ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே
அவிழுங்கள் பார்க்கலாம் !
சில சமயங்களில் நிஜம் என்பது –
கற்பனையை விட அதிசயமாக இருக்கும்.
ஒரு நிஜக்கதையை சொல்கிறேன்.
உங்களால் நம்ப முடிகிறதா சொல்லுங்கள் !
இது ஒரு அதிசயமான மருத்துவக்
கல்லூரியைப் பற்றியது.
அரசாங்க விதிகளின்படி –
ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டுமானால் –
அந்தக் கல்லூரிக்கு சொந்தமாக
குறைந்த பட்சம் 25 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
(பற்றவில்லை என்றால், அருகில் அரசு நிலம்
எதாவது இருந்தால் – அதையும் இழுத்து வேலிக்குள்
விட்டுக்கொண்டாவது! )
கல்லூரிக்கு சொந்தமாக குறைந்தது 300
உள்நோயாளிகளை (inpatient – beds)
அனுமதிக்கும் அளவிற்கு உள்கட்டமைப்புடன்
ஒரு மருத்துவ மனை இருக்க வேண்டும்.
இதில் 75% படுக்கைகள் ஆண்டு முழுவதும்
நிரம்பி இருக்க வேண்டும்.
வெளிப்புற நோயாளிகள் தினமும்
குறைந்த பட்சம் 400 பேராவது வர வேண்டும்.
அந்த அளவிற்கேற்றபடி,
தகுதிபெற்ற பேராசிரியர்கள்,
உதவிப் பேராசிரியர்கள், மருத்துவர்கள்,
செவிலியர், உதவியாளர்கள்
கல்லூரியில் பணி புரிய வேண்டும்.
இந்த அளவிற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள்
இருந்தால் தான் மாணவர்களுக்கு தரமான
மருத்துவக் கல்வியை அளிக்க முடியும் என்பதால்
இவ்வளவு விதிமுறைகள்.
இத்தனையும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தாலும்,
உடனே அனுமதி கொடுக்கும் வழக்கம் கிடையாது.
முதல் ஐந்து ஆண்டுகள்,ஒவ்வொரு ஆண்டும் –
தற்காலிக அனுமதி கொடுக்கப்படும்!
ஒவ்வொரு ஆண்டும் அந்த மருத்துவக் கல்லூரி,
மற்றும் மருத்துவமனை –
இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளின்படி
இருக்க வேண்டிய வசதிகளை கொண்டுள்ளதா
என்று – ஒரு நிபுணர் குழுவால்,
நேரில் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே
அத்தகைய அனுமதியும் வருடா வருடம்
புதுப்பிக்கப்படும்.
இது போல் ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னரே
அந்த மருத்துவக் கல்லூரிக்கு
நிரந்தர அனுமதி கிடைக்கும் !
ஆனால் இந்த குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரியில்
நடப்பது கொஞ்சம் வித்தியாசமான கதை.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் பார்த்திருப்பீர்கள்.
திடீரென்று மருத்துவ மனை, நோயாளிகள்
எல்லாரும் உருவாக்கப்படுவார்கள்.
அது போல் இந்த மருத்துவ மனையில்,
கட்டிடங்கள் உள்ளனவே தவிர, மாணவர்களுக்கு
தேவையான லேப் வசதி, தகுதியும் அனுபவமும்
வாய்ந்த ஆசிரியர்கள், உள் நோயாளிகள்,
வெளிநோயாளிகள் என எதுவுமே
நிரந்தரமாக இல்லை.
ஆனால் -இந்திய மருத்துவ கழக்த்தின் அதிகாரிகள்
ஆய்வுக்கு வரும்போது மட்டும் எல்லாமும்
தயார் செய்யப்படும் ! எப்படி ?
முன்கூட்டியே தகவல் மட்டும் கிடைத்து விட்டால்,
இது ஒரு பிரச்சினையே இல்லை இவர்களுக்கு !
வாடகைக்கு எடுத்த கட்டில்,
மெத்தைகளில்- நோயாளிகளை தற்காலிகமாக
கூலிக்குப் பிடித்து வந்து படுக்க வைப்பது –
வெளி இடங்களில் பணி புரியும் மருத்துவர்களையும்,
மற்றவர்களையும் ஒரு வாரத்திற்கு மட்டும் –
விசேஷமாக கவனித்து சம்பளம் கொடுத்து
அழைத்து வருவது – போன்ற
மந்திர மாயங்களைச் செய்து !
ஆய்வு முடிந்து அதிகாரிகள் சென்ற மறுகணமே –
அத்தனை செட் களும் கலைக்கப்படும்.
மருத்துவர்கள், நோயாளிகள், கட்டில், மெத்தை
இதர பொருட்கள் சகலமும் மறைந்து விடும்.
தொடர்ச்சியாக பிரம்மாண்டமான வெறும்
கட்டிடங்களும், அங்கு படிக்கும் மாணவர்களும்
மட்டுமே அங்கு இருப்பார்கள் !
எங்கே இருக்கிறது இந்த மாய மருத்துவ கல்லூரி
என்கிறீர்களா ? விழுப்புரத்திலிருந்து – புதுச்சேரிக்கு
தரை மார்க்கமாக போயிருக்கிறீர்களா ?
அடுத்த தடவை போனால் பாருங்கள் –
வில்லியனூர் அருகே குடப்பாக்கம் கிராமத்துப்
பக்கம் தான் !
யார் இத்தகைய ஒரு அற்புதத்தை நடத்துவது ?
எப்படி முடியும் என்கிறீர்களா ?
நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு
இவை எல்லாம் இயலாத காரியங்கள் தான் ?
ஆனால் இந்த ஜெகத்தையே ரட்சிக்கும்
மனிதர்களால் முடியாத காரியமும் உண்டோ ?!
(அடிப்படைச் செய்தி உபயம் -ஜூனியர் விகடன்)



இந்த மாதிரி
பாவி-களை
அடையாளம் காட்டிய
ஜூவி-க்கு
நன்றி சொல்லுங்கள் …………………
நன்றியுடன்……
ராஜசேகர்.ப