“நீதிபதிகளுக்கு அரசியல் பேச உரிமை உண்டா…..?” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் சொல்வது …

…………………………………..

………………………………….

ஓய்வுபெற்று பத்தாண்டுகளாகின்றன. ஆனாலும் அதே பரபரப்போடு இயங்குகிறார் நீதிபதி சந்துரு.
சிறார் கூர்நோக்கு இல்லங்களைச் சீரமைப்பதற்கான குழு,
ஆன்லைன் சூதாட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கான குழு, மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்க அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு
என பொறுப்புகள் குவிந்திருக்கின்றன.

இன்னொரு பக்கம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்காக
அவர் உருவாக்கியுள்ள சத்யதேவ் அகாடமி பணி.

(நன்றியுடன் – விகடன் இதழின் நேர்காணலிலிருந்து சில பகுதிகள் –

‘‘உங்கள் சத்யதேவ் அகாடமியில் சூர்யா எப்படி இணைந்தார்?
நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்?’’

‘‘சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படக் கதை மூலம், ஆவணத் திரட்டலுக்காகவும், படத்தில் என் பெயரைப் பயன்படுத்தியதற்காகவும்
எனக்கு ஏதேனும் தொகை தர திரைப்பட நிறுவனம் விரும்பியது.
நான் மறுத்தேன். ஆனாலும் நான் முறைப்படி அனுமதி தந்ததற்கான
ஆவணம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதற்காக 100 ரூபாய் மட்டும் காசோலை பெற்றுக்கொண்டு கையெழுத்து போட்டுக் கொடுத்தேன்.

அந்த நேரத்தில்தான் ‘சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது
செய்ய வேண்டும்’ என்று சூர்யா சொன்னார். அதன் அடிப்படையில் தோன்றியதுதான் சத்யதேவ் லா அகாடமி. முதற்கட்டமாக,
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான பாடங்களை யூடியூப் மூலம்
வெளியிட முடிவு செய்தோம். அதற்கான செலவையும் கட்டமைப்பையும் ஏற்படுத்த சூர்யா முன்வந்தார்.

ஆனால் சட்டப் பாட வகுப்புகளை அரசு அமைப்புகள் மூலமே செய்து கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லிவிட்டார். மேலும், பாடத்திட்டங்களைச் சில தனியார் நிறுவனங்களில் இலவசமாகத் தயாரிப்பதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. அதனால் பெரிய செலவுகள்
இல்லை என்று ஆகிவிட்டது. சூர்யாவின் ஆர்வமும் மாணவர்களுக்கு
உதவி செய்யும் அவரது நோக்கமும் பாராட்டத்தக்கது. சத்யதேவ் லா
அகாடமி மூலம் இளம் வழக்கறிஞர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கத்
திட்டம் உள்ளது. எதிர்காலத்தில் இது இன்னும் விரிவாகும்.’’

‘‘அரசு நியமிக்கும் ஆணையப் பொறுப்புகளுக்கு சம்பளம்
பெறமாட்டேன் என்று கூறியிருக்கிறீர்கள். சம்பளம் வாங்குவது நடைமுறைதானே?’’

‘‘நான் ஆறே முக்கால் ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாகப்
பணியாற்றி ஓய்வு பெற்றேன். குறைந்தபட்ச ஓய்வூதியம் பெற ஒருவர்
ஏழு ஆண்டுகளாவது நீதிபதியாக இருந்திருக்க வேண்டும். அதனால்
எனக்குக் கிடைக்காது என்ற நிலை இருந்தது. இந்நிலையில் உச்ச
நீதிமன்றம் ஒரு வழக்கில், எங்களது வக்கீல் பணிக்காலத்தின் பத்தாண்டுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி
முழு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டது. அதனால் என்னைப்
போன்றோருக்கு முழு ஓய்வூதியத்தோடு மருத்துவ உதவி போன்ற சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. நான் ஏழாண்டுகளுக்குக் குறைவாக வேலை செய்திருந்தாலும், தற்பொழுது 11 வருடங்களாக ஓய்வூதியம் பெற்றுவருகிறேன்.

இப்படி அரசிடமிருந்து உதவிகள் கிடைக்கிற சூழலில் மேலும் மதிப்பூதியம் பெற எனது மனம் இடம் கொடுக்கவில்லை. என்னைப் போன்று ஓய்வூதியம் பெறுபவர்கள் சமுதாயப் பணியும் ஆற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அதுமட்டுமன்றி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசிடமிருந்து சலுகைகள் பெற வரிசையில் நிற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது.
கௌரவ ஊழியம் புரிவதன் மூலம் அத்தகைய குற்றச்சாட்டுகளைத்
தவிர்க்க முடியும் என்பது என் கருத்து.’’

‘‘நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியத்தில் அரசின் பிரதிநிதிகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்கிறதே மத்திய அரசு?’’

‘‘நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் நடைமுறை உலகில் வேறெங்கும் இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம்
உருவாக்கப்பட்டதே நமது கொலிஜிய நியமன நடைமுறை. நீதித்துறையின் சுதந்திரத்தை அரசின் பிடியிலிருந்து காக்கவே இந்த நடைமுறையைக் கொண்டுவந்ததாக உச்ச நீதிமன்றம் சொன்னது.

ஆனால், கடந்த 30 ஆண்டுகளாகப் பல அரசியல் பின்னணி உள்ள
வழக்குகளில் நீதிமன்றங்கள் கொடுத்துள்ள தீர்ப்புகளைப் பார்க்கும்போது அந்தக் கூற்றை நம்ப முடியவில்லை. எனவேதான் 2014-ல் தேசிய
நீதிபதிகள் நியமன ஆணையத்தை ஏற்படுத்தியதை நான் வரவேற்றேன்.

ஆனால், 2016-ல் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு அந்தச்
சட்டத் திருத்தத்தை ரத்து செய்துவிட்டது. மீண்டும் முறையான அமைப்பு ஒன்றை ஏற்படுத்த ஒன்றிய அரசு முன்வரவில்லை. ஏனெனில், கொலிஜிய நியமன நடைமுறையில் அவர்கள் விரும்புபவர்களையும் நீதிபதிகளாக நியமிக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

விக்டோரிய கௌரி என்ற வக்கீல் பா.ஜ.க மகளிர் அணியில் பதவியில் இருந்தவர். சிறுபான்மையினருக்கு எதிராகக் கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டவர். அவரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்று போட்ட
வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதுபற்றி சமீபத்தில்
கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ‘அரசியலில் மாற்றுக்
கருத்து இருக்கிறது என்பதற்காக நீதிபதி நியமனத்தை மறுக்க முடியாது’
என்று தெரிவித்தார்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொலிஜியம் பரிந்துரைக்கும்
ஜான் சத்யன் பெயருக்கு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில்
ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அவர் பேஸ்புக்கில் பிரதமரை
விமர்சித்த ஒரு பதிவை ஷேர் செய்ததாகக் கூறப்பட்டது.

அவரது பெயரை ஒன்றிய அரசு மறுத்தாலும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் மறுபடியும் அவரது பெயரைப் பரிந்துரைத்தது. இருப்பினும் இன்றுவரை அவருக்கு நீதிபதி பதவி கிடைக்கவில்லை. இதிலிருந்து நாம் புரிந்து
கொள்வது என்னவென்றால், அரசியல் கருத்து அரசுக்கு ஆதரவாக
இருந்தால் பதவி கிடைப்பது நிச்சயம். மாற்றுக்கருத்து இருந்தால்
ஜான் சத்யன் போல் காத்திருப்புப் பட்டியலில்தான் இருக்க வேண்டும்.

கொலிஜியத்தில் அரசுப் பிரதிநிதிகள் என்ற ஆலோசனை, போகாத
ஊருக்கு வழி தேடுவதுதான். தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்
பற்றி உச்ச நீதிமன்றம் கூறிய புகாரை மதிப்பீடு செய்து, தேர்வுக்
குழுவின் அடிப்படையை மாற்றி புதிய நியமன ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் கொண்டுவருவதுதான் ஒரே வழி.’’

‘‘நீதிபதிகள் ஓய்வுக்குப் பிறகு அரசியலுக்கு வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘நீதிபதியும் இந்நாட்டின் ஒரு குடிமகன்தானே. அரசியல் பேசுவதற்கும் அரசியலில் செயல்படுவதற்கும் அவருக்கு முழு உரிமை உண்டு. அவர்கள் தங்களின் சட்டம், நீதித்துறை அனுபவங்களை மக்கள் உரிமைக்காகப் பயன்படுத்த முன்வர வேண்டும். உதாரணமாக, வி.ஆர்.கிருஷ்ணய்யர்.
ஓய்வு பெற்ற பிறகும் 35 ஆண்டுக்காலம் தனது இறுதிமூச்சு வரை மக்களுக்காகப் பாடுபட்டார்.’’

‘‘உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற ரஞ்சன் கோகாய் எம்.பி ஆன பிறகு நீதிபதிகளின் ஓய்வுக்காலம் அதிகம் விமர்சிக்கப்படுகிறதே?’’

‘‘நீதிபதிகள் ஓய்வுபெற்ற அடுத்த நாளே ஒரு அரசுப் பதவிக்கு வருவது தவறான முன்னுதாரணம்.

தலைமை நீதிபதி கோகாய் பதவிக்காலம் முடிந்தவுடன் குடியரசுத்
தலைவரால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத இந்நபர்கள் பின்வாசல்
வழியாக ஒன்றிய அரசின் ஆசியுடன் பதவி நியமனம் பெறுவது,
அவர்கள் வகித்த பதவியையே அசிங்கப்படுத்துவதாகும்.

தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் கேரள ஆளுநராக
நியமிக்கப்பட்டதும், தற்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த
அப்துல் நசீர் ஆந்திராவின் ஆளுநராகப் பதவி ஏற்றுக்கொண்டதும்
ஏற்க முடியாத பிழைகள். இதுமாதிரி செயல்களை, சட்ட அமைச்சராக
இருந்து மறைந்த பா.ஜ.க-வின் அருண் ஜெட்லியே நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.’’

‘‘நாங்குனேரி விவகாரத்துக்குப் பிறகான ஒரு நபர் கமிஷனின்
தற்போதைய நிலை எனன?’’

‘‘நாங்குனேரியில் சாதி அடிப்படையில் ஒருசில மாணவர்கள்
வீடு புகுந்து தலித் மாணவரையும் அவரின் சகோதரியையும் தாக்கியதையொட்டி, ‘கல்வி நிறுவனங்களில் சாதி வன்முறையை
ஒழிப்பது எப்படி’ என்று ஆராய்ந்து அறிக்கை தரும்படி தமிழக அரசு
என் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்துள்ளது. இதற்கு
ஆறு மாத கால வரையறையும் தரப்பட்டது. அதற்காகக் கல்வி
நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள்
என இதுவரை 400 பேரின் கருத்துகளைப் பெற்றுள்ளேன். வரும்
பிப்ரவரியில் அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்படும். இப்பொழுது
அதுபற்றி விரிவாக விவாதிக்க முடியாது.’’

‘‘சிறார் கூர்நோக்கு இல்லங்கள் குறித்து நீங்கள் அளித்த
அறிக்கை பற்றி?’’

‘‘விரிவாகப் பேச முடியாது. சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ‘சட்டத்திற்கு முரண்பட்ட இளம் சிறார்கள்’ என்று அவர்களைக்
குறிப்பிடலாம். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் அவர்களுக்குச் சிறைத்தண்டனை இல்லை. சிறப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு சீர்திருத்தி, மைய நீரோட்டத்தில் அவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்பதுதான் 2015-ம் வருட இளம் சிறார் சட்டம்.

ஆனால், சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழக குற்றவியல் துறை
நடத்திய ஆய்வில், புழல் சிறையில் இருக்கும் 173 சிறைவாசிகளில்
77 பேர் கூர்நோக்கு இல்லங்களிலும், 31 பேர் சிறப்பு இல்லங்களிலும் ஏற்கெனவே இருந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.
இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் செய்தி. அதனால் சிறார் இல்லங்களில்
18 வயதுக்கு உட்பட்டவர்களை வைத்துத் திருத்த முற்படுவது,
முடியாத காரியம் போல் தோன்றுகிறது. இதுபற்றி விரிவான
அறிக்கையை முதல்வரிடம் ஒப்படைத்திருக்கிறேன். அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.’’

‘‘தமிழகச் சட்டப்பேரவையின் முடிவுகளை கவர்னர் தொடர்ந்து நிராகரிக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து?’’

‘‘அண்ணா கூறியதுபோல், ‘ஆட்டுக்கு தாடி எதற்கு, நாட்டுக்கு
கவர்னர் எதற்கு’ என்ற கேள்வியை மக்கள் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதைத்தான் காட்டுகிறது. தமிழக அரசு தொடுத்துள்ள
வழக்கில் கவர்னருக்குப் போதுமான கண்டனங்கள் கிடைத்தது.
ஆனால், ஆளுநர் பதவியே தேவையில்லை என்ற நிலையை
உருவாக்குவதே லட்சியமாக இருக்க முடியும்.’’

‘‘முன்பு ஈழப் போராளி கௌதமிக்கு மருத்துவ உதவிகள் கிடைக்கவும் விடுதலை கிடைக்கவும் சட்டப்போராட்டம் நடத்தினீர்கள். ராஜீவ்
கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட 4 பேர் இன்னமும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

‘‘சிகிச்சையைவிட நோயே மேல் என்ற நிலைமையை ரா உளவு
நிறுவனமும் மாநில அரசின் உளவு நிறுவனங்களும் உருவாக்கி
வருகின்றன. தண்டனைக் கைதிகளாக இருந்த 4 பேரும்
சிறையிலிருந்தபோது தனிமைச் சிறை என்பதைத் தவிர
சிறை விதிகளிலுள்ள அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டன.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் ‘விடுதலை’ பெற்ற அந்த நால்வரும் தற்பொழுது புதிய ஒரு தண்டனையை அனுபவித்து
வருகிறார்கள்.

அவர்கள் அகதிகளும் அல்லர், குற்றவாளிகளும் அல்லர். ஆனால்,
24 மணி நேரக் கண்காணிப்புக் கொட்டடியில் அடைக்கப்பட்டு,
எந்தவித உரிமைகளும் வழங்கப்படாத நிலையில் உள்ளார்கள்.
அவர்களது தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு அனுமதி
வழங்குவதற்கும் ஒன்றிய அரசு காலம் தாழ்த்திவருகிறது.
‘நாம் சிறையிலேயே இருந்திருக்கலாம்’ என்ற சிந்தனையை
அவர்களுக்கு உருவாக்கியிருப்பது, இந்த நாட்டின் நீதி அமைப்பையே கேலிக்குள்ளாக்குவது போல் உள்ளது.’’

‘‘உங்கள் வாழ்க்கையில் ‘ஜெய் பீம்’ படம் ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன? அப்படத்திற்கு எதிராக நிறைய வழக்குகள் போடப்பட்டன. அவற்றின் நிலை என்ன? ‘ஜெய் பீம்’ இரண்டாம் பாகம் எப்போது?’’

‘‘ ‘ஜெய்பீம்’ வெளியான பிறகு அதையொட்டி எழுந்துள்ள
புதிய அலை எனக்குப் பல படிப்பினைகளைக் கொடுத்துள்ளது.
விளிம்புநிலை மனிதர்களின் உண்மை நிலையை விவரிக்கும் ஒரு படம்
மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறும் என்று யாரும் ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால், மொழி எல்லைகளைக் கடந்து
உலக ரீதியாக அந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் சூர்யாவின் திரைப்பட நிறுவனத்துக்குமே அதன் பெருமை சேரும். ‘ஜெய் பீம்’ வெளியான பிறகு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல கல்வி நிறுவனங்களில் மாணவர்களுடன் பேச எனக்கு வாய்ப்பு கிட்டியது.

அவ்வழக்கில் முக்கியமான சாட்சியாக இருந்த கம்மாபுரம் பார்வதிக்கு நிவாரணம் கிடைத்ததுடன், இருளர் பாதுகாப்புச் சங்கத்துக்கும் திரைப்பட நிறுவனம் ரூபாய் ஒரு கோடி நன்கொடை வழங்கியது அரிய செயல்.

படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டிலுள்ள பூர்வகுடிகளுக்கு அரசுத் திட்டங்கள் சென்றடைந்திருக்கிறதா என்பதை
மாவட்ட ஆட்சியர்கள் வாராந்தர அறிக்கையாக அளிக்க வேண்டும்
என்று உத்தரவிட்டார். சாதிச் சான்றிதழ், நிலப் பட்டா வழங்கும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டன.

சிலர் படத்துக்கு எதிராக சாதி சார்ந்த தாக்குதலைத் தொடுத்தார்கள்.
படம் ஓ.டி.டி-யில் வெளியானதனால் படப்பெட்டியைக் கடத்த முடியவில்லை. எனவே நீதிமன்றங்களில் பொய்வழக்குகள் போட்டார்கள். வழக்கை
உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. ராஜாக்கண்ணுவின் உறவினர் என்று
ஒருவர் காப்புரிமை கோரிய வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
குறிப்பிட்ட சமுதாயத்தின் தலைவர் பெயரைக் கூறுவதாகக் கூறி
சிதம்பரம் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கும் ஆதாரமில்லை என்று சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆதாரபூர்வமற்ற அவதூறை
அள்ளி வீசியவர்கள் இனியாவது பகிரங்க மன்னிப்பு கோரி தங்கள்
மீதுள்ள கறைகளைத் துடைத்துக்கொள்ள முன்வர வேண்டும்.
ஜெய்பீம் இரண்டாம் பாகத்தை 2025-ல் கொண்டுவரப்போவதாக சூர்யா
கோவா திரைப்பட விழாவில் கூறியிருக்கிறார். வரும் என்று நம்புவோம்’’

.
…………………………………………………………………………………………………………..……………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to “நீதிபதிகளுக்கு அரசியல் பேச உரிமை உண்டா…..?” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் சொல்வது …

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, பிறரைப் பற்றிச் சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவரும் செய்கிறார், செய்திருக்கிறார். திமுக அரசு தயவில் பதவி பெற்றுக்கொண்டவுடன் அவராகவே ஒன்றிய அரசு, ஈழப் போராளிகள், அண்ணா சொன்னதுபோல்…. என்றெல்லாம் பிதற்றியிருக்கிறார். அடுத்தது பெரியார் சொன்னார், கருணாநிதியின் கனவில் அண்ணா சொன்னபோது நானும் அருகில் இருந்தேன் என்றெல்லாம் எடுத்துவிட வேண்டியதுதான். அவருக்கு ஏற்றதுபோல, சூர்யாவுடன் சேர்ந்து தொழில் செய்கிறார். இன்னும் இராமனாதபுரம் ரிதீஷ், அருள்நிதி போன்றோருடனும் தொழில் செய்ய ஆரம்பிக்க வேண்டியதுதான்.

    இனி அடுத்த செயல், உதயநிதியின் திரைப்படங்கள் நாட்டுக்கே முன்னுதாரணம், சென்னையில் மழையே பெய்ததுபோலத் தெரியவில்லை, நல்ல மழையிலும் சாலைகள் காய்ந்துகிடந்தன என்று பேசவேண்டியதுதான் பாக்கி.

    • பழையவன்'s avatar பழையவன் சொல்கிறார்:

      //இன்னும் இராமனாதபுரம் ரிதீஷ், அருள்நிதி போன்றோருடனும் தொழில் செய்ய ஆரம்பிக்க வேண்டியதுதான்.//
      ரிதீஷ் மரணமடைந்து 4.5 ஆண்டுகள் ஆகிவிட்டன.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    எத்தனையோ ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருக்க, திமுக அரசு சந்துருக்கு மாத்திரம் பொறுப்பு கொடுத்ததன் ரகசியம் என்ன? இவர் திமுக சார்பாக இருந்ததால், லோகலில் பதவி வாங்கினார். இவரே இந்திய அளவில் காரியம் சாதித்துத் தர முடியும் என்றால் ராஜ்யசபா எம்பியாக ஆக்கியிருப்பார்கள். இதில் மற்றவர்களைப் பார்த்து இவர் ஏன் பொறாமைப்படவேண்டும்? எத்தனையோ qualified persons இருக்கும்போது பொருளாதாரப் புளி திட்டக் கமிஷனுக்குள் வந்த ரகசியம் என்ன? அரசியல் கட்சிகள், அவர்கள் சார்பு சிந்தனை உள்ளவர்களை, தங்களுக்கு அதிகாரம் இருக்கும் இடங்களில் நுழைப்பது சகஜம்தான். திமுக மாவட்டச் செயலாளரே நீதிபதியாக இருந்த வரலாறு உண்டு.

    சிறார் கூர்நோக்கு – நடந்த நிகழ்வுக்கு என்ன தீர்வு என்பதை உடனே கண்டுபிடிக்கமுடியாமல், கமிஷன் அமைத்து விஷயத்தை ஆறப்போடும் யுக்திதான். தரும் அறிக்கையில் பிரச்சனை இல்லை என்றால் வெளிவரும், இல்லையென்றால் டிராயரில் வைத்துப் பூட்டிவிடுவார்கள். இதில் ஏதோ இவர் பெரிய காரியம் சாதித்தது போலப் பேசிக்கொள்கிறார்.

    இவருடைய பதவிக்காலத்தில் இத்தனை லட்சம் வழக்குகளை முடித்துவைத்தேன் என்று சொன்னதே பேரிய காண்ட்ரவர்ஷியல் செய்தியாக ஆனது.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை ….

    ஜஸ்டிஸ் சதாசிவம்,
    ஜஸ்டிஸ் ரஞ்சன் கோகோய் –
    இவர்களெல்லாம் ரிடையரான பின் பெற்ற
    பதவிகளுக்கு யார் பொறுப்பு….???

    இவற்றைச் செய்தவர்களுக்கு வக்காலத்து
    வாங்குபவர்களுக்கு, ஜஸ்டிஸ் சந்துருவை
    குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது …???

    ஜஸ்டிஸ் சந்துரு இடதுசாரி பற்றுள்ளவர்.
    அவர் வழக்கறிஞராக பணியாற்றியபோது
    பெரும்பாலும் தொழிலாளர்கள் /தொழிற்சங்கங்கள்
    சார்ந்த வழக்குகளை தான் கையாண்டு வந்தார்.
    எனவே அவரது சார்பு நிலை அனைவரும் அறிந்தே..
    அவரது நியமனத்தில் புதிதாக எதுவும் அதிசயம் இல்லை…

    -மேலும், ஜஸ்டிஸ் சந்துருவாவது கூடுதலாக சம்பளம்
    பெற்றுக்கொள்ளாமல் இந்த பொறுப்புகளை
    ஏற்றுக் கொள்கிறார்.

    மேலே சொன்ன மற்றவர்கள்….???

    .

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      நாம் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. இது சரி, இது தவறு என்று சொல்ல வரவில்லை. பதவியைப் பெற்றுக்கொண்டு பல்லிளிப்பவருக்கு, அவருக்கு முன்னால் பதவியைப் பெற்றுக்கொண்டவர்களைக் குறை சொல்லும் யோக்கியதை உள்ளதா?

      இன்னொன்று, சில சென்சிடிவ் வழக்குகளில் (தீவிரவாதம் அல்லது வேறு விஷயங்களில்) ஈடுபட்ட நீதிபதிகளுக்கு பாதுகாப்புக்காகவும் பதவிகள் கொடுக்கலாம். அல்லது எதிர்கட்சிகளிடம் விலை போகாமல் தீர்ப்பளித்ததற்காகவும் பதவி கொடுக்கலாம். இல்லை, தங்கள் கட்சிக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்ததற்காகவும் பதவி கொடுக்கலாம். இதை ஒவ்வொன்றிலும் ஆராய்வது கடினம். மொத்தத்தில், அரசுப் பதவிகளை வகித்தவர்கள், 20 ஆண்டுகளுக்கு எந்தப் பதவியையும் வகிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றிவிடலாம். இதுதான் நியாயம். இல்லாவிட்டால், ‘ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன்’ என்ற ஜல்லியில் கட்சி ஜால்ராக்களெல்லாம் பதவியைப் பெற்றுவிடுவார்கள்.

      சந்துருக்கு மற்றவர்களைக் குறை சொல்லும் தகுதியே கிடையாது. அவரும் அந்த மற்றவர்களில் ஒருவர்தாம்.

      ஏன்…காங்கிரஸ் ஆட்சியில் கவர்னரான ஆன அதிகாரிகளின் லிஸ்ட் வேண்டுமா? (காவல்துறை அதிகாரிகளை ஓய்விற்குப் பிறகும் வேலை கொடுக்க முனைந்தது உங்களுக்கு மறந்துவிட்டதா?)

      அனைத்து நியமனங்களும் தவறுதான். இது என் நிலைப்பாடு.

      “கூடுதலாகச் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல்” – ஹா ஹா ஹா. தன்னுடைய சேர், தன்னுடைய ஆபீஸிலிருந்தா இவற்றைச் செய்கிறார்? அல்லது உபயோகப்படுத்திய பொருட்களுக்கும் தன் கையிலிருந்து காசு கொடுக்கிறாரா? இவர் சர்டிபிகேட் கொடுக்கும் ஆட்களின் லட்சணம் நமக்குத் தெரியாதா?

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ..

    // சந்துருக்கு மற்றவர்களைக் குறை சொல்லும்
    தகுதியே கிடையாது. அவரும் அந்த மற்றவர்களில்
    ஒருவர்தாம்..//

    //“கூடுதலாகச் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல்” –
    ஹா ஹா ஹா.
    தன்னுடைய சேர், தன்னுடைய ஆபீஸிலிருந்தா
    இவற்றைச் செய்கிறார்?
    அல்லது உபயோகப்படுத்திய பொருட்களுக்கும்
    தன் கையிலிருந்து காசு கொடுக்கிறாரா? //

    – அர்த்தமில்லாத வறட்டு வாதம்,

    – விதண்டா வாதம்,
    மீண்டும் மீண்டும் விதண்டா வாதம்;

    ………….

    வக்கீலுக்கு உரிய சம்பளத்தைக்கூட பெறாமல்,
    தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில்
    வாழ்நாள் முழுவதும் இலவசமாகவே வாதாடி வந்த
    ஒருவருக்கு வாய் கூசாமல் அளிக்கும் மொழிகள் –

    // பதவியைப் பெற்றுக்கொண்டு
    பல்லிளிப்பவருக்கு, //

    தனக்குப் பிடிக்காத எல்லாரையுமே –
    வெறுப்பு கண்களோடு பார்ப்பது,
    சகட்டு மேனிக்கு தாக்குவது –

    … அலுத்துப் போய் தான் இத்தகைய
    மறுமொழிகளுக்கு கொஞ்ச நாட்களாக
    பதிலெழுதாமல் இருந்தேன்….

    சிலர் மாறவே மாட்டார்கள் என்பதை
    அனுபவம் கற்றுக் கொடுக்கிறது.

    ..

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      கா.மை. சார்…உங்கள் கருத்து உங்களுக்கு. என் அபிப்ராயம் என்னுடையது. எனக்கு சந்துருவைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் இல்லை. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் உங்களுக்கே பிடிபடும். சந்துரு தன் வழக்குகள் எதிலாவது ‘ஒன்றிய அரசு’ என்றோ இல்லை பேச்சுக்களில் அப்படிப் பதிவு செய்திருக்கிறாரா? திமுக அரசில் ஒரு பதவி கிடைத்ததும் உடனே ‘ஒன்றிய அரசு’, மற்றும் பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களையும் தாராளமாகப் பதிவு செய்கிறார். அவருக்கு ஏற்ற தோழரான சூர்யா போன்றோருடனும் இணைந்து வேலை செய்கிறார். இவர் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் பிறகு திமுக சித்தாந்தங்களில் நம்பிக்கை உள்ளவர். அதனால்தான் அவருக்கு பதவி கிடைத்தது, ஓடிப்போய் இவர் ஏற்றுக்கொண்டார்.

      அரசு வேலை பார்த்த எவரும், ஒரு கட்சி சார்பாக ‘சமூக சேவை’ செய்கிறேன் என்ற போர்வையில் எதைச் செய்தாலும் அது சரியல்ல. சதாசிவம் போன்றோர் கவர்னராகப் பதவி ஏற்றனர். அதைச் சரி என்றும் சொல்ல முடியும், தவறு என்றும் சொல்லமுடியும். கவர்னர் பதவி என்பதே, ஓய்வு பெற வேண்டிய அரசியல்வாதிக்கு, அல்லது live அரசியலில் இருக்கக்கூடாது என்று நினைக்கப்படுபவருக்கு அல்லது ஒரு அரசைச் சரியாகக் கண்காணிக்கவேண்டும் என்பவருக்கு வழங்கப்படும் பதவி. அது மக்களால் அளிக்கப்படுவதல்ல. ஒரு கட்சியால் அளிக்கப்படுவது. அந்த கௌரவப் பதவியை நீதித் துறையைச் சேர்ந்தவர்களால் பெறவே முடியாது. அவர்களுக்கும் அளித்திருக்கிறார்களே என்று பாசிடிவ் ஆகப் பார்க்கலாம். ஒரு நீதிபதி தவறு செய்யவேண்டும் என்று நினைத்தால், ஒரே வழக்கில் 50 கோடிகளை வாங்கிவிட முடியும் (நான் ரொம்ப குறைவாக எழுதியிருக்கிறேன்.) அதைவிடவா ஒரு கவர்னர் பதவியில் சம்பளம் வந்துவிடப்போகிறது? கட்சி அளிக்கும் பதவியைப் பெற்றுக்கொண்ட சந்துருவிற்கு, சதாசிவம் போன்றோர் கவர்னராகிவிட்டார்களே என்ற வயிற்றெரிச்சல்தான். இவர் கருத்தின்மீது இவருக்கு நம்பிக்கை இருந்திருந்தால் எந்தப் பதவியையும் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது. சமூகப் பணி, திமுக கொடுக்கும் பதவியை வைத்து மாத்திரம்தான் செய்ய முடியுமா?

      விளையாட்டில் கோடிகளில் சம்பாதித்த சச்சினுக்கு காங்கிரஸ் அரசு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்ததே. அது முறையா?

      நம் ஜெகத்ரட்சகன் செய்த நல்ல செயல்கள் பலவும் உண்டு. அவரது பக்தி உணர்வு, வைணவம் பற்றி அவருக்கு இருக்கும் பரந்த ஞானம், கோவில்களுக்கு அவர் செய்யும் உதவி, பாதிக்கப்பட்டவர்கள் அவரை அணுகினால் அவர்களுக்காக அவர் செய்யும் சட்ட உதவி என்று பல நல்ல செயல்களைச் செய்தவர் அவர். தென் தமிழ் நாட்டில், திருநெல்வேலியில் ஒரு சில கோவில்களுக்கு அவர் நிறைய சட்ட உதவிகளைச் செய்திருக்கிறார். ஆனால் நாம் ஜெகத்ரட்சகனைப் பற்றி நினைக்கும்போது நம் மனதிற்கு எது தோன்றுகிறது? (கருணாநிதி குடும்ப பினாமி, ஊழல் சொத்து என்று பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறோம்).

      அதனால் யார் மீதும் புழுதி வாரித் தூற்றவேண்டும் என்பது என் எண்ணமல்ல. அவர்கள் சொல்லும் கருத்துகள் போலி, அவர்களே போலி என்பதால்தான் கடுமையாக என் கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன். இதனை நீங்கள் விதண்டாவாதம் என்று நினைக்கிறீர்கள்.

      நமது பிரதமர் தவறு செய்கிறார் என்றே உங்கள் அபிப்ராயம். அதனால்தான் அவர் என்ன செய்தாலும் குறை சொல்லும் பதிவுகளையே நீங்கள் எழுதுகிறீர்கள். அதுபோல பாஜக அரசையும், அந்தக் கட்சித் தலைவர்களையும். அதைத் தவறு என்று நான் கருதவில்லை. உங்கள் அபிப்ராயம் அது. 75 சதம் மக்கள் உங்கள் அபிப்ராயத்தை ஒத்துக்கொள்வதில்லை என்பது தேர்தல் கணிப்புகளில் தெரியும்.

  5. சேந்தன் அமுதன்'s avatar சேந்தன் அமுதன் சொல்கிறார்:

    இங்கே முற்றிலும் புனிதர் என்று யாரும் இருப்பதாக தெரியவில்லை….
    அப்படி இருப்பதாக தெரிந்தால் உடனே அவர் மீதும் அவதூறு பரப்பப்படுகிறது . எது
    உண்மை எது பொய் என்று தெரிந்து கொள்வது மிக கடினமே …ஹும் ..

    எனவே, அவரவர் கருத்து அவரவருக்கு…இங்கே வெறுமனே பகிர்ந்து தான் கொள்கிறோம்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      ஒரு அரசியல் கட்சி யாருக்கேனும் பதவி கொடுக்கிறார்கள் என்றால், அவர் ‘புனிதர்’ இல்லை என்று சுலபமாகவே தெரிந்துகொள்ள முடியும். அல்லது ‘ஏதோ’ செய்திருக்கிறார், அதற்கான விலை இந்தப் பதவி என்று புரிந்துகொள்ள வேண்டும். அந்த ‘ஏதோ’ தேச நன்மைக்காக இருக்கலாம் (எம்.ஜி.ஆர் செய்ததைப் போல), அல்லது தனக்கானது/தன் கட்சிக்கானதாக இருக்கலாம் அல்லது தன் ஆதரவாளர்கள் தளத்தைப் பெருக்குவதற்காக இருக்கலாம்.

      யாராவது விவசாயம் செழுமையுற வேண்டும் என்று பாடுபட்ட நம்மாழ்வாருக்கு ஏதேனும் செய்திருக்கிறார்களா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.