………………………………….

…………………………………
கல்கி பத்திரிகைக்காக, தொடர்ந்து ‘உலகத் திரைப்பட விழா’க்களுக்குச் சென்று கொண்டிருந்தபோது, எங்கள் வாழ்வில் முக்கியமானதோர் அத்தியாயம் தொடங்கியது.
1986. ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில், பங்குகொண்டவர்களில் முக்கியமானவர் இயக்குநர் கே. பாக்யராஜ். கல்கி மூலம் ஏற்கெனவே அறிமுகம் ஆயிருந்ததாலும், தமிழன், எழுத்தாளன் என்கிற பல கூடுதல் அடையாளங்களும் இருந்ததாலும் அங்கே பாக்யராஜ் விரைவிலேயே மிக நெருக்கமாகிவிட்டார். நாங்கள் எழுதிய, எழுதிக்கொண்டிருக்கும் கதைகள் பற்றியும் அவர் அறிந்துகொண்டார்.
திடீரென்று ஓர் இரவு இயக்குநர் பாக்யராஜின் உதவியாளர் கதவைத் தட்டினார்.
“டைரக்டர் உங்களை நாளைக்கு டிஸ்கஷனுக்குப் புறப்பட்டு வரச்சொன்னாரு.. காலை ஆறு மணிக்குக் கெளம்பற கோவை எக்ஸ்பிரஸ்ல உங்க ரெண்டு பேருக்கும் டிக்கெட் போட்டாச்சு..” என்று தடாலடியாக அறிவித்தார். அங்கிருந்து அவருடன் புறப்பட்டுப்போய், பாலாவுக்கும் தகவல் தந்தாயிற்று.
‘சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா..’ என்று பிற்பாடுதான் புரிந்தது. அந்த வாய்ப்பைத் தவறவிடாமல், இரவோடிரவாக பேக் செய்து, தயாரானோம்.
சித்தோடு என்ற கிராமத்தில் அவருடைய பண்ணை வீட்டில் கதை விவாதத்தில் மறுநாளிலிருந்து கலந்துகொண்டோம்.
நாங்கள் இன்றளவும் திரு பாக்கியராஜிடம் பார்த்துப் பார்த்து வியக்கும் ஒரு விஷயம்.. அவர் கதை சொல்ல ஆரம்பித்தால், தங்குதடையின்றி ஒவ்வொரு காட்சியாக அழகாகக் கோத்து, சொல்லிக்கொண்டே வருவார். திடீரென்று நிறுத்தி, ‘அய்யோ, இதைச் சொல்ல விட்டுட்டேனே..?’ என்று ஒருபோதும் எந்தக் காட்சியையும் இடையில் புகுத்தியதே இல்லை.
கதை விவாதத்தின்போது ஏதாவது ஒரு காட்சி மாற்றப்பட்டுவிட்டால், அடுத்த முறை கதையைச் சொல்லும்போது, சரியான இடத்தில் அந்த மாற்றப்பட்ட காட்சியைத்தான் தவறாமல் சொல்லுவார். ஒவ்வொரு முறையும் ஆவலுடனும், முழு ஈடுபாட்டுடனும் அவர் கதையைச் சொல்வதே ஓர் அழகு.
திரைக்கதை அமைப்பது பற்றிய பாலபாடம் அந்த போதிமரத்தின் கீழ்தான் எங்களுக்கு சித்தித்தது.
பாக்யராஜை திரைக்கதை மன்னன் என்று ஏன் எல்லோரும் கொண்டாடுகிறார்கள் என்று அவருடன் பணிபுரிந்திருந்தால் புரியும். எதைச் சொல்ல முனைந்தாலும், அதை ஒரு வசனத் தகவலாகச் சொல்லாமல், அதை அழுத்தமாக வெளிப்படுத்தும் காட்சி ஒன்றால் விளக்க வேண்டும் என்பது அவர் இயல்பாகவே பின்பற்றும் ஒரு விதி. அவரிடம் ஒருமுறை ஒரு கேள்வி கேட்டோம்.
“ஒரு பாத்திரத்தின் பார்வையில் ஆரம்பிக்கும் ஃபிளாஷ்பேக்கில், அந்தப் பாத்திரத்தின் கோணத்தில்தானே அத்தனைக் காட்சிகளும் இருக்கவேண்டும்? அந்தப் பாத்திரமே இடம்பெறாத காட்சிகளும் இடம்பெறுவது திரை இலக்கணப்படி, பிழை இல்லையா..?”
“நியாயமான கேள்வி. நான் ஒரு எதிர்க்கேள்வி கேட்கிறேன். என்னுடைய கோணத்தில் ஒரு நிகழ்வைச் சொல்வதென்றால், என் பார்வையில் மற்றவர்களைக் காட்டலாமே தவிர, என்னையே அந்தக் காட்சியில் காட்டுவது மட்டும் எப்படிச் சரியாகும்..? ஃபிளாஷ்பேக் என்பது கதை சொல்லும் ஓர் உத்தி. அதில் இலக்கணத்தைக் கடைப்பிடிக்கிறேன் என்று குட்டையைக் குழப்பக் கூடாது..”
அவ்வப்போது இப்படி சின்னச் சின்னதாக எங்களுக்கு டிப்ஸ் கொடுத்துக்கொண்டே, மற்றவர்களுடன் இருக்கும்போது கதை விவாதமும் செய்வார், பாக்யராஜ். நான்கைந்து நாட்கள் போகும் என்று நினைத்த கதை விவாதம் ஒரு வாரத்தைத் தாண்டியும், வெகு சுவாரசியமாக தொடர்ந்துகொண்டே இருந்தது.
பத்து நாட்கள் ஆனதும், நாங்கள் எதையோ சொல்லத் தயங்குவதைப் பார்த்து என்னவென்று கேட்டார்.
“சார், ஆஃபீஸ்ல சொல்லாம கொள்ளாம திடீர்னு புறப்பட்டு வந்திருக்கோம். பத்து நாளைக்கு மேல லீவு எடுக்க முடியாது..” என்று சொன்னோம்.
“ஓ, கல்கில வேலை பார்க்கறீங்க இல்ல..?ஆசிரியர்கிட்ட நான் பேசவா?” என்றார்.
“இல்ல சார்.. ரெண்டு பேருமே பேங்க்ல வேலை பார்க்கறோம்..”
ஆச்சரியப்பட்டுப்போனார்.
“பேங்க்ல முழு நாளும் வேலை பார்த்துக்கிட்டா இவ்வளவு எழுதறீங்க..? நீங்க முழு நேர எழுத்தாளர், என்கூடவே இருப்பீங்கனு இல்ல நினைச்சிட்டேன்..?” என்று சொன்னவர், எங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டார்.
உதவியாளரை அழைத்தார். எங்களுக்கு சென்னைக்கு உடனே டிக்கெட் போடச் சொன்னார்.
மனமில்லாமலேயே சென்னைக்கு ரயிலேறினோம்.
அப்புறம் அவரைச் சென்னையிலும் அடிக்கடி சந்தித்தோம். அன்றைய தினத்தில் அவரிடம் உதவியாளராக சேர்வதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவர் அலுவலக வாசலிலேயே காத்திருப்பார்கள். அவர்களையெல்லாம் விலக்கி, எங்களை உள்ளே அழைத்துச் செல்லும் சமயத்தில் எல்லாம் சற்று கர்வமாக இருக்கும்.
இயக்குநர் பாக்யராஜ் நாங்கள் கேட்காமலேயே தன்னுடைய கதை இலாகாவில் எங்களைச் சேர்த்துக்கொள்ள நினைத்திருந்தும், சினிமாவை நம்பி, வங்கிப் பணியை விட்டுவிட மனமில்லாததால், நாங்கள் அந்த நல்ல வாய்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாமல் போனது.
(நாங்கள் கதை விவாதத்தில் பங்குகொண்ட அந்தக் கதை பிற்பாடு ‘ஆராரோ, ஆரிரரோ’ என்ற தலைப்பில் வெளியானது.)
அவரைப்போல் எளிமையான, திறமையான, திரைக்கதாசிரியரைப் பார்ப்பது அரிது.
நாங்கள் அவருடன் தொடர்ந்து பணிபுரியாவிட்டாலும், அவருடைய அடுத்த சில படங்களை, இசைக்கோப்புக்கு முன், double positive என்று சொல்லப்படும் நிலையில், எங்களுக்குப் போட்டுக் காட்டி, எங்களுடைய கருத்தைக் கேட்டிருக்கிறார்.
நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர், பாக்கியராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தபோது, அவரிடம் அவ்வப்போது, “ரெட்டையர் எப்படி இருக்காங்க..?” என்று அன்போடு விசாரிப்பார்.
எங்களை எங்கே பார்த்தாலும், ‘ரெட்டையரே, எப்படி இருக்கீங்க?’ என்று ஆசையுடன் பேசுவார்.
‘கோ’ படம் பார்த்துவிட்டு, பாக்யராஜ் அழைத்து, அதன் திரைக்கதை அமைப்பை வெகுவாகப் பாராட்டினார். ஓர் அவார்டு கிடைத்த திருப்தி எங்களுக்கு.
‘தனி ஒருவன்’ வெற்றிவிழாவில் சந்தித்தபோதுகூட, அந்த அன்பில் சற்றும் குறைவின்றி எங்களைப் பாராட்டினார்.
இதுவரை நீங்கள் படித்தது, நான் பத்து வருடங்களுக்கு முன்பு எழுதியதன் மீள் பதிவு.
இனி அவர் மீளாப் பதிவாகிவிட்டதை நினைத்தால் நெஞ்சு தவிக்கிறது. ( நன்றி -சுரேஷ்-சுபா …)
………………………………………………………………………………………………………………………………………………



எனக்கு நம்பிக்கை இல்லை... பின்னணியில் இருப்பவர்கள் எல்லாரும் விஹெச்பி, ஆர்.எஸ்.எஸ்., பாஜக பிரமுகர்கள்.... எனவே, சில பலிகடாக்கள் மட்டுமே வெளிக்கொண்டு வரப்படுவார்கள்.... பின்னால் ஒளிந்திருக்கும் பெரிய மனிதர்களையெல்லாம்…