முன்னாள் முதல்வருக்கு 100 தடவை எழுதியும் நடக்கவில்லை ……ஆனால் ……

………………………………………………………………………………………………..

………………………………………………………………

இன்று காலையில் அனைத்து செய்தித்தாள்களிலும் இடம் பெற்றுள்ள முக்கியமான இனிப்பான செய்தி.

தமிழ்நாட்டில் உள்ள 40,000 கண்மாய்களிலும் இலவசமாக வண்டல் மண் அள்ளிக் கொள்ளலாம். இந்த உத்தரவிற்காக விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். “தமிழ் இந்து”நாளிதழில் நான் முழுப்பக்கம் கட்டுரை எழுதினேன். முந்தைய தி.மு.க.அரசு செவிசாய்க்கவில்லை.

ஒரு ஊரின் கண்மாய் என்பது அந்த ஊர் மக்களுக்கு அட்சய பாத்திரம். வருடா வருடம் அக்கண்மாய் மராமத்து செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் மழை வெள்ளம் கொண்டு வந்து சேர்க்கும் மண்களை கண்மாய் வண்டல் மண்ணாக மாற்றி உரமேற்றி தருகிறது.அம்மண்ணை சம்சாரிகள் அள்ளிக் கொண்டு போய் சேர்த்தால் தான் நிலங்கள் வளம் பெறும்.கண்மாய்கள் ஆழமாகும்.

இது எல்லா கிராமங்களிலும் தொடர்ச்சியாக வருடாவருடம் நடைபெறும் வழக்கம். இதை உறுதிப்படுத்தும் முகமாகத்தான் அண்ணா தி.மு.க.அரசு”குடிமராமத்து”என்னும் முறையை கொண்டு வந்தது. வருடாவருடம் அந்தந்த ஊர் மக்களே கண்மாய்களை மராமத்து செய்து கொள்வது.

தி.மு.க.அரசு பதவியேற்றவுடன் குடிமராமத்து முறையை ரத்து செய்ததோடில்லாமல் கண்மாய்களில் வண்டல் மண் எடுப்பதை முற்றாக தடை செய்தது.

எங்கள் ஊர் கண்மாயில் நான் ஒரு கூடை மண் எடுக்க வேண்டுமானால் ஐந்து துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.1.வருவாய்த்துறை.2.வனத்துறை.3.கனிமவளத்துறை.4.பொதுப்பணித்துறை.5.ஊரகவளர்ச்சித்துறை…இது போக காவல்த்துறையும் தலையிடும்.

இந்த ஐம்பூதங்கள் தான் அனைத்து கண்மாய்களையும் நாசமாக்கிய நாசகாரக்கும்பல்.

அந்தந்த வருடம் மண் அள்ளவில்லை என்றால் அந்தக் கண்மாய் என்னவாகும்.மேடேறி மண்மேதி தண்ணீர் தேங்காத ஓடையைப் போல் மாறிப்போகும்.வெள்ளாமை செய்ய தண்ணீர் காணாது. கண்மாய் பெருகி தண்ணீர் இல்லையென்றால் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிடும். ஆக சம்சாரிகள் தங்கள் நிலங்களை தரிசாகப் போட்டுவிட்டு பெரு நகரங்களில் குடியேறி வயிற்றுப் பிழைப்பிற்காக கிடைத்த வேலையை செய்து உயிர் வாழ்கின்றனர்.

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பத்திரிக்கைகளிலும் காட்சி ஊடகங்களிலும் தீபாவளி தைப்பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் செய்திகளை நீங்கள் பார்த்திருக்கலாம் .

ஏழாயிரம் பஸ்கள் இயக்கப்பட்டன.

எட்டு லட்சம் பேர் சென்னையை விட்டு வெளியேறினார்கள்.சென்னை வெறிச்சோடியது”

என்று சொல்லி விட்டு சென்னையின் ஜனசந்தடி மிகுந்த இடங்கள் வெறிச்சோடிக் கிடப்பதை தொலைக்காட்சிகள் படம் பிடித்து காட்டும்.இவ்வளவு ஜனங்களை நகரவாசிகளாக மாற்றியது எது…???போதுமான மழை இருந்தும் தண்ணீரை தேக்கி வைக்க வழியின்றி கண்மாய்களை நாசமாக்கியதுதான்.

தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்கு நூறு கடிதங்கள் எழுதியிருப்பேன்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறேன்.

எந்தப் பதிலும் எனக்கு கொடுக்கவில்லை.ஒரு தவறான வழிகாட்டுதலில் முந்தைய அரசு செயல்பட்டதாகவே நினைக்கிறேன்.இந்த அரசு பதவியேற்றவுடன் எப்படி விவசாயிகளின் பிரச்சினையை கண்டுபிடித்தார் முதல்வர் விஜய் அவர்கள்.

அதிகாரிகள்தான் மாண்புமிகு முதல்வரிடம் எடுத்துச் செல்கிறார்கள்… இதுதானே உண்மை… முதல்வர் விஜய் அவர்கள் பரம்பரை விவசாயி இல்லையே. இது மாதிரி மதிப்பிற்குரிய முன்னாள் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களிடம் ஏன் அதிகாரிகள் இதுமாதிரியான பிரச்சினைகளை கொண்டு செல்லவில்லை என்பதே என் கேள்வி.

குறிப்பு:

சுமார் பத்தாண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்து நீர்நிலைகளின் பராமரிப்பு இன்றைய மோசமான நிலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு “சூல்”எனும் நாவலை எழுதி சாகித்திய அகாதமி விருது உட்பட மதிப்பு மிகுந்த ஐந்து விருதுகளைப் பெற்ற ஒரு எழுத்தாளன் நான்.

முன்னாள் முதல்வர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்களிடம் இப்பிரச்சினையை கொண்டு செல்லாத துறைசார்ந்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். ( திரு.ஸ்டாலின் அவர்களை குறை சொல்ல மனமில்லை என்பதாலோ ….!!! )

பதவியேற்றவுடன் சம்சாரிகளின் மிக முக்கியமான பிரச்சினையை கையிலெடுத்த மாண்புமிகு முதல்வர் திரு.விஜய் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

( மேலே இருப்பது புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.சோ.தர்மன் அவர்களின் எழுத்து … !!!)

………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக