( பகுதி -15 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (“பேசும் படம்” -காலம் … )

….
….

.

சென்ற பகுதியில் ( பகுதி-14 ) –

– 1950-55 காலங்களிலான தமிழ் திரைப்படங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

அந்த காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களைப்பற்றிய
செய்திகளை பொதுவாக நாம் எப்படி அறிந்து வந்தோம்
என்பது குறித்து இங்கே கொஞ்சம் சொல்லலாமென்று
நினைக்கிறேன்.

இப்போதெல்லாம், (குறிப்பிட்ட சில இதழ்களைத்தவிர)
பொதுவாக – பெரும்பாலான தமிழ் நாளிதழ், வார இதழ்,
மாத இதழ்களை எடுத்துக் கொண்டால், சினிமா
நட்சத்திரங்களின் புகைப்படங்களோ, பேட்டிகளோ,
கிசுகிசுக்களோ சினிமா செய்திகளோ நிச்சயம் இடம்
பெற்றிருக்கும். பல வார இதழ்களின் அட்டைப்படங்களையே
நட்சத்திரங்களின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் தான்
அலங்கரிக்கின்றன. சில இலக்கிய இதழ்கள் கூட இந்த
மோகத்திலிருந்து தப்ப முடியவில்லை.

ஆனால், அப்போதைய காலத்தில், புகழ்பெற்ற நாளிதழ்கள்,
வார இதழ்கள் – ஆகியவற்றில் சினிமா செய்திகளை
பார்ப்பது அபூர்வமாகவே இருக்கும்.

முக்கியமான காரணம் – சினிமா படங்கள் அடித்தட்டு
பாமர மக்களுக்கானது; அதைப்பற்றி பேசுவதே கௌரவக்
குறைச்சல் என்கிற மனநிலையில் சமூகத்தின்
மேல் மட்டத்தில் இருந்தவர்களிடையே ஒரு நினைப்பு
இருந்தது. பத்திரிகைத் துறையிலும் இவர்களின்
ஆதிக்கமே இருந்தது.

ஆனாலும், சில செய்திப் பத்திரிகைகளிலும், ஆனந்தவிகடன்,
கல்கி போன்ற இதழ்களிலும், திரைப்பட விமரிசனங்கள்
மட்டும் வழக்கமாக இடம் பெற்றன.

எஸ்.எஸ்.வாசனின் சந்திரலேகா, ஓவையார்,
படங்களும், கல்கியின் தியாக பூமி போன்ற சில படங்களும்
மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்தன.

ஆல் இண்டியா ரேடியோ என்றழைக்கப்பட்ட
அகில இந்திய வானொலி நிலையம் திரைப்படங்களை
தீண்டத்தகாதவையாகவே கருதின. திரைப்படப்பாடல்களுக்கு
ஆல் இண்டியா ரேடியோவில் இடமே இல்லை;
திரைப்படப் பாடல் கேட்க வேண்டுமானால்
ரேடியோ சிலோன் என்றழைக்கப்பட்ட இலங்கை வானொலி
வர்த்தக ஒலிபரப்பு தான். (இதைப்பற்றி பிறகு தனியாக
எழுதலாமென்று நினைக்கிறேன்…)

எனவே,அப்போதெல்லாம், பெரும்பாலும் சினிமா
செய்திகளுக்கு ரசிகர்கள் நம்பி இருந்தது “பேசும் படம் ”
என்கிற திரைப்பட மாத இதழைத் தான்.
டி.கே.ராம்நாத் என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார்.
அவரே தான் பத்திரிகைக்கு ஆசிரியர், நிருபர் எல்லாம்.
ஒவ்வொரு ஸ்டூடியோவாக விஜயம் செய்வார்.
நடிகர்களுடன் உரையாடுவார்; திரைப்பட படப்பிடிப்பு
சம்பந்தப்பட்ட சில புகைப்படங்களையும் எடுப்பார்.
மாத இதழ் தான் என்பதால், அவரால் அனைத்துப்
பணிகளையும் மேற்கொள்ள முடிந்தது.

“பேசும் படம்” இதழை நான் 54-56 ஆண்டுக்காலங்களில்
கர்க்கியில் சிறுபையனாக இருந்தபோதே பார்த்திருக்கிறேன்.
(அதற்குப் பிறகு – பார்க்கவே இல்லை…!!! )
அந்த ஊருக்கு அப்போது, மொத்தமே 2 புத்தகக்கடைகள் தான்.
“புடானி புக் கம்பெனி;” “அம்பே நியூஸ் ஏஜென்சி…!!!”

ஒரு கடையில் செய்திப்பத்திரிகையும்,
இன்னொரு கடையில் கல்கி, விகடன் போன்ற இதழ்களையும்
எங்கள் வீட்டில் வாங்கிக் கொண்டிருந்ததால் இரண்டு
கடைக்காரர்களிடமும் எனக்கு நல்ல பழக்கம் உண்டு.

புடானி கடையில் மட்டும் தான் பேசும் படம் வரும்.
விலை அதிகம் – 12 அணா – என்பதால்,
(அப்போது சினிமா டிக்கெட்டே 5 அணா தான்…!!! )
மாதம் 2 பிரதிகள் தான் விற்கும்… நான் அங்கே, கடையிலேயே
உட்கார்ந்து, அது வந்த அன்றே படித்து விடுவேன். அதன் பிறகு
தான் அது வாடிக்கையாளருக்கு போகும்.

அண்மையில், வலைத்தளத்தில், பழைய “பேசும் படம்”
மாத இதழின் அட்டைப்படங்களைப் பார்த்தேன்.

அபூர்வமாக, சிலவற்றைத் தவிர, 1946-47 -க்கும் முந்தைய
படங்களை நான் பார்த்ததில்லை. எனவே, பழைய
படங்களின் பெயர்களையும், அட்டைப்பட விளம்பரத்தையும்
பார்க்க, சுவாரஸ்யமாக இருந்தது. வித்தியாசமான
பெயர்கள்… பழைய நினைவுகள் எல்லாம் வந்தன.

அவற்றில் சிலவற்றை இந்த தளத்து நண்பர்களும்
அவசியம் காண வேண்டுமென்று விரும்புகிறேன்.

1945-50-க்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த
“பேசும் படம்” இதழின் அட்டைப்பட காட்சிகள் சில –

……………..

(நடிகை லக்ஷ்மியின் தாயார், குமாரி ருக்மணி கதாநாயகியாக …. )( எம்.கே.தியாகராஜ பாகவதர் – சிறைக்கு சென்று திரும்பிய பின்
வெளியான – தோல்விப்படம்….)


(ஜெமினி கணேசனின் காதல் வாழ்க்கைக்கு வித்திட்ட –
புஷ்பலதா கதாநாயகியாகத் தோன்றிய படம்…)


(டி.ஆர்.மகாலிங்கம் நடித்து நாடு சுதந்திரம் பெறும் சூழ்நிலையில்
வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் )


(ஜெமினியின் உலகப் புகழ்பெற்ற -டி.ஆர்.ராஜகுமாரி,
ரஞ்சன், எம்.கே.ராதா நடித்த படம் –
அட்டையில் ஹீரோவுக்கு இடமில்லை…!!! )


( தமிழிலும், ஹிந்தியிலும் உச்சகட்ட புகழ்பெற்ற
நடிகை வைஜயந்திமாலாவின் முதல் படம்…)

.
———————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ( பகுதி -15 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (“பேசும் படம்” -காலம் … )

  1. natchander சொல்கிறார்:

    A GOOD INFORMATION !!!!
    INTERESTING TOO !!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.