புத்தாண்டு தினத்தன்று முதல் வேலையாக சுடுகாடு செல்ல நேரிடும் ஒருவரின் மனநில எப்படி இருக்கும்…?


எந்தவித செண்டிமெண்டும் என்னை பாதிக்கவில்லை…
என் மனதுக்கு அது நிம்மதியையும், சாந்தியையும் அளிப்பதாக இருந்தது…என்று சொன்னால் உங்களுக்கு வியப்பு உண்டாகலாம். அதன் பின்னால் இருந்த காரணம் அப்படி.

தூரத்துச் சொந்தத்தில் ஒரு பெண்மணி. ஆனால் எப்போதும் நெருங்கிய
தொடர்பில் தான் இருப்போம். அவருக்கு கணவர், 2 மகன்கள்,
ஒரு மகள். அந்த பெண்மணி ஆசிரியையாக பணிபுரிந்து
ஓய்வு பெற்றவர். வயது சுமார் 75 இருக்கும்.

கடந்த 15 வருடங்களாக பலவித உடல்நலக்கோளாறுகளால்,
அவதிப்பட்டு வந்தார்… சர்க்கரையில் துவங்கியது… வரிசையாக இரத்த அழுத்தம், நுரையீரல் கோளாறு, குடலில் பிரச்சினை,
கிட்னிகள் இரண்டுமே ஒத்துழைக்காத நிலை.
நிரந்தரமாக டயலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை.
கடைசியாக கடந்த 7-8 ஆண்டுகளாக, படுத்த படுக்கையாக,
மிகுந்த தொல்லையில் இருந்தார். பாதி நாட்கள் வீட்டில், பாதி நாட்கள்
ஆஸ்பத்திரியில்.

சுமார் 30 லட்சத்திற்கு மேல் மருத்துவத்திற்காக செலவழித்திருப்பார்கள்.
நடுத்தரக் குடும்பம் தான் என்றாலும், செலவைப்பற்றி அவர்கள்
கவலைப்படவில்லை. 2 மகன்கள், அவர்களது மனைவிகள் கண்ணும்
கருத்துமாக, எந்தவித சிணுங்கல்களோ, அலுப்போ இல்லாமல்
கவனித்துக் கொண்டார்கள். எப்படியாவது அந்த பெண்மணி
உபாதைகளிலிருந்து விடுபட வேண்டுமென்று பாடுபட்டார்கள். ஒரே
மகள், வேலூர் அருகே இருக்கிறார். வாரந்தோறும் அம்மாவை
கவனித்துக்கொள்ள சென்னை வந்து விடுவார்.

ஆனால், அன்பும், ஆதரவும் மட்டுமே ஒருவரை நோயின்
உபாதைகளிலிருந்து விடுவித்து விட முடியுமா…?
நானும் அந்த அம்மையாரை அடிக்கடி பார்ப்பது உண்டு. கையைப் பற்றிக்கொண்டு ஆறுதலாக “இந்த வலிகள் நீண்ட நாட்கள் இருக்காது…விரைவில் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.. கவலைப்படாதீர்கள்” என்று சொல்லி விட்டு வருவேன்.

ஆனால், எனக்கு புரிந்தது…. அந்த அம்மா இனி எழுந்து
நடமாடப்போவதில்லை. கடைசிவரை கடும் நோய்த்தொல்லைகளிலிருந்து
விடுபடப்போவதில்லை. அவருக்கு நிம்மதியும், வலியிலிருந்து
விடுதலையும் – இறப்பு மூலம் மட்டும் தான் கிடைக்க முடியும்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன், அந்த அம்மாவின் மகளிடம்
சொன்னேன்… உன் தாய்க்கு வலியிலிருந்து விடுதலையும், நிம்மதியும்
கிடைக்க ஒரே வழி “இறப்பு” தான். எனவே, இனி நீங்கள் எல்லாரும்
அவர் குணம் அடையவேண்டும் என்று பிரார்த்திப்பதற்கு பதிலாக,
” இனியும் கஷ்டப்பட விடாமல், சீக்கிரமாக இவரை அழைத்துக் கொள்
இறைவா” என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள். சாவு ஒன்று தன்
அவருக்கு விமோசனத்தைக் கொடுக்கும் என்று சொன்னேன்.

உடலில், பெரிதாக நோய், நொடிகளின் தாக்கம் எதுவும் இல்லாமல்
இருந்தால், தன் சொந்த வேலைகளையாவது –
பிறரை எதிர்பார்க்காமல் – தானே பார்த்துக் கொள்ள முடிந்தால்,
முதுமை ஒரு பெரிய பிரச்சினை இல்லை தான்.
எத்தனை வயதானாலும் இருக்கலாம்.

ஆனால், இனி எந்தவிதத்திலும் எழுந்து நடமாட முடியாது,
வலிகளிலிருந்து விடுதலை கிடைக்காது என்கிற நிலையில் இருக்கும் ஒருவருக்கு சாவு ஒன்றே நிம்மதி.

எல்லா விஷயங்களிலும், யோசித்து யோசித்து,
சரியான விதத்தில் கண், மூக்கு, காது, வாய், இதயம், நுரையீரல்,
மூளை என்று அவயவங்களை படைத்து
அவை இயங்கும் விதத்தையும் உருவாக்கிய இறைவன் –
ஒரே ஒரு விஷயத்தில் தவறுசெய்து விட்டான் என்று
தோன்றுகிறது… பல சமயங்களில், உடல் உறுப்புகள் செயல்திறனற்று
போகும்போது, வலியின் கொடுமை தாங்க முடியாமல் போகும்போது,
உயிர் வாழ்வதே ஒரு வேதனை என்று, சம்பந்தப்பட்ட மனிதருக்கே
தோன்றும்போது, உடலின் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளக்கூடிய
சக்தியையும் அந்த மனித உடலில் படைத்திருக்க வேண்டும்.

வாழ விரும்பாத மனிதர் எந்தவித பிரச்சினையும் இன்றி switch off
செய்துக் கொண்டு உடலை விட்டு வெளியேற ஒரு வழி செய்திருக்க
வேண்டும்.

இந்த ஒரு பெண்மணி மட்டும் தான் என்றில்லை… எனக்குத் தெரிந்த
இன்னும் சிலரும் கூட, மரணம் வராதா என்று ஏங்கிக்கிடைப்பதை
பார்த்திருக்கிறேன்…

பிணி, மூப்பு, முதுமை – இந்த மூன்றும் தான் மனிதரின் சாபங்கள்.
மனிதருக்கு இவற்றின் கொடுமையிலிருந்து விடுபட வழி தெரியவில்லை.

நான் கூட கடந்த சில ஆண்டுகளாக – பிராணாயாமம்(மூச்சுப்பயிற்சி)
செய்யும்போது, – நினைப்பது உண்டு…. இந்த மூச்சை இப்படியே
நிரந்தரமாக நிறுத்திக்கொள்ள முடிந்தால் அது எவ்வளவு வசதியாக
இருக்கும் என்று நினைப்பது உண்டு… எனக்குத் தெரிந்து அதற்கான வழி
எந்த யோக சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.

மீண்டும் துவக்கத்திற்கு வருகிறேன். இறுதியாக இறைவனின்
கருணையால், டிசம்பர் 31-ந்தேதி அந்த பெண்மணிக்கு இறுதி முடிவு
வந்தது. எனக்கு எந்தவித துக்கமும் ஏற்படவில்லை. மாறாக நிம்மதியும்
சாந்தியுமே உண்டானது…கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

மறுநாள் 2019 புத்தாண்டின் முதல் நாள் காலையில், சுடுகாட்டில், முதல்
நபராக தகனம் செய்யப்பட்டார் அந்த பெண்மணி….

இது ஒரே ஒருத்தருக்கான அவதி இல்லை. இதுபோல்,
ஆயிரக்கணக்கானவர் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கெல்லாம்
என்ன வழி…? என்ன விமோசனம்…? எவ்வளவு நாட்கள், எவ்வளவு
ஆண்டுகள் அவர்கள் வலியுடனும், வேதனையுடனுமே உயிர் வாழ
வேண்டும்…?

இது நியாயமா என்று மனிதரைப்படைத்த அந்த இறைவன் தான்
கொஞ்சம் யோசிக்க வேண்டும்….இதில் மனிதரால் ஆவது
ஒன்றுமில்லை……………..புலம்புவதைத்தவிர…

.
——————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to புத்தாண்டு தினத்தன்று முதல் வேலையாக சுடுகாடு செல்ல நேரிடும் ஒருவரின் மனநில எப்படி இருக்கும்…?

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    நீங்கள் ஏற்கெனவே கூட இத்தகைய கருத்தை வெளியிட்டிருக்கிறீர்கள்.
    நானும் கூட உங்கள் வழியில் தான் யோசிக்கிறேன்.
    வாழ்வைத் தொடர இயலாத, விரும்பாத நிலையில் இருக்கும் ஒருவன்
    தானாகவே அதை switch off செய்வது போல் முடித்துக் கொள்ளும் வழி ஒன்று இருந்தால் தேவலை தான். (தற்கொலை கௌரவமானதாக தெரியவில்லை…)அது இயற்கையான மரணம் போல் நிகழ வேண்டும்.
    ஆனால் – இதற்கு யார் வழி சொல்வார்கள் ?

  2. venkat's avatar venkat சொல்கிறார்:

    Sallekhana is the ritual jain’s follow. I am sure you know about this… in simple terms you fast until death. If one can get conviction that they have lived their life to its fullest potential, could prepare mentally for this ritual and actually take it up at appropriate time. in face we don’t need to wait until your body parts start failing you!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வெங்கட்,

      ஜைன மதத்தில் இப்படி ஒரு வழக்கம் இருப்பதை அறிவேன். ஜைன மதம்
      இதை ஒரு புனித சடங்காக ஏற்றுக் கொண்டு விட்டது. இதில் ஈடுபடுபவர்களுக்கு குடும்பத்தில் உள்ள
      மற்றவர்கள் துணை நின்று, உதவுவார்கள். இது நாள் பிடிக்கும். 40-50 சிலசமயம்
      100 நாட்கள் கூட பிடிக்கும் உயிர் பிரிய.

      ஆனால், நம்மவர்கள் இதை ஏற்க மாட்டார்கள். யாராவது தீர்மானித்து செயல்படுத்த
      முயன்றாலும், சுற்றியுள்ளவர்கள், உறவினர்களும் நண்பர்களும் தடுத்து விடுவார்கள்.
      யாருக்கும் சொல்லாமல், எங்கேயாவது தனியாக கானகத்திற்கு சென்று துவங்கினால்
      தான் உண்டு. உங்களுக்கே தெரியும்… நம்மவர்களுக்கு அந்த அளவிற்கு பட்டினியின்
      கொடுமையையும், வலியையும், வேதனையையும் தாங்கக்கூடிய பொறுமை கிடையாது.
      என்னால், நினைத்தாலும், விரும்பினாலும் கூட இதை செயல்படுத்த முடியாது.

      எதாவது சுருக்கமான வழி வேண்டும்… நான் சொன்னேனே -switch off செய்வது மாதிரி.
      சட்டென்று முடிந்துவிட வேண்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Yes, praying for death is a sensible approach for terminally ill patients. However much this affects the feelings of the dear and near, quicker death is really a relief for the suffering patients.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.