“சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!!

…………………………………………….

………………………………………………

`சப்தரிஷி சாஸ்திரம்’ என்று சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். இது ஒரு பிரமாண்டமான சாஸ்திரம்.

இவ்வுலகிலே ஆதிகாலத்திலிருந்து இன்றுவரைக்கும் இருந்தவர்கள், இப்போது இருப்பவர்கள், இனிமேல் பிறக்கப்போகிறவர்கள் ஆகிய எல்லாருடைய ஜாதகங்களின் பிரதிகளும், அவற்றிற்கு மிக நுட்பமான ஆயுள் பலனும் இந்த சாஸ்திரத்தில் உண்டாம்!

என் மாமன் ஒருவர் கொடிய நோயினால் வருந்திக் கொண்டிருந்தார். அவர் மேற்படி சாஸ்திரம் வைத்திருந்த ஒருவரிடம் சென்று ஏழு ரூபாய் கொடுத்துப் பலன் கேட்டார். ஓர் அறையில் கட்டுக்கட்டாகக் கிடந்த ஓலைச்சுவடிகளை மூன்று நாள் புரட்டிப் புரட்டித் தேடிய பிறகு அவருடைய ஜாதகத்தைப் போன்ற ஒரு ஜாதகமும், 200 பாட்டுகளில் அந்த ஜாதகத்தின் பலன்களும் அடங்கிய சுவடிக்கட்டு கிடைத்தது.

மேற்படி பாட்டுகளுக்கு நகல் எடுத்துக்கொண்டு அவர் திரும்பி வந்து சேர்ந்தார். அந்த பாட்டுகளில் அவருடைய ஊர், பெயர் முதற் கொண்டு அன்றுவரை அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் எல்லாம் சிறிதளவும் மாறாமல் கூறப்பட்டிருந்தன. இது குறித்து எல்லாரும் மிக்க ஆச்சர்யமடைந்தார்கள்.

பொக்கிஷம் - அரசாங்கத்தின் மதுவிலக்குப் பிரசாரம் - கல்கி

ஆனால், எனக்கு வேறொரு விஷயம் அதைவிட ஆச்சர்யமாயிருந்தது, `சப்தரிஷி சாஸ்திரம்’ பண்டைக்கால ரிஷிகளால் அருளிச் செய்யப்பட்டதாம். அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அது எழுதப்பட்டிருக்க வேண்டும். அதற்குப் பிறகு இன்றுவரை உலகில் கோடானு கோடி மனிதர்கள் பிறந்து, இறந்திருக்கிறார்கள்.

இத்தனை பேருடைய ஜாதகப் பலன்களும் எழுதப்படுவதற்கு எவ்வளவு சுவடிகள் வேண்டும்… இச்சுவடிகளையெல்லாம் வைக்க எவ்வளவு பெரிய இடம் வேண்டும்… ஆனால் என் மாமனார் ஒரு சிறு அறையில் கிடந்த சுவடிகளிலிருந்து தம்முடையதைத் தேடி எடுத்ததாகக் கூறினார். இது சந்தேகத்துக்கிடமென்பதாக எனக்குத் தோன்றிற்று.

பின்னால், சந்தேகமும் நீங்கிவிட்டது. சாஸ்திரம் பார்த்துவிட்டு வந்ததற்குப் பிறகு ஒன்றாவது அதில் கூறியபடி நடக்கவில்லை. முப்பத்தி நாலாவது வயதில் அவர் நோய் நீங்கிக் குணம் பெறுவாரென்றும், அதன் பின்னர் அவருக்கு சர்க்கார் உத்தியோகம் கிடைக்குமென்றும், இரண்டு பெண் குழந்தைகள் பிறக்குமென்றும், ஐம்பத்தைந்தாவது வயதில் துவாதசி திதியில் காலை பத்து நாழிகைக்கு அவர் காலமாவார் என்றும் சாஸ்திரம் சொல்லிற்று.

நல்லவேளையாக அவர் இந்த விபத்துகளுக்கெல்லாம் தப்பி, சாஸ்திரம் பார்த்த நாலாவது வருஷத்தில், முப்பத்தி மூன்றாம் வயதில் அமாவாசையன்று இரவு பன்னிரண்டு மணிக்கு மரணமடைந்தார். அந்த வயதிலே ஒரு கண்டமிருப்பதாகக்கூட சப்தரிஷி வாக்கியத்தில் சொல்லப்படவில்லை.

`சப்தரிஷி சாஸ்திர’த்தைக் காவல் புரிந்த கனவான் கவி பாடத் தெரிந்தவ ராயிருக்கலா மென்பது என் ஊகம். சாஸ்திரம் பார்க்க வருவோர் ஏழு ரூபாயைக் கொடுத்துவிட்டு ஓலைச்சுவடிகளை புரட்டிக் கொண்டி ருக்கும் போது, இவர் அவர்களுடைய வரலாறுகளை விசாரித்து அறிந்து, கவிபாடிச் சுவடியில் எழுதிக் கும்பலில் சேர்த்துவிடுகிறார்போலும்…!!!

இன்னும் இரண்டோர் அநுபவங்கள் கூறிவிட்டு என் கதையை முடித்துக்கொள்கிறேன். எங்கள் ஊரில் ஜோசியர் ஒருவர் வெகு காலமாகப் பிரபலமடைந்திருந்தார். தூர தூர இடங்களிலிருந்து அவரிடம் ஜோதிடம் கேட்கவும், கலியாணப் பொருத்தங்கள் பார்க்கவும் ஜனங்கள் வருவார்கள். அவருக்கு அருமையாக ஒரு பெண் இருந்தாள். அவளுக்குக் கலியாணம் மிகச் சிறப்பாக நடத்தினார் ஜோசியர்.

கலியாணத்தின் நாலாம் நாள் இரவு மாப்பிள்ளைக்கு காலரா வந்து மறுநாள் காலையில் பெண் விதவையாயினாள். இந்தப் பரிதாப சம்பவம் நடந்ததற்கு அடுத்த மாதத்தில் ஜோசியர் எங்கள் ஊரைவிட்டே போய்விட்டார்.

இதன் பிறகு, மற்றொரு ஜோசியர் தற்காலிகமாக எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவரிடம் விதைவிடுவதற்கு நல்ல நாள் கேட்டுக்கொண்டு பெரிய மிராசுதார்கள் பலர் சாகுபடிக்கு விதை தெளித்தார்கள். பதினைந்து நாளைக்கெல்லாம் கொள்ளிடம் உடைப்பெடுத்துக்கொள்ளவே நாற்றுகளெல்லாம் அடியோடு நாசமாயின! பல நிலங்கள் மண் மேடிட்டுப் போயின. சர்க்கார் கிஸ்திகூட வஜா செய்யப்பட்டதென்றால், மகசூல் எவ்வளவு நன்றாயிருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக்கொள்ளலாம்…!!!

ஒருக்கால் வாசகர்களில் சிலருடைய அநுபவம் வேறு விதமாயிருந்திருக்கக்கூடும். அவர்கள் கேட்ட ஜோதிடம் ஒருவேளை பலித்திருக்கவுங் கூடும். எனினும், அதனால் அவர்கள் அடைந்த பயன் யாதென்பதைச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜோதிட சாஸ்திரமே பொய்யென்பதாக நான் சொல்லவில்லை.

அது உண்மையாகவே இருந்தாலும், அதிக பயனில்லை என்று மட்டுமே தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இன்றைக்குப் பத்து வருஷத்திற்குப் பிறகு எனக்கு ஒரு தீமை வரப்போவதாக வைத்துக்கொள்ளுவோம். அதை இப்போதே தெரிந்துகொண்டால் நான் அடையும் பயன் என்ன… ???

தீமையைத் தடுத்துவிட முடியாது. அத் தீமையை இப்போதிருந்தே எண்ணி எண்ணி வருந்துவதைத் தவிர வேறு லாபம் என்ன… வரப்போவது நன்மையாக இருந்தால் அதை அறிந்துகொள்ளவும் நான் விரும்பவும் மாட்டேன். திடீரென்று எனக்கு ஒரு புதையல் கிடைத்தால் ஆயிரம் ரூபாயாயிருந்தாலும் சந்தோஷப்படுவேன். புதையல் கிடைக்கப்போகும் விஷயம் முன்னமே தெரிந்தால், “சீ! இவ்வளவுதானா… 5000 ரூபாய்கூட இல்லையே?’’ என்று வருத்தப்படுவேன். ஆகவே, பயன் என்ன?

கடைசியாக, ஜோதிடர்களுக்கு ஒரு வார்த்தை.

இதைப்போல் நான் இன்னும் 9,999 கட்டுரைகள் எழுதினாலும் உங்களுடைய பிழைப்புக்கு யாதொரு குறையும் வராது. ஆதலின், கவலையற்றிருங்கள்….!!!

(1929, மார்ச்)

…………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்… இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே… மிக நல்ல பகிர்வு.

    கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன் பெண் விதவை ஆனபிறகு அவர் ஜோசியம் பார்ப்பதையே விட்டுவிட்டார். நடக்கும் என்றால் ஜோசியர் கண்களில் தெரியாமல் போய்விடும்.

    எனக்கும் சில ஜோசியங்கள் அச்சு அச்சாக பலித்திருக்கின்றன. பல பலிக்கவில்லை. ஜோசியத்தைக் குறை சொல்ல இயலாது. என் நேரத்தைத்தான் குறை சொல்லிக்கணும்.

பின்னூட்டமொன்றை இடுக