஷ்டத்திற்கு இட்டுக்கட்டி எழுதவும் பேசவும் வேண்டியதுதான். அறியாத அப்பாவிகள் அதனை நம்பவும் செய்வர்.
மகாப் பெரியவரின் குழந்தை போன்ற அடக்கமான சிரிப்பை “இடி இடி” எனச் சிரித்தார் என்று எழுதியவராயிற்றே அந்த மகானுபாவன்.
என்ன செய்ய இந்த மாதிரி ஆட்கள்தான் இப்போதைக்கு நிறைந்திருக்கின்றனர். ஆன்மிகவாதிகளாய் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
நல்ல விஷயங்கள் பதிவாகும் இத்தலத்தில் தவறாக ஏதும் செய்திகள் பதிவாகிவிடக் கூடாதே என்பதற்காக இந்த விளக்கம்.
ராமசந்திரன் – இந்தச் சம்பவத்தை நான் எங்கு படித்தேன் என்று நினைவில்லை (ஆனால் இரு இடங்களில் படித்தேன்). உண்மை என்று நம்பினேன். இங்கு நான் சொல்லவந்தது, பேசுவதற்கு மௌனமே போதும் என்பது. இதே வடிவில், வட இந்திய யோகி, பத்ரினாத் ஆலய பூசாரிகளிடம் பேசும்போது (அவர்கள் மலையாள நம்பூதிரிகள்), மலையாளத்தில் உரையாடியதையும், தர்க்காவின் அதிகாரியிடம் உருதுவில் பேசியதையும் (இரு மொழிகளும் அவருக்குத் தெரியாது) படித்திருக்கிறென். எப்படி என்று வினவியவருக்கு அவர் சொன்ன பதில், இதுவும் ஒரு சக்திதான் என்று அவர் சொல்லியிருக்கிறார் (அதற்குமேல் அந்தத் திறனுக்கு மதிப்பு கொடுக்கவில்லை அந்தத் துறவி).