— புண்ணியம் தேடுவது எப்படி … ???

……………………………

………………………………

மாலை நேரத்து வெயில் மெல்லத் தாழ்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெருநகரத்தின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் தங்களுக்குத் தேவையான ஆடைகளையும், நகைகளையும் வாங்குவதில் மூழ்கியிருந்தனர் அரவிந்தும் அவனது மனைவி மாலதியும்.

பல மணி நேரத் தேடலுக்குப் பின், கைகளில் விதவிதமான பல வண்ணப் பைகளில் வாங்கிய பொருட்களுடன் அங்கிருந்து வெளியேறினர்.

“பசிக்குதுங்க, இப்படியே பக்கத்துல இருக்கிற அந்தப் பெரிய ஹோட்டல்ல சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்றாள் மாலதி களைப்புடன்.

அரவிந்தும் புன்னகையோடு சம்மதித்து, அந்தப் பிரம்மாண்ட உணவகத்திற்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கே அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளைச் சாப்பிட்டு முடித்துவிட்டு, தங்களது மகிழுந்தை நோக்கி வந்தனர்.

சரியாக அவர்கள் மகிழுந்தின் அருகே வந்தபோது, ஒரு முதிய தாய் தள்ளாடும் நடையுடன் அவர்கள் முன்னால் வந்து நின்றார்.

சுருங்கிய கைகளை ஏந்தி, “ஏதாவது தர்மம் செய்யுங்கப்பா… பசிக்குது” என்று தழுதழுத்த குரலில் வேண்டினார்.

அரவிந்த் ஒரு கணம் அந்தப் பாட்டியைப் பார்த்தான். உடனே தன் பணப்பையை எடுத்து, அதிலிருந்த ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து அந்தத் தாயின் கைகளில் கொடுத்தான்.

எதிர்பாராத அந்தப் பெரிய தொகையைக் கண்டதும் அந்த முதியவரின் கண்களில் கண்ணீர் அரும்பியது. “ரொம்ப நன்றிப்பா… நல்லா இருங்க…” என்று மனதார வாழ்த்திவிட்டு நகர்ந்தார்.

மகிழுந்தின் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்த மாலதி, சற்று முகத்தைச் சுளித்து அரவிந்தைப் பார்த்துக் கேட்டாள்:

“ஏங்க, அந்தப் பாட்டிக்கு எதுக்கு நூறு ரூபாய் கொடுத்தீங்க…???

நீங்க என்ன கர்ண பரம்பரையோ…? அஞ்சோ பத்தோ கொடுத்திருந்தா போதாதா…? கிழவிக்கு ஏன் அவ்வளவு பெரிய தொகை…?”

அரவிந்த் அமைதியாக மகிழுந்தை இயக்கினான். அவளது கோபத்தைக் கண்டு அவன்பதிலுக்கு கோபப்படவில்லை, மாறாக ஒரு மெல்லிய புன்னகையுடன் பேசத் தொடங்கினான்:

“மாலதி… உனக்கு புடவை, நகைகள், எனக்குத் துணிகள், செருப்புகள், நம்ம குழந்தைகளுக்கு ஆடைகள்னு இப்போ நாம ரொம்ப சாதாரணமா லட்சக்கணக்குல செலவு பண்ணிட்டு வரோம்.

ஆனா, அந்த வயசான அம்மா நம்மகிட்ட ஆடம்பரத்தைக் கேட்கல; அவங்களோட வயித்துப் பசியைப் போக்கிக்கத்தான் நம்மளத் தேடி வந்திருக்காங்க.”

சற்று இடைவெளி விட்டு அவன் தொடர்ந்தான்: “நாம கொடுத்த இந்த நூறு ரூபாயை வெச்சு அந்த அம்மா ரெண்டு வேளை வயிறாரச் சாப்பிடுவாங்க.

அப்படிச் சாப்பிடும்போது ‘யாரோ புண்ணியவான் கொடுத்தான்’னு அவங்க மனசார நம்மள நினைப்பாங்க. அதனால நமக்கு ஏதோ பெரிய புண்ணியம் கிடைச்சிடணும்னு நான் இதைச் செய்யல.

ஆனா, அந்த அம்மாவோட பசி தீருது பாரு… அதுதான் முக்கியம்.”

அரவிந்தின் குரல் இப்போது இன்னும் நிதானமாகவும் ஆழமாகவும் மாறியது.

“மாலதி, மனிதனுடைய வாழ்க்கையில மூணு விஷயங்கள் எப்ப வரும்னு யாருக்குமே தெரியாது…. அது எப்ப வேணும்னாலும், யாருக்கு வேணும்னாலும் வரலாம். அது என்ன தெரியுமா?”

…..இயலாமை

….நோய்

…..இறப்பு

“இந்த மூன்றும் நமக்கும் எப்ப வேணாலும் வரலாம். நாம நல்ல நிலைமையில, நம்மால முடிஞ்ச வசதியோட இருக்கும்போது, நம்மளால இயலாதவங்களுக்குச் செய்யுற இந்தச் சிறு உதவி இருக்கே… அதுக்காகவே இறைவன் நமக்கு வரவிருக்கும் அந்த மூன்று துன்பங்களையும் தள்ளிப்போடலாம் அல்லது அதன் வீரியத்தைக் குறைக்கலாம்.”

அரவிந்த் சொல்லி முடித்ததும் மகிழுந்துக்குள் அமைதி நிலவியது.

கணவனின் பேச்சிலிருந்த பேரன்பும், வாழ்வின் எதார்த்தமும் மாலதியின் இதயத்தைத் தொட்டது.

ஆடம்பரச் செலவுகளுக்கு நடுவே, ஒரு ஏழையின் பசியை உணர்ந்த அவனது நற்குணத்தை எண்ணி அவள் கண்கள் கலங்கின. தன் தவறை உணர்ந்து, அவனைக் பெருமையோடு பார்த்தாள்.

கதை சொல்லும் பாடம்:

மேற்சொன்ன மூன்று துன்பங்களும் நமக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனவே, நம்மால் இயன்றவரை, நம்மிடம் இருக்கும்போதே இல்லாதவர்களுக்கு உதவி செய்து நல்லதைச் செய்வோம்! (நன்றி – பெனிட்டோ குமார்….)

( பெரும்பாலானோர், இதைப்பற்றியெல்லாம் யோசிப்பதே இல்லை…. அதனால் தான் தேடியெடுத்து இந்தப்பதிவை இங்கே போட்டிருக்கிறேன் …..!!! )

……………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக