சூரியன் வருவது யாராலே –


சூரியன் வருவது யாராலே?
சந்திரன் திரிவதும் எவராலே?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன?

பேரிடி மின்னல் எதனாலே?
பெருமழை பெய்வதும் எவராலே?
யாரிதற் கெல்லாம் அதிகாரி?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ?

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்
தரையில் முளைத்திடும் புல் ஏது?

மண்ணில் போட்டது விதையொன்று
மரஞ்செடி யாவது யாராலே?

கண்ணில்தெரியாச் சிசுவை எல்லாம்
கருவில் வள்ர்பதுயார் வேலை?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ?

எத்தனை மிருகம்! எத்தனை மீன்!
எத்தனை ஊர்வன பறப்பனபார்!
எத்தனை பூச்சிகள் புழுவகைகள்!
எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!

எத்தனை நிறங்கள் உருவங்கள்!
எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த்தன்
யாரோ எங்கோ இருப்பதுமெய்.

அல்லா வென்பார் சிலபேர்கள்;

அரன் அரியென்பார் சிலபேர்கள்;

வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தையென்பார்கள்;

சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
என்றும் சிலபேர் சொல்வாகள்;

எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதொ ஒருபொருள் இருக்கிறதே!

அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்,

எந்தப் படியாய் எவர் அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன?

நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்

வந்திப்போம் அதை வணங்கிடுவோம்;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

—————

– எத்தனை எளிமையாக, சிறு குழந்தைகளுக்கும்
புரியும்படி, 70 ஆண்டுகளுக்கும் முன்பாகவே –
பாடி இருக்கிறார் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்
பிள்ளை அவர்கள்….!!!

சின்ன வயதிலேயே, பள்ளிப்பருவத்திலேயே,
சிறார்களுக்கு – கடவுள் நம்பிக்கையையும்
மத ஒற்றுமை உணர்வையும் உருவாக்க,
இதைவிடச் சிறந்த ஒரு பாடல் இருக்க முடியுமா…?

இதை பள்ளிப்பிள்ளைகளின் பாடபுத்தகங்களில்
நாட்டுப்பாடலுடன் (ஜன கண மன ) சேர்த்து
வைத்தால் என்ன…?

பள்ளிகளில், ஜன கண மன பாடல்
பாடப்படும்போதெல்லாம் அதற்கு முன்னர்,
சிறார்கள் இந்தப் பாடலையும் பாடும் வழக்கத்தை
ஏற்படுத்தினால், சிறு வயதிலேயே அவர்கள்
மத ஒற்றுமை உணர்வை இயல்பாகவே பெறுவார்கள்
அல்லவா…?

தமிழக கல்வியமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்,
கல்வித்துறையில், நிறைய மாற்றங்களை சிறப்பாக
அறிமுகப்படுத்தி வருகிறார்… அவற்றோடு, இதையும்
சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வோம்.

கீழே காணொளியில், இந்தப்பெரியவர்
பாடும்போது, இந்தப்பாடல் இன்னும் எத்தனை சிறப்பாக
வெளிப்படுகிறது பாருங்கள்….

…..

…..

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to சூரியன் வருவது யாராலே –

  1. புதியவன் சொல்கிறார்:

    நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை அவர்கள், தன் வாழ்க்கை நிகழ்ச்சிகளை ‘என் கதை’ என்றொரு நூலாக எழுதியிருக்கிறார். (எனக்கு ஒருவர் ரெகமெண்ட் செய்து நான் வாங்கிப் படித்தேன்). மிக ரசனைக்குரிய நூல், நம்ப முடியாத சம்பவங்கள் நிறைந்த நூல். வாய்ப்பிருந்தால் படித்துப் பாருங்கள். 1900 காலங்கள் எப்படி இருந்தது என்பது தெரியும்.

    பேச்சாளர் நல்ல குரல் வளத்துடன் பேசுகிறார். பேசு பொருள் நாம் அறிந்திருக்கிறோம். ஆனாலும் நம் அந்தர்யாமியை நாம் உணர்வதில்லை. அதை நோக்கிச் செல்லும் பாதையில் அன்பு, பக்தி, எளிமை இவற்றைக்கொண்டே செல்ல முடியும். இதில் எவற்றையும் நான் பெற்றிலேன். பெற முயற்சித்தும் கைகூடிய பாடில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.