ஜூனியர் பதில்கள் – முதல் பகுதி …..!!!

……………………………..

“ செயல்களையோ அவற்றைச் செய்யும் உரிமையையோ, செயல்களின் பயனோடு ஒன்றுபடும் தன்மையையோ இறைவன் இவ்வுலகில் ஏற்படுத்தவில்லை. அவ்வாறு செய்வது இயற்கையின் வேலை ”

………………………………………………………………………………………………………………………………………

ஜூனியர் பதில்கள்

……………………………………………………………………………….

முதன் முதலாக –
இறைவன் என்னைப் பார்த்து கேட்கிறார் ….
(என்று நான் நினைத்துக்கொள்கிறேன்…) 👍

கேள்வி – எந்த தைரியத்தில், யாரை நம்பி நீ இந்த
பகுதியை நடத்த … துணிந்தாய்….?

என் பதில் –

வேறென்ன ஐயனே…
முதலாவதாக-
நீங்கள் துணை இருக்கும் தைரியத்தில்…

அடுத்ததாக –
ஆயிரக்கணக்கான விமரிசனம் தள வாசக நண்பர்கள் –
துணை இருப்பார்கள் என்கிற தைரியத்தில் ….

( ” லட்சக்கணக்கான ” – என்று
சொல்லத்தான் ஆசை..
ஆனால் முடியாதே…!!! 😒😒😒 )

அடுத்ததாக –
விழுந்து விழுந்து எழுந்த என் யேழு கழுதை
வாழ்க்கை அனுபவமும்,
விமரிசனம் தளத்தில் இயங்கிய இந்த
13 வருட அனுபவமும்
துணை இருக்கும் என்கிற தைரியத்தில் ….

கடைசியாக –
இந்த நாட்டு அரசியல்வாதிகள் நான் தொடர்ந்து எழுத
துணை இருப்பார்கள் என்கிற தைரியத்தில் – தான் –

  • எழுதத்துணிந்தேன் தலைவா…!!!

இறைவன் –
முதல் மூன்று உதவிகளும் உனக்கு
கிடைக்கலாம்; நீ உதை வாங்கும் சமயத்தில்
உதவாமலும் போகலாம்…

ஆனால், கடைசியில் சொன்னாயே –
அந்த அரசியல்வாதிகள் என்றும் உனக்கு
துணை இருப்பார்கள்……. பிழைத்துப்போ….!!!!😃😃😃

……………………………………………………………………………………………..……..

குறிப்பு – கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன….
பொறுமையாக இருங்கள்…. சுவாரஸ்யமான
கேள்விகளுக்கு முதலிடம்…!!!

சில நண்பர்கள் கேள்விகளை அனுப்பி விட்டு, கூடவே
எங்கள் பெயரை போட வேண்டாம் என்று கோரிக்கையும்
வைத்திருக்கிறார்கள்….

அப்படியே ஆகட்டும்…!!! (ததாஸ்து… ????? !!!!)
அத்தகைய நண்பர்களின் கேள்விகள் வரும்போது,
” வாசக நண்பர் ஒருவர் ” என்று போடுகிறேன்… சம்பந்தப்பட்ட வாசக நண்பர் தன்னுடைய கேள்வி என்று
புரிந்து கொள்வார்.

(எந்த காரணத்தை முன்னிட்டும், கேள்வி கேட்கும்
வாசக நண்பர்களின் முகவரியை ( mail ID )
தரும் உத்தேசம் இல்லை….அவர்கள் ப்ரைவசி
பாதுகாக்கப்படும் ) அவர்கள் எந்த பெயரில் கேட்க
விரும்புகிறார்களோ, அந்த பெயரில் எழுதலாம்.

பயணம் இங்கே துவங்குகிறது….
(தொடர்ந்து விறுவிறுப்பான கேள்விகளை அனுப்பிக்
கொண்டே இருங்கள் – அனுப்ப வேண்டிய எனது
மின்னஞ்சல் முகவரி – kavirimainthan@gmail.com )

…………………………………………………………………………………………………………………..

வாசக நண்பர் கோபாலனின் கேள்வி –

பாஜக தலைவர் அண்ணாமலையைப்
பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…?
அவருக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்..?

………………………………………….

  • அண்ணாமலை அவர்கள், புதிதாக —- தமிழக — அரசியல் களத்திற்கு வந்திருப்பவர். அவர் மற்ற அரசியல்வாதிகள் போல் அல்லாமல் வித்தியாசமாகச் செயல்படுகிறார்.
    புத்திசாலி…..சுறுசுறுப்பாக இயங்குகிறார்.
  • செய்தியாளர்களை, மக்களை, பல்வேறு
    அமைப்புகளைச் சேர்ந்தவர்களை – எந்தவித தயக்கமும்
    இன்றி நேரடியாக சந்திக்கிறார். எதைப்பற்றியும் தயங்காமல், தாமதிக்காமல், உடனேயே,
    தெளிவாக கருத்து சொல்கிறார்.
  • ஐபிஎஸ் தேறியவர் என்பது அரசியலுக்கான
    தகுதியாக இல்லாமல் இருக்கலாம்….
  • ஆனால், படிப்பு, புத்திசாலித்தனம்,
    presence of mind, physical fitness – ஆகியவற்றை நிச்சயமாக உறுதி செய்கிறது.
    இவற்றில் பல நமது மற்ற அரசியல்வாதிகளிடம்
    அபூர்வமாகவே தென்படும் தகுதிகள்….
    இதெல்லாம் அவரது பாஸிடிவ் பாயிண்டுகள்.

( அவருக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் ….? )

  • அவர், என் ஆலோசனையை கேட்கும் அளவுக்கு
    நான் உயரமான இடத்தில் இல்லை;

ஆனால், அண்ணாமலை இன்னும் வளர வேண்டும்
என்று நினைத்து, என் எண்ணத்தைச் சொல்கிறேன் –

அண்ணாமலை, தமிழக அரசின் மீதும், அமைச்சர்கள்
மீதும் – பலவித குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்.
அவை நிஜம் என்பது நம்மைப் போன்ற, அரசியலை
கூர்ந்து கவனிக்கும் ஊடக வாசகர்களுக்கு தெரிகிறது….

ஆனால், அநேகமாக எல்லா செய்தி, தொலைக்காட்சிகளும்
ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இயங்குவதால்,
இவை, சாதாரண பொதுமக்களிடம் போய்ச் சேருவதில்லை.

சாதாரண பொதுமக்களிடம் இந்த செய்திகள்
போய்ச்சேர வேண்டுமானால், அவர் ஒன்று மாற்றி,
மற்றொன்று, அடுத்தது – அதற்கடுத்தது என்று போய்க்கொண்டே இராமல் –

  • ஒரு குற்றச்சாட்டை சொன்னால்,
    தொடர்ந்து கொஞ்ச நாட்களுக்கு அழுத்தம் கொடுத்து,
    பல இடங்களிலும் அதைப்பற்றியே பேசி, உரிய ஆதாரங்களையும் வெளியிட வேண்டும்…
    அப்போது தான் மக்களுக்கு அது உணர்வில் போய்ச்சேரும்.
  • தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால், பாஜக சட்டப்பிரிவின்
    மூலம், நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடர வேண்டும்.
    எழுத்து மூலமான ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும்,
    நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தாலே போதும்.
  • தமிழகத்தில், ஆளும் கட்சி நல்ல மெஜாரிடியோடு
    செயல்பட்டு வருகிறது… அதன் கூட்டணி கட்சிகள்
    அத்தனையும், தங்கள் தங்களுக்கான பங்கை,
    ஆட்சியின் பலனை – பெற வேண்டும் என்பதால், பலத்த
    ஜால்ராக்களாக செயல்படுகின்றன.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக –
உட்கட்சி பூசல்களால், செயலிழந்து விட்டது.

  • எனவே, தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக
    இயங்க வேண்டிய அவசியமும், கடமையும் –
    பாஜக-வுக்கு இருக்கிறது. எனவே, அதை மனதில் வைத்து – ஓட்டுகளையும், சீட்டுகளையும் ஒரு பக்கம்
    ஒதுக்கி வைத்து விட்டு , தீவிரமாக பணியாற்ற
    வேண்டியது அவசியம்.
  • இன்னொரு விஷயமும் மிக முக்கியம்…
    தமிழக மக்களில் அநேகருக்கு, பலவித காரணங்களால்,
    மத்திய பாஜக ஆட்சியை பிடிக்கவில்லை. எனவே, தனது
    பேச்சுகளில், அண்ணாமலை அவர்கள் இயன்றவரை,
    மத்திய அரசைப்பற்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது.

மற்ற மாநில கட்சிகளைப் போல,
மாநில விஷயங்களிலேயே அதிக கவனம்
செலுத்துவது அவசியம்….

……………………………………………………………………………………………………

  • ” கடமையைச் செய் …
    பலனை எதிர்பார்க்காதே “
    -என்கிறார் கீதையின் கண்ணன்…

இதையே நான்,

“கடமையை தொடர்ந்து செய்யுங்கள்…
பலன் நிச்சயம் உண்டு “

  • என்று அண்ணாமலை அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்..!!!

……………………………………………………………………….

..
வாசக நண்பர் ஒருவரின் கேள்வி –

வெறும் பரப்புரைகளும்,
நிருபர்களைச் சந்தித்துத்
தன் கருத்துக்களைக் கூறுவதும்
அண்ணாமலை அவர்களைப்
பிரபலமாக்கும். ஆனால்
வாக்குகளாக அது அறுவடையாகுமா?

…………………………………………………………..

ஜூனியர் பதில் –

இதுவரையிலான, அவரது செயல் முறை, நிச்சயமாக அண்ணாமலை அவர்களை பிரபலமாக்கி இருக்கின்றன…
ஆனால் – இது நகர்ப்புறங்களில் மட்டும் தான்…!!!
கிராமப்புறங்களில் அண்ணாமலை யாரென்று
தெரியாதவர் தான் அதிகம்.

வாக்குகள் விவகாரம் – முற்றிலும் வேறுபட்டது…

தமிழகத்தில் – தனியாக நின்று, பாஜகவால், ஒரு எம்.பி. தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. கோவை நகரம்,
கன்யாகுமரி-நாகர்கோவில் வட்டாரங்களில், வேண்டுமானால் தனியாக நின்றால் – எம்.எல்.ஏ. சீட்டுகள்
இரண்டாவது கிடைக்கலாம்.

தமிழக பாஜக ஜெயிக்க வேண்டுமானால் –
ஒன்று திமுக கூட்டணியை விட்டு காங்கிரசை
வெளியேற்றும் முயற்சியில் பாஜக டெல்லி தலைமை
வெற்றி பெற வேண்டும்….. (!!!!!!!!!!!!!!!!!) காங்கிரஸ்
தலைமையில் தனி கூட்டணி ஒன்று உருவாக வேண்டும்.

தமிழக பாஜக இயன்றவரையில் ஒரு பலமான
கூட்டணியை உருவாக்க வேண்டும்…
4 முனை போட்டி உருவாக, திட்டம் போட்டு
தீவிரமாக இறங்கி வேலை செய்ய வேண்டும்.

  • – ( நான் பாஜக – கட்சிக்காரரோ, ஆதரவாளரோ,
    எதிர்ப்பாளரோ – எதுவுமில்லை என்பதையும், எந்த கருத்தை வேண்டுமானாலும் எழுதும்
    சுதந்திரம் உடைய விமரிசகன் என்பதையும் – நாளயே நான் பாஜக-வுக்கு எதிராக எதையாவது எழுதினாலும், நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக –
    மீண்டும் இங்கே நினைவுபடுத்த வேண்டிய அவசியம்
    இருப்பதாக நினைக்கிறேன்….!!! ) 😊😊😊

……………………………………

வாசக நண்பர் ஒருவரின் கேள்வி –

டாஸ்மாக், கேபிள் டிவி போன்றவற்றிற்கு
செலவழிக்கும் திராணி உள்ளவர்களுக்கு
எதற்கு ரேஷன் கார்ட்? அடையாள
அட்டையாக ஆதார் தான் இருக்கிறதே…?

………………………………………..

ஜூனியர் பதில் –

இதயம் அற்றவரின், இரக்கமே அறியாத ஒருவரின் –
கேள்வியாக நான் இதை காண்கிறேன்…

நீங்கள் தண்டிக்க நினைப்பது யாரை….?

குடிகாரர்களையா,
அல்லது அவர்களின் அப்பாவிக் குடும்பங்களையா..?

அல்லது
ஊற்றிக் கொடுத்து,
அவர்களை ஊக்குவிக்கும் அரசையா ….????

ரேஷன் கடையில் கொடுக்கப்படும் பொருட்கள்
குடிகாரரின் குடும்பத்தினர் பட்டினியாக
கிடந்து அல்லாடுவதை தடுக்கும்.

நீங்கள் சொல்வது போல் – குடிகாரர்களுக்கு
ரேஷன் கார்டு கிடையாது என்றால் –

ஏற்கெனவே, குடித்து- குடல் வெந்து,
வேலைக்கு போகாமல், சம்பாதித்து குடும்பத்தை
காப்பாற்றாமல் –

குடும்பத்தினரை வதைக்கும் குடிகாரர்களை
அது எந்த விதத்திலும் பாதிக்காது.

இப்படி, நெகடிவ்வாக யோசிக்காமல்,
உருப்படியாக, டாஸ்மாக் கடைகளை
மூடச்செய்வது எப்படி என்று சிந்தியுங்கள் நண்பரே.

  • எளியவர்களிடமும், இயலாதவர்களிடமும் மிக மிக அவசியமாக காட்டப்பட வேண்டிய ஒரு குணம் – இரக்கம்….. தயவுசெய்து இதை உங்கள் இதயத்தில் இதை நிரந்தரமாக நிலை நிறுத்திக்கொள்ளுங்கள்….

……………………………………………………………………………………………….

  • பின் குறிப்பு –
    இப்போதைக்கு வாரம் ஒருமுறை கேள்வி-பதில்
    பகுதியை பதிவிடலாமென்று நினைக்கிறேன்.

இடையில் வாசக நண்பர்கள், தொடர்ந்து தங்கள்
கேள்விகளை அனுப்பலாம். நான் கேள்வி-வங்கி
ஒன்றை துவங்கி இருக்கிறேன்… வரும் கேள்விகளை
எல்லாம் அதில் சேமித்து வைத்துக் கொள்கிறேன்.
பின்னர், கேள்விகள் வரும் வேகத்தைப் பொறுத்து,
கால அவகாசத்தை தீர்மானித்துக் கொள்ளலாம்.

இன்னொரு விஷயம்…
காவிரிமைந்தனாக – அனைவருக்கும் புரிய வைக்க
வேண்டும் என்கிற பார்வையில், நான் எதையும் விரிவாக,
விளக்கமாக எழுதி பழக்கப்பட்டு விட்டேன்.

கேள்வி-பதில் பகுதிகள் பொதுவாக சுருக்கமாக,
நச்சென்று இருக்கும்…. பல விஷயங்களை படிப்பவர்களே
யூகித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

நான் புதிதாக, இவை இரண்டிற்கும் இடையேயான
ஒரு நடையை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்…
கொஞ்ச காலம் பிடிக்கலாம்… அதுவரை கொஞ்சம்
இப்படியும், கொஞ்சம் அப்படியுமாகத்தான் இருக்கும்.

இவைகளைப்பற்றி, வாசக நண்பர்களின் கருத்தையும்
தெரிந்து கொள்ள விரும்புகிறேன்…

பின்னூட்டங்களில் உங்கள் கருத்தை – இதை படித்தவுடனேயே – அவசியம் எழுதுங்கள்….

.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
14, ஜனவரி, 2023.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஜூனியர் பதில்கள் – முதல் பகுதி …..!!!

  1. ரமேஷ் சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    உங்கள் கேள்வி பதில் முதல் பகுதி நன்றாக
    வந்திருக்கிறது.அமர்க்களமாக தொடருங்கள்.

    உங்கள் முதல் பதிலே ஆச்சரியத்தை தருகிறது.
    பொதுவாக உங்களுக்கு பாஜகவை பிடிக்காது
    என்பது தான் உங்களைப்பற்றிய இமேஜ்.
    ஆனால் அண்ணாமலையை பற்றி நீங்கள்
    புகழ்ந்து பேசி இருப்பது ஆச்சரியத்தை
    தருகிறது.சரியென்று உங்களுக்கு தோன்றுவதை
    உங்கள் இமேஜைப்பற்றி கவலைப்படாமல்
    எழுதி இருப்பது உங்கள் மீதான மதிப்பை
    மேலும் கூட்டுகிறது.நன்றி.

  2. புதியவன் சொல்கிறார்:

    //எளியவர்களிடமும், இயலாதவர்களிடமும் மிக மிக அவசியமாக காட்டப்பட வேண்டிய ஒரு குணம் – இரக்கம்…..// – இது படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. இரக்கம் இருக்கவேண்டிய குணம்தான். ஆனால் தங்களைக் கெடுத்துக்கொண்டு, தன் குடும்பத்தைக் கெடுத்து, தன் சமூகத்தையும் கெடுக்கும் குடிகாரனிடம் எதற்கு இரக்கம் காண்பிக்க வேண்டும்? ரேஷன் உணவு கிடைத்துவிடுவதால், இலவசங்கள் கிடைத்துவிடுவதால், அவர்களுக்கு சமூகத்தின்மீது அக்கறை இல்லை. சிந்திக்கும் திறனற்றவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருப்பதால், அவர்கள் தங்களைச் சுலபமாக விற்றுவிடுகிறார்கள் என்ற ஆதங்கம்தான் போலிருக்கு கேள்வி கேட்டவருக்கு.

    முதல் பதிலைப் படித்ததும் நெடிய பதிலாக இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் துக்ளக்கிலும் சில கேள்விகளுக்கு நெடிய பதில் உண்டு. அதுவும்தவிர விளக்கமாக எழுதுவது நல்லதுதான்.

    //அதைப்பற்றியே பேசி, உரிய ஆதாரங்களையும் வெளியிட வேண்டும்…// – இதையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவிற்கு மக்களின் அறிவுத்திறன் இல்லை என்றே நான் நினைக்கிறேன் (பெரும்பாலானவர்கள்). ஊடகங்கள் (அனேகமாக எல்லா…புதியதலைமுறை உட்பட) கோயபல்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன, அரசிடமிருந்து லஞ்சம் கிடைப்பதால் (தகுதியில்லா ஊடகங்களுக்கு விளம்பரங்கள் கிடைத்து அதன் மூலம் பணம் வருவது, லஞ்சம் என்ற கணக்கில்தானே சேரும்?). கண்ணுக்கு முன்னால் தெரியும் பல குற்றங்களுக்கு (பி.எஸ்.என்.எல் லைன்களை சொந்த பிஸினெஸுக்கு உபயோகித்து தேசத்துரோகம் செய்தது, செந்தில் பாலாஜியின் லஞ்சம் போன்றவை), நீதித்துறை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் நீதி வழங்கணும் என்று நினைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் வழக்குத் தொடுப்பது பிரயோசனமில்லை. மத்திய அரசு இரும்புக்கரங்களைக் கொண்டு ஒடுக்க ஆரம்பிப்பதுதான் (இந்திராகாந்தியின் வழி) ஒரே வழி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.