FDI -நேரடி அந்நிய முதலீடு -“கடவுளே – சோ ராமஸ்வாமி போன்றவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு ” – வேண்டுவது பொருளாதார நிபுணர் குருமூர்த்தி … !!

(முன்குறிப்பு -சிறிது காலம் கழித்து இன்னும் விவரமாக
இந்த பொருள் குறித்து ஒரு விவாதத்தைத் இந்த வலைத்தளத்தில்
துவக்கலாம்  என்று நினைத்திருந்தேன். ஆனால் 3-4 நாட்களுக்கு
முன்னர் அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஜனாதிபதி
வேட்பாளர்கள் இருவரும் நேரடியாக நிகழ்த்திய விவாதத்தை
பார்த்தேன். அதில் இந்த பொருள் இடம் பெற்றதும்,
தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது முதல் வேலையே  
வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களை ஒழித்துக்கட்டி விட்டு,
சிறு சிறு வர்த்தகர்களை ஊக்குவிப்பதாகத் தான் இருக்கும் என்று
ரோம்னி கூறியது என்னை உடனடியாக இதை எழுதத்தூண்டியது !)

சில்லரை வியாபாரத்தில் நேரடி அந்நிய முதலீடு குறித்து
ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் – பல அரசியல் கட்சிகளும்
கருத்து கூறி வருகின்றன. அரசியல் கட்சிகள் கூறுவது
எப்போதும் தங்கள் சுயநலத்தை, தங்கள் வளர்ச்சியை,
தங்கள் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே கூறுவதாக
இருக்கும்.இது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் !
எனவே இவர்கள் கூறுவதை எல்லாம் நாம் நம்பினால்
“மாங்கா” மடையனாக வேண்டியது தான் !
(mango people of banana republic..!!!)

எனவே, கட்சி சாராத அறிவாளிகள், சமூக நலனில்
அக்கரை கொண்டவர்கள், ஏற்கெனவேயே இதில் அனுபவம்
பெற்றவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் என்ன
கூறுகிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்வதே ஓரளவு
சரியான முடிவுக்கு வர உதவியாக இருக்கும்.  

பொதுவாக ஆசிரியர் “சோ” ராமஸ்வாமி அவர்கள்
சமுதாயத்தின் நலனில் அக்கரை உடையவர். சுயநலம்
கருதாதவர். நீண்டகால அரசியல் அனுபவம் பெற்றவர்
என்கிற அடிப்படையில் அவர் என்ன கூறுகின்றார் என்று
பார்த்தால் – ஏமாற்றமே மிஞ்சுகிறது. சில்லரை வணிகத்தில்
அந்நிய முதலீட்டை வாழ்த்துக்கூறி வரவேற்று,  
தலையங்கமே எழுதி இருக்கிறார் “சோ” ! தனக்கு
ஆதரவாக – ஓய்வு பெற்ற  ஐஏஎஸ் அதிகாரி முருகன்
மற்றும் திருச்சியைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த
புஷ்பவனம் ஆகிய தலைசிறந்த (!) பொருளாதார மேதைகளின்
கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து –
துக்ளக் இதழில் வெளியிட்டு குருமூர்த்தியின் கருத்துக்களைப்
புறம் தள்ளுகிறார்.

குருமூர்த்தியை சிறந்த பொருளாதார நிபுணர் என்று
“சோ”வே ஏற்றுக்கொண்டு, அவரது பல பொருளாதார
கட்டுரைகளை துக்ளக் இதழிலேயே தொடர்ந்து வெளியிட்டும்
வந்தது துக்ளக் வாசகர்கள் அனைவருக்கும் நினைவிருக்கும்.

இப்போது திடீரென்று அந்நிய முதலீடு விஷயத்தில்
மட்டும் புதிய பொருளாதார மேதைகளை “சோ” எப்படி
நம்புகிறார் என்று புரியவில்லை !!

சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு குறித்து,
குருமூர்த்தி அவர்கள் துக்ளக் இதழிலேயே எழுதிய ஒரு
கட்டுரையிலிருந்து அவசியம் படிக்க வேண்டிய சில பகுதிகளை
கீழே தருகிறேன்.

————-

“வருகிறது தீமை !”

எவ்வளவு மாறுபட்ட இரு செயல்கள் ? செப்டம்பர் 14,
வெள்ளிக்கிழமை அன்று சில்லரை வியாபாரத்தை ராட்சத
வியாபாரமாக நடத்தும் வால்மார்ட்டுக்கு, பூச்செண்டு
கொடுத்து இங்கு வரவேற்கிறார் நமது பிரதமர். அதே நாளில்,
அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வம் மிக்க நகரமான
நியூயார்க் நகர அரசாங்கம் வால்மார்ட்டை”இந்தப் பக்கம்
வராதே” என்று கல்தா கொடுக்கிறது.

அதுமட்டுமல்ல, அதே வெள்ளிக்கிழமை –
இங்கே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு,
இந்த நாட்டு சில்லரை வியாபாரிகளுக்கு
வால்மார்ட் வருவதால் ஒரு ஆபத்தும் வராது என்று  சத்தியம்
செய்து கொடுக்கிறது. அப்போது தான், அமெரிக்காவில்
புகழ்வாய்ந்த ‘அட்லாண்டிக் சிடிஸ்’ என்கிற ஊடகப்
பத்திரிகையில், வால்மார்ட் பற்றி இப்படி ஒரு அதிரடி
தலைப்புச் செய்தியை வெளியிடுகிறது” “சாவுக்கதிர் வீச்சு:
எப்படி வால்மார்ட் அருகாமையில் இருக்கும் சிறு வியாபாரிகளை
கபளீகரம் செய்கிறது” என்று.

அதுமட்டுமல்ல.
ஜூன் 30ந்தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்,
ஜூன் 1ந்தேதி தலைநகரமான வாஷிங்டனில் –
“வால்மார்ட் வேண்டாம் என்று கூறுங்கள்” என்று
பேரணிகள் நடைபெற்றன.
அமெரிக்கா முழுவதும்  வால்மார்ட் வேண்டாம் என்கிற
கருத்தில் ஒரு பெரிய இயக்கமே தொடர்ந்து நடக்கிறது.
அமெரிக்காவில் வால்மார்ட் மேல் மண்ணை வாரி வீசுகிறார்கள்.
காரணம் என்ன ?”வால்மார்ட் சிறு வியாபாரிகளை நிர்மூலமாக்கி
விடும்” என்று சாடுகிறார்கள் நியூயார்க் நகர மக்களும்,
தொழிலாளர் அமைப்புகளும்.

இது குறித்து அமெரிக்காவில் நடத்தப்பெற்ற ஒரு ஆய்வில்,
வால்மார்ட் தன் கடையில் 2 பேருக்கு வேலை அளித்தால்
(மற்ற கடைகள் மூடப்படுவதன் காரணமாக) 3 பேருக்கு
வேலை போகிறது என்று நிரூபிக்கப்பட்டது. அதனால் தான்
நியூயார்க் அரசு வால்மார்ட்டுக்கு கல்தா கொடுத்தது.

யூக பேரத்தின் மூலம் மொத்த வியாபரக் கம்பெனிகள்
தானியங்களை வாங்கி, கையில் இறுக்கமாக வைத்துக்கொண்டு,
செயற்கை முறையில் விலையேற்றத்திற்கு வழி வகுக்கின்றன.
விலை உயர்ந்த பிறகு, பதுக்கி வைக்கப்பட்டதை,
விற்பனைக்கு கொண்டு வருகின்றன.

யூக சந்தையில் எப்போதோ விற்று விட்ட விவசாயிகளுக்கு
பட்டை நாமம். ஆனால், ஏறிய விலையில் பலன் எல்லாமே
யூக சந்தையில் வாங்கிய பண முதலைகள் மற்றும் வால்மார்ட்
போன்ற அமைப்புக்களுக்குத் தான்.

இது தான் அமெரிக்காவில் மொத்த மக்கள் தொகையில்
2 சதவீதமே இருக்கும், அதுவும் விஷயம் தெரிந்த
விவசாயிகளின் நிலை. இவர்கள் கூறுவது போல் விவசாயிகளுக்கு
வால்மார்ட் போன்ற அமைப்புகள் நல்ல விலை கொடுத்தால்,
அமெரிக்க அரசாங்கம் ஏன் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு
20 பில்லியன் டாலர் (ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்)
மான்யம் வழங்குகிறது ?

ஏன் ஐரோப்பிய அமைப்பு மொத்த ஜனத்தொகையில் ஐந்து
சதவீதமே இருக்கும் தங்களுடைய விவசாயிகளுக்கு
75 பில்லியன் டாலர் (ரூபாய் 3.75 லட்சம் கோடி )
மானியம் வழங்குகிறது ?

விவரம் தெரிந்த அமெரிக்க விவசாயிகளுக்கே ‘பெப்பே’
கூறுகிற வால்மார்ட், இங்குள்ள விவசாயிகளுக்கு
நியாய விலை கொடுக்குமா ! யார் காதில் பூ சுற்றுகிறார்கள் ?

இந்த விஷயத்தில் முழு உண்மைகளும் வெளிவராததால்,
நாட்டில் பெரும் மனக்குழப்பம் ஏற்படுகிறது. ஆகவே,
அரசாங்கம் கிராமங்களில் அன்னியப் பொருளாதார முறைகளை
புகுத்துவது பேராபத்தை விளைவிக்கும்.

நாட்டின் மீது பற்றுள்ள எல்லாரும் இந்த உண்மைகளை
உணர வேண்டும்.  இந்த நிலையில் “எல்லாருக்கும்
நல்ல புத்தியை கொடு”  (சப்கோ சன்மதி தே பகவான் !)
என்று ஆண்டவனை மகாத்மா காந்தி வேண்டியது தான்
நினைவிற்கு வருகிறது.

————-

பின்குறிப்பு – சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு
என்கிற தலைப்பில் எழுத வேண்டிய  விஷயங்கள்  நிறைய
இருக்கின்றன. அனைத்தையும், ஒரே இடுகையில் எழுதிவிட
முடியாது. ஒருவராலேயே எழுதி விடவும் முடியாது.
நகரத்து இளைஞர்கள் சிலர் – இந்த கொள்கையை தீவிரமாக
வரவேற்பதையும் நான் பார்க்கிறேன்.

இந்த விஷயத்தில், நான் இந்த வலைத்தள நண்பர்களின்
விவரமான, ஆணித்தரமான வாதங்களுடன் கூடிய
விவாதத்தை எதிர்பார்க்கிறேன். சார்பாக இருந்தாலும் சரி,
எதிர்ப்பாக இருந்தாலும் சரி – உங்கள் கருத்துக்களை
எடுத்துக் கூறுங்களேன். உண்மையான சாதக – பாதகங்களை
அனைவரும் புரிந்து கொள்ளட்டும் –
விரிவாகவே ஆராய்வோமே !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to FDI -நேரடி அந்நிய முதலீடு -“கடவுளே – சோ ராமஸ்வாமி போன்றவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு ” – வேண்டுவது பொருளாதார நிபுணர் குருமூர்த்தி … !!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    இது எப்படி இருக்கிறது என்றால்,
    “மண்ணெண்ணெய் அடுப்பு வந்துவிட்டால் விறகடுப்பு விற்காது அல்லது மின்சார அடுப்பு வந்தால் கேஸ் அடுப்பு பாதிக்கப்படும் என்பது போல உள்ளது” என்பது என் கருத்து.

    இன்று எத்தனை பேர் முறம்(?) கொண்டு அரிசியையும் பருப்பையும் புடைத்து கல் மண் நீக்கி பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்?
    மிளகாயையும் தனியாவையும் சீக்காயையும் தம் முற்றத்தில்(!?) காயவைத்து அதை அரைத்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்?
    அல்லது கீரையையும் தக்காளியையும் அவரையையும் எத்தனைபேர் தங்களின் கொல்லைபுறத்தில்(?!) பயிர் செய்துகொண்டிருக்கிறோம்?

    மேலே கூறப்பட்ட எதற்கும் நேரமோ பணமோ அல்லது இடவசதியோ இல்லாத நாம் கையில் செல்ஃபோனை வைத்துக்கொண்டு ஹோம்டெலிவரி செய்ய அல்லது தன் மனைவியை ஷாப்பிங்க்கு அழைத்து செல்ல “ஏதோவொரு” மார்ட் தேவை ஆனால் அது வால்மார்ட்டாக இருக்ககூடாது என்பது என்ன ஞாயம் என்பதை சற்று சிந்தியுங்கள்?

    இப்போது அனைத்து விவசாயிகளும் லாபகரமாக தொழில் செய்துகொண்டிருக்கிறார்களா? இன்றைய தேதியில் தமிழகத்தில் விவசாயம் செய்ய தண்ணீரே இல்லாதபோது நம் சிந்தனை வால்மார்ட்டை தடுப்பதில் உள்ளது.

    MLM தொழிலையும் அணு உலைகளையும் இந்தியாவில் நுழையவிட்டுள்ளவர்கள் இதையெல்லாம் விட்டுவிடுவார்களா என்ன? நிச்சயமாக வரும். வந்து நம்மை நன்றாக சுரண்டி அள்ளிக்கொண்டு போவார்கள். எனவே நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

    வால்மார்ட் இல்லையென்றால் ஒரு அம்பானி
    அம்பானி இல்லையென்றால் மற்றொருவர் வந்து நம் விவசாயிகளின் ரத்தத்தையும் வேர்வையையும் உறிஞ்சப்போகின்றனர். ஏற்கனவே விவசாயம் செய்ய முடியாமல் தற்கொலை செய்யும் விவசாயிகளை யாரும் நினைவில் கொள்ளப்போவதில்லை.

    இதுவே காலத்தின் கோலம். இதையும் நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும்!

    முன்னர் “கொத்தடிமைகள்”
    இன்று “உலக பொருளாதாரமயம்”

    வார்த்தைகள் மட்டுமே மாறியுள்ளதே ஒழிய யாருடைய நிலையிலும் மாற்றமேற்படவில்லை என்பதுதான் உண்மை!

  2. Padmanabhan Potti L's avatar Padmanabhan Potti L சொல்கிறார்:

    1) இப்பொருள் தொடர்பாக இந்திய சில்லறை வியாபாரிகள் கருத்து . 2) பொருளாதார மேதைகளின் கருத்து 3 ) உச்ச
    நீதிமன்றத்தின் கருத்து ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும் . அரசியல்வாதிகள் கருத்தினை புறந்தள்ளவேண்டும்..
    காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் மத்திய அரசின் முடிவை ஏற்று கொண்டாலும் கேரளத்தில் காங்கிரஸ் அரசு
    இதற்கு எதிராக கருத்தை கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்.

  3. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    தகவல்கள் தேவை என்பதல் பத்ரி பதிவில் நான் கொடுத்த விமர்சனத்தையும் அதில் நான் பார்த்த நல்ல விமர்சனங்களையும் இதில் பதிய விரும்புகின்றேன். வருகின்றவர்களுக்கு உதவக்கூடும்

    சில மாதங்களுக்குமுன் பருத்தி ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவித்தது மத்திய அரசு. பின் இரண்டே வாரங்களில் தன் கருத்தை மாற்றிக்கொண்டது. பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் லாபம். செய்யாவிட்டால் உள்ளூர் துணி ஆலைகளுக்கு லாபம். அவர்கள் குறைந்த விலையில் விவசாயிகளை நசுக்கித் தங்களுக்கு வேண்டிய பருத்தி இழைகளை வாங்கிக்கொள்ளலாம்.||

    தயாநிதி மாறன் இருந்த போது செய்த லாபியின் காரணமாக பருத்தி ஏற்றுமதித் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது;பயனடைந்தவர்கள் பெரு ஏற்றுமதியாளர்கள் மட்டுமே.

    விவசாயிகளும், உள்ளூர் சிறு உற்பத்தியாளர்களும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

    (ஜான்சன் நிறுவனம் தனது உள்ளாடைகளுக்கான விலையை நான்கு மாதங்களில் 12 தடவைகள் மாற்றியது.)

    வியாபாரிகளும் பொதுமக்களும் நொந்து போனார்கள்

    அறிவன்….

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஜோதிஜி,

      பத்ரி பதிவை – எப்படியோ பார்க்கத் தவறி விட்டேன்.
      உங்கள் பின்னூட்டங்கள் பார்த்த பின்னர் இப்போது
      தான் பார்த்தேன்.
      முன்னரே பார்த்திருந்தால், அதன் ஒரு தொடர்ச்சியாக கூட
      இந்த இடுகையை கொண்டு போய் இருக்கலாம்.

      இருந்தாலும் பரவாயில்லை. இன்னும் நிறைய விஷயங்கள்
      விவாதிக்கப்பட இருக்கின்றனவே. தொடர்வோம்.

      -நன்றி.
      வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    உள்ளே வருகின்றவர்களுக்கு ஒரே நோக்கம் லாபம். தொழிலில் லாபத்தைத் தவிர வேறு எதுவும் நோக்கமும் தேவையில்லை என்பதும் உண்மை தான். ஆனால் நம்மவர்கள் தங்களுக்கு தேவைப்படும் ஆதாயத்திற்கு ஆசைப்பட்டு அத்தனை பேர்களையும் அடகு வைக்கும் இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் சமானியர்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை நம்புகிறீர்களா? இதற்கு மேலும் உள்ளே வந்து கொண்டுருக்கும் நிறுவனங்களுக்கு உள் கட்டமைப்பு, மின்சாரம், சாலை வசதிகள் போன்றவற்றில் நாம் கொட்டிக் கொடுக்கப்போகும் பணம் என்பது அடிப்படை அடித்தட்டு மக்களிடம் இருந்து தானே பிடுங்கி கொடுக்கப்பட்டு கொண்டு வருகிறது.

    சட்டங்கள் சரியானதாக இருந்தது, அதை கையாளும் இடத்தில் இருப்பவர்கள் நம்பகத்தன்மையாக இருந்தால் எவர் வந்தாலும் போட்டி போடலாம். இங்கே பேஸ்மெண்ட் வீக். ஆனால் பன்னாட்டுநிறுவனங்கள் உள்ளே வந்து நம்முடைய பொருளாதார கட்டிடத்தை ஸ்ட்ராங்காக மாற்றி விடுவார்கள் என்று நாமும் நம்பிக்க் கொண்டுருக்கின்றோம்.

    மன்மோகன் இன்னும் சில வருடங்களில் “போய்” விடுவார். நீங்களும் நானும் நடக்கப் போகும் கூத்துக்களை பார்க்கத்தான் போகின்றோம்.

  5. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    ஒட்டுமொத்த வரி வசூல் என்பதை விட வராத வகையென்ற வரி விட்டுக்கொடுக்கும் தொகை என்பது 2008-09இல் அதிகமாகவே உள்ளது. மறைமுக வரி வசூல் என்பதில் 2009-10இல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகை என்பது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. சுங்கவரி மற்றும் ஆயத்தீர்வையில் சலுகையளித்துள்ளதே இதற்கு காரணம். எனவே வரி வசூலைப் பொறுத்தவரை இது எதிர்மறையிலான விளைவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    ஒரு ஆண்டு முன்னால் சென்று பார்ப்போம். 2009-10 பட்ஜெட்டில் இதே வார்த்தைகளுடன் சலுகை சொல்லப்பட்டிருந்தது. கடைசி சொற்றொடரில் மட்டும் மாற்றம் இருந்தது. ‘எனவே அதிக அளவில் வரி வசூலில் மிதப்புத் தன்மையிலிருந்து மீண்டு நிலைநிறுத்த இந்த போக்கு மாற்றப்பட வேண்டும்‘. ஆனால் நடப்பு பட்ஜெட்டில் இந்த வார்த்தைகள் இல்லை.

    அனைத்து மக்களுக்கான பொது விநியோகமுறைக்குப் பணம் எதுவும் இல்லை அல்லது அந்த முறை விரிவாக்கப்படாது என்கிறது இந்த அரசு. பசி மிகுதியாக உள்ள மக்கள் தொகையினருக்கு வழங்கப்படும் உணவு மானியங்களில் சிறுக சிறுக வெட்டப்படுகிறது. அதே சமயம் விலைவாசி உயர்வும், உணவுத் தட்டுப்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கிறபோது 2005-09 ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மனிதருக்குமான தினசரி தேவைக்கான உணவு தானிய இருப்பைப் பார்த்தால் அரை நூற்றாண்டுக்கு முந்தைய 1955-59இல் இருந்ததை விடக் குறைவுதான்.

    The Hindu 7/3/2011

  6. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    ஒரே பிரிவினர் 3 விதமான வராத்தொகை தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர். ஆனால் தற்போது வரா இனம் என கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வருமான வரி, சுங்கவரி, ஆயத்தீர்வை ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் மொத்தமாக எவ்வளவு தொகை என்று பார்க்கலாம். தற்போது கைவசமிருக்கிற 2005-06 முதலான 6 ஆண்டு விவரங்களில் 2005-06ல் மட்டும் ரூ. 2,29,108 கோடி. நடப்பாண்டு பட்ஜெட்டில் இரட்டிப்பாகி அது ரூ. 4,60,972 கோடி. கடந்த 6 ஆண்டுகளின் இழந்த இத்தொகையைக் கூட்டினால் ரூ 21,25,023 கோடிகள் அல்லது அரை டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அருகில் உள்ள தொகை. இது 2ஜி அலைக்கற்றை ஊழல் மதிப்பீட்டுத் தொகையைப்போல் 12 மடங்கு மட்டுமல்ல,

    உலக நிதி நாணய நிறுவனம் சமீபத்தில் கணக்கிட்டுள்ளபடி இந்த நாட்டைவிட்டு கள்ளத்தனமாக /சட்ட விரோதமாக 1948 லிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு முதலீடாகச் சென்றுள்ள ரூ 21 லட்சம் கோடி தொகைக்கு சமம் அல்லது கூடுதலாகும் (462 பில்லியன் டாலர்). இந்தக் கொள்ளை என்பது 2005-06 தொடங்கி 6 ஆண்டுகளில் மட்டும் நடைபெற்றுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் இந்த 3 தலைப்பிலான தொகை மட்டும் 2005-06 ஐ விட 101 சதவீதம் அதிகம்

  7. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    சாய்நாத் எழுதிய கட்டுரை இது.

    இந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ 240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. 2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும். கையிலுள்ள புள்ளி விபரங்களின்படி இந்தந் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறது.

    2005-06இல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வசூலாக வேண்டியிருந்த வருமான வரி ரூ 34,618 கோடி வராத வகை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் அந்தத் தொகை ரூ 88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 155 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தேசம் தினசரி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ. 240 கோடியை தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வாஷிங்டனைச் சேர்ந்த உலக நிதி நாணய நிறுவன அறிக்கையின்படி, நம் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளிநாட்டு வங்கிகளுக்கு செல்லும் தொகையும் அந்த அளவிற்கு உள்ளது.

    ரூ 88,263 கோடி என்பது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான வருமான வரியை வராக்கடன் என‌ தள்ளுபடி செய்த வகை மட்டுமே. இதில் பொதுமக்களில் பெரும் பகுதியினருக்கு உயர் விதிவிலக்கு வரம்பை மாற்றுவதால் குறையும் வருவாய் என்பது சேர்க்கப் படவில்லை. இந்த வருவாய் இழப்பு என்பது மூத்த குடிமக்களுக்கோ, அல்லது பெண்களுக்கோ முந்தைய பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகளினால் அல்ல. கார்ப்பரேட் பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வருமான வரி மட்டுமே இந்தத் தொகையாகும்

  8. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    முரசொலி மாறன், இந்தியாவின் வணிக வரித் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சுரண்டல் திட்டம் தான் சிறப்பு பொருளாதார மண்டலம். தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி இதற்கு தொழில் நுட்பப் பூங்கா என்ற பெயர் மாற்றினார். இந்த மண்டலத்தில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, மாநில விற்பனை வரி – என்று எந்த வரியும் கிடையாது. 100 சதவீத வருமான வரி விலக்கு. தமிழ் நாட்டில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்நிய நிறுவனமான நோக்கியா செல் நிறுவனத்தைக் கொண்டு வந்தார்.

    இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதாக தமிழக அரசு உறுதி அளித்து செயல்படுகிறது. நோக்கியா நிறுவனம் மத்திய அரசுக்கு கட்டும் ‘வாட்’ வரியை தமிழக அரசே நோக்கியாவுக்கே திருப்பி செலுத்துகிறது. இவ்வாறு 2005 முதல் இதுவரை ரூ.650 கோடியை நோக்கியாவுக்கு தமிழக அரசு வழங்கியிருக்கிறது. மக்களுக்குத் தெரியாமல் இப்படி ஒரு கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது

  9. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    1991 ஆம் ஆண்டு புதிய மின்சாரக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கையை படிப்படியாகத் திணிக்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக ஒரிசா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மின்சாரத் துறை அரசிடமிருந்து தனியாருக்கு விற்கப்பட்டன. என்ரான் என்ற அமெரிக்க மின் நிறுவனம், முதன்முதலாக மராட்டியத்தில் கால் பதித்தது. இதற்கான அனுமதியை வழங்கியது, 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்து, பிறகு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் பதவி விலகிய வாஜ்பாய் ஆட்சி. அந்த 13 நாட்கள் அதிகார காலத்தில் என்ரான் நிறுவனத்தை அழைத்து வந்தார். இதற்கு என்ரான் போட்ட முதலீடு 9000 கோடி. இதில் 40 சதவீத முதலீட்டை இந்திய வங்கிகளின் அதிகார வர்க்கமே கடனாகத் தர முன் வந்தன.

    என்ரான் மின்சாரத்துக்கு மராட்டிய மாநில அரசு கொடுத்த விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.7. இழப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகையையும் தருவதாக வாஜ்பாய் ஆட்சி உறுதி கூறியது. பெரும் சுருட்டலோடு அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தைத் தராமலே – என்ரான், அமெரிக்காவுக்கு ஓடி விட்டது. இதே என்ரான் நிறுவனம், அமெரிக்காவில் மோசடி செய்து திவால் ஆன போது, என்ரான் தலைமை நிர்வாகி, அங்கே கைது செய்யப்பட்டார். இங்கே என்ரானின் சட்ட ஆலோசகராக இருந்தவர் ப. சிதம்பரம். அவர் பின்னர் நிதியமைச்சரானபோது மராட்டியத்தில் திவாலாகிப் போன என்ரான் நிறுவனத்துக்கு ரூ.9000 கோடி மக்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து அரசுக்காக வாங்கிக் கொண்டார்.

  10. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    தமிழ்நாட்டில் உள்ள நோக்கியா அலைபேசி நிறுவனம் 2005 ஆம் ஆண்டு 625 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் பத்தாண்டுகளுக்கு மதிப்புக்கூட்டும் வரியை திருப்பியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.அதன்படி நோக்கியா நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தியாவின் இதர மாநிலங்களில் அந்த நிறுவனம் செலுத்தும் மதிப்புக்கூட்டு வரியையும் தமிழ்நாடு அரசு திருப்பியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது, இந்தியாவின் இதர மாநிலங்களில் நோக்கியா அலைபேசி கருவிகள் விற்கப்படும் போது, அந்த மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியை தமிழ்நாடு அரசு ஈடுசெய்கிறது!

    இதன்படி 2008 ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் 107 கோடி ரூபாய் நோக்கியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அதாவது, நோக்கியா நிறுவனம் எவ்வளவு தொகையை முதலீடு செய்ததோ, அதைவிட அதிக பணத்தை பத்தாண்டுகளில் தமிழ்நாடு அரசு திருப்பியளிக்கப்போகிறது, கூடவே தமிழ்நாட்டில் வரிவிலக்கும் உண்டு. நிலம், மின்சாரம், கட்டமைப்பு, தண்ணீர் வசதி போன்ற இன்னபிர இலவச இணைப்புகளும் உண்டு.

  11. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    போதுமா?

    மேலே சொன்னவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். எவர் வந்தாலும் அடிப்படை விவசாயிகளின் துன்பம் தீரப் போவது இல்லை. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வரும் போது அதிகம் ஆதாயம் பெறப் போகின்றவர்கள் அரசியல்வாதிகள். எளிதாக கருப்பு வெள்ளையாக மாறிவிடும்.

  12. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    உங்கள் கட்டுரையை கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்தேன். நண்பர் கல்வெட்டு கீழே கொடுத்த விமர்சனம் தந்துள்ளார். சரிபார்த்துக் கொள்ளவும்.

    For the record… Gov. Romney never said that. Here is the complete Transcript of presidential debates.

    Please Note:
    Both candidates support and want to promotes small business but that doesn’t meant they are going to close business like Walmart. It will never happen and cant.

    There are some cities they oppose Walmart within their town limit. That is happening and that is possible based on cities voters decision.

    Presentational Debate #2 OCTOBER 16, 2012
    http://abcnews.go.com/Politics/OTUS/2012-presidential-debate-full-transcript-oct-16/story?id=17493848

    Presentational Debate #1 Oct. 3, 2012
    http://www.foxnews.com/politics/2012/10/03/transcript-first-presidential-debate/

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      மிக்க நன்றி ஜோதிஜி.

      மிகுந்த அக்கரையுடன் நிறைய செய்திகள்
      கொடுத்திருக்கிறீர்கள். இத்தகைய நிலையில்
      தான் விவாதங்கள் மனநிறைவு அளிக்கின்றன.

      நீங்கள் கொடுத்திருக்கும் புள்ளி விவரங்கள்
      ஓட்டுப்போடும் பாமரனைச் சென்றடைய என்ன செய்வது,
      அவனுக்கு எப்படிப் புரிய வைப்பது என்பது தான்
      தெரியவில்லை.

      குறைந்த பட்சம் வலைத்தள நண்பர்களுக்காவது
      இந்த தகவல்கள் கிடைக்க முயற்சி செய்வோம்.

      ரோம்னி உரை – விவாதத்தை முழுமையாகப் பார்க்காத
      நிலையில் தொலைக்காட்சி தலைப்புகளை வைத்து நான்
      கொஞ்சம் மிகைப்படுத்தி விட்டதாகத் தோன்றுகிறது.
      முழு விவரங்கள் கிடைக்கச் செய்ததற்கு நன்றி.

      விவாதம் தொடரட்டும்.
      இன்னும் நிறைய விவரங்கள் வெளிவர
      வேண்டியிருக்கிறதே !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  13. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    i do strongly WELCOM E fdi .How long tolerate these ANNACHIS?what idid they do to the society
    all these years?.Competetion is very much required,.Politicians make huge money by SUBSIDY.

    • Chandru's avatar Chandru சொல்கிறார்:

      Venkat, i too agree competition is very much required. But this is not competition , this is monopoly. Do you really think that by bringing in the FDI politicians are going to lose money?

  14. Chandru's avatar Chandru சொல்கிறார்:

    வால்மார்ட் வந்தாலும் வராவிட்டாலும் விவசாயிகள்/உற்பத்தியாளர்கள் நிலைமை மாறப்போவது இல்லை. இது அரிசியல் கட்சிகள் கொள்ளை அடிப்பதுக்கு ஒரு centralized முறை (process improvement 🙂 ). இப்பொழுது இடைத்தரகர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் இனி அரசியல் வாதிகளும், corporatesஉம் நேரடியாக கமிசன் பெரும். அனால் வால்மார்ட் போன்ற நிறுவனங்களால் கைத்தொழில்கள் முற்றிலும் அழிக்கப்படும்.

  15. கொச்சின் தேவதாஸ்'s avatar கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    அன்பு நண்பரே எனக்கு ஒரு சந்தேகம்.
    தங்களைப் பற்றி தங்களது மனைவி,தந்தை,தாயார்,குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஒரே கருத்தைதான் மதிப்பீடாக வைத்து இருக்கீறார்களா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.