விகடன் ஏன் இப்படி தரம் கெட்டுப் போனது ? அதற்கு நாஞ்சில் நாடன் கூடவா துணை போக வேண்டும் ?

17/10/2012 தேதியிட்ட ஆனந்த விகடன் வார இதழில்
ஒரு முழு பக்கத்தில் நாஞ்சில் நாடன் அவர்களின்
புகைப்படத்துடன் ஒரு அழைப்பு

“விகடன் வாசகர்களுக்கு வணக்கம்.
இன்று…ஒன்று …நன்று …மூலம் உங்களை
சந்திப்பதில் இந்த நாஞ்சில் நாடனுக்கு ரொம்ப சந்தோஷம்.
நல்ல விஷயங்கள் நிறைய இருக்கே…
நமக்குள் பரிமாறிக்க !

…….ல்  இருந்து ………… வரைக்கும்
.…என்ற எண்ணில் கூப்பிடுங்க. நிறைய நிறைய
நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கலாம்.

அன்பின் மகிழ்வில்,
நாஞ்சில் நாடன்”

நாஞ்சில் நாடன் அவர்கள் மீது எனக்கு மிகுந்த பிரியம் உண்டு.
அவர் எழுத்தை மிகவும் ரசிப்பவன் நான்.

அண்மையில் வெளிநாடுகளுக்கெல்லாம் வேறு போய்த்
திரும்பி இருக்கிறார்.எனவே புதிதாக அவர் என்ன சொல்கிறார்
கேட்போம் என்று ஆவலுடன் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு
போன் செய்தேன்.

மிகுந்த வேதனையுற்றேன்.கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் –
முழுக்க முழுக்க மின்வெட்டைப் பற்றியே குறைகூறிப்
பேசினார். தொழிலாளர் படும் வேதனை, படிக்கும்
மாணவர்களின் வேதனை, மருத்துவமனைகளில் அவஸ்தை-
வேறு எதைப்பற்றியுமே பேசவில்லை.

– இத்தனை  நரக வேதனைகளையும் நாம்  ஏற்கெனவே
அனுபவித்துக் கொண்டு தானே இருக்கிறோம். இது என்ன
நாஞ்சிலாருக்கு மட்டும் ஏற்பட்ட அதிசய அனுபவமா ?-
அவரிடம் காசு செலவழித்து போன் போட்டு  இதைப்பற்றி
கேட்கவா விரும்புவோம் நாம் ?

போதாததற்கு ஒரு அசிங்கமான -கேவலமான
உதாரணம் வேறு. அமெரிக்காவில் எப்போதோ ஒரு மணி
நேரம் சுத்தமாக மின்சாரம் செயல் இழந்து போனதாம்.
அதன் விளைவு என்ன என்று 270 நாட்களுக்குப் பிறகு
தெரிந்ததாம்.  குழந்தைகள் பிறப்பு சரித்திரத்திலேயே
உச்சகட்டத்தை எட்டி இருந்ததாம்!
என்ன கேவலம் இது. என்ன ரசனை இது ?
நரக வேதனையில் உழன்று கொண்டிருக்கும் நம் மக்களை
இத்துடன் ஒப்பிடலாமா ?

மேலும் பல்வேறு தலைப்புக்களில் நாஞ்சிலாரின் உரையை
பதிவு செய்து இருக்கலாம். சுழற்சி முறையில்
வேறு உரை வரக்கூடும்.
முதல் தடவை தான் நமக்கு அதிருஷ்டமில்லை. மீண்டும்
முயற்சி செய்வோம் என்று வெவ்வேறு தொலை
பேசிகளிலிருந்து இடைவெளி விட்டு 3 தடவை முயற்சி
செய்தேன்.
3 முறையும் இதே நாராசம் தான்.
ஒரு வேளை வேறு பதிவுகள் இருந்தாலும் கூட,
இந்த உரை தேவை இல்லாதது. பொருத்தம் இல்லாதது.

“நல்ல விஷயங்கள் நிறைய இருக்கே – நமக்குள்
பரிமாறிக்க. வாருங்கள் – பகிர்ந்துக்கலாம்” –
என்று கூறி அழைத்து விட்டு
ஏன் இப்படி நாராசங்களைப் பேசி எரிச்சலூட்ட வேண்டும் ?

விகடன் தான் அறிவுகெட்டுப்போனது என்றால்
நாஞ்சிலாருக்கு என்ன ஆயிற்று ? விகடன் காட்டும்
பாதையில் அவர் ஏன் போக வேண்டும் ? எதைப்பேச
வேண்டும் என்று தீர்மானித்தது அவரா இல்லை விகடனா ?

பூக்கடைக்கு அழைத்து விட்டு
சாக்கடையைக் காட்டினால் எப்படி ?

இந்த நிகழ்வு மட்டுமல்ல நான் இந்த இடுகையை
எழுதக் காரணம்.

ஏற்கெனவே இலக்கியத் தரம் வாய்ந்த இதழாகத் தன்னை
கூறிக்கொண்டே, அட்டைப்படங்களில் சினிமா நடிகைகளின்
கவர்ச்சிப் படங்களை தொடர்ந்து போடுவது
விகடனுக்கு வழக்கமாகி விட்டது.

குமுதத்திற்கு தான் தமிழ் போர்னோ பத்திரிகை
என்று ஏற்கெனவே தண்ணீர் தெளித்து விட்டாகி விட்டது
என்பதால்  அதைப் பற்றி புதிதாகக் கூற
நமக்கு ஒன்றுமில்லை.

ஆனால் இலக்கியத்தை பற்றியும், தரத்தைப் பற்றியும்
பேசிக்கொண்டிருக்கும் விகடன் இப்படித் தாழ்ந்தது எப்படி ?
குமுதத்துடன் இதில் போட்டி போட விரும்புகிறதா ?

உங்களில்  எவ்வளவு பேருக்கு விகடன் குழுமத்தின்
புதிய புறப்பாடு “டைம் பாஸ்” பார்க்கும் (அல்லது படிக்கும் )
“பாக்கியம்”  கிடைத்திருக்கும் என்று தெரியவில்லை.

ஐந்தே ரூபாய் – ஆமாம் ஐந்தே ரூபாயில்  –
ஆபாசக் களஞ்சியம் !
முதல் இதழில் –
26 ஆபாச, அரைநிர்வாண, கால்நிர்வாண
புகைப்படங்கள். இரண்டாவது இதழில் 13.
(இது வரை இரண்டு இதழ்கள் தான் வந்திருக்கின்றன )
தனிமனிதரின் –
அந்தரங்க வக்கிரங்கள் அத்தனைக்கும் தீனி போட்டு
வளர்க்கவென்றே தமிழில் ஒரு புதிய புறப்பாடு !

சீ – இத்தனையும் எதற்காக ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to விகடன் ஏன் இப்படி தரம் கெட்டுப் போனது ? அதற்கு நாஞ்சில் நாடன் கூடவா துணை போக வேண்டும் ?

  1. maathur venkataramani's avatar maathur venkataramani சொல்கிறார்:

    விகடன் (குமுதமும் கூட) அதை துவக்கியவர்களின்
    குடும்பத்தை சார்ந்தவர்களின் நிர்வாகத்தில் இல்லை.
    அவற்றில் பாரம்பரியம் மிக்க அவர்களின் மேற்பார்வையோ
    வழிகாட்டுதலும் கூட இல்லை.

    சினிமா மாதிரி பத்திரிகை உலகமும் முழுக்க முழுக்க
    வியாபாரம் சார்ந்ததாகி விட்டது. ஒன்றையொன்று மிஞ்சவும்
    விஞ்சவும் பற்பல “உத்திகளை”க் கைகொள்கிறார்கள்.

    வாசன் காலத்திலும் அவருக்குப் பின் சீனுவாசன் காலத்திலும்
    “விகடன்” வாசகன் என்று சொல்லிக் கொள்ள கர்வப்பட்டவர்கள்
    நிறைய. காலஞ்சென்ற மணியன் விகடனில் இருந்த காலத்தில்
    கொஞ்சம் ஆபாசமும் ஜெயராஜ்-ன் சித்திரங்களும் “புதிய”
    வாசகர்களை அதன்பால் கொண்டு வந்தது.

    ஜெ-ன் சித்திரங்களுக்கெல்லாம் இப்போஅது தேவையே இல்லாது
    போய்விட்டது. அவரது பென்சில் வளைவுகளையெல்லாம்
    தூக்கியெறிந்துவிடும் சினிமா நடிகைகளின் நிஜமான போஸ்கள்
    அந்த இடத்தைப் பிடித்து பல காலமாகிவிட்டது.

    அரை குறை ஆடையணிந்த “புகை”ப்படங்கள்தான் ஆபாசம்
    நிறைந்தது என் எண்ணிவிட வேண்டாம். அதையெல்லாம்
    “ஒன்றுமில்லை” என் சொல்லும் வண்ணாம் அவர்களின்
    பார்வை, உதடுகள், முன் துறுத்திய மார்பகங்கள், அணிந்துள்ள(?)
    ஆடைகள், வளைந்தும் நெளிந்தும் தரும் போஸ்கள் என பட்டியல்
    பெரிதாக நீள்கிறது.

    சமஸ்க்ருதம் அறிந்தவர்கள் மத்தியில், “கால தேச வர்த்தமாணம்”
    என்றொரு வாசகமுண்டு. அவ்வண்ணம், இப்பத்திரிகைகள்
    இதழியல் தர்மம், சமூக பொறுப்பு, சுய வரையறை எல்லாம்
    மறந்து, “யார் முதலில்” என்கிற ஒரு மாய ஓட்டத்தில் ஓடிக்
    கொண்டு ஊரைக் கெடுத்து கொண்டிருக்கின்றன.

    ஒரு விஷயம்: படித்த, வேலைக்குப் போகும் தமிழறிந்த பெண்கள்
    பெரும்பாலும் இவற்றை விரும்பி வாசிக்கிறார்கள்.

  2. Padmanabhan Potti L's avatar Padmanabhan Potti L சொல்கிறார்:

    மின்சாரத்தை குறித்து தெரியாதவர்களுக்கு விளக்கி கூறிகிறார் போலிருக்கிறது. தெரிந்தவர்களுக்கு முன்னர் குற்றம்
    சொன்னீர்களே இப்போது என்ன சொல்கிறீர்கள் என கேட்க்கிறாரோ என்னமோ? அமெரிக்க கதையை குறித்து
    கூறியதெல்லாம் தெரிந்ததே. ஏற்கனவே இதுபோன்ற பழமொழியே வழக்கத்தில் உள்ளது. பொதுவாகவே அனைவரும் பாசிட்டிவாக பேசவேண்டும். ஒருகாலத்தில் ஆனந்த விகடன், கல்கி, குமுதம் வீடுதோறும் தாய்மார்கள் படிப்பதை பெருமையாக கருதினார்கள். இப்போது வேலைக்கு போகும் பெண்கள் வழியில் பொழுது
    போவதற்காக படிக்கிறார்கள்.

  3. Rajagopalan rangarajan's avatar Rajagopalan rangarajan சொல்கிறார்:

    எல்லாம் புகழ் தரும் போதை !
    புகைப்படத்தோடு, முழுப்பக்க விளம்பரம் கொடுத்து, உங்கள் பேச்சை தமிழ் கூறும் நல்லுலகம் பூராவும் கேட்கப்போகிறது – வந்து பேசுங்கள் என்று கூப்பிட்டதும், அந்த புகழும், விளம்பரமும்
    தரும் போதையில் தான் என்ன சொன்னாலும் கேட்க மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள் என்று
    நினைத்துக் கொண்டு பொருத்தம் இல்லாத விஷயங்களை பற்றி எல்லாம் பேசுகிறார்கள்.
    இதற்கு முன்னர் யார் யாரையெல்லாம் கூப்பிட்டிருக்கிறார்கள்
    என்று பட்டியலைப் பார்த்திருந்தால் வந்திருக்க மாட்டார்கள்.

    நான் கூட உங்களைப் போல் தான் காசு கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டேன். ஓசையைப் பற்றியும்,
    மக்கள் போடும் இரைச்சலைப்பற்றியும் “பொளந்து”
    தள்ளி விட்டார். சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது எப்படி என்று இப்படியெல்லாம் அனுபவித்துப்
    பார்த்தால் தானே தெரிகிறது.

    எனக்கு எழுத வராது. எனக்குள்ளேயே திட்டிக்கொண்டிருந்தேன். நீங்கள் சரியான சமயத்தில் எழுதி விட்டீர்கள். இதைப் போன்ற விஷயங்களை எல்லாம் உங்களைப் போல் யாராவது
    எழுதிக் கொண்டே தான் இருக்க வேண்டும். தொடர்ந்து
    எல்லாவற்றைப் பற்றியும் எழுதுங்கள் காவிரிமைந்தன்.
    நன்றி.

  4. கொச்சின் தேவதாஸ்'s avatar கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    விகடன் எப்பவுமே வஞ்சப் புகழ்ச்சி அணி செய்வதில் மிகுந்த தேர்ச்சி பெற்றது.
    அந்த பத்திரிகை என்ன வேண்டுமானாலும் எழுதலாம். யாரும் எந்த கேசும் போட்டவிடக் கூடாது.
    அப்படி போட்டால் இப்படித்தான் ஒரு குறையை பெரிதாக்கிக் காட்டுவார்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

  5. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    vikatan follows kumudam,both should be banned

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      you different !! (அதாவது… நீங்க வேற!),
      ஆபாச புத்தகங்களை தடை செய்ய வேண்டுமென்றால் இந்தியாவில் பஞ்சாங்கங்களைத்தவிர வேறு எல்லா புத்தகங்களையும் தடை செய்ய வேண்டியதுதான்..அதில்கூட சில பஞ்சாங்கம் பதிப்பாளர்கள்,
      தங்கள் விற்பனையை அதிகரிக்க,சமீப காலமாக,
      “உடலுறவு கொள்ள நல்ல நேரம்”
      என்றெல்லாம் பகுதிகள் சேர்த்துள்ளதாக கேள்வி!

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அடிப்படையில் உலகின் மிக தீவிரமான போலிகளில்(hypocrites),இந்தியர்கள் முதன்மையானவர்கள்.ஒரு வீட்டின் வரவேற்பறையில் Playboy ,Penthouse போன்ற சஞ்சிகைகள் இருந்தால் அவர்களை நாம் வெறுத்து விமரிசிப்போம்.

    ஆனால் அதைவிட மோசமான விகடன்,குமுதம் போன்றவைகளை குடும்ப பத்திரிக்கைகளாக ஏற்று கொண்டுள்ளோம்.இதையெல்லாம் தூக்கி சாப்பிடும், “தினமலர்” நாளிதழ் . இதன் வாரமலர் இணைப்பில் “அன்புடன் அந்தரங்கம்” என்ற அசிங்கம் ஒன்று இடம்பெறும்.இதைவிட ஆபாசமான,அயோக்கியத்தனமான ஒரு பதிவு உலகிலேயே இருக்க முடியாது.இதை கண்டித்து நான் தினமலர் நிர்வாகதிற்கே எழுதியிருக்கிறேன்.ஆனால் பலன் எதுவும் இல்லை.

    ஊழலில் தாராளம்,

    ஆபாசத்தில் தாராளம்,

    அயோக்கியத்தனத்தில் தாராளம்,

    பொய் உரைப்பதில் தாராளம்,

    கபடத்தில் தாராளம்..

    இதுதான் நம்மைப்பொறுத்தவரை
    தாரளமயமாக்கம்.

    யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.
    என்ன செய்வது ? உண்மை கசக்கத்தான் செய்யும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.