………………………………

………………………………
இந்தியத் திரையுலக வரலாற்றையே மாற்றிய பெருமை ஷோலேவுக்கு இருக்கிறது, அதுவரை குடும்பக் கதைகளையும், காதல் கதைகளையும் சுற்றிவந்த பாலிவுட், ஷோலே படத்துக்குப் பிறகுதான் ஆக்ஷனில் கவனம் செலுத்தியது.
அதன் தாக்கம் மற்ற மொழிகளுக்கும் பரவி, இந்தியா முழுக்க ஆக்ஷன் கதைகளின் மீது காதல் பிறந்தது. இப்படி இந்தியத் திரையுலக வரலாற்றையே புரட்டிப் போட்ட ஷோலே படத்துக்கு இது பொன்விழா ஆண்டு.
1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ஷோலே படம் வெளியானது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஷோலே படத்தைப் பற்றிய சில ரகசியங்களைப் பார்ப்போம்….
பிரம்மாண்ட பட்ஜெட் -முதல் நாளில் சறுக்கல்
தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பியும் அவரது குடும்பத்தினரும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தைத் தயாரித்தார்கள்.
அன்றைய காலகட்டத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்கவே 1 கோடி ரூபாய்தான் செலவாகும்., ஆனால் சிப்பி 3 கோடி ரூபாய் செலவில் படத்தை எடுத்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
அவரது தைரியத்தைப் பார்த்து எல்லோரும் வியந்து போனார்கள். ஷோலே படத்தின் முக்கிய லொகேஷனே சஞ்சீவ் குமாரின் கிராமம்தான். பெங்களூருவுக்கு அருகில் இதற்காக ஒரு செயற்கை கிராமத்தையே உருவாக்கினார்கள்.
ஆனால் இத்தனை கோடி செலவு செய்தும் முதல் நாளில் படத்தைப் பற்றி நெகடிவான விமர்சனம் வெளியானது. 3 கோடி ரூபாயில் உருவான படம், முதல் நாளில் 8 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்தது. ஷோலே வெளியான அதே நாளில் 30 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டு வெளியான ‘சந்தோஷி மா’ என்ற பக்திப் படம் 7 லட்ச ரூபாயை வசூலித்தது.
கதையை மாற்ற மறுத்த கதாசிரியர் –
முதல் நாளில் படம் அடிவாங்கியதும், அதன் தயாரிப்பாளரான ரமேஷ் சிப்பி கவலைப்பட்டார். படத்தில் அமிதாப் பச்சன் இறப்பதும், கொடூரமான க்ளைமேக்ஸ் சண்டையும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
அதனால் இப்போதைக்கு படத்தை நிறுத்தி, அந்தக் காட்சிகளை மாற்றி ஷூட்டிங் செய்து வெளியிடலாம் என்று நினைத்தார். அதற்காக நடிகர்களையும், படப்பிடிப்புக் குழுவினரையும் தயாராக இருக்கும்படி கூறினார்.
ஆனால் படத்தின் கதாசிரியர்களான சலீம் கான் – ஜாவேத் அக்தர் அதற்கு உடன்படவில்லை. சில நாட்கள் காத்திருக்கச் சொன்னார்கள்.
கைகொடுத்த விளம்பரம் –
இந்தச் சூழலில் ஷோலே படத்துக்கு ஒரு பக்க விளம்பரத்தைத் தயாரிப்பாளர் சிப்பி கொடுத்தார். அதில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஷோலே படம் 1 கோடி ரூபாயை வசூலிக்கும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
அந்தக் காலத்தில் ஒரு டிக்கெட்டின் அதிகபட்ச விலையே 2 ரூபாய்தான். அதனால் இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.
முதல் நாளில் இந்த விளம்பரத்தைப் பலரும் கேலி செய்தார்கள். அதன்பிறகு அவர்களே அப்படி இந்தப் படத்தில் என்னதான் இருக்கிறது என்று யோசித்தார்கள். அது அவர்களை படம் பார்க்க தியேட்டருக்குள் தள்ளியது. படத்தின் காட்சிகள் பெருவாரியான ரசிகர்களுக்கு பிடித்துப் போக உலகமகா ஹிட் அடித்தது.
நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்படம் –
1999-ம் ஆண்டில் கடந்த நூற்றாண்டின் பிரம்மாண்ட திரைப்படம் என்ற பெருமையை பிபிசி இந்தியா இந்தப் படத்துக்கு வழங்கியது. இந்தப் பெருமையுடன் இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் என்ற பெருமையும் ஷோலேக்கு உண்டு.
அமிதாப் பச்சன், தர்மேந்திரா ஆகிய 2 ஹீரோக்களையும் இந்த ஒரே படம் சூப்பர் ஸ்டார் ஆக்கியது. இதில் கப்பர் சிங்காக நடித்த அம்ஜத் கான், இந்தியாவின் நம்பர் 1 வில்லன் ஆனார். மும்பையில் உள்ள மினர்வா தியேட்டரில் இப்படம் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஓடியது.
சத்ருகன் சிங் வேடத்தில் அமிதாப் –
ஷோலே படத்தில் முதலில் அமிதாப் வேடத்தில் சத்ருஹன் சின்ஹா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தர்மேந்திராதான் இந்த வேடத்தில் அமிதாப்பை சிபாரிசு செய்தார்.
இதே படத்தில் கப்பர் சிங் வேடத்தில் நடிக்க சஞ்சீவ் குமார் விரும்பியுள்ளார். ஆனால் அவரை வற்புறுத்தி போலீஸ் அதிகாரி தாக்கூர் வேடத்தில் நடிக்கவைத்துள்ளனர்.
காதலுக்காக வேடத்தை மாற்றிய தர்மேந்திரா –
ஷோலே படத்தில் தாக்கூர் வேடத்தில் நடிக்கத்தான் தர்மேந்திரா விரும்பினார். இந்தப் படமே கப்பர் சிங்குக்கும், தாகூருக்கும் இடையிலான மோதலை அடிப்படையாகக் கொண்டது.
அதனால் தாக்கூர்தான் ஹீரோ. அந்தப் பாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குநரிடம் தர்மேந்திரா கூறியுள்ளார்.
அதற்கு தயாரிப்பாளர், “நீங்கள் தாக்கூராக நடித்தால் ஹேமமாலினி உங்கள் பாத்திரத்தில் நடிக்கும் சஞ்சீவ் குமாரைக் காதலிக்கும் காட்சியும், மணமுடிக்கும் காட்சியும் படத்தில் வருமே” என்று கூறியுள்ளார்.
அது தர்மேந்திராவுக்கும், ஹேமமாலினிக்கும் காதல் அரும்பிய சமயம் என்பதால் ஹேமமாலினியை காதலிக்கும் ஹீரோ வேடத்தில் நடிக்க தர்மேந்திரா ஒப்புக்கொண்டார்.
படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமாக வில்லன் கப்பர் சிங்கின் கதாபாத்திரம் வருகிறது.
ஆனால் அத்தனை வலிமையான கதாபாத்திரம் படத்தில் மொத்தம் 9 காட்சிகளில் மட்டுமே வரும். ( நன்றி – பி.எம்.சுதிர் -சினி ராக்கெட்…)
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…