கைகொடுக்குமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்…. ?

……………………………

கைகொடுக்குமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்?

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குள் முதல் முறையாக சென்ற ராகுல் காந்தி, அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு,
“தந்தையை இழந்துவிட்டேன்; நாட்டை ஒருபோதும் இழக்கமாட்டேன்’ என சூளுரைத்து கன்னியாகுமரியிலிருந்து தனது நடைப்பயணத்தை புதன்கிழமை தொடங்கினார்.

மாலுமி இல்லாமல் மூழ்கும் கப்பலாக தொடர் தோல்விகளில் தத்தளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தியின் “இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ (பாரத் ஜோடோ யாத்ரா) கைகொடுத்து கரையேற்றுமா என்ற கேள்வி அரசியல்
அரங்கில் எழுந்துள்ளது.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தில்லி, பஞ்சாப் மாநிலங்கள் வழியாக காஷ்மீர் வரை 150 மக்களவைத் தொகுதிகளில் சுமார் 3,500 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார். சுமார் 5 மாதங்கள் வரை நீடிக்கும் இந்தப் பயணம் வருகிற ஜனவரி மாதம் நிறைவடைகிறது.


இந்த ஆண்டு இறுதியில் குஜராத், ஹிமாசல பிரதேசம்
ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ராகுலின் நடைப்பயணத்தில் இந்த இரு
மாநிலங்களும் சேர்க்கப்படாத நிலையில், பிரசாரத்துக்கு
அவர் இந்த மாநிலங்களுக்குச் செல்வாரா என்பது தெரியவில்லை.

ஏற்கெனவே, பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சறுக்கலைச் சந்தித்து வரும் நிலையில், ராகுல் காந்தி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடாமல் நடைப்பயணத்தில் கவனம் செலுத்துவது மேற்கூறிய இரு மாநிலத் தேர்தல்களிலும் எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி, 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்தது. மேலும், பல்வேறு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் ஆட்சியை இழந்துவிட்ட அந்தக் கட்சி, தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே தனித்து ஆட்சி செய்கிறது.

ராகுல் காந்தி நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி வருகிற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸூம் காங்கிரஸூடன் கூட்டணி அமைக்கத் தயாராக இல்லை. கேரளத்திலும் இடதுசாரிகளுடன் கூட்டணி சாத்தியமில்லை.

தமிழகம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், பிகார் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸூக்கு தற்போது கூட்டணிக் கட்சிகள் உள்ளன.

மத்திய பாஜக அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் நீண்ட நடைப்பயணத்தின் பிரதான நோக்கம். அப்படியெனில்,
பாஜக -காங்கிரஸ் நேரடியாக மோதக்கூடிய 185 தொகுதிகளில் பாஜகவை குறைந்தபட்சம் 30 சதவீத தொகுதிகளிலாவது காங்கிரஸ் தோற்கடித்தாக வேண்டும். ஆனால்,
2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் மேற்கூறிய 185 தொகுதிகளில் 90 சதவீதத்துக்கும் மேலான (சுமார் 170) தொகுதிகளில் பாஜக அசுர பலத்துடன் வெற்றி பெற்றது. இதனால்தான் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக
ஆட்சி அமைக்க முடிந்தது.

மேலும், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, பிஜு ஜனதாதளம், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு எதிராகத் தேர்தலில் களம் கண்டபோதும் கணிசமான தொகுதிகளை பாஜக பெறுகிறது.

இதுவே தேசிய அளவில் அந்தக் கட்சியை தொடர்ந்து வலுவாக வைத்துள்ளது.

மேற்கூறிய 185 தொகுதிகளும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியாணா, குஜராத், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் உள்ளன.

இந்த மாநிலங்களில் காங்கிரஸின் கட்டமைப்பு தற்போது பலமாகவே உள்ளது. இருப்பினும், மக்களவைத் தேர்தல்களில் பாஜகவை மீறி காங்கிரஸால் வெற்றி பெற முடியாத சூழல் ஏன் ஏற்படுகிறது என்பதை ராகுல் காந்தி புரிந்து
கொண்டாரா எனத் தெரியவில்லை.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியாணா
ஆகிய மாநிலங்களில் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்த வாக்குகளைவிட, மோடி பிரதமர் வேட்பாளராகக்
களம் கண்ட 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில்
கூடுதலாக 10 முதல் 15 சதவீத வாக்குகள் கிடைத்தன.
அதே நேரத்தில், மாநில தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்யும்போது இரு கட்சிகளுக்கான இடைவெளியும் குறைவாகவே உள்ளது.

உதாரணமாக, 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 39.3 சதவீத வாக்குகளையும், பாஜக 38.8 சதவீத வாக்குகளையும் பெற்றன.

அதுவே, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 61 சதவீத வாக்குகளைப் பெற்று அந்த மாநிலத்தில் அனைத்து (25) தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 34.6 சதவீத வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.

இதேபோல மத்திய பிரதேசத்தில் 2018 சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 40.9 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக 41 சதவீத வாக்குகளைப் பெற்றது. இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 58 சதவீத வாக்குகளைப் பெற்று மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28-இல் வென்றது. காங்கிரஸ் 34.5 சதவீத வாக்குகளைப் பெற்றது.

அந்தக் கட்சியின் அப்போதைய முதல்வர் கமல் நாத்தின்
மகன் நகுல் நாத் மட்டுமே வெற்றி பெற்றார்.
இதேபோல, சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில்
43 சதவீத வாக்குகளுடன் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. பாஜக 33 சதவீத வாக்குகளுடன் படுதோல்வியடைந்தது.

ஆனால், மக்களவைத் தேர்தலில் பாஜக 50.7 சதவீதம்,
காங்கிரஸ் 41 சதவீத வாக்குகளைப் பெற்றன. அங்கு மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 9-இல் பாஜக வென்றது.

ஹரியாணா மாநிலத்தில் 2019 மக்களவைத் தேர்தலில்
பாஜக 58 சதவீத வாக்குகளைப் பெற்று அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. காங்கிரஸ் 28.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

அதன்பிறகு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜக
36.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று கூட்டணி
அரசையே அமைக்க முடிந்தது. காங்கிரஸ் 28 சதவீத வாக்குகளைப் பெற்றது.

மக்களவைத் தேர்தல் என வரும்போது பல்வேறு அரசியல் கட்சிகளையும் தாண்டி மோடியின் தலைமைக்கு கணிசமாக வாக்குகள் விழுகின்றன.

இதே நிலைதான் மகாராஷ்டிரம், பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் தொடர்கிறது. 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாதது, நேரடியாக பாஜகவுடன் மோதிய 185 தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தலைமையே இல்லாத கட்சியை நம்பி மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்பதை ராகுல் சிந்திக்க வேண்டும்.

வரும் அக்டோபர் மாதம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் நடைப் பயணம் மேற்கொள்கிறார். அவரது “ஒற்றுமை’ யாத்திரை என்பது காங்கிரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கா அல்லது வருகிற மக்கsளவைத் தேர்தலில் மோடியை வீழ்த்துவதற்கா என்ற சந்தேகம் எழுகிறது.

காங்கிரசை பொருத்தவரை சோனியா காந்தி,
ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோரே
கட்சியை ஒற்றுமைப்படுத்தும் சக்தியாக இருக்க முடியும். இவர்களைத் தவிர வேறு யாரேனும் கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டால், அதை கட்சியின் மற்ற தலைவர்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறியே.


இத்தகைய சூழலில் நடைபெறும் ஒற்றுமை நடைப்பயணம் என்பது, அகில இந்திய காங்கிரஸின் முகம் ராகுல்
காந்திதான் என்பதை கட்டமைக்க உதவுமே தவிர
மோடியை வீழ்த்த உதவாது.

மத்திய பாஜக அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து நீக்க வேண்டுமெனில், அந்தக் கட்சியுடன் நேரடியாக மோதும் 185 தொகுதிகளில் குறைந்தபட்சம் 60 தொகுதிகளிலாவது காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்.

இதற்கான வழிகளை ஆராய்ந்து, அதற்காக ராகுல் காந்தி கடுமையாக உழைக்க வேண்டும். இதற்கான சூத்திரத்தைக் கண்டறியாமல் ராகுல் காந்தி எத்தனை நடைப்பயணம் மேற்கொண்டாலும், வரும் தேர்தலில் பிரதமர் மோடியைத் தோற்கடிப்பது கடினம்.

பல்வேறு அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட
நடைப்பயணம், ரத யாத்திரை போன்றவை அவர்களுக்கு அரசியல் ரீதியில் பலனைத் தந்துள்ளன.

1983-ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் தில்லி வரை
“பாரத் யாத்திரை’ என்ற பெயரில் 6 மாதங்கள் 4,260 கி.மீ. தொலைவு பயணம் செய்தார் முன்னாள் பிரதமர்
சந்திரசேகர். அது ஜனதா கட்சியை நாடு முழுவதும்
உயிர்ப்புடன் வைக்க உதவியது.

1990-இல் குஜராத்திலிருந்து அயோத்தி வரையிலான அத்வானியின் ரத யாத்திரைக்குப் பிறகு வட மாநிலங்களில் பாஜக வேரூன்றியது. காங்கிரஸூக்கு மாற்று பாஜக என்ற பிம்பம் உருவானது.

ஆந்திரத்தில் ராஜசேகர ரெட்டி 60 நாள்களில் 1,500 கி.மீ. தொலைவு மேற்கொண்ட நடைப்பயணம் அவருக்கு முதல்வர் பதவியை அளித்ததுடன், சந்திரபாபு நாயுடுவை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்கியது.

2019-இல் ஜெகன்மோகன் ரெட்டி 341 நாள்களில், 3,648 கி.மீ. தொலைவு மேற்கொண்ட நடைப்பயணம் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர உதவியது.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட
“நமக்கு நாமே’ பயணம் ஆட்சியை பிடிக்க உதவாவிட்டாலும், திமுக என்றால் மு.க.ஸ்டாலின்தான் என்பதை நிலை
நிறுத்த உதவியது.

2024 மக்களவைத் தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும்,
காங்கிரஸ் என்றால் ராகுல் காந்திதான் என்பதை அவரது நடைப்பயணம் உறுதிப்படுத்தலாம். 3,500 கி.மீ. தொலைவு நடந்தே சென்ற முதல் அரசியல் கட்சித் தலைவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும்.

ஆனால், அது காங்கிரஸின் வெற்றிக்கு உதவுமா என்பது கேள்விக்குறியே…..

( தினமணி வலைத்தள சிறப்புக் கட்டுரையிலிருந்து ….)

.
…………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கைகொடுக்குமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்…. ?

  1. புதியவன் சொல்கிறார்:

    கட்டுரை பல்வேறு விஷயங்களை அலசுகிறது.

    ராகுல் காந்தியின் நோக்கம் என்ன என்பதைத்தான் அவருடைய நடைப்பயணம் தெளிவுபடுத்துவதாக நான் நினைக்கிறேன்.

    1. தான் காங்கிரஸின் முகம், அதிகாரம் தன் கையில் இருக்கவேண்டும், ஆனால் தன்னால்தான் தோல்வி என்பதை ஏற்கும் பொறுப்பு இருக்கக்கூடாது என்பதே ராகுலின் நோக்கம். பொம்மை தலைவரைக் கொண்டுவந்து கடிவாளத்தைத் தன் கையில் வைத்துக்கொள்ளலாம் என்பது அவரது எண்ணமாக இருக்கலாம். (அதனால்தான் வலிமையான யாருமே போட்டிபோட வாய்ப்புக் கொடுக்க நினைப்பதில்லை. அதனால்தான் வாக்காளர் பட்டியலையே வெளியிடாமல் ரகசியம் காக்கிறது கட்சித் தலைமை). இதனால் காங்கிரஸுக்கு என்ன பிரயோசனம் என்று எனக்குப் புரியவில்லை.
    2. தற்போது, இரண்டு மாநிலத் தேர்தல்கள் உள்ளன. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலும் உள்ளது. இதில் பங்கேற்காமல், நடைப்பயணம் மேற்கொள்வதால், தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வேண்டாம். தலைவர் தேர்தல் சரியாக நடைபெறாமல் தோல்வியுற்று தன்னைத் தேடியே தலைமைப் பதவி வரும். அப்போது காங்கிரஸின் தோல்விக்குத் தான் பொறுப்பு ஏற்கவேண்டியதில்லை என்று நினைக்கிறார் போலத் தெரிகிறது.
    3. இது ஒற்றுமைக்கான பயணம் இல்லை. சிறுபான்மையினரின் வாக்கைக் குறிவைத்து மேற்கொள்ளும் பயணம் என்றே நான் கருதுகிறேன். தமிழக நடைப்பயணத்தில் அவருடன் பயணித்தவர்கள், உரையாடியவர்கள், அவர் தங்கிய இடங்கள் இவற்றை அவதானித்தாலே இது புரிந்துவிடும்.
    4. ஒருவர், ED, IT விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக இப்படி ஐந்து மாதங்கள் நடைப்பயணம் மேற்கொள்கிறார் எனச் சொன்னார். அது அதீத கணிப்பாகத் தோன்றியது.

    ஒரு கட்சியின் வலிமை, உள்ளூரில் சிறந்த தலைவர்களை வளர்ப்பது, வைத்துக்கொள்வது. ராகுல் இதனை விரும்புவதில்லை. ராகுலுக்கு தலையாட்டி பொம்மைகள் தேவை. மன்மோகன் சிங்குகள் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தர முடியாது என்பதை எப்போதுதான் இவர் புரிந்துகொள்ளப் போகிறாரோ. இதே பிரச்சனையினால்தான் காங்கிரஸிலிருந்து வெளியேறியவர்கள் மாநிலக் கட்சிகளைத் தொடங்கி வெற்றிகரமாக இருக்கின்றனர். காங்கிரஸ் பலவீனப்பட்டுக்கொண்டே வருகிறது. என்னுடைய கணிப்பு, ஆம் ஆத்மி, காங்கிரஸின் இடத்தைப் பிடிக்கும், கெஜ்ரிவால் ஒரு காலத்தில் இந்தியப் பிரதமர் வேட்பாளர் முகமாக வருவார்.

  2. Thiruvengadamthirumalachari சொல்கிறார்:

    Why not look at it from a different Angela? He had the opportunity to become a minister but indicated he wanted to strengthen the party. His crentials and intentions wee made fun of and none of the senior leaders did not go to his defense.
    Even the latest defection is not out of ideological differences but power equations. Excepting Sachin pilot switched sides on extraneous grounds.Unlike USA the Indian media is dominated by corporate interests and which magnify petty peccadillos and not political ideas.Many of them even did not know what he meant by the escape velocity of Jupiter.

  3. ஆதிரையன் சொல்கிறார்:

    பரிதாபமான நிலையில் தான் ராகுல் உள்ளார்.
    அவர் உண்மையிலேயே மோடி அவர்களுக்கு , கடுமையான சவாலை உருவாக்க வேண்டுமென்றால், ஹிந்து மத துவேஷத்தை வெளிப்படையாக கை விட வேண்டும்.ஹிந்துக்களுக்கு வெளிப்படையான சலுகைகளை பற்றி பொது மேடையிலே பேச வேண்டும். அதனால் சிறுபான்மையினர் தனக்கு அளிப்பதாக இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் அந்த ஓட்டுக்கள் பாதிக்கப்படலாம் .ஹிந்துக்களை கிண்டல் பண்ணினால்தான் சிறுபான்மையினர், தங்கள் கட்சிக்கு ஒட்டு போடுவர் , என்று எந்த மடையன் கண்டுபிடித்தானோ ?
    எனவே, வெறும் நடைபயணம் செல்வதை விட, காவடி தூக்கி கொண்டு, இந்தியா முழுவதும் வலம் வந்தால்,நிச்சயம் மாற்றம் பிறக்கும் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.