………………………….

…………………………….
( ஸ்ரீமதி ஜி. சுமதி பாய், B.A.,LT… எழுதியது.)
( சுமார் 92 ஆண்டுகளுக்கு முன்னர், ஆசிரியையாக பணியாற்றிய
ஒரு பெண்மணியால் எழுதப்பட்ட, ஒரு கட்டுரை )
…………….
( எதில் மாறினோமோ இல்லையோ, தமிழில் நிறையவே
மாறி விட்டோம்…. அய்யகோ -தமிழ், ஒரு காலத்தில் –
எந்த நிலையில் இருந்திருக்கிறது…!!! )
……………………………..
பாரத மாதாவின் ஸ்துதி எங்கும் சப்திக்கும் நம் இந்திய தேசத்தில்
அம்மாதின் மகளிர்களான பெண்கள் மாத்திரம் கைதிகளெனக்
கட்டுண்டு இழலுவது வியப்பன்றோ! ஹிந்து மாதா அன்னியரின்
கையினின்று விடுதலைப்பட வேண்டின், ஸ்திரீகள் பழையரீதியின் அநியாயத்தின்றும், பழக்க வழக்கங்களின் கட்டுக்காவலினின்றும்
தப்ப வேண்டாமா…?
‘நம் தேசத்துப் பெயர்களுக்குக் குறையொன்றும் இல்லை’ என
அனேகர் பெருமை பாராட்டுவது முண்டு. அத்தகையரின்
அபிப்பிராயப்படி, ஸ்திரீகளுக்கு ஆகாரம் ஆடை ஆபரணம் தவிர
வேறு ஒன்றும் வேண்டியதில்லை போலும்! நம் இந்திய மகளிரின்
நிஜமான நிலைமையை இங்குச் சற்றுக் கவனிப்போம்.
குழந்தைப் பருவம் தொட்டே பெண்கள் உபேக்ஷிக்கப்படுகின்றனர்.
அனேக குடும்பங்களில் ஆண் குழந்தை பிறந்ததென்றால்
வெகு ஆடம்பரம் செய்வதுண்டு; பெண் பிறந்தாலோ அதை
அலக்ஷியம் செய்வது மன்றி, ”ஐயோ, நம் அதிர்ஷ்டம் பெண்ணாச்சே’
என மனம் வருந்துவது முண்டு.
மற்றும் ஆணுக்கு ஐந்து வயதானால் அக்ஷராப்பியாசம் செய்வதுண்டு. பெண்ணுக்கோ கல்வி அவசியமில்லை! ”அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பென்னத்திற்கு?” என்பர் பலர். சிலர் தம் பெண்களை பள்ளிக்கு அனுப்பினும் அவர்களின் வித்தியாப்பியாசம் அற்பகாலமே நீடிப்பது. பத்துபன்னிரண்டு வயது ஆகுமுன் அப்பெண்களின் கல்விப் பயிற்சி நிறுத்தப்படுகின்றது. இரண்டு மூன்று வருஷங்களில் அவர்கள்
என்னதான் கற்கக்கூடும்….?
கல்வியின் களஞ்சியத்தினின்றும் பரிகரிக்கப்பட்ட பெண்களுக்கு
வேறென்ன சம்பத்து இருப்பினும் யாது பயன்? கல்வி அறிவு இல்லாத ஆண்மகன் ஒருவனை அனைவரும் மூடனென ஏளனம் செய்வரன்றோ? பெண்கள் மாத்திரம் வித்தையின்றி அஞ்ஞானத்திலிருப்பது தகுமோ?
அன்றி பெண்கள் அனைவரும் சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவரோ?
ஹிந்துக்களில், அதிலும் மேல் ஜாதியரில், ஒரு பெண்ணுக்குப்
பத்துவயதாகு முன்பே அவள் பெற்றோர் அவளுக்கு வரன் தேட ஆரம்பிக்கின்றனர். அந்தோ, அப்பெண்ணுக்கு அவ்வயதில் லௌகீக விஷயமொன்றும் தெரியாது. அத்தகைய பேதையைப் பசுக்களைத்
தானம் செய்வது போல் ஒருவனுக்கு மணம் செய்து கொடுப்பதே
நம் தற்கால ஹிந்து தர்மமாகும்…!
அப்பெண்ணுக்குப் பகுத்தறிவு வயது வந்தபின், தனக்கு வாய்ந்த
கணவன் தன் மனதிற்குச் சம்மதம் இருப்பினும் இல்லாவிடினும்,
அவள் தன் மனோபாவத்தை வெளியிடுவதற்கில்லை. அவள்
எண்ணத்தை யார்தான் கண்ணியம் செய்வர்? தன் புருடன் கூனனோ, குருடனோ, கிழவனோ, முடவனோ, மூர்க்கனோ, அவனுக்கே அவள் தன் வாழ்நாள் எல்லாம் சமர்ப்பிக்க வேண்டும்.
அவன் என்ன கொடுமை செய்யினும் அவள் எதிர்த்து ஏனென்று
கேட்கலாகாது. அவள் துக்கிக்குங்கால் அவள் பெற்றோர் பெரியோர்,
“எல்லாம் அப்பெண்ணின் அதிர்ஷ்டம், நாம் என்ன செய்யலாம்! ”
என்பர். நம் தேசத்தில் புருஷர்களுக்கு இத்தகைய கஷ்டமுண்டோ?
ஆண்மகன் தன் சுயேச்சையாக மணம் செய்து கொள்ளலாம்.
மற்றும் தன் மனைவி தனக்குச் சம்மதமில்லாவிடில், அவன் அவளை
நீக்கி விடுவதுமன்றி, வேறுகல்யாணமும் செய்து கொள்ளலாம்.
ஆண்களுக்கோ ஹிந்து சட்டமும் சமாஜமும் அனுகூலமாகவே இருக்கின்றதன்றோ! பெண்கள் கதியே அதோகதி! புண்ணிய
பூமியெனும் நம் தேசத்திற்கு இத்தகைய அநியாயம் தகுமோ?
நம் ஹிந்து சமாஜத்தில் பெண்களுக்கு வித்தைக்குத்தான்
அருகத்துவம் இல்லை, ஐசுவரியத்திற்காவது சுதந்தரம் உண்டோ..?
அதுவுமில்லை. பெண்ணுக்குப் பிதுர் ஆஸ்தியில் யாதொரு உரிமையும் கிடையாது. எந்தநாள் அவள் மணம் முடிகின்றதோ, அந்த நாளே
அவள் தன்தாய் வீட்டுக்கு ஹக்கை இழந்து, வேறு ஒரு
குடும்பத்தவளாகின்றனள். புருஷன் ஆஸ்திக்கும் அவளுக்குச்
சுதந்தரமில்லை. கணவன் தனக்கு அனுகூலமாயிருந்தால்
அவன் சொத்தை அவள் அனுபவிக்கலாம்; இல்லையாயின்,
அவள் பாடு திண்டாட்டம் தான்.
புருஷன் இறந்து விட்டாலோ, துக்கத்துக்கு பாத்தியம் மனைவி;
சொத்துக்கு பாத்தியஸ்தர் பிள்ளை பங்காளிகள்…!
கைம்பெண்ணின் கொடுமையைக் கூற வேண்டியதே இல்லை.
பந்து மித்திரரும் அவளை அகிட்டமென, அவன் முகத்தில்
விழிக்கவும் அஞ்சுவர்.
பேழைக்குள் இருக்கும் பாம்பென அவள் அஞ்சி பதுங்கி,
யாதொரு நிருவாகமுமின்றி, தவிக்க வேண்டியதாகின்றது.
சுய சம்ரக்ஷனைக்கோ, அவளுக்கு வித்தையுமில்லை, சக்தி சாமர்த்தியமுமில்லை. அவள் வாழ்நாளே வீண் நாளாகின்றதன்றோ..!
வித்தை, தானம், சக்தி இவைகளுக்கு முதன்மையாக சரஸ்வதி,
லக்ஷ்மி, துர்க்கா பூஜிக்கப்படும் நம் பாரத நாட்டில், அத்தேவதைகளின் அம்சங்களான பெண்கள் கல்வி ஆதாரமோ பொருள் ஆதாரமோவின்றி, திடமின்றித் திராணி குன்றி, அசக்தராய், நிர்ப்பாக்கிய ஸ்திதியிலிருப்பது பரிதமிக்கத்தக்கதன்றோ…? இதுவோ நம் ஹிந்து சனாதன தர்மம்…!
………………………………………………………………………………………..……………
நாம் நமது இன்றைய சமூக நிலையுடன் கொஞ்சம்
ஒப்பிட்டுப் பார்த்தால், எத்தகைய பிற்போக்குத்தனங்களை
எல்லாம் தாண்டி வந்திருக்கிறோம் என்பதை உணரலாம்….
நாம், நமது சமுதாயம் – இந்த 92 ஆண்டு காலத்தில்,
எந்த அளவிற்கு மாறி இருக்கிறோம்…?
- குழந்தை திருமணம் – இந்த தலைமுறை கேள்விப்பட்டே இருக்காது.
பெண்களுக்கும், ஆண்களுக்கும் – சட்டபூர்வமாகவே குறைந்தபட்ச
திருமண வயது நிர்ணயிக்கப்பட்டு விட்டது…. - பெண் கல்வி – கல்லூரி படிப்பு வரையில், எந்தவித தடங்கலும்
இல்லாமல் பெண்கள் படிக்கிறார்கள். பலருக்கு இலவசக்கல்வியும்
அளிக்கப்படுகிறது. - விதவைத் திருமணம்…. இதுவும் பத்தாம்பசலியாகி விட்டது.
மறுமணம் என்பது சர்வசகஜமாகி விட்டது. - பிடிக்காத கணவருடன் வாழ்க்கை – மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட
விவாகரத்து முறைகள் நடைமுறைக்கு வந்து விட்டன. இது இன்றைய
பெண்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை.
- சொத்துரிமை – பெற்றோர்களின் சொத்துகளில் பெண்களுக்கு,
ஆண்பிள்ளைகளுடன் சம உரிமை உண்டு என்பது சட்டபூர்வமாகி
விட்டது… எனவே இந்த பிரச்சினையும் இல்லை.
இன்றைய பெண்கள் பெரும்பாலும், சொந்தமாக சம்பாதிக்கும்
நிலையில் இருப்பதால், எதற்கும் பிறரை நம்பி இருக்க வேண்டிய
சூழ்நிலையில் இல்லை….
ஆண்களும் – பெண்களும் – சரி நிகர் சமானம் என்பது தான்
இன்றைய சமூக நிலை….( பெண்கள் ஆண்களை விட கூடுதல்
வசதிகளை அனுபவிக்கிறார்களென்று கூட சில இளைஞர்கள்
வருத்தப்பட்டுக் கொள்ளும் சூழ்நிலை… !!!)
மேலேயுள்ள கட்டுரையை இன்றைய தலைமுறை படிக்கும்போது
தான்-
- நாம் எந்த அளவிற்கு முன்னேறி வந்திருக்கிறோம் என்பதை
அவர்களால் உணர முடியும்…. (முக்கியமாக, அந்த காரணத்திற்காகவே
அந்த கட்டுரையை இங்கே பதிவிட்டிருக்கிறேன்….)
.
………………………………………………..
மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐயமில்லை. பெண்களுக்கான முன்னேற்றத்தில் கல்வி பெரும் பங்கு வகிக்கிறது. கல்வி அவளுக்குத் தன்னம்பிக்கையும், வாழ்க்கைக்கான பொருளீட்டவும் உதவுகிறது. அவளால் பொருளீட்ட முடிந்துவிட்டால், அங்கேயே சமத்துவம் வந்துவிடுகிறது. ஆணுக்கு இங்கு இளைப்பில்லைகாண் என்பது கண் முன்னே நிரூபணமாகிக்கொண்டு இருக்கிறது. மிகவும் பாராட்டத்தக்க முன்னேற்றம். பெண்களை அடக்கி வைத்து, ஏதேதோ காரணங்கள் சொல்லி, முன்னேற விடாமல் சுயநலமாக நடந்துகொண்டிருந்த ஆண்கள் மாறி இருக்கின்றனர். இன்னும் ஓரிரு தசாப்தங்களில் முற்றுமே மாறி, உடல் மாத்திரம்தான் வித்தியாசம் மற்றபடி இருவரும் ஒன்றுதான் என்ற நிலை வரும்.
ஆனால், பெண்களுக்குத்தான் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தில் மிகப் பெரும் பங்கு இருக்கிறது. ஆண் கெட்டவனாக இருந்தாலும் ஒரு குடும்பத்தை பெண், மேலே கொண்டுவந்துவிடலாம். ஆனால் பெண் கெட்டுவிட்டால்-அதாவது குடும்ப நிர்வாகத்தில் பங்குபெறாமல் பொழுதுபோக்கிவிட்டால், அந்தக் குடும்பம் கரை சேர்வது கடினம். இது ஒன்றுதான் எனக்கு, கால மாற்றத்தில் வந்த சிறிய தவறாகத் தோன்றுகிறது.
பெண்களுக்கு கூர்த்த மதியும், புத்திசாலித்தனமும் நுண்ணறிவும் உண்டு. (intuition). எந்தப் பள்ளி/கல்லூரியை நோக்கினாலும், அங்கு பெண்கள்தான் அதிக மதிப்பெண்களைப் பெறுவதைக் காணலாம். பல வருடங்களுக்கு முன்பு, என்னுடைய உறவினப் பெண்கள், படிப்பில் படு சூப்பராக இருந்தும், பட்டப் படிப்பில் பல்கலைக்கழக தங்கப் பதக்கம் பெற்றும், மேலே படிக்கவைத்தால் திருமணம் ஆகாது, மாப்பிள்ளை கிடைக்கமாட்டான் என்றெல்லாம் பயம் இருந்து மேலே படிக்க அனுமதிக்கவில்லை. கஷ்டப்பட்டு PG படித்தால், அதிலும் தங்கப் பதக்கம். forcefullஆக படிப்பை நிறுத்திவிட்டார்கள். அந்த நிலைமை இப்போது எவ்வளவோ மாறியிருக்கிறது.
தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். வாசகர்கள் பரப்பு அதிகரிக்க அதிகரிக்க, மொழியும் அதன் வீச்சும் மாறியிருக்கிறது. இதையே திரைப்படங்களிலும் காணலாம். என்ன ஒரு பிரச்சனை என்றால், இலக்கியத்தனமாக சிறுபான்மை மக்களின் பேசு தமிழாக இருந்தது, பெரும்பான்மை மக்களின் மொழியாக எழுத்தில்/திரையில் உருமாறி, இப்போது 30 சதம் ஆங்கிலக் கலப்பு, 20 சதம் வேற்று மொழிக் கலப்பு என்று மாறியிருக்கிறது. தமிழகத்தில் உயர் கல்வி கற்றவர்களில், எனக்குத் தெரிந்து 30 சதத்திற்கு மேல், தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. இது நாளாக நாளாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனை அரசு தடுத்து நிறுத்தவேண்டும். சென்னையில், பட்டப்படிப்பில், ஒரு தமிழ் பேப்பரை இப்போதெல்லாம் வைக்கிறார்கள் (நம்புங்கள். அ-அம்மா, ஆ-ஆடு என்று). இதற்கு தகுந்த பரிகாரமாக நான் நினைப்பது,
1. அரசாங்கத்தில் வேலை பெற, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவேண்டும், அதற்கான தேர்வில் 60க்கும் குறையாத மதிப்பெண்கள் பெறவேண்டும். இந்தத் தேர்வில், மொழித் தேர்வில் கடைபிடிப்பது போல, பேச்சைப் புரிந்துகொண்டு பதில் எழுதுவது, கேள்வியைப் புரிந்துகொண்டு தமிழில் பதிலளிப்பது என்றெல்லாம் இருக்கவேண்டும்
2. வெளி மாநிலத்தவர், தமிழக அரசுப்பணியில் இருந்தால் (ஒவ்வொரு மாநிலப் பணியில்) அந்த மாநில மொழித் தேர்வில் ஒரு வருடத்துக்குள் தேர்ச்சி பெறவேண்டும்.
அப்படி இல்லையென்றால் தமிழ் மொழி சிதைவதைத் தடுக்க இயலாது.
அளப்பரிய உண்மை.. இன்றைய நிலையில் பெண்கள் சுதந்திரம் வளர்ந்தது.