( பகுதி -4) அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி….!!!

……………………………………….

………………………………………..

( இந்தப் பகுதியை புரிந்து கொள்ள – மிகுந்த ஆர்வமும், பொறுமையும் இருந்தால் மட்டுமே முடியும் … )

அத்வைத வேதாந்தம்

சாராம்சத்தில் அத்வைத வேதாந்தம் என்பது என்ன என்ற கேள்வி நம் முன்  உள்ளது. இயற்பியல் என்றால் என்ன என்று ஒருவர் கேட்பது போலத்தான் இது.

அத்வைதம் என்பது ஒரு ஒற்றைக் கொள்கையோ அல்லது தத்துவமோ அல்ல. அது ஒரு அறிவுப்பரப்பு. குறைந்தது இரண்டு அல்லது மூன்றாண்டுகள் ஒவ்வொரு நாளும் கல்லூரிக்கு சென்று படித்தால் மட்டுமே அத்வைதத்தை பற்றின ஒரு மேலோட்டமான சித்திரத்தை உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்கான குருகுலங்கள் இன்று உள்ளன.

ஆகையால் அத்வைதத்தை பற்றின விரிவான அறிமுகத்துக்கு பதிலாக ஒரு தொடக்க அறிமுகத்தை அளிக்கிறேன்.

இங்கு நான் சில உவமைகளை சொல்லிவந்தேன். உறையிடப்பட்ட வாள், நிர்மால்ய தரிசனம், கந்தக அமிலம், மூன்று தண்டிகள் ஒற்றை தண்டியானது, கங்கை நதி, ஐந்து விரல் என்பன. அதுபோல இங்கும் ஒரு உவமையை சொல்லலாம்.

தமிழில் உள்ள ஆய்த எழுத்தை (ஃ) ஓர் உவமையாக சொல்லலாம். அதில் மூன்று புள்ளிகள் உள்ளன. கீழே இருக்கும் ஒரு புள்ளி ஜீவாத்மா, இன்னொரு புள்ளி மாயை, மேலே இருக்கும் புள்ளி பிரம்மம். இம்மூன்று புள்ளிகளை பற்றிய தத்துவார்த்த விளக்கத்தைதான் நாம் சுருக்கமாக வேதாந்தம் என்கிறோம். இதை திரிதத்துவம் என்று சொல்வர்.

இம்மூன்று புள்ளிகளும் உருவகமாக நம் மனதில் இருந்தால் வேதாந்தத்தின் அடிப்படைக் கேள்வி என்ன என்பது புரியும். நமக்கு தெரியக்கூடியது இரண்டுதான். ஒன்று, மனிதர்களாகிய நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். கோடிக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. இவையனைத்துக்குள்ளும் ஏதோ ஒன்று உள்ளது. அது தான் என உணர்கிறது. புலன்கள் வழியாக வெளியே உள்ளவற்றை அறிகிறது. அறிந்தவற்றை தன் அறிவு என ஆக்கிக்கொள்கிறது. அந்த ‘ஒன்றை’ மிக மிக முற்காலத்திலேயே சிலர் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆத்மா பற்றிய ஒரு வர்ணனை உள்ளது. ஓர் அறைக்குள் அனைத்து வாயில்களையும் மூடி முழுமையான இருளில் கண், காது உள்ளிட்ட புலன்களையும் மூடி உட்கார்ந்தாலும் நான் இங்கு இருக்கிறேன் என்ற அறிதல் உள்ளே இருக்கிறதல்லவா ? அந்த அறிவுக்கு பெயர்தான் ஆத்மா.

ஐம்புலன்களும் இல்லாமலும் கூட அது தன்னைத்தானே உணரமுடியும். அதனால்தான் அது சுயம்பிரகாசம் என்று சொல்லப்படுகிறது. Self என்று அதை சொல்கிறோம். மேலை மரபில் Subjectivity என்று சொல்வர். தன்னிலை, அகங்காரம், நான் இங்கு இருக்கிறேன் எனும் உணர்வு என்று பலவாறாக அது சொல்லப்படுகிறது.

வேதாந்தத்தில், ஒரு குழந்தை கருவுக்குள் அணுவாக இருக்கும்போதே அதற்கு ‘நான் இருக்கிறேன்’ என்ற உணர்வு அதற்கு ஏற்படுகிறது. அதன் பிறகுதான் தான் வளரவேண்டும் என்று அது உணரும். தன்னை சுற்றியிருக்கக்கூடிய அன்னத்தை எடுத்துக்கொண்டு தனது உடலை உருவாக்கிக்கொள்கிறது. எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் தனது தன்னுணர்வு மட்டுமாக ஓர் பருப்பொருள் அணுவுக்குள் இருக்கக்கூடிய அந்த முதற்துளிக்கு பார்த்திவப் பரமாணு என்று பெயர். அந்த அணுவுக்கு தான் இங்கு இருக்கிறேன் என்று தோன்றுவதே ஆணவம் என்று சொல்லப்படுகிறது. ஆணவம் என்ற சொல்லின் தொடக்கம் அந்த அணு என்பதில் இருந்து வந்ததே. இது ஒரு புள்ளி.

இரண்டாவதாக, ‘அது’ என்று ஏதோவொன்று உள்ளது. இவை அனைத்திலும் உள்ள ஒருமையாக, ஒத்திசைவாக அதை இங்குள்ள எல்லாவற்றிலும் பார்க்க முடிகிறது (ஈசாவாஸ்யம் இதம் சர்வம்). எல்லாவற்றிலும் ஒன்றையொன்று இணைத்துக்கொண்டு ஏதோவொன்று நடந்துகொண்டிருக்கிறது. ஏதோவொன்றின் இருப்பை நாம் உள்ளம் கூர்மைகொள்கையில் உணரமுடிகிறது (தத் – அது).

அவ்வாறு அது இங்கெல்லாம் இருக்கும்போது, நான் என தன்னை உணரும் ஒன்று அந்த முழுமையை உணரமுடியாமல் தடுக்கும் ஏதோவொன்று இருக்கிறது. அதுதான் மாயை என்பது.

இம்மூன்றையும் பற்றின தத்துவ விசாரத்தைதான் வேதாந்தம் என்கின்றனர். மொத்த உபநிடதங்களிலும் இம்மூன்று கருதுகோள்களை பற்றின விவாதத்தை பார்க்கலாம். சங்கரர் தனது அத்வைதத்தில் அந்த தத்துவத்தைதான் முன்னெடுத்து செல்கிறார்.

உதாரணமாக பாதராயணருடைய பிரம்மசூத்திரம். கிட்டத்தட்ட வேதாந்த ஞானத்தின் அனைத்து தரிசனங்களையும் அதன் நிறைவுக்காலகட்டத்தில் தொகுத்து உரைக்கும் ஒரு பெரும் நூல் பிரம்மசூத்திரம். அப்படி ஒரு நூல் வந்தபின்பும் கூட மீண்டும் அத்வைதம் என்ற ஒன்று ஏன் வரவேண்டியுள்ளது ?

அத்வைதத்திற்கு பிரம்மசூத்திரத்தில் இருந்து நிகழ்ந்த ஒரு வளர்ச்சி உள்ளது. அந்த வளர்ச்சியை புரிந்துகொண்டால் ஏன் வேதாந்தம் என்ற சொல்லிலிருந்து அத்வைதம் என்ற சொல் ஒருவித நீட்சியாகவும் அடுத்தகட்டமாகவும் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

வேதாந்தத்தின் அடிப்படைக் கொள்கை என்பது இதுதான்:

இங்குள்ள அனைத்திலும் அது இருக்கிறது. அதுவே என்னுள் பிரக்ஞையாக இருக்கிறது. அதுவே என் உடலாக இருக்கிறது. அது மட்டுமே இருக்கிறது. நான் அதுதான். இங்குள்ள அனைத்தும் அதுதான் (தத் த்வம் அஸி – அது நீயேதான்; அஹம் பிரம்மாஸ்மி – நானே அது).

இது வேதாந்தத்தில் தொடர்ந்து ஒரு தரிசனமாக வளர்ந்து பல்வேறு வகைகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் அத்வைதத்தில் என்ன கூடுதலாக உள்ளது என்று பார்க்கவேண்டும்.

பிரம்மசூத்திரம் எழுதப்பட்ட பிறகு பௌத்தம் எனும் மாபெரும் மதம் உருவாகி பல்வேறு வினாக்களை முன்வைத்தது. பௌத்தம் ஒரு சாதாரண மதமல்ல. அது உலகம் உருவாக்கிய மாபெரும் தத்துவங்களில் ஒன்று.

இன்னும் சொல்லப்போனால் அத்வைதமும் யோகாசார பௌத்தமும் தான் இந்தியாவின் உச்சகட்ட தத்துவ ஞானங்கள். உலக அளவிலேயே இவையிரண்டையும் சொன்ன பின்னர்தான் மூன்றாவது எது என தேடவேண்டியுள்ளது.

அவ்வாறான ஒரு தத்துவத் தரப்பு உருவாகி வேதாந்தத்தின்மீது பல்வேறு கேள்விகளை வைத்தபின்பு அந்த கேள்விகளை உள்வாங்கிக்கொண்டு, அதற்கு பதில்களை அளித்து, அடுத்த கட்டத்திற்கு வேதாந்தத்தை கொண்டு சென்றதுதான் அத்வைதம்.

முக்கியமாக, பௌத்தர்கள் அத்தனைபேரும் நியாயசாஸ்திரத்தை ஆழமாக கற்றுணர்ந்தவர்கள். நியாயத்தின் அடிப்படையில் வேதாந்தத்தின் மீது பல்வேறு கேள்விகளை அவர்கள் முன்வைத்தனர். அத்தகைய வினாக்களுக்கு சம்பிரதாயமான வேதாந்திகளால் பதில் சொல்லமுடியாத நிலையில், பல சபைகளில் அவர்கள் தோற்றுக்கொண்டிருந்தனர்.

கௌடபாதர், மண்டனமிஸ்ரர் போன்ற ஞானிகள் கூட சபைகளில் வெல்லமுடியாத ஒரு நிலை இருந்தபோதுதான் இங்கு நமது மண்ணில் இருந்து ஒரு இளைஞன் கிளம்பிச் சென்று அத்தனை சபைகளிலும் வென்றார். அதனால்தான் அவருக்கு சர்வக்ஞன் என்ற பட்டம் அமைந்தது.

அவர் வாழ்நாளில் எந்த அரங்கிலும் தோற்றது கிடையாது. அனைத்து சபைகளிலும், தர்க்கபூர்வமாக, பௌத்தர்கள் எந்தவகையான வாதத்தை முன்வைத்தார்களோ அதே வாதங்களின் அடிப்படையில் அவர்களை மறுத்து வேதாந்தத்தை நிறுவினார் சங்கரர்.

இது சாதாரண விஷயமல்ல. ஏனெனில் பிரம்மம் என்பது ஓர் அக அனுபவம். ஐம்புலன்களுக்கோ, புறவயமான தர்க்கத்துக்கோ சிக்கக்கூடிய ஒரு பொருள் அல்ல அது. மகிழ்ச்சி என்ற ஒன்றை நிரூபிக்கச் சொன்னால் உங்களால் நிரூபிக்க முடியுமா?

ஆனால் அதையும் நிரூபித்துக் காட்டினார் சங்கரர். மறுதரப்பின் தர்க்கமுறைகள் ஒவ்வொன்றையும் கற்று, ஒவ்வொரு சபையிலும் அவர்களுடைய கருவிகளை கொண்டே அதை மறுத்தார்.

சங்கரர் வென்றமைக்கான காரணங்களை அவருடைய வாழ்க்கைவரலாற்றுக் குறிப்புகள் மற்றும் நூல்களில் இருந்து உணரமுடிகிறது. சங்கரர் குமரிலபட்டரின் பட்ட மீமாம்சையை மண்டன மிஸ்ரரிடமிருந்து கற்றார். (குமரிலரிடமிருந்தே கற்றதாகவும் கதை உண்டு) ஸ்போட என்னும் கொள்கையை குமரிலர் உருவாக்கியிருந்தார். சொற்பொருள் கொள்ளுவதில் ஒரு முக்கியமான வழிமுறை அது.

ஒரு நூல், எந்தப் பின்னணியுமில்லாமல் சொல்வடிவாக மட்டுமே கிடைத்தால் அதைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறையை அது சொல்கிறது. பூர்வமீமாம்சை வேதங்களை முதல்நூலாக முன்வைத்தது. வேதங்களை புரிந்துகொள்ள ஸ்போட கொள்கையை அது பயன்படுத்தியது.

சங்கரர் பூர்வமீமாம்சகர்களை வென்றார். ஆனால் ஸ்போட முறையை பௌத்தநூல்களை பயிலவும், அவற்றை விளக்கவும் பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் நூல்களைக் கொண்டே அவர்களை வென்றார். அத்துடன் மண்டனமிஸ்ரர் போன்றவர்களிடமிருந்து தர்க்கசாஸ்திரமான நியாயவியலையும் கற்றிருந்தார். அதுவே அவரை எல்லா அவைகளிலும் வெல்லச்செய்தது.

பௌத்த தரிசனத்தில் மிக முக்கியமானது அனாத்மவாதம். சாரமின்மை என்று அதை சொல்லலாம். பொதுவாக நாம் ஆத்மா என்பதை உயிர் என்பதாகவும் உள்ளம் என்பதாகவும் மட்டும் புரிந்துவைத்துள்ளோம். அது ஒரு பெரிய பிழை. இந்திய சிந்தனை மரபில் சாராம்சம் என்பதுதான் ஆத்மா என்று சொல்லப்படுகிறது. சமணத்தில் சர்வாத்மவாதம் என்று சொல்லப்படும் ஒரு சிந்தனை உள்ளது.

இங்கிருக்கும் அனைத்துக்கும் ஆத்மா உண்டு. அதாவது, கல்லுக்கு கல்லுக்கான ஆத்மா உண்டு, தீக்கு தீக்கான ஆத்மா உண்டு என்று அவர்கள் சொல்வார்கள். அப்படி ஒரு மையம், ஒரு சாரம், ஒரு உட்பொருள் இல்லை என்கிறார்கள் பௌத்தர்கள். அனாத்மவாதம் என்பது பௌத்தத்தின் அடிப்படை கொள்கை. கிட்டத்தட்ட இந்தியா முழுக்க ஒரு நிறுவப்பட்ட சிந்தனையாக அது இருந்தது.

எதற்கும் சாராம்சம் என்பது கிடையாது. ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே உள்ளது. அந்த மாறுதலின் ஒரு குறிப்பிட்ட கணத்தில் எடுக்கப்பட்ட snapshots தான் நாம் எல்லோரும். நேற்று இருந்த நானும் இன்றிருக்கும் நானும் வேறுவேறு. பௌத்தத்தில் ஒரு முக்கியமான உவமை உண்டு. எரியும் ஒரு சுடரை பார்த்து சுடர் இருக்கிறது என்று சொல்வோம். ஆனால் முந்தைய கணத்தில் பார்த்த சுடர் அல்ல அடுத்த கணத்தில் பார்க்கும் சுடர். அங்கு இருப்பது சுடர்தல் எனும் நிகழ்வே தவிர சுடர் எனும் பொருள் அல்ல.

சுடரில் இதை நம்மால் எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் ஒரு மலையை அப்படி சொல்லமுடியுமா ? மலை இருக்கிறது என்று நாம் சொல்வோம். ஆனால் அப்படியல்ல. சுடர் என்பது வேகமாக நிகழ்கிறது, மலை என்பது மெதுவாக நிகழ்கிறது, அவ்வளவுதான். இங்குள்ள அனைத்தும் மாறிக்கொண்டும் நிலையில்லாமலும் இருப்பதால் எதற்கும் சாராம்சம் கிடையாது. இதை அவர்கள் பிரதீத்ய சமுத்பாதம் (Pratītyasamutpāda) என்பர். அனாத்மம், அநித்யம், துக்கம் எனும் மூன்று கருத்துகளில் பௌத்தம் அமைந்திருக்கிறது. அதன் முதல் ஆணிவேர் என்பது அனாத்மம் (சாரமின்மை) என்பதே.

இதற்கு எதிராக அன்றிருந்த வேதாந்திகள் ஆத்மா உண்டு என்றும் அது பிரம்மத்தை அறியும் என்றும் வாதிட்டனர். ஆனால் அந்த வாதங்களை பௌத்தர்கள் தோற்கடித்துக்கொண்டே இருந்தனர்.

அந்த சபைகளில் இந்த இளைஞர் சென்று வாதிட்டார். யோசித்துப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். ஏனெனில் சங்கரர் முப்பத்திரண்டு வயதில் காலமாகிவிட்டார். பெரும்பாலான சபைகளை அவர் எதிர்கொள்ளும்போது அவருக்கு இருபத்தைந்து வயதுதான் இருந்திருக்கும். அவர் பௌத்தர்களின் அனாத்மவாதத்தை மறுத்து ஆத்மவாதத்தை முன்வைத்தார்.

ஆத்மா என்று ஒன்று உண்டு. ‘நான்’ என்றும், ‘இங்கு’ என்றும் ‘இது’ என்றும் உணரக்கூடிய ஒன்று உறுதியாக அனைத்து உயிர்களுக்கும் உண்டு. ஆனால் அதேவேளை அந்த உணர்வு நிலையானது அல்ல. ஒரு சூரியன் பல்வேறு கண்ணாடி துண்டுகளில் பிரதிபலிப்பதை உவமையாக சொல்கிறார்கள். சூரியன் அந்த கண்ணாடிகளில் உள்ளது. ஆனால் அதில் உண்மையில் உள்ளதா என்றால் இல்லை. சூரியன் என்பது அங்கு மட்டுமே உள்ளது. அதனுடைய பிரதிபலிப்புதான் இவையனைத்துமே. சூரியன் உண்டு என்பதற்கான சான்றுகளே அதன் கண்ணாடிப் பிரதிபலிப்புகள். இத்தகைய வாதம் பௌத்தர்களை தோற்கடித்து அத்வைதத்திற்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.

முற்கால வேதாந்திகள் பிரம்மம் என்று சொல்லப்படும் ‘அது’ இங்கிருக்கும் பிரபஞ்சமாக மாறி உள்ளது என்றும், அதை பரிணாமவாதம் (வளர்நிலைவாதம்) என்றும் சொன்னார்கள். அளவில்லாமல் பரந்திருக்கும் அந்த ’ஏதோவொன்று’ இங்கு இருக்கும் உயிர்த்திரளாகவும், கல்லாகவும் மண்ணாகவும் மாறித்தெரிகிறது என்றனர்.

அதை பௌத்தர்கள் எதிர்கொண்டனர். ஓர் ஆற்றில் இருந்து ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துவிட்டால்கூட அந்த ஆற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குறைந்திருப்பதாகவே அர்த்தம். அதுபோல பிரம்மத்தில் இருந்து பிரபஞ்சத்தை எடுத்தால் அந்த அளவுக்கு பிரம்மம் குறையுடையதாக ஆகுமா என்று கேட்டனர்.

பௌத்தர்களுடைய இத்தகைய வாதம் வலுவாக இருந்த காலத்தில் விவர்த்தவாதம் என்ற வாதத்தை சங்கரர் முன்வைத்தார். விவர்த்தவாதம் என்பதை உருமயக்கவாதம் எனலாம். கோடானுகோடி கண்ணாடித்துண்டுகள் வாயிலாக கோடானுகோடி சூரியன்கள் தெரிந்தாலும் சூரியனில் ஏதேனும் குறை ஏற்படுமா ? சூரியன் அங்குதான் உள்ளது. அதில் எதுவும் குறையாது.

இங்கு கண்ணாடியில் தெரிவதும் சூரியன்தான். இதுவும் சுடும், வெளிச்சத்தை அளிக்கும், காட்சிகளை காட்டும். ஆனால் இது உண்மையான சூரியன் அல்ல, இது மாயை, இந்த மாயை வழியாகவே சூரியன் இங்கே திகழ்கிறது, இதன் வழியாக சூரியனை நாம் அறியமுடியும் என்று வாதிட்டார்.

ஆத்மாவின் இருப்பு என்பது பிரம்மத்தின் மாயை வடிவம், ஆனால் பிரபஞ்ச சாரம் என பிரம்மம் உண்டு என்பதனால் உயிர்களின் சாரமென ஆத்மா உண்டு. பிரம்மமே மெய்யானது, பிரபஞ்சம் அதன் மாயத்தோற்றம்.

இந்த இரண்டு வலுவான வாதங்களும் பெரும்பாலான அரங்கில் சங்கரரை வெற்றிபெறச்செய்தன. இந்து மதத்தின் அடிப்படை தரிசனமாக இன்று நிற்கக்கூடியவை இந்த இரண்டும்தான்.

சங்கரர் தொடர்ச்சியாக மாயை எனும் கருதுகோளை முன்வைக்கிறார். மாயை என்பது முற்கால வேதாந்திகளும் சொல்லிவந்ததுதான். அவர்கள் சொல்லிவந்த மாயை என்பது பிரம்மத்தை மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதும் தவறாக புரிந்துகொள்வதுமே.

பௌத்தர்களுக்கும் ஒரு மாயா தரிசனம் உண்டு. அவர்கள் சொல்லும் மாயை என்பது மனிதர்களால் உண்மையை உள்ளபடி புரிந்துகொள்ள முடியாது, தனக்கு ஏற்றாற்போல திரித்துதான் புரிந்துகொள்ள முடியும் என்பதே. அதாவது அறியும்போதே உண்மை அறிவென ஆகிவிடுகிறது, அறிவு என்பது உண்மை அல்ல, உண்மையின் ஒருவடிவம் மட்டுமே என்பதுதான் பௌத்த மாயாவாதம்.

ஆனால் சங்கரர் முன்வைத்த மாயை என்பது பிரம்மம் அளவுக்கே ஒரு முக்கியமான தோற்றப்பாடு (Phenomenon). அது பொய் அல்ல. அது இல்லையெனில் இவ்வுலக அழகுகள் இல்லை. என் மனைவி எனக்கு அழகாக தெரிவது மாயைதான். கவிதை, கதை என இங்கிருக்கும் அனைத்துமே மாயைதான். நாம் அறியும் அனைத்துமே மாயைதான். அவை எல்லாம் இணைந்த இப்பிரபஞ்சம் பிரம்மத்தின் மகத்தான தோற்றம்தான்.

சூரியனும் சூரியஒளியும் வேறுவேறு அல்ல. சூரிய ஒளியின் மகத்துவத்தை வைத்துதான் நாம் சூரியனை அறிகிறோம். நாமறியும் சூரியன் சூரிய ஒளிதான். அதனூடாகவே சூரியன் நம்மிடம் தன்னைக் காட்டமுடியும். மாயை என்பதை ஒரு நேர்நிலையான விஷயமாக மாற்றியதன் வழியாக சங்கரர் முந்தைய இரு வாதங்களையும் வென்று சென்றார்.

இவை மூன்றையும் நான் இங்கு சுருக்கமாக சொல்லிவிட்டேன். ஆனால் இதை மிக விரிவாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் சரியான ஒரு அத்வைத குருவின் காலடியில் அமர்ந்து சில ஆண்டுகள் கற்றுக்கொள்ளவேண்டும்.

இறுதியாக, சங்கரர் சொல்லும் ஒன்று திரிபுடி என்பது. திரிபுடி என்பதை மூன்று நிலை அறிவு என்று சொல்லலாம்.

1) நான், அதாவது அறிபவன் (ஞாதா)

2) அது, அதாவது அறிபடுபொருள் (ஞேயம்)

3) இடையில் உள்ளது அறிவு (ஞானம்)

இவை மூன்றும் ஒன்றுதான் என்று உணரும்போது அத்வைதநிலை கைகூடுகிறது.

இதை சாதாரணமாகவே நாம் யோசித்து பார்க்கலாம். ஒரு மாமரத்தை பார்க்கிறீர்கள். அதுபற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அந்த மரத்தை பார்ப்பதற்கான புலனாகிய கண்ணின் இயல்புதான் உங்களுக்குள் அம்மரத்தை உருவாக்குகிறது.

உங்களுக்கு நிறக்குருடு (Clour Blindness) இருந்தால் அந்த மாமரம் உங்களுக்கு சாம்பல் நிறமாக தெரியும்.

உங்களுடைய ஒரு கண்ணில் அடிபட்டிருந்தால் அந்த மாமரம் இருபரிமாண காட்சியாக (Two-dimensional) தெரியும்.

அதில் உள்ள மாங்காய் உங்களுக்கு அறவே பிடிக்காது என்றால் அந்த மாமரம் வெறுக்கத் தக்கதாக தெரியும். அப்படியெனில் ஞானத்தை உருவாக்குவதில் நீங்களும் ஒரு பங்கை ஆற்றுகிறீர்கள் அல்லவா ? உங்களுக்கு வெளியே, ஒரு ஞானத்தை ஒருபோதும் உங்களால் அறியமுடியாது அல்லவா?. பௌத்தர்களும் சொல்வதுதான் இது.

இன்று ஹாலிவுட் சினிமாக்களில் வேற்று கிரகங்களில் இருந்து உயிரினங்கள் வருவது பற்றி விதவிதமான கற்பனைகளுடன் வேற்றுக்கோள் மனிதர்களின் உருவங்களை வடிவமைக்கிறார்கள். ஆனால் எப்படி யோசித்து பார்த்தாலும் பூமியில் இருக்கும் மனிதர்களின் வடிவிலோ, ஒரு பூச்சியின் வடிவிலோதான் அதை கற்பனை செய்யமுடியும்.

ஆனால் அப்படித்தான் அவர்கள் இருக்கவேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் உண்டா ? வேற்றுகிரக உயிரினம் ஹீலியம் வடிவில் இருக்கக்கூடாதா என்ன?மீண்டும் மீண்டும் அர்னால்டு ஸ்வாசென்கர் (Arnold Schwarzenegger) எதிர்கொள்ளும் வேற்றுகிரக வாசிகளுக்கு இரண்டு கை, அல்லது நான்கு கை, அல்லது பன்னிரண்டு கை. ஏன் கைகளுக்கு பதில் சக்கரம் இருக்கக்கூடாதா ? ஏனெனில் நாம் நமது வடிவிலேயே அனைத்தையும் கற்பனை செய்கிறோம்.

இது மனிதர்களின் அடிப்படையான ஒரு வரையறை, ஓர் எல்லை.

ஒன்றை உயரமானது என்று நாம் சொல்வதற்கு காரணம், அது நம்மைவிட உயரமானது என்பதால்தான். நமது கையை விட கடினமாக இருப்பதால் ஒரு பொருளை கடினமானதாக சொல்கிறோம். Flash Gordon எனும் காமிக்ஸில் வேற்று கிரகத்தில் இருந்து சில உயிரினங்கள் பூமிக்கு வருகின்றன. அவர்களுடைய உடல் இரும்பைவிட நூறுமடங்கு அதிகமான அடர்த்தி கொண்டது. ஆகவே அவர்கள் இங்கு மண்ணில் நீச்சலடிக்கிறார்கள். நாம் தண்ணீரில் நீந்துவதுபோல அவர்கள் மண்ணில் நீந்துகிறார்கள்.

ஆகவே நீங்கள் இங்கு பார்க்கும் அனைத்துமே உங்கள் உடல், மனம் போன்றவைகளால் தீர்மானிக்கப்படுபவை.

அறிதலின் முதற்தரப்பு என்பது இந்தப்பக்கம் இருக்கும் நீங்கள். அறியும் தன்னிலை. மறுபுறம் அறியப்படும் அது.

அந்த ‘அது’ உங்களால் முழுவதுமாக அறியப்படமுடியாதது. வாழ்நாள் முழுக்க ஒரு கூழாங்கல்லை எடுத்துவைத்துக்கொண்டு பார்த்தால்கூட உங்களால் அதை முழுமையாக பார்த்து முடிக்கமுடியாது. அது உங்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட அறிவை மட்டுமே அளிக்கிறது.

இந்த இரண்டு முனைகளுக்கு இடையில் அந்த மாமரம் அறியப்படுகிறது. அது உங்கள் அறிதலாக (ஞானமாக) மட்டுமே இருக்கிறது.

அறிவதெல்லாம் அறிவு ஒன்றையே, அறியாமைகூட ஒருவகை அறிவே. உங்களிடம் இருக்கும் அறிவதற்கான சாத்தியத்தை மட்டும்தான் நீங்கள் அறிகிறீர்கள். உங்கள் சாத்தியத்திற்கு அப்பால் உள்ள ஒன்றை உங்களால் அறியவே முடியாது.

அதற்கு அப்பால் உள்ள ‘அது’ தனது முழுமையால் நின்றுகொண்டிருக்கிறது. அது தன்னில் இருந்து ஒரு குறிப்பிட்ட அறிவை உங்களுக்கு அளிக்கிறது. அந்த அறிவும் அதுதான். இதுவே சங்கர தரிசனத்தின் அடிப்படையான திரிபுடி.


(பகுதி-5-ல் தொடர்கிறது …)

……………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.