சுப்ரமணியன் சுவாமிக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் என்ன சம்பந்தம்….?

………………………

……………

சில வருடங்கள் முன்பு – 2014-ல், மிகுந்த அக்கறையோடு,
பல நூல்களையும், செய்தித் தளங்களையும் அலசி, ஆய்ந்து
திருவாளர் சுப்ரமணியசாமி மற்றும் அவரது அப்போதைய
நெருங்கிய தோழராக இருந்த சந்திராசாமி ஆகியோரின்
மர்ம நடவடிக்கைகளின் பின்னணியை –
” சாமிகளின் சாகசங்கள் ” என்கிற தலைப்பில் ஒரு நீண்ட
இடுகைத் தொடராக எழுதினேன். 12 பகுதிகளாக அது
இதே விமரிசனம் தளத்தில் வெளியானது….

அப்போது, மிகுந்த பரபரப்போடு, ஆயிரக்கணக்கான வாசகர்களால்
அது விரும்பி படிக்கப்பட்டது.

எப்படியோ தெரியவில்லை – நேற்று மாலை முதல் அதன்
5-ஆம் பகுதி பல வாசகர்களால் மீண்டும் தேடியெடுத்து
படிக்கப்படுகிறது என்பதை என் எடிட்டிங் பகுதியிலிருந்து
அறிந்து ஆச்சரியப்பட்டேன். இது, ஏற்கெனவே இந்த தொடரை
படித்திருந்த பழைய வாசகர்களாக இருக்குமென்று நினைக்கிறேன்.

நானும், சில வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் 5-ஆம் பகுதியை
இப்போது ஒரு முறை படித்தேன்…

காரணம் புரிந்தது…

திருவாளர் சு.சாமிக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும்
என்ன சம்பந்தம்….? படித்து தான் பாருங்களேன்….

கீழே –

…………………………………………………………………

ஜெயின் கமிஷன் முன்பு – சுப்ரமணியன் சுவாமி வாக்குமூலம் – (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-5 )

ராஜீவ காந்தி கொலை வழக்குக்கும், சுப்ரமணியன் சுவாமி மற்றும்
சந்திரா சாமிகளுக்கு என்ன சம்பந்தம் …?

பின்னால் ஒளிந்துள்ள சம்பந்தங்கள் என்னவோ ? அவை குறித்து
நம்மிடையே தகவல்கள் இல்லை.
ஆனால், கண்ணெதிரே தோன்றும் ஒரு காட்சி அவர்களை இந்த
சம்பவத்துடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையதாக
கருதச் செய்கிறது – ஆனால் எந்த விதத்தில் என்பது தெரியவில்லை….!!!

திரு.சுப்ரமணியன் சுவாமி, (அப்போது அவர் மத்திய சட்ட அமைச்சராக
பதவி வகித்து வந்தார் ) சம்பவம் நடந்த மே 21-ந்தேதியன்று
சென்னை ‘ட்ரைடண்ட்’ ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும்,

அவரது நண்பரான சாமியார் சந்திராசாமி, அப்போலோ ஹாஸ்பிடல்ஸ்
குழுவினரின் ஹோட்டலான ‘சிந்தூரி’ யில் தங்கி இருந்ததாகவும்
ஜெயின் கமிஷன் முன்பாக சாட்சி கூறப்பட்டிருக்கிறது.

சம்பவம் நிகழ்ந்த இரவன்று இருவரும், கார் மூலம் -சென்னையிலிருந்து -ஸ்ரீபெரும்புதூர் வழியாக – பெங்களூர் சென்று மறுநாள் காலையில்
பெங்களூரிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றதாகவும் ஜெயின் கமிஷன் முன்பாக சாட்சியம் கூறப்பட்டுள்ளது.

இது யார் கூறிய சாட்சியம் …..?
திரு.சுப்ரமணியன் சுவாமி அவர்களின் ஜனதா கட்சியின் அப்போதைய
தமிழ்நாடு பிரிவின் தலைவராக இருந்த திரு.ஆர்.வேலுசாமி அவர்கள்
தான் இந்த தகவலை ஜெயின் கமிஷன் முன்பாகக் கூறியுள்ளார்.

அதற்கு திரு.சுப்ரமணியன் சுவாமியின் ரீ-ஆக்-ஷன் என்ன ….?
வேலுசாமியின் வார்த்தைகளில் –

“இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடமிருந்து
பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து,
வேர்வை கொட்டியது. அமைதி என்றால்
அப்படி ஒரு அமைதி அங்கே.
நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது
என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.”

பின்னர், ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ – என்று தனது ரிப்போர்ட்டில் எழுதி தன் பொறுப்பை முடித்துவிட்டது.

இந்த விவரங்களை திரு.வேலுசாமி அவர்களின் வாய் மூலம் கேட்பது
இன்னும் தெளிவாக இருக்கும். வேலுசாமி ஒரு தொலைக்காட்சிக்கு
அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் இவை –

———————

என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?

1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு
பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை
தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன்.
தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க
இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது.
அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன்.
எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே
சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி
ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை
அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன்.
‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம்
ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த
முடியவில்லை.
இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம்.
கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான்
தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி
கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார்.
கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே
அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு
பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை
உறுதிப்படுத்த முடிந்தது.

அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி
முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான்
மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது.

திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம்
என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை
சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின்
நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான்
என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’

சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக்
கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..

நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு
நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு
நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி
மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு
நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம்
சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன்.
அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்..
பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள்
என்று எனக்கு சந்தேகம்.

பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி,
சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன்.
அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு
என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின்
குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம்
சொன்னார்.

நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன்.
‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’
என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு
சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும்
பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில்
வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’

அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?

இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம்
கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன்.
அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும்
மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே

அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல்
செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம்
யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்?
என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான்
நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச
பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப்
ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்?
கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார்.
 ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.

அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை.
இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான்
அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை
செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே
காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’

சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே?
அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன்.
அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான
உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை
விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம்
வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது.

அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ
பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக
உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார்.
எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த
மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார்.
அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார்.
புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’

சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை
எப்படி அமைந்தது?

ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே
தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று
எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக
அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம்
இல்லை’ என்ற போது –
நீங்கள் விடுதலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி
கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன்.
சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து
தகவல் வந்தது.’ என்றார்.

சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.
தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும்
உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது
இலங்கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன்.

திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான
மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம்
இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம்
கொடுத்திருந்தார்கள்.

மதுரை பொதுக்கூட்டத்துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு
முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு
வியர்த்து கொட்ட தொடங்கியது
. அது தேர்தல் காலம்.
விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும்.
சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை.
காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது.
அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்?
என நினைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான்
இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர்.
அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள்
20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம்
இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள்.
அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம்.
என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும்
பதில் இல்லை.

அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில்
கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும்
என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த
நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான்
பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால்
வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது.
முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல்,
காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட
பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.

இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன்.
காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது
மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து
பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும்.
அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி..
அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.

எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன்.
அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ
என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம்
எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக
சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு
கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது

என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே
போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை
அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல்
ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார்.
அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின்
நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம்
சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே.
 பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம்.
கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி
கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று
சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.

——————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சுப்ரமணியன் சுவாமிக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் என்ன சம்பந்தம்….?

  1. Tamil சொல்கிறார்:

    இது இந்தியா. காந்தி தேசம் காந்திய தேசம் அல்ல!!

  2. bandhu சொல்கிறார்:

    ராஜீவின் மரணம் நடந்த பல வருடங்கள் காங்கிரஸ் பதவியில் இருந்தது. சோனியா தான் ராஜீவிற்கு பிறகு சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கிறார். இருந்தும், சுப்பிரமணியம் ஸ்வாமி மீது எந்த குற்றமும் பதியப்படவோ நிரூபிக்கப்படவோ இல்லை. அதனால் வேலுசாமி சொல்வது ஸ்வாரஸ்யமாக இருக்கிறதே ஒழிய அதில் எந்த உண்மையும் இருப்பதாக தெரியவில்லை!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.