அழகிய நடன மங்கையும், தெனாலிராமனும் ….. !!!

……………………………

……………………………..

தெனாலிராமன் கதைகள் பெரும்பாலானவை நகைச்சுவையை முன்நிறுத்தி பேசும்….. ஆனால் சில கதைகள், சமயோசிதம், புத்தி சாதுர்யம், வித்தியாசமாக யோசிக்கும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும்….. கீழே, 2-வது கதையொன்று –

………………………………………..

மன்னர் கிருஷ்ணதேவராயரை​போர்ப்படைகள் மூலம் மன்னர் வீழ்த்த முடியாது என உணர்ந்த அண்டைநாட்டு சுல்தான் அவரை அவமதிக்க வேறொரு சதித்திட்டம் தீட்டினான்.

​அரசருக்குக் கலைகளில் ஆர்வம் அதிகம் என அறிந்திருந்த சுல்தான், இதை வைத்தே அவரை அவமதிக்கத் திட்டம் தீட்டினான்.

அதன்படி தன்னுடைய ரகசியத் திட்டத்தைக் கூறி, நடனக்கலையில் சிறந்து விளங்கிய ஒரு பெண்ணைக் தேர்வு செய்து கிருஷ்ணதேவராயர் அரசவைக்கு அவளது அடையாளத்தை மறைத்து அனுப்பினான்.

​நாட்டிலேயே சிறந்த நடனக் கலைஞர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அரண்மனைக்குள் நுழைந்த அந்தப் பெண்ணுக்கு, அன்று மாலை அரசர் முன்னிலையில் தன்னுடைய திறமையைக் காண்பித்து அரசரை மகிழ்விக்க அனுமதி அளிக்கப்பட்டது.

​அன்று மாலை பெரும் கலைஞர்கள் கூடியிருக்கும் அரங்கத்தில், அரசர் உட்பட அனைவரும் வந்து அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

அந்தப் பெண் மிகச் சிறப்பாக நடனமாடினாள். தாளத்திற்கு ஏற்ப அவளின் அசைவுகள் துல்லியமாகவும் கலை நயத்துடனும் இருந்தன.

​மக்கள் அனைவரும் அவளைப் பாராட்டினார்கள்.

அரசர் கிருஷ்ணதேவராயர் அப்பெண்ணின் நடனத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். மன்னர் தவிர அவையோர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

​”பெண்ணே! உன் நடனம் எங்களை மகிழ்வித்தது. அற்புதமான திறமை. உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்!” என்று மன்னர் அப்பெண்ணிற்கு அவையோர் முன்னிலையில் வாக்களித்தார்.

​அவள் பொன், பொருள், பரிசு அல்லது நிலம் இவற்றை கேட்பாள் என்று அவையோர் ஆவலுடன் அவளது வார்த்தைக்குக் காத்திருந்தனர். ஆனால் அவளோ மிகவும் கீழ்த்தரமான ஒரு ஆசையைக் கூறினாள்.

​”மன்னா! நாளை காலை நான் உங்களுடைய அரசவையில் மலம் கழிக்க விரும்புகிறேன்,” என்று கொஞ்சமும் முகம் சுளிக்காமல் கூறினாள்.

அவையோர் அதிர்ச்சியடைந்தனர். மன்னர் திகைத்தார். வீரர்கள் வாளை உருவினார்கள். ஆனால் மன்னர் அவர்களைத் தடுத்துவிட்டார்.

மிகப்பெரும் சதிவலையில் சிக்கிவிட்டோம் என்பதைப் புரிந்து கொண்டார்.

​வாக்குக் கொடுத்துவிட்டோம், ஒன்றும் செய்யலாகாது. நினைத்தால் அவளது தலையை இங்கேயே உருளச் செய்ய முடியும். ஆனால் அது சரியாக இருக்காது. கட்டாயம் இது சுல்தானின் திட்டமாகத்தான் இருக்கும். இதற்கு வேறு உபாயம்தான் கண்டறிய வேண்டும் என்று மனதிற்குள் கணக்குப்போட்டுவிட்டார்.

​”பெண்ணே! உன் விருப்பப்படியே ஆகட்டும்” என்று கூறி அவளை அங்கிருந்து செல்ல அனுமதித்தார். அவையோர் அதிர்ச்சியுற்றனர். அவள் கைது செய்யப்படுவாள் என நினைத்த அவையோருக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.

ஆனால் மன்னரே விடுவித்த பின் நாம் என்ன சொல்வது என்று அமைதியாகிவிட்டனர்.

அன்று ஊர் முழுவதும் இதே பேச்சாக இருந்தது.

​அலுவல் காரணமாக வெளியூர் சென்றிருந்த தெனாலிராமனை ஆள் அனுப்பி உடனடியாக விஜயநகரம் வரச் செய்தார் மன்னர். நடந்த விவரங்களைக் கூறினார். “தெனாலிராமா! இது என்னை அவமானப்படுத்த நடந்த சதி போலத் தோன்றுகிறது. நம்மிடம் பகை கொண்டுள்ளவன் நேரடியாக மோத முடியாமல் இது போலக் கீழ்த்தரமான செயல்கள் மூலம் நம்மை அவமானப்படுத்தப் பார்க்கிறான். இதற்கு ஏதாவது ஒரு உபாயம் கண்டறிய வேண்டும்,” என்று அவனிடம் ஆலோசனை கேட்டார்.

​ராமனும் யோசித்து, “ஆம் மன்னா! கட்டாயம் அண்டை நாட்டு சுல்தான் தான் இது போலக் கீழ்த்தரமான வேலைகளைச் செய்வான். இதற்கு நாம் அவர்கள் வழியிலேயே வேறு விதமாகப் பதிலடி கொடுப்போம்,” என்று கூறி மன்னருக்கு மட்டும் கேட்கும்படி ரகசியமாகத் திட்டத்தைக் கூறினான்.

​அதைக் கேட்டதும் மன்னரின் மனதில் இருந்த சோகம் நீங்கி முகம் தெளிவடைந்தது.

அவனைத் தழுவிக்கொண்டார்.

​அடுத்த நாள் காலை அரசவை கூடியது. மக்கள் அனைவரும் ஆத்திரத்தோடு இருந்தனர். அந்த நடனமாது அரசவைக்கு வந்தாள். அரசரும் அங்கே அமர்ந்திருந்தார்.

“பெண்ணே! உன் விருப்பப்படியே ஆகட்டும். நீ தாராளமாக இங்கே மலம் கழிக்கலாம். ஆனால் ஒரு நிபந்தனை,” என்றார்.

​அப்பெண் தன்னுடைய திட்டத்தில் வெற்றி பெற போகிறோம் என்ற கருத்தில் மிகவும் திமிராக, “என்னவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்,” என்று இறுமாப்புடன் பதிலளித்தாள்.

​”பெண்ணே! நீ தாராளமாக இங்கே அரசவையின் நடுவே மலம் கழிக்கலாம். ஆனால் மலம் கழிக்கும் போது சிறுநீர் கழிக்கக் கூடாது. அவ்வாறு மலம் கழிக்கும் போது ஒரு சொட்டு சிறுநீர் கூட இங்கே வெளியேறினால் உனது சிரம் அரசவையில் உருளும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை,” என்றார்.

“கேட்டதைக் கொடுப்பதாக நான் கொடுத்த வாக்கை நான் காப்பாற்றிவிட்டேன். அதே போல் என் நிபந்தனைக்குக் கட்டுப்படுவதாக நீ கூறியதை நீ காப்பாற்ற வேண்டும்,” என்றார்.

​அப்பெண்ணிற்கு உடல் உதறியது. கைகள் நடுங்கின. நடனமாடிப் பழகிய கால்கள் முதல்முறை உயிர்ப்பயத்தில் நடுங்கியபடியே ஆடின.

” ஒரு மனிதன் மலம் கழிக்கும் போது சிறுநீரும் சேர்ந்தே வெளியேறுவது இயற்கையின் படைப்பு. அவ்வாறு சிறுநீர் வெளியேறாமல் யாராலும் மலம் கழிக்க முடியாது. நம்முடைய உடல் தசைநார்கள் அவ்வாறு தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.

​நேற்று இரவு மன்னர் இப்பெண்ணின் சதியைப் பற்றிக் கூறியதும், சாமர்த்தியமாக யோசித்த தெனாலிராமன் மனித உடலின் தன்மையைச் சமயோசிதமாக யோசித்து, இந்த ரகசியத் திட்டத்தை மன்னருக்குக் கூறினான். அதன்படியே அனைத்தும் நடந்தேறியது.

​வசமாகச் சிக்கிக்கொண்டதை உணர்ந்த அந்த நடனமாதுவோ, “மன்னா! எனக்கு இப்போது உடல்நிலை சரியில்லை. மலம் கழிக்கும் உணர்வும் வரவில்லை. எனக்கு மலம் கழிக்க வேண்டும் என்று தோன்றும் போது வருகிறேன். விடைபெற அனுமதி வேண்டுகிறேன்,” என்று கூறி அரண்மனையை விட்டு ஓட்டம் பிடித்தாள்.

​பிறகு துணிமணிகளைக் கூட எடுக்காமல் ஊரை விட்டே ஓடிவிட்டாள்.

மக்கள் வழியெங்கும் அவளைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்.

​நாட்டிற்கு ஒரு பெரும் அவமானம் நடைபெற இருந்த வேளையில், மிகவும் சமயோசிதமாக யோசித்து இக்கட்டான சூழலில் நல்ல திட்டம் தீட்டி எதிரியை ஓடச் செய்த தெனாலிராமனை அனைவரும் பாராட்டினார்கள்.

எப்போதும் ராமன் மீது பகையோடு இருக்கும் ராஜகுரு தாத்தாரச்சாரியார் கூட இம்முறை அவனை உச்சி முகர்ந்து பாராட்டினார்.

விஜயநகரம் மீண்டுமொரு முறை காளியிடம் வரம் பெற்ற தெனாலிராமனின் புத்தியால் காப்பாற்றப்பட்டது.

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக