கோபி பாலைவனம் பற்றி – மிக சுவாரஸ்யமான சில விஷயங்கள்….!!!

……………………………..

…………………………………

……………………………………

( ப்ரெஸ்வால்ஸ்கி குதிரை … )

……………………………………

மங்கோலிய மொழியில் ‘கோபி’ என்றால் ‘நீர் இல்லாத இடம்’ அல்லது ‘பெரிய பாறைச் சமவெளி’ என்று பொருள். அதன் பெயருக்கேற்ப, இங்கு 95% நிலப்பரப்பு வெறும் பாறைகளாலும், வறண்ட சமவெளிகளாலும் ஆனது. வெறும் 5% மட்டுமே மணல் குன்றுகள் நிறைந்து காணப்படுகின்றன.

கோபி ஒரு குளிர்ச்சியான பாலைவனமாக இருப்பது ஏன் .. ???

இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 முதல் 5,000 அடி (910 – 1,520 மீட்டர்) உயரமுள்ள ஒரு பெரிய பீடபூமியில் அமைந்துள்ளது.

உயரம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பநிலை குறையும் என்ற விதிப்படி, இந்த உயரமான அமைவிடமே இதன் கடும் குளிருக்கு முக்கிய காரணமாகிறது.

கோபி பாலைவனம் உலகின் மிகப் பெரிய குளிர் பாலைவனங்களில் ஒன்று. மங்கோலியா மற்றும் சீனாவின் பரந்த நிலப்பரப்பில் சுமார் 13 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்திருக்கும் இந்தப் பகுதி, பல தசாப்தங்களாக சிறிது சிறிதாக விரிவடைந்து கொண்டே இருந்தது.

காலநிலை மாற்றம், அதிகப்படியான மேய்ச்சல், மரவெட்டல், புல்வெளிகளை விவசாய நிலங்களாக மாற்றுதல் ஆகிய காரணங்களால் பசுமையான நிலங்கள் மெதுவாக மணலாக மாறின. இருந்தாலும், நீண்ட காலம் இந்தப் பிரச்சினை உலகின் கவனத்தை பெரிதாக ஈர்க்கவில்லை.

ஆனால் 1983-ஆம் ஆண்டு, வட சீனாவிலிருந்து எழுந்த ஒரு மிகப்பெரிய தூசிப் புயல் கோடிக்கணக்கான டன் மணல் மற்றும் தூசியை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் சுமந்து வந்து பெய்ஜிங்கை மூடியது.

பகல் நேரத்திலேயே வானம் மஞ்சள் நிறமாக மாறியது. சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சலால் அவதிப்பட்டனர்.

அந்தச் சம்பவம் சீன அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்தது.

பாலைவனம் என்பது எல்லைப் பகுதியில் இருக்கும் ஒரு புவியியல் பிரச்சினை மட்டும் அல்ல; அது நாட்டின் தலைநகரையே முடக்கக்கூடிய தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பிரச்சினை என்பதை அரசு உணர்ந்தது.

இதையடுத்து, சுமார் 4,500 கிலோமீட்டர் நீளத்தில் மரப் பாதுகாப்பு வளையங்கள் உருவாக்கப்பட்டன. கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டன. மணலைக் கட்டுப்படுத்த வேலிகள் அமைக்கப்பட்டன. பாலைவனத்தில் வளரும் புதர்கள் மற்றும் புற்கள் நடப்பட்டன. அதிகப்படியான மேய்ச்சலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் ஒரு பெரிய பிரச்சினை தொடர்ந்து நீடித்தது…..என்ன அது … ???

பல பகுதிகளில் பாலைவன மண் கான்கிரீட் போல இறுகிப்போயிருந்தது.

மழை பெய்தாலும் தண்ணீர் மண்ணுக்குள் இறங்கவில்லை. மரக்கன்றுகளின் வேர்கள் பரவ முடியவில்லை. பல கோடி மரங்கள் நடப்பட்டாலும் அவற்றில் கணிசமான பகுதி உயிர் பிழைக்கவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், பல இடங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

அப்போது மங்கோலிய பாதுகாப்பு உயிரியல் அறிஞரான ஒலிவர் கண்பாதர், ஆஸ்திரிய சூழலியல் அறிஞரான பெட்ரா காட்சென்ஸ்கி, வனவிலங்கு மருத்துவரான கிறிஸ் வால்சர் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் ஒரு வித்தியாசமான கருத்தை முன்வைத்தனர்.

“இந்த நிலத்தை மனிதன் மட்டும் காப்பாற்ற முடியாது. ஒருகாலத்தில் கோபியின் சூழலியலை சமநிலையில் வைத்திருந்த –

ப்ரெஸ்வால்ஸ்கி காட்டு குதிரைகளை –

மீண்டும் அறிமுகப்படுத்துங்கள். இயற்கை தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளத் தொடங்கும்.”

அந்த யோசனை பலருக்கு நம்ப முடியாததாக இருந்தது.

ப்ரெஸ்வால்ஸ்கி குதிரை சாதாரண குதிரை அல்ல. உலகில் இன்று வாழும் ஒரே உண்மையான காட்டு குதிரை என்று பல உயிரியல் அறிஞர்கள் கருதுகின்றனர். வீட்டுக் குதிரைகளுக்கு 64 குரோமோசோம்கள் உள்ளன. ஆனால் ப்ரெஸ்வால்ஸ்கி குதிரைகளுக்கு 66 குரோமோசோம்கள் உள்ளன.

மங்கோலியர்கள் இந்தக் குதிரையை “தாகி” என்று அழைக்கிறார்கள். அதற்கு “அடக்க முடியாத குதிரை” என்று பொருள்.

19ஆம் நூற்றாண்டு வரை கோபி பாலைவனத்தில் பெருமளவில் வாழ்ந்த இந்தக் குதிரைகள், மனித வேட்டை, கால்நடை மேய்ச்சல் மற்றும் வாழ்விட அழிவு காரணமாக 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் இயற்கையிலிருந்து முற்றிலும் மறைந்துவிட்டன.

உலகில் மீதமிருந்தவை உயிரியல் பூங்காக்களில் இருந்த சில டஜன் குதிரைகள் மட்டுமே.

இந்த யோசனைக்கு பல உயிரியல் விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“பல தலைமுறைகளாக ஜூவில் வளர்ந்த குதிரைகளுக்கு காட்டில் வாழத் தெரியாது. கோபியின் மைனஸ் 40 டிகிரி குளிரையும், வறட்சியையும், ஓநாய்களையும் அவை சமாளிக்க முடியாது. அவற்றை பாலைவனத்தில் விட்டால் உலகில் மீதமிருக்கும் இந்த அரிய இனமே அழிந்துவிடும்.”

ஆனால் பெட்ரா காட்சென்ஸ்கி, கிறிஸ் வால்சர், ஒலிவர் கண்பாதர் ஆகியோர் பின்வாங்கவில்லை.

“எல்லா வழிகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டோம். இயற்கையை நம்பிப் பார்க்கும் நேரம் இது,” என்று வாதிட்டனர்.

இறுதியில் உலகின் பல உயிரியல் பூங்காக்களிலிருந்து குதிரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மங்கோலியாவிற்கு கொண்டு வரப்பட்டன.

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த குளிர்காலத்துக்கு பிறகு ஒரு குதிரை கூட மிஞ்சாது. இது முற்றிலும் கோமாளித்தனமான திட்டம்” என பல மிருகநல ஆர்வலர்கள் ஆருடம் சொன்னார்கள்

அவர்கள் கணித்ததுபோல் குளிர்கால ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

– 40 டிகிரி குளிர். பல அடி உயரம் பனி. உறைந்த நீர்நிலைகள். பசி. ஓநாய்களின் தாக்குதல்.

சில குதிரைகள் உயிரிழந்தன.

சில கர்ப்பிணி பெண் குதிரைகள் கருச்சிதைவையும் சந்தித்தன.

“போதும். இந்தப் பரிசோதனையை நிறுத்துங்கள்,” என்று பலர் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் அதன்பிறகு இயற்கை தனது அதிசயத்தை நிகழ்த்தத் தொடங்கியது.

பல தலைமுறைகளாக ஜூவில் வளர்ந்திருந்தாலும், அவற்றின் காட்டுமுன்னோர்களின் உள்ளுணர்வு மீண்டும் விழித்தெழுந்தது.

விரைவிலேயே அவை தங்களுக்கான சமூக அமைப்பை மீண்டும் உருவாக்கின. வலிமையான வயது வந்த ஆண் குதிரைகள் தலைவர்களாக உருவெடுத்தன.

ஒவ்வொரு தலைமை ஆண் குதிரையையும் சுற்றி இரண்டு முதல் எட்டு பெண் குதிரைகளும், அவற்றின் குட்டிகளும் இணைந்து குடும்பக் கூட்டங்களாக வாழத் தொடங்கின. சில கூட்டங்களில் பத்து முதல் பன்னிரண்டு பெண் குதிரைகளும் இருந்தன.

இந்தச் சமூக அமைப்பை யாரும் அவற்றுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. அது இலட்சக்கணக்கான ஆண்டுகளாக அவற்றின் மரபணுக்களில் பதிந்திருந்த இயற்கை உள்ளுணர்வு.

குளிர்காலத்தில் இந்த அமைப்பே அவற்றின் உயிரைக் காப்பாற்றியது.

தலைமை ஆண் குதிரை கூட்டத்தை ஒன்றாக வைத்திருந்தது. குட்டிகள் நடுவில் பாதுகாக்கப்பட்டன. பெரிய குதிரைகள் வெளியே நின்று பனிக்காற்றை எதிர்கொண்டன. அவை ஒன்றோடொன்று நெருக்கமாக நின்று உடல் வெப்பத்தைப் பகிர்ந்து கொண்டன.

பனி ஆறு அடி உயரம் படர்ந்திருந்தாலும், தங்கள் வலிமையான குளம்புகளால் அதை உடைத்து கீழே இருந்த புற்களை தோண்டி உண்டன.

உறைந்த ஏரிகளின் பனியை உடைத்து தண்ணீரைக் குடித்தன.

ஓநாய்கள் தாக்கினால், தலைமை ஆண் குதிரைகள் முதலில் அவற்றை எதிர்கொண்டு, பெண் குதிரைகளையும் குட்டிகளையும் பாதுகாப்பாக பின்னால் நிற்க வைத்தன.

இதைக் கண்ட விஞ்ஞானிகள் வியந்துபோனார்கள்.

காட்டில் பிறக்காத விலங்குகள் கூட, இயற்கை வழங்கிய உள்ளுணர்வுகளை இழக்கவில்லை என்பதை இந்தக் குதிரைகள் நிரூபித்தன.

அதன்பிறகு கோபியின் சூழலியல் மெதுவாக உயிர்பெறத் தொடங்கியது.

சுமார் 400 கிலோ எடையுள்ள இந்தக் குதிரைகள் ஒரு நாளுக்கு 15 முதல் 20 கிலோமீட்டர் வரை நடந்து மேய்கின்றன. அவை குதித்து ஓடுகையில் 800 கிலோ அழுத்தத்துடன் அவற்றின் குளம்புகள் மீண்டும் மீண்டும் இறுகிய மண்ணை மிதித்ததால், கான்கிரீட் போல இருந்த மேற்பரப்பில் எண்ணற்ற உடைசல்களும், குழிகளும், உருவாகின.

மழைநீர் அந்த விரிசல்களுக்குள் ஊடுருவியது. பல ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த விதைகள் முளைத்தன. புற்களும் புதர்களும் மீண்டும் வளரத் தொடங்கின.

ஒவ்வொரு குதிரையும் ஒரு நாளுக்கு சுமார் 15 முதல் 20 கிலோ சாணம் வெளியேற்றுகிறது. சாணம் தரையில் விழுந்த சில நிமிடங்களிலேயே எங்கிருந்தோ பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து எல்லாம் வந்த சாண வண்டுகள் சாணியை உருண்டையாக்கி பலநூறு மீட்டர் தூரம் இழுத்துச்சென்று, ஆங்காங்கே அதை மண்ணுக்குள் புதைத்தன. அதனுடன் விதைகளும் மண்ணுக்குள் சென்றன. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டன் இயற்கை உரம் கோபி முழுவதும் பரவியது.

மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகின. பூச்சிகள் தோன்றின. பூச்சிகளைத் தொடர்ந்து பறவைகள் வந்தன. பறவைகளைத் தொடர்ந்து சிறிய பாலூட்டிகளும், பின்னர் பெரிய வேட்டையாடிகளும் திரும்பின.

ஒரு குதிரையின் வருகையால், ஒரு முழு உணவுச் சங்கிலியே மீண்டும் உயிர்பெறத் தொடங்கியது.

இன்று மங்கோலியாவின் கோபி பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ப்ரெஸ்வால்ஸ்கி குதிரைகள் சுதந்திரமாக வாழ்கின்றன.

உலகளவில் அவற்றின் எண்ணிக்கை 2,500-ஐத் தாண்டியுள்ளது. ஒரு காலத்தில் இயற்கையில் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட இனம், இன்று உலகின் மிக வெற்றிகரமான வனவிலங்கு மீளறிமுகத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தக் கதை ஒரு குதிரையின் கதையல்ல.

இயற்கையை வெல்ல மனிதன் முயன்ற கதையும், இறுதியில் இயற்கையிடமிருந்தே தீர்வைக் கற்றுக்கொண்ட கதையும் இதுதான். ( உதவி – விக்கி, வலைத்தளம்,நியாண்டர் செல்வன்.. )

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக