……………………………………..

……………………………………..
`தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற படத்தின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் பொறுப்புகளை ஏற்றுள்ளதோடு, அதில் நடிக்கவும் செய்திருக்கிறார் சந்திரபாபு. அதுமட்டுமல்ல, நடன ஆசிரியராகவும், பின்னணிப் பாடகராகவும் பணிபுரிந்திருக்கிறார். இதுவரை யாருமே செய்யத் துணிந்திராத ஒரு பெரும் சாதனைதான் இது.
இந்தப் படத்தில் ஊமையாக வரும் சந்திரபாபுவின் உணர்ச்சி மிக்க நடிப்பைப் பார்த்த பிறகு, இந்தப் பிறவிக் கலைஞருக்கு ஒரு சொட்டுக் கண்ணீரை என் காணிக்கையாகச் செலுத்திவிட்டு வரலாம் என்று அவர் வீட்டுக்குச் சென்றேன். மாடிப்படி ஏறிக் கதவைத் தட்டினேன். கதவு திறக்கப்பட்டது!
நடிகர் நம்பிராஜன் வந்து உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு சந்திரபாபு சோகமே உருவாக சோபாவில் உட்கார்ந்திருந்தார். “படத்தைப் பார்த்தேன். உங்கள் நடிப்பும், சில இடங்களில் உங்கள் டைரக்ஷனும் பிரமாதம். எனது வாழ்த்துகள்’’ என்றேன் நான்.
சோர்வுடன் காணப்பட்ட பாபு, சோபாவிலேயே ஒரு துள்ளுத் துள்ளிக் குதித்தார். “ஆஹா! ஒரு கலைஞனுக்கு இதைவிட வேறென்ன சார் வேணும்… எனக்கு லட்ச ரூபாய் கிடைத்த மாதிரி இருக்கு. புது முயற்சிகள் ஏதாவது செய்தா, அதை சில பேர் வாயாலேகூடப் பாராட்ட மாட்டேங்கறாங்களே…’’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் சோர்ந்து உட்கார்ந்துவிட்டார். அவர் முகத்தில் வருத்தத்தின் சாயலைக் கண்டேன்.
“படம் நான் நினைச்ச மாதிரி வரலே! என்னமோ `பிளான்’ பண்ணினேன். என்னமோ ஆயிடுச்சு…’’ என்று கல்லூரியில் தான் கேட்ட `குரூப்’ கிடைக்காத மாணவனைப்போல் மன வேதனைப்பட்டார் சந்திரபாபு.

பாவம்! தாம் ரொம்பக் கஷ்டப்பட்டு எடுத்த சில காட்சிகள் படத்திலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதைக் குறித்து உள்ளம் குமுறிய அவர், தம் உணர்ச்சிகளை அடக்கிவைப்பதற்கு எத்தனையோ முயன்றார். ஆனால், அடுப்பிலிருக்கும் பாத்திரத்தின் மூடியையும் அகற்றிக்கொண்டு நீராவி வெளிவருவதுபோல் அவருடைய கலை உணர்வு அவரையும் மீறி, அடிக்கடி பீறிட்டுக்கொண்டு வந்து வெடித்தது. தம் லட்சியத்திற்கும், சாதனைக்கும் இடையே இருந்த இடைவெளியை மானசிகமாகக் கண்டு பெருமூச்சுவிட்டார் அவர். தம் கலைத்திறன் முழுவதையும் வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் அவருடைய கண்களில் தேங்கி நின்றது. அழாத குறைதான்.
சற்று மௌனமாகத் தரையை நோக்கியவாறு உட்கார்ந்துவிட்டு, “ஐயாம் சாரி. எதையோ `திங்க்’ பண்ணிக்கிட்டிருந்துட்டேன். கேளுங்கள், சொல்லப்படும்’’ என்றார் புன்சிரிப்புடன்.
“சொல்லுங்கள், கேட்கப்படும்’’ என்றேன் நான் பதிலுக்கு.
“உங்களுக்குத்தான் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே. நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். அதுலே பெருமைப்படுகிறேன், எனக்கு அதைப் பற்றி கர்வமும், ஒருவித தலைக்கனமும்கூட உண்டு.’’
“தெரியும். அதனால் கிறுக்குப் பிடித்தவன் என்றுகூடப் பெயர் வாங்கியிருக்கிறீர்களே…’’
“ஆமாம்! ஆமாம்! எப்படியோ அப்படியொரு பெயரை வாங்கி விட்டேன்… இந்தப் படத்தைக்கூட `இவன் எங்கே டயத்துக்கு முடித்துக் கொடுக்கப் போறான்’ என்றே நினைச்சுக்கிட்டிருந்தாங்க. ஆறே மாசத்திலே முடிச்சுக் கொடுத்துட்டேன்.’’
“மாடி வீட்டு ஏழை’ என்னாச்சு… வருமா?’’
“என்ன அப்படிக் கேட்கறீங்க… செப்டம்பரிலே கொண்டு வந்துடுவேன். அது ஃபஸ்ட் கிளாஸ் கதை…’’
“முதன்முறையாக டைரக்ட் செய்திருக் கிறீர்களே, உங்க அனுபவம் என்ன?’’ என்று கேட்டேன் நான்.
“டைரக்ட் செய்வதற்கு தனித்திறமை வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதிலும் ஒழுங்காகப் பின்னப்பட்டிருக்கும் ஒரு பெரிய கதையை எளிதாக எடுத்துவிடலாம். ஆனால், ஒரு சிறுகதையையோ அல்லது இரண்டு மூன்று நிகழ்ச்சிகளையோ வைத்துக்கொண்டு, அதை `இன்டரஸ்டிங்கா’ படம் எடுப்பதில்தான் டைரக்டரின் திறமையும் சாமர்த்தியமும் அடங்கியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் நான் நடிகனாகவும் இருப்பதால், நடிக நடிகைகளின் திறமை என்ன, அதை எப்படி முழுமையா பயன்படுத்துவது என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இது ரொம்ப முக்கியம் இல்லையா?”
“இனிமேல் நீங்க டைரக்ட் செய்யற படத்திலேதான் நடிக்கப்போகிறீர்களா?’’
“அப்படியில்லையே…! நல்ல ரோலா இருந்தால், எந்தப் படத்திலேயும் நடிக்கத் துடிச்சுக்கிட்டிருக்கேன். கொஞ்ச நாளைக்கு முன்னால்கூட ஒரு புரொட்யூஸர் தன் படத்தில் நடிக்க எண்பது ஆயிரம் ரூபாய் தரேன்னாரு. ரோல் நல்லால்லே. முடியாதுன்னு மறுத்துட்டேன்.
நான் ஆர்ட்டிஸ்ட்… எனக்குப் பிசினஸே தெரியாது. இதோ இருக்கு பாருங்க. இதுதான் என் மனைவி…’’ என்று அருகிலிருந்த `ரேடியோ கிராம்’ பெட்டியைக் காட்டிவிட்டு, “இது கெட்டுப்போச்சு. ரிப்பேர் செய்வதற்குக் கையிலே பணம் இல்லே. அன்னிக்குத்தான் அந்த முதலாளி என்னை புக் பண்ண வந்தார். அந்த நிலைமையிலும் கான்ட்ராக்ட்டிலே கையெழுத்து போட மறுத்துட்டேன்… ஏன்னா, நான் `ரியல் ஆர்ட்டிஸ்ட்’ ” என்றார் அந்த மாடி வீட்டு ஏழை!
அதிலே என்ன சந்தேகம்… சந்திரபாபு நூற்றுக்கணக்கான படங்களில் நடிக்கவில்லையென்றாலும், அவர் இதுவரை நடித்துள்ள சில `கேரக்டர்’கள், ரசிகர்கள் மனத்தில் பல வருடங்களுக்குப் பசுமையாகவே இருக்கும்.
உதாரணமாக, `சபாஷ் மீனா’ ரிக்ஷாக்காரரையும், `சகோதரி’ பால்காரரையும், `போலீஸ்காரன் மகள்’ பூக்காரரையும், `கவலையில்லா மனிதனை’யும் எளிதில் மறந்துவிட முடியுமா? (சந்திரபாபு 1966-ல் தந்த பேட்டி ….!!!)
……………………………………………………………………………………………………………………………………………………



இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நிறைய கர்நாடக கச்சேரி வித்துவான்கள் பாடிகியிருக்கின்றனர். ஆனால் இதற்கு இசையமைத்தவர் தண்டபாணி தேசிகர் என்று இதுகாறும் தெரியாது. அவரது 'தாமரை…